காணாமல் போனது ஏனோ..?
தென்னகத்து மதீனா என்று அழைக்கப்பட்ட லால்பேட்டையிலிருந்து….
ஜல்ஸா அறிவிப்பு வந்து விட்டால் போதும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரது ஆழ்மனதிலும் ஆனந்தம் ஊஞ்சலாடும்.
ஜல்ஸா நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே ஊரே கலகலக்கும்; இரவு பகல் “ஜெஜெ” என்று மாறிவிடும்.
அனைத்து சங்கங்களும் ஆனந்தப் பெருக்கில் பொருப்புணர்வோடு வீடு தோறும் சென்று வசூல் ஒருபுறம் நடக்க, வேறு சில பொறுப்பாளர்கள் ஜல்ஸா ஜொலிக்க தேவையானவற்றை வாங்க ஆர்டர் கொடுக்க என்று படு பிஸியாக காணப்படுவார்கள்.
ஊரில் உள்ள பெண்கள் தங்களுக்கும் பிள்ளைகளுக்கும் புத்தாடைகள், புடவைகள், அழகு சாதனப் பொருட்கள் என அவர்களின் வேளைகளில் மும்முரம் காட்டத் துவங்கி விடுவர்.
இன்னும் சிலருக்கு உறவினர்கள் வெளியூர்களில் இருந்தால் அவர்களை அழைக்கும் பணியையும் பொருட்களை வாங்க செல்வதோடு முடித்து விடுவார்கள்.
ஜல்ஸா நெருங்க இரண்டு நாட்களே இருக்க ஊரே பரபரப்பிலும், பரவசத்திலும் மூழ்கி விடும்.
எல்லாத் தெருக்களிலும் கொடிகளும் தோரணங்களும் சணல் கட்டி ஒட்டும் பணி நடக்கும்.
இதில் சின்னஞ்சிறுசுகள் கூட எடுபிடிகளாக மாறிவிடுவர், பச்சை பிறைக்கொடிகளுடன் பசுமைகள் நிறைந்திருக்கும்
தெருக்களுக்கு மத்தியில் கலர் தாள் மட்டும் ஒட்டி கலர்ஃபுல்லாக காட்டும் தெருவும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும்.
ஊர் முழுக்க உள்ள தெருக்களில் கால் ஊண்டி டியூப் லைட் கட்டப்பட்டுள்ளதா என்பதை காண ஒரு ரவுண்ட் போனால் தான் தெரியும். சில சங்கத்தினர் குண்டு பல்பு போட்டு குதூகலமாக்கி வைத்திருக்கும் காட்சியும்!
ஜல்ஸாவுக்கு முதல் நாள் அனைத்து ஏற்பாடுகளும் ரெடியாகி விடும்.
அன்று அதிகாலை ஃபஜ்ர் தொழுது விட்டு தெருவில் நடந்தால்-சில்லென அடிக்கும் காற்றில் “சடசட” என்ற சத்தத்தோடு கொடி-தோரணங்களின் சந்தோஷமான அசைவும் மனதுக்குள் சுகமான மகிழ்ச்சியை ஆட்டு விக்கும்.
இந்நாளின் கதா நாயகர்களான பட்டம் பெற இருக்கும் மாணவர்களின் உறவினர்களின் படையெடுப்பு எங்கள் ஊரை நோக்கியே இருக்கும்.
உணவளித்த வீட்டின் பிள்ளைகள் என்ற உரிமையுடன் அனைவரையும் வரவேற்று உபசரிக்கும் விருந்தோம்பல் பண்பில் எங்கள் ஊருக்கு நிகர் எங்கள் ஊரே!
உள்ளூர் மாணவர்கள் பட்டம் பெற்றாலும் உறவினர்களின் வருகை என்று “தாய்ப்பிள்ளைகளின்” பாசக்கூட்டம் வீட்டை நிறைக்கும்.
ஜல்ஸா நாள் விடிந்து விட்டது கூட்டம் கூட்டமாக புத்தாடை அணிந்து சிறுசுகள் விளையாட்டு ஜாமான்களை வாங்குவதில் குறியாக இருக்கும்,
பத்து பனிரெண்டு வயதுக்குட்பட்ட சிறுசுகள் ராட்டினம் ஆடுவதிலும், தெருவோரம் முளைத்திருக்கும் கடைகளில் ருசிப்பதிலும் மூழ்கி விட, புற்றீசல் போல் புத்தாடைகள் அணிந்து பெரியவர்களும், இளைஞர்களும் வெளியில் வரத்துவங்கி விடுவர்.
மேலத்தெருவிலும், வடக்குத்தெருவிலும் இருக்கும் வீடுகளின் வாசல்களில் நைலான் ஒயர் கட்டி அதில் வெள்ளை துப்பட்டிகள் பர்தாவாக கட்டப்பட்டிருக்கும்.
பட்டம் வாங்கி விட்டு வெளியேறும் மாணவர்களை மகிழ்ச்சிப் பெருக்கோடு காணவே இந்த ஏற்பாடு!
தாருல் தஃப்ஸீர் கலைக்கூடம்!
அப்பப்பா அது கலை கட்டியிருப்பதை விவரிக்க வார்த்தைகளே இல்லை!
பட்டம் பெறப்போகும் பாக்கியசாலிகள் அங்கிகள் அணிந்து தலைப்பாகையோடு அமர்ந்திருக்கும் அழகை காண கண் கோடிகள் வேண்டும்!
தாருல் தஃப்ஸீர் எனும் பிரம்மாண்டமான கலைக்கூடம் நிறம்பி வழிய, அதன் நுழைவு வாயிலகள் பார்வையாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு அடைத்துக் கொள்ளும்.
தாருல் தஃப்ஸீர் கலைக்கூடத்தை சுற்றி மனித தலைகள் மொய்க்கும்.வடை பஜ்ஜியோடு டீ கடைகளும், கலர்கலரான குளிர்பானங்களோடு புதிய கடைகளில் கூட்டம் நிறம்பி வழியும்.
மார்க்க அறிஞர்கள், சமுதாய தலைவர்கள் என்று சிறப்பு விருந்தினர்களின் உறைகள் அனைவரின் அறிவுக்கும் நல்ல விருந்தாக இருக்கும்.
உச்சகட்ட நிகழ்வான பட்டம் அளிக்கும் நிகழ்வு தொடங்க; அவர்களை அழைக்கும் கணீர்குரல் அனைவரையும் சுண்டி இழுக்கும்.
ஒருவர் பின் ஒருவராக பட்டம் பெறும் காட்சியை காண கூட்டம் முண்டியடிக்கும்.
பட்டம் வாங்கி விட்டு வெளியேறும் இளம் ஆலிம்களை வாரி கட்டியணைத்து முத்தமிட பரவசங்களும் நிகழும்.
இவ்வளவும் நமது சரித்திரப் பிரசித்திப் பெற்ற ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவான ஜல்ஸாவில் தான்!
ஆனால் இன்று-இந்த அமர்க்களத்தில் பங்கெடுக்கத் தவறுகிறோம். பாதியை தொலைத்து விட்டிருக்கிறோம்.
வரும் புதிய தலைமுறையினருக்கு நமது பாரம்பரிய ஜல்ஸாவை ஏன் காட்டக்கூடாது? ஒரு நாள் ஊரே ஏன் மகிழ்ச்சியில் திளைக்கக் கூடாது? சிறந்த ஒற்றுமையை இதை விட வேறு எதில் நாம் காட்டியிருக்கின்றோம்?