மனிதனின் ரத்த நாளங்களில் ஷைத்தான்!
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்கள் பள்ளிவாசலில் (இஃதிகாப்) தங்கியிருப்பார்கள். நான் அவர்களைச் சந்திக்கச் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பேன்.
(ஒரு நாள் அவர்களை சந்தித்துவிட்டு) நான் புறப்பட எழுந்த போது என்னை வழியனுப்புவதற்காக பள்ளியின் வாசல்வரை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தனர். அப்போது மதீனாவாசிகளான இருவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலாம் கூறிவிட்டு கடந்து சென்றனர்.
அவர்களிருவரிடமும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அப்படியே நில்லுங்கள்’ என்று கூறிவிட்டு ‘இவர் (எனது மனைவியாகிய) ஸஃபிய்யா ஆவார்’ என்று கூறினார்கள். அதைக்கேட்ட இருவரும் கவலையடைந்தனர். ஆச்சரியத்துடன் ‘அல்லாஹ்வின் தூதரே!’ என்றனர்.
அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘மனிதனின் இரத்த நாளங்களிலெல்லாம் ஷைத்தான் ஊடுருவியுள்ளான். எனவே அவன் உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடுவானோ என்று நான் அஞ்சுகிறேன்’ எனக் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அன்னை ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 2035)
விளக்கம் :
பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் தமது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எவருக்கும் பதில் கூறத்தேவையில்லை என்றும், தமது தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு களங்கமிருந்தாலும் அதுபற்றி கேள்வி கேட்கும் உரிமை எவருக்கும் கிடையாது என்றும் நினைத்துச் செயல்படுவதைக் காண்கிறோம்.
தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமின்றி மக்கள் சம்மந்தப்பட்ட – மக்களைப் பாதிக்கின்ற – விஷயங்கள் குறித்துக் கூட யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என்று தலைவர்கள் நினைக்கின்றனர்.
இதன் காரணமாகத்தான் ஹவாலா பேர்வழிகள் கூட ஆட்சிபீடத்தில் இன்னமும் அமர்ந்திருக்கிறார்கள். அமரத் துடிக்கிறார்கள். மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கும் முதல்வர் 100 கோடி ரூபாய் செலவு செய்து தமது வளர்ப்பு மகனுக்குத் திருமணம் செய்து வைத்ததற்கும், ஒரு முதல்வர் வீட்டுத் திருமணம் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்கும் என்று அறிக்கை விட்டதற்கும் காரணம் இதுதான்.
முதல்வரின் தோழி தமிழகத்தையே முயைகேடாகத் தனதாக்கிவருவதை அறிவு ஜீவிகள் கண்டிக்கும் போது அவருக்கு ஆதரவாக முதல்வர் அறிக்கை விட்டதற்கும் இதுதான் காரணம்.
பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் இலவசச் சீருடைகளைக் கொள்ளையடித்துவிட்டு அமைச்சராக நீடிப்பதற்கும், மயானக் கொட்டகையில் கூட ஊழல் செய்துவிட்டு பதவியில் தொடர்வதற்கும் கூட இதுதான் காரணம்.
மக்களைப் பாதிக்கின்ற பொதுவான விஷயங்களிலேயே மக்களைப்பற்றி கவலைப்படாதவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை இதை விட மோசமானதாகவே உள்ளது.
திருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்றுக் கொள்வது, சின்ன வீடுகள் வைத்துக் கொள்வது ஆகியவை தலைவர்களுக்குப் பெருமை சேர்க்கும் காரியங்களாகி விட்டன.
அரசியல், சமுதாயத் தலைவர்களின் நிலை இதுவென்றால் மதத்தலைவர்களின் நிலைமை இதைவிட மோசமானதாகவே உள்ளது. மதத்தலைவர்களாக இருப்போர் ஆடம்பரமான அரண்மனைகளில் வசித்தாலும், கோடிகோடியாகக் குவித்தாலும், காமக்களியாட்டத்தில் மூழ்கிக் கிடந்தாலும் இதற்கெல்லாம் மக்களுக்கு பதில் கூற வேண்டும் என்று அவர்கள் நினைப்பதில்லை. தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு மோசமானவர்களாக இருந்தாலும் மதத்தலைமையை அவர்கள் துறந்து விடுவதில்லை. மக்களும் அவர்களை விரட்டிவிடுவதில்லை.
இத்தகைய அரசியல், சமுதாய மற்றும் மதத்தலைவர்களைப் பார்த்துச் சலித்து விரக்தியடைந்துள்ள மக்களுக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த வரலாற்றுத் துணுக்கில் ஆறுதலும் படிப்பினையும் உள்ளன.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருட்டில் தம் மனைவியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் பிரட்சனை இல்லை. ஒருவர் தம் மனைவியுடன் பேசிக் கொண்டிருப்பது தவறானதுமன்று. இதனால் தனி மனித ஒழுக்கத்திற்கு பங்கம் ஏற்படப்போவதில்லை. ஆனாலும் தம்மீது சந்தேகத்தின் சாயல் கூடப் படியக்கூடாது என்பதில் அவர்களுக்கு அதிகமான அக்கரை இருந்தது.
அவர்களைக் கடந்து சென்ற நபித்தோழர்களும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி ஒருபோதும் தவறாக எண்ணக் கூடியவர்களல்லர். ஆனாலும் அவர்களை நிறுத்தி ‘நான் பேசிக் கொண்டிருப்பது என் மனைவியுடன் தான்’ எனக் கூறுகிறார்கள்.
தமது செயல் யாருக்கும் எந்தப் பாதிப்பையும ஏற்படுத்தாது என்றாலும் – தம்மைப் பற்றி மக்கள் ஒருபோதும் தவறாக நினைக்க மாட்டார்கள் என்றாலும் – தனிப்பட்ட ஒழுக்கம் சம்மந்தப்பட்ட – விவகாரங்களில் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என்றாலும் இந்த மாமனிதர் சந்தேகத்தின் நிழல்கூட தம்மேல் விழக்கூடாது என்று கருதுகிறார்கள்.
யாருக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத விஷயத்தில் கூட அவர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றால் மற்றவர்கள் சம்மந்தப்பட்ட விஷயத்தில் எவ்வளவு நேர்மையுடன் நடந்திருப்பார்கள் என்பதை ஊகிக்க முடியும்.
இதனால் தான் உலகம் அவர்களை மாமனிதர் என்கிறது.