இஸ்லாத்தின் பார்வையில் கூட்டுக்குடும்பம்!
கூட்டுக் குடும்பம்! இது இந்தியர்களால் அதுவும் குறிப்பாக தமிழர்களால் பெரிதும் விரும்பக்கூடியதாக இருந்தது; இப்போதும் பலர் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து வருகின்றனர். இதில் முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல!
கூட்டுக்குடும்பம் என்று இங்கே நாம் குறிப்பிடுவது ஒருவர் தம் மனைவி மக்களுடன் மற்றும் அவருடைய சகோதரர்களுடைய மனைவி மக்கள் ஆகிய அனைவருடனும் ஒரே வீட்டில் வசித்து வருதைக் குறிப்பதாகும்.
ஒருவர் தன்னுடைய பெற்றோர்களைக் கவனிப்பது என்பது அவர் மீது கடமையாக இருப்பதால் அவர்களை தம்மோடு வைத்துப் பராமரிப்பதை கூட்டுக் குடும்பம் என்பதில் சேர்க்க இயலாது என்பதைக் கவனத்தில் கொண்டு இக்கட்டுரையைப் படிக்கவும்.
சினிமா, டீவி போன்றவற்றின் மூலமாக ஆபாசங்கள் வீடுதேடி வந்துக் கொண்டிருக்கின்ற இந்தக் காலக்கட்டத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ்கின்ற பலர் இஸ்லாம் வரையறுத்திருக்கின்ற ஷீரீஅத்தின் சட்டதிட்டங்களை மீறியவர்களாக உள்ளனர்.
இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் ஒரு பெண் அந்நிய ஆடவர் முன்னிலையில் எப்படி ஆடையணிய வேண்டும் என்பதை மிக அழகாகவே எடுத்துரைப்பதோடல்லாமல் யார் யாரெல்லாம் அந்நிய ஆடவரில்லை என்பதையும் தெளிவாகவே கூறியிருக்கின்றது.
யார் அந்நிய ஆடவர்?
அல்லாஹ் கூறுகின்றான்:
“இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்;
மேலும், (முஃமினான பெண்கள்)
o தம் கணவர்கள், அல்லது
o தம் தந்தையர்கள், அல்லது
o தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது
o தம் புதல்வர்கள் அல்லது
o தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது
o தம் சகோதரர்கள் அல்லது
o தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது
o தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது
o தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது
o ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்)
o பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள்
ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும்,
முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.” (அல்-குர்ஆன் 24:31)
மேற்கூறப்பட்ட வசனத்தில் யார் யாருக்கு முன்னரெல்லாம் ஒரு பெண் தம் அழகலங்காரத்தை மறைக்கத் தேவையில்லை என்பதை மிகத் தெளிவாகவே கூறிவிட்டான். இவர்களைத் தவிர மற்றவர்கள் எவராயினும் அவர் ஒரு பெண்ணுக்கு அந்நியராவார்; அவர்களிடம் ஒரு பெண் தன் அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது என்பது தெள்ளத் தெளிவாகிறது.. இந்த அந்நியர்களிடமிருந்து ஒரு பெண் இஸ்லாம் வரையறுத்திருக்கின்ற ஹிஜாப் முறைப்படி தம்மை மறைத்துக் கொள்வது மிக மிக அவசியமாகும்.
கணவனின் சகோதரர்களும் அந்நியரே!
மேற்கூறப்பட்ட இறைவனின் கட்டளையில் பட்டியலிடப்பட்டவர்களில் கணவனின் சகோதரர்கள் இடம்பெறவில்லை! எனவே, ஒரு பெண்ணுக்கு கணவனின் சகோதரரும் அந்நியரே என்பதை விளங்கமுடிகிறது. கணவனின் சகோதரர்களுக்கு முன் ஒரு பெண் வருகின்ற போது ஒரு அந்நிய ஆடவர் முன் வரும் போது எவ்வாறு ஹிஜாப் அணிய வேண்டுமோ அவ்வாறே அணிவது அவசியமாகிறது.
ஆனால், இவ்விதியை இன்று பெரும்பாலான முஸ்லிம்கள், ஏன் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதாக கூறக்கூடியவர்கள் கூட பின்பற்றத் தவறிவிடுகின்றனர். ஒரே வீட்டில் சகோதரர்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வாழ்பவர்கள் இந்த விஷயத்தில் மிக அலட்சியமாக இருக்கன்றனர். தனித்தனியாக வாழ்வோர்களில் சிலர் கூட இறைவனின் இச்சட்டத்தை (24:31) மீறுகின்றனர்.
இதை விட வெட்கக்கேடு என்னவென்றால் இன்று ஒவ்வொரு வீட்டையும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்ற சோதனையாகிய தொலைக்காட்சி பெட்டியின் மூலமாக அதில் வருகின்ற காட்சிகளான சினிமா, அசிங்கமான காட்சிகளடங்கிய பாடல்கள், சீரியல்கள் மற்றும் இன்னபிற ஆபாசக் காட்சிகளையும் தம் கணவனின் சகோதரர்களுடன் ஒன்றாக உட்கார்ந்துப் பார்க்கின்ற அவல நிலையையும் நம் முஸ்லிம் சகோதரர்களின் கூட்டுக் குடும்பங்களில் சர்வ சாதாரணமாகக் காண முடிகின்றது. இது மிகவும் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பதையும் அவ்வாறு பலவித மோசமான விளைவுகள் இதற்கு முன்னால் பல ஏற்பட்டிருக்கின்றது என்பதையும் (உ.ம். புதுவை பர்வதிஷா நிகழ்ச்சி நாடறிந்த ஒன்று) நம் சகோதர, சகோதரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கின்றேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “கணவருடைய உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5232)
இன்று முஸ்லிம்கள் மிகவும் வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மேற்கூறிய எச்சரிக்கையைப் பற்றிய போதிய தெளிவில்லாமல் நம் மக்களில் சிலர் தம் சகோதரரின் மனைவியோடு ஒன்றாக தனிமையில்பயணிக்க கூடியவர்களாக இருக்கின்றார்கள்; இன்னும் மோசமாக, சிலர் இரு சக்கர வாகனத்தில் கூட தம் சகோதரரின் மனைவியை ஏற்றிச் செல்கின்றனர். இவ்வாறு செல்கின்ற போது ஒருவர் உடல் மற்றொருவர் மீது படாமல் இருக்கமுடியாது என்பது நன்கு தெரிந்திருந்தும் அப்பெண்ணின் கணவனே அதற்கு சம்மதிப்பது மிகவும் வெட்கக்கேடானது..
சகோதரியின் கணவனும் அந்நியரே!
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சில முஸ்லிம் ஊர்களில் பல வீடுகளில் திருமணமானப் பெண்கள் தம் தாயின் வீட்டிலேயே தான் இருப்பர். கணவர் தம் மனைவியின் வீட்டில் பெரும்பாலான நாட்களைக் கழிப்பது வழக்கம்; இன்னும் சிலர் தம் மனைவியின் வீட்டிலேயே கூட தங்கிவிடுவது உண்டு. அதுபோலவே அப்பெண்ணின் சகோதரிகளும் தம் கணவர்மார்களுடன் அவ்வீட்டிலேயே தங்குவதுண்டு. அந்த சமயங்களில் ‘சில’ பெண்கள் தம் சகோதரியின் கணவர் தானே என்ற அதிக உரிமையில் அவர்களின் முன்னிலையில் இஸ்லாம் வரையறுத்திருக்கின்ற ஹிஜாப் முறைகளைப் பேணாது அவர்களின் முன்னிலையில் வந்து சர்வ சாதாரணமாக பேசுவதைக் காணமுடிகின்றது. இது இஸ்லாத்தின் பார்வையில் குற்றத்திற்குரிய செயல் என்பதை ஏனோ நம் பெண்கள் உணர்வதில்லை! ஒரு பெண் தம் சகோதரியின் கணவர்களையும் அந்நியராகவே கருதி அவர்கள் முன்னிலையில் முறையான ஹிஜாபுடன் வரவேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சிறிய தாய், பெரிய தாய் மகன்களும் அந்நியரே!
சிறிய தாய், பெரிய தாயின் மகன்கள் ஒரு பெண்ணிற்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்ட அந்நிய ஆண்களாவார்கள். அவர்களுக்கு முன்னால் ஒரு பெண் வருகின்ற போது முழுமையான ஹிஜாபை பேணியவர்களாகத் தான் வரவேண்டும். மாற்றுமதக் கலாச்சாரம் நம் மக்களிடையே மிக அதிக அளவில் ஊடுவியிருப்பதன் காரணமாக அவர்களை தம் சகோதரர்கள் போல நம்மில் பல பெண்கள் கருதி அவர்களுக்கு முன்னால் தம் சொந்த சகோதரன், தந்தை ஆகியோருக்கு முன்னால் எவ்வாறு வருவார்களோ அதுபோல் வருவது மற்றும் அவர்களுடன் சர்வசாதாரணமாக கைகுலுக்குவது, அரட்டையடிப்பது போன்ற செயல்களைச் செய்கின்றனர். நவ நாகரீகம் என்ற பெயரிலே கணவர்மார்களும் இதற்கு உடந்தையாயிருக்கின்றனர். இது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும். இவர்களும் அந்நியர்களே என்பதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு முன்னால் செல்லும் போதும் ஹிஜாப் பேணப்பட வேண்டும்.
இது போலவே சிறிய தந்தை மற்றும் பெரிய தந்தையின் மகன்களும் ஒரு பெண்ணிற்கு அந்நியராவார் என்பதையும் அறிந்துக் கொள்ள வேண்டும்.
“அல்லாஹ்வின் மீதாணையாக! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கரம், விசுவாசப் பிரமாணம் வாங்கும்போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை. பெண்களிடம், ‘நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்’ என்று அவர்கள் வாய்மொழியாகவே தவிர வேறெந்த முறையிலும் விசுவாசப் பிரமாணம் வாங்கியதில்லை.” (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதாரம்: புகாரி)
அத்தை மகன், மாமன் மகன்களும் அந்நியர்களே!
இவர்களும் ஒரு பெண்ணிற்கு அந்நியர் என்பதை கவனத்தில் கொண்டு இவர்களிடமும் ஒரு பெண் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். தற்காலத்தில் நவனாரீக மங்கைகள் எனக் கூறிக்கொண்டு சிலர் இவர்களுடன் ஒன்றாக சுற்றுவது, ஒரே பைக்கில் பயணிப்பது, தனியாக ரெஸ்டாரெண்டுக்குச் செல்வது, இமெயில், சாட்டிங் போன்றவற்றின் மூலம் கிண்டலடித்துப் பேசுவது போன்றவற்றைச் செய்கின்றனர். இதுவும் தவறாகும். ஒரு பெண் அந்நிய ஆடவருடன் குழைந்து பேசுவதற்கு எவ்வாறு
தடுக்கப்பட்டிருக்கிறதோ அதுபோல இவர்களடனும் அவ்வாறு பேசுவதற்கு தடை இருக்கின்றது என்பதை நம் பெண்கள் உணர்ந்துக் கொள்ளவேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். (அல்குர்ஆன் 33:32)
தவிர்க்கப்பட வேண்டியவைகள் :
இன்று ஃபாஷன் என்ற பெயரிலும், நவநாகரீகம் என்ற பெயரிலும் பலவாறான ஆடைகளை பெண்கள் உடுத்துகின்றனர். அவைகளில் சில பெண்களின் அந்தரங்க அழகுகளை அப்படியே வெளியில் காட்டக்கூடிய மெல்லிய வண்ண ஆடைகள், இறுக்கமான ஆடைகள் போன்றவையாகும். இது தவிர கழுத்து, வயிறு, தொப்புள், முதுகு ஆகியவற்றின் பெரும் பகுதி வெளியில் தெரியக்கூடிய சேலைக்கான மிக இறுக்கமான ஜாக்கெட், உடல் அழகுகளை அப்படிய காட்டக்கூடிய மிக இறுக்கமான மிடி, பாவாடை, ஜீன்ஸ், டீஷர்ட் போன்றவைகள். இவைகளை இன்று நம் சமுதாய பெண்கள் சர்வசாதாரணமாக அணிகின்றனர்.
நம்மில் கூட்டுக் குடும்பமாக இருக்கின்ற பலரது வீட்டில் இத்தகைய ஆடையணிந்த பெண்கள், தங்களுக்கு அந்நிய ஆடவர்களான வீட்டிலுள்ள கணவனின் சகோதரர்கள், சகோதரியின் கணவன்மார்கள், சிறிய, பெரிய தாயின் மகன்கள், சிறிய தந்தை மற்றும் பெரிய தந்தையின் மகன்கள், மாமன் மற்றும் அத்தை மகன்கள் ஆகியவர்கள் முன்பாக முறையான ஹிஜாப் இன்றி சர்வ சாதாரணமாக ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, அவர்களுடன் டீ.வி. பார்ப்பது, அரட்டை அடிப்பது போன்வற்றில் ஈடுபடுவது இஸ்லாத்திற்கு முரணானது என்பதையும் இஸ்லாம் வரையறுத்திருக்கின்ற முறையான ஹிஜாப் இன்றி ஒரு பெண் அந்நியர்களான இவர்கள் முன்பு வெளி வரக்கூடாது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
பெண்களின் ஆடை எவ்வாறிருக்க வேண்டும்?
அடுத்ததாக பெண்கள் ஆடை விசயத்தில் அதிக அக்கரை செலுத்த வேண்டும். குறிப்பாக அந்நிய ஆடவர்களுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்பவர்கள் இவ்விசயத்தில் மிக அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இஸ்லாம் தடை செய்த ஆடை எது என்பதை அறிந்து அவற்றை தவிர்ந்துக்கொள்ளுதல் மிக மிக அவசியமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், பிற்காலத்தில் வரக்கூடியவர்கள் எவ்வாறெல்லாம் அடையணிவார்கள் என்பதை மிக துல்லியமாக வர்ணித்துள்ளார்கள். அதை இன்று நடைமுறையில் சர்வசாதாரணமாக காணவும் முடிகின்றது.
ஆடை அணிந்தும் அணியாத பெண்கள்!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:: ‘ஆடை அணிந்தும் அணியாதது போன்றும் ஒட்டகத்தின் மிதிலைப் போன்று தங்களின் தலையில் ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் என் சமுதாயத்தில் தோன்றுவார்கள். அவர்களை சபியுங்கள். அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்’ ஆதாரம்: தபரானி.
சுவர்க்கத்தின் வாடையைக் கூட நுகராத பெண்கள்:
மற்றொரு நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இந்த பெண்களை (அதாவது மேற்கூறப்பட்ட பெண்களைக்) குறிப்பிட்டுக் கூறுகிறார்கள்: ‘அவர்கள் சுவர்க்கத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், அதன் சுகந்தத்தைக் கூட நுகர மாட்டார்கள். அதன் சுகந்தமோ நீண்ட தூரத்திற்கு பரவக்கூடியதாகும். அதாவது அவர்கள் சுவர்க்கத்தை விட்டு மிக அதிக தொலைவில் இருப்பார்கள்” (நூல் : முஸ்லிம்).
மற்றொரு நபிமொழியில்:
“நரகவாசிகளில் இரு வகையினரை (இன்னும்) நான் பார்க்கவில்லை. (அவர்களில் ஒரு வகையினர்) மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்து மக்களைஅடித்துக்கொண்டிருப்பவர்களாவார்கள். (மற்றொரு வகையினர்) ஆடையணிந்தும் நிர்வாணிகளாக (காண்போரை) கவர்ந்திழுக்கும் பெண்கள். நீண்ட கழுத்தைக் கொண்ட ஒட்டகத்தின் சாய்ந்த திமிலைப் போன்று தலையை சாய்த்துக் கொண்டு அவர்கள் நடப்பார்கள். இவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது. அதன் வாடையையும் நுகரமாட்டார்கள்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 3971)
இறைவன் கூறுகிறான் :
“நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்” (அல் குஆன் 33:59)
இவ்விஷயத்தில் இதுவரை நாம் தவறிழைத்திருப்போமாயின் இறைவனின் பின்வரும் கூற்றுபோல நாம் இதிலிருந்து விலகி, திருந்தி அல்லாஹ்விடம் பிழைபொறுக்கத் தேடுவோம்! நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை பிழைபொறுக்கத் தேடுவோரின் பாவங்களை மன்னிக்கக் கூடியவனாக இருக்கின்றான்.
“முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.” (அல்-குர்ஆன் 24:31)
source: சுவனத்தென்றல்