பெண்களின் கற்பைப் போற்றாதோர் உலகில் எவருமில்லை!
அண்பினால் பிணைக்கப்பட்ட அணைப்புக்கு நிகரான இன்பச்சுவனம் இவ்வுலகில் வேறொன்றுமில்லை” என்றார் அரசியல் மேதை ரூஸோ. மற்றோர் அறிஞனோ “அமைதியோடு கூடிய இல்லறமே இவ்வுலகின் இன்பச்சுவனமாகும். சண்டையோடு கூடிய இல்வாழ்க்கையே இவ்வுலகின் துன்ப நரகமாகும்” என்று சொன்னார்.
இன்னொரு மேதையோ நல்ல மனைவியைப் பெற்றுள்ளவர்கள் பறப்பதற்கு இறக்கைகளைப் பெற்றுள்ளனர். அது அல்லாதோர் கால்களுக்கு விலங்கைத்தான் பெற்றுள்ளனர்” என்று இயம்பியுள்ளார்.
ஆம்! அவர்கள் கூறியவற்றிலெல்லாம் உண்மையில்லாமலில்லை. ஒரு மனிதனின் வழ்க்கையை இன்பச்சுவனமாக ஆக்குவதும் துன்ப நரகமாக ஆக்குவதும் அவனுக்கு கிடைத்த இல்லாளே!
“ஒரு நல்ல மனைவியானவள் –
இறைவன் மனிதனுக்கு அளிக்கும் கடைசி மேலான நன்கொடையாவாள்;
பல நற்பண்புகள் அமைந்த அவனுடைய மாணிக்கமாவாள்;
அவனுடைய ஆபரணச் செப்பு ஆவாள்;
அவளுடைய குரல்தான் அவனுக்கு இன்ப கீதம்;
அவளுடைய புன்முறுவல்தான் அவனுடைய பிரகாசமான நாள்;
அவள் தரும் முத்தமே அவனுடைய நற்பண்பின் காவலன்;
அவளுடைய கைகளே அவனுடைய செல்வம்;
அவளுடைய அதரங்களே அவனுடைய நம்பிக்கையுள்ள ஆலோசகர்கள்;
அவளுடைய மார்பகமே அவனுடைய துன்பங்களின் மிருதுவான தலையணை” என்று கூறியுள்ளார் ஒரு மேல்நாட்டு அறிஞர்
இத்தகைய இல்லாளே பொன்னைவிட மேலானவள் என்று ஜெர்மன் பழமொழி ஒன்று கூறுகிறது.
ஒரு ஆங்கிலப் புலவன் கூறுவதுபோல “அவள் தேவதையுமல்ல; அவளுக்கு இறக்கைகளும் இல்லை; அவளுடைய பிரகாசமான கூந்தலை எந்த புனிதத்தன்மையும் சூழ்ந்திருக்கவில்லை. ஆனால், அன்பின் காரணமாக அவள் செய்யும் சிறுசிறு செயல்கள் அவளை என் கண்களுக்கு மிகவும் அழகுள்ளவளாகச் செய்கின்றன” என்று முழங்குகின்றான்.
பெண்கள் இயற்கையிலேயே அழகுப் பிரியர்கள். தங்களை அழகுப்படுத்திக் கொள்வதிலேயே அவர்கள் பெரிதும் இன்பம் கொள்கிறார்கள். அதில் ஏற்படும் எத்துன்பத்தையும் அவர்கள் துன்பமாகக் கருதுவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் தன்னை அழகுராணி என்று எண்ணிக் கொண்டே தன்னை அழகு செய்து கொள்கின்றாள். இதற்கு சில கிழவிகள்கூட விதிவிலக்கில்லை.
எனவே பெண்கள் தங்களின் கணவரைப் பார்த்துத் தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கித்தருமாறு கேட்கும்பொழுது அவர்களின் கணவர் அவர்கள் கேட்பதில் சிலவற்றையாவது தங்களால் இயன்றவரை வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்விப்பதே இல்வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கிக்கொள்ள சிறந்த வழியாகும். அதைவிடச் சிறந்த வழி அவர்கள் கேட்காமலேயே அவர்களுக்குத் தேவையான, விருப்பமான பொருள்களை வாங்கிக் கொடுத்து அவற்றை அணியச் செய்து பாராட்டுவதாகும்.
“எந்தப்பெண்ணைப்பற்றி யாரும் எதையும் – நல்லதையோ கெட்டதையோ பேசவில்லையோ அந்தப் பெண்தான் உலகில் மிகவும் புகழுக்குறியவள்” என்று ஓர் அறிஞன் கூறிச்சென்றான்.
ஆங்கிலக் கவிஞர் சாஸரோ, “தங்கத்தைவிட மேலானது எது? சூரியகாந்தம். சூரியகாந்தத்தைவிட மேலானது என்ன? அறிவு. அறிவைவிட மேலானது என்ன? பெண். கற்புள்ள பெண்ணைவிட மேலானது என்ன? ஒன்றுமே இல்லை” என்று தாமே வினா எழுப்பி விடை பகர்ந்து பெண்ணுக்கு மேல் மேலானது எதுவுமில்லை என்று கையை விரிக்கின்றார்.
“நான்கு பண்புகள் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும். அவளுடைய இதயத்தில் நல்லொழுக்கம் குடிகொண்டிருக்க வேண்டும். அடக்கம் அவளுடைய நெற்றியை அணி செய்ய வேண்டும். இனிமை அவளுடைய அதரங்களிலிருந்து வழிந்தோட வேண்டும். சுறுசுறுப்பு அவளுடைய கைகளில் திகழ வேண்டும்” என்று சீனர்கள் சொல்வார்கள்.
கற்புக்கரசி
அடக்கமே ஒரு பெண்ணை ஒழுக்கமிக்கவளாகவும், கற்புக்கரசியாகவும் ஆக்குகிறது. எனவே, அவள் தன் கணவனிலே எல்லவித அழகுகளையும், பண்புகளையும் காண்கிறாள். அவளுடைய கண்களுக்கு அவனே அழகின் திருவுருவமாகவும், பண்பின் இருப்பிடமாகவும் தென்படுகின்றான். எனவே அவள் பிற ஆடவனை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
“(நபியே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! ….” (அல்குர்ஆன் 24:31)
“கொண்ட கணவனே கண்நிறைந்த காட்சியெனக்
கொண்டவளே கற்புக்கரசி கான்” என்கிறார் வள்ளுவர்.
“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்” என்பதும் வள்ளுவரின் கூற்றுதான்.
கற்பு எனும் உறுதிநிலை இருக்கப் பெற்றால் பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன? என்று கேட்கிறார் அவர்.
பெண்களின் கற்பை போற்றாதோர் உலகில் எவருமில்லை (ஒருசில கழிசடைகளைத்தவிர்த்து! சினிமா மாயையில் முழ்கிக் கிடக்கும் தரங்கெட்ட சில நடிகைகள் கற்பைப்பற்றி சதாரணமாகப்பேசுவது சந்தனத்தை சாக்கடையாக்கும் முயற்சியாகும். சாக்கடையில் மூழ்கியிருப்பவர்களுக்கு சந்தனத்தின் வாடை தெரியாதுதான்…!)
“கற்பை இழந்தவள் வேறு எந்த இழிசெயலையும் செய்யத் தயங்க மாட்டாள்,” என்று மற்றோர் அறிஞன் எடுத்துரைக்குன்றான்.
எனவே, கற்பென்பதை எவ்வளவு விலை மதிக்க முடியாத ஆபரணமாக இறைவன் தங்களுக்கு அளித்துள்ளான் என்பதை ஒவ்வொரு பெண்ணும் அறிந்து செயலாற்ற வேண்டும். அதற்கு மாற்றமாக கற்புக்கு சிறிதேனும் மதிப்பளிக்காமல் தங்களது இச்சையை எவ்வாறாவது நிறைவு செய்வதற்காகப் பல்லைக்காட்டிப் பசப்பித்திரியும் ஆணிடத்தில் பெண் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும். இதற்கு அவளிடம் இருக்க வேண்டியது மன அடக்கம்தான்.
திருமறை கூறுகின்றது; “நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.” (அல்குர்ஆன் 33:32)
‘ஆண்களின் இதயத்தைவிடப் பெண்களின் இதயம் காதலால் அதிகம் பாதிக்கப்படுகிறது. ஆனால், கவுரவம் என்பதானது அந்தக் காதல் வேகத்தைத் தணிக்கிறது. எனவேதான் பெண்ணினத்திற்கு இறைவன் அச்சம், , நாணம், மடம், பயிர்ப்பு ஆகிய நான்கு தனித்தன்மைகளை நல்கினான். அவையே அவர்களின் காமத்தை தவிர்க்கும் கொறடாவாக விளங்குகின்றன.அவற்றை மட்டும் இறைவன் அவர்களுக்கு அளித்திறாவிட்டால் உலக நிலையே மாறியிருக்கும்.
எனவே, ஒரு பெண் தன்னுடைய கவுரவத்தை, தன் குடும்ப கவுரவத்தை மனத்திற்கொண்டு மன அடக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும். அதுவே அவளுக்கு மாபெரும் அரணாகும்.
முதல் மனிதராகிய ஆதத்திற்கு சுவர்க்கமே வீடாக இருந்தது. ஆனால், அவருடைய வழித்தோன்றல்களில் நல்லவர்களுக்கு வீடே சுவர்க்கமாக உள்ளது. காரணம் நல்ல மனைவி என்று சொல்லவும் வேண்டுமா?
“நூறு மனிதர்கள் சேர்ந்து ஒரு முகாமை உண்டு பண்ணலாம். ஆனால், ஒரு பெண்ணால் தான் ஓர் இல்லத்தை உண்டுபண்ண இயலும்.” என்பது ஒரு சீனப் பழமொழி.
முத்தாய்ப்பாக, இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதை இடம்பெறச்செய்யாமல் இவ்வாக்கத்தை நிறைவு செய்ய முடியாது. ஆம்! அவர்கள் சொன்னது இதோ:
“இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!” (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2911)