நலிவடையும் மார்க்கக்கல்வியை தூக்கி நிறுத்த என்ன வழி?
தமிழக முஸ்லிம்களுக்கு மத்தியில் மார்க்க கல்வி மீதான மோகம் குறைந்து வருகிறது. ஒரு காலத்தில் தமிழகத்தின் பிரசிதிப்பு பெற்ற மதராஸாக்களான வேலூர் பாக்கியதுஸ் ஸாலிஹாத், லால்பேட்டை மன்பவுல் அன்வார், நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா போன்ற மதரஸாக்களின் பட்டமளிப்பு விழா அழைப்பிதழே ‘கால் கொயர்’ நோட்டு அளவிற்கு இருக்கும்.
ஆனால் தற்போது அம்மதராஸாக்களின் மாணவர்களின் எண்ணிக்கையே ஐம்பதிலிருந்து – எழுபத்தி ஐந்திற்கு உள்ளாக தான் இருக்கின்றன. ஒரு சில மதரஸாக்கள் இழுத்து மூடும் நிலையில் இருக்கின்றன.
இப்படியே போனால், தொழுகை நடத்த தமிழ்நாட்டில் இமாம்கள் கிடைப்பது அரிதாகிவிடும்?
இதற்கு என்ன காரணம்? நலிவடையும் மார்க்கக்கல்வியை தூக்கி நிறுத்த என்ன வழி?
ஒரு காலத்தில் முஸ்லிம்கள் நிறைந்திருக்கும் பகுதிகளில் உலமாக்கள் நிறைந்து இருப்பார்கள். காலையிலும் மாலையிலும் சிறு பிள்ளைகளுக்கான மக்தப் மதரஸாக்கள் நடக்கும்.
எங்கள் ஊரை (ஆயங்குடி) பொறுத்தவரை, பள்ளிகளில் மூன்று பிரிவாக மக்தப் வகுப்புகள் நடக்கும். 1 . எஸ்ஸனல் குர்ஆன் (இது அரபி மொழியின் ‘அல்ஃபா பெட்’ கற்பிக்கும் வகுப்பு, 2. அல்ஹம்து (இது தொழுகைக்கு தேவையான குறைந்தபட்ச சின்ன சூராக்களை கற்பிக்கும் வகுப்பு 3. குர்ஆன் (குர்ஆனை எளிய நடையில், குறைந்த பட்ச இலக்கணத்துடன் கற்பிக்கும் வகுப்பு).
ஒரு குழந்தை எஸ்ஸனல் குர்ஆன் தொடங்க வரும் போதோ, அல்ஹம்து ஓத தொடங்கும் போதோ, குர்ஆன் ஓத தொடங்கும் போதோ மற்ற பிள்ளைகளுக்கு இனிப்புகளை வழங்கி (எங்கள் ஊரில் பட்டாணி கல்லையில் சக்கரையை கலந்து கொடுத்து) தொடங்குவார்கள். நறுமனத்திற்காக கையிலும் கழுத்திலும் சந்தனத்தை தேய்த்து விடுவார்கள். இப்போது அந்த கலாச்சாரமே கரைந்துவிட்டது. வெள்ளி இரவுகளில் ‘ராதீப்’ நடக்கும். பொட்டு கல்லை கொடுப்பார்கள். ஊரில் இப்போது ‘ராதீபும்’ இல்லை.
லால்பேட்டையை பொறுத்த வரையில் மாலை நேரங்களில் ஸ்கூல் முடித்துவிட்டு வரும் பிள்ளைகள், பள்ளி சீருடையை களைந்துவிட்டு கைலியும், முழுக்கை சட்டையும், தொப்பியுமாக திரிவார்கள். 20 வருடங்களுக்கு முன்பிருந்த லால்பேட்டை சிறுபிள்ளைகளிடம் ‘ரஜினி’ என்றால், ‘அந்த ஊர் எங்கு இருக்கிறது?’ என்று கேட்பார்கள். அங்கு இருக்கும், உலக பிரசிதிப்பு பெற்ற மதரஸாவின் பட்டமளிப்பு விழா நடக்கும் சமயங்களில், அவ்வூரில் உள்ளவர்கள் தங்கள் வீட்டு திருவிழா போல் கொண்டாடுவார்கள். எங்கே போனது இந்த கலாச்சாரமும், விருந்தோம்பல் பண்பும்?
லால்பேட்டையில் 35 வயதிற்கு மேற்பட்டவர்களை கணக்கிட்டால், எப்படியும் 40 சதவிகிதத்தினராவது உலமாக்களாக இருப்பார்கள்? இப்போதைய இளவட்டத்தை கணக்கிட்டால், 100-க்கு 3-வர் இருப்பதே சந்தேகம் என தோன்றுகிறது? இந்த தேய்மானத்திற்கு என்ன காரணம்?
என் மனதில்படுவது இரண்டு காரணங்கள் தான்!
ஒன்று டிஷ் – கேபுள்
இன்னொன்று தற்போது மதரஸாக்களில் கற்பிக்கப்படும் பாடமுறை.
நமது சமுதாய பெண்மணிகள் வீட்டோடு ஒன்றி இருப்பவர்கள். அவர்கள் வெளியில் கிளம்புவது அரிது. நாமும் டிஷ்ஷை வாங்கி வைத்துவிடுகிறோம். சமைக்கும் நேரம் போக, மற்ற நேரங்களில் சினிமாவும் சீரியலுமாக நேரம் கழிகிறது. எல்கேஜி படிக்கும் பிள்ளைக்கு உணவு ஊட்டும் போது கூட கண்கள் சீரியலை தான் பார்கின்றன. அம்மாக்கள் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டும் போது, உணவை மட்டும் ஊட்டாமல் சீரியலில் காட்டப்படும் ‘டேஞ்சரான’ கலாச்சாரத்தையும் ஊட்டிவிடுகிறார்கள். பிள்ளைகளும் வளர்கின்றன, தகப்பனிடம் செல்போன் வாங்கி கேட்கிறது. அவரும் வாங்கி கொடுத்து விடுகிறார். பிள்ளைகள் யார்யாரிடமோ பேசுகிறது. என்னென்ன பழக்கமோ வந்து தொலைந்து விடுகிறது. பிறகு எப்படி மார்க்க பற்று இருக்கும்? எனக்கு தெரிந்த வரையில் லால்பெட்டையிலும், ஆயங்குடியிலும் டிஷ்- வைப்பதற்கு ஊர் கட்டுப்பாடு இருந்தவரை – ஊர் நன்றாக தான் இருந்தது. (எல்லா ஊர்களுக்கும் இது பொருந்தும்.)
மதரஸாக்களில் கற்பிக்கப்படும் கல்வி முறையில் மாற்றம் தேவை. மஸாயீல் சம்பந்தமான மாற்றம் தேவை அல்லது தேவை இல்லை என்று சொல்லி என் அறிவிற்கு அப்பாற்பட்ட விவாதத்தில் இறங்கிட நான் விரும்பவில்லை. மதரஸாக்களில் மஸாயீல் பாடதிட்டங்களோடு கைத்தொழில் பயிற்சி, கணினி வகுப்புகள், ஆங்கில பயிற்சி, பேச்சாற்றல்-எழுத்தாற்றல்களை வளர்க்கும் பயிற்ச்சிகள் ஆகியவற்றை சேர்த்து கற்பிக்க வேண்டும்… ஆயிரம் வணக்கஸ்தர்களை விட ஒரு விவேகமான மார்க்க ஞானி மேலானவர் – என்பது நபி மொழியாம் அதற்கேற்றவாறு நமது மதரஸா மாணவர்களை அறிவிலும், அறிவியலிலும் கூர் தீட்ட வேண்டும்.
மஸாயீல்களை மட்டுமே கற்றுக்கொண்டு பட்டம்பெற்று வெளியில் வந்தவுடன், ஏதோ ஒரு பள்ளிவாசலில் தொழவைக்க இமாமாக சேர்ந்தால் வெறுமனே 3,000 சம்பளம் கொடுக்கிறார்கள். இதை வைத்து என்ன செய்யமுடியும்? மார்க்க கல்வி நலிவடைவதிற்கு ஜமாஅத் நிர்வாகிகளும் ஒருகாரணம்.
பணக்கரான ஜமாஅத்திற்கு சொந்தமான வணிக வளாகத்தில், ஒரு கடையை பள்ளி இமாமிற்கு ஒதுக்கினால், கொடுக்கும் 3,000 த்தோடு கடையில் வரும் வருமானத்தைய்ம் வைத்து குடும்பத்தை ஓட்டுவார். அவரும் பணக்காரர் ஆவர். ‘இமாம்கள் எல்லாம் தலையில் குல்லாவை போட்டுக்கொண்டு, ஊர் நாட்டாமைக்கு கைகட்டி தான் நிற்க வேண்டும். அவர்கள் பொருளாதாரத்தில் நிறைவடைந்துவிடக்கூடாது’ என்று என்ன சட்டமா? உலமாக்களை கண்ணியப்படுத்தினால், அவர்களின் கல்விக்கு நிகரான, வேலைக்கு உண்டான சம்பளத்தை கொடுத்தால் தானே – அவர்கள் பிள்ளைகளை மதரஸாவில் சேர்ப்பார்கள்! அவர்களை பார்த்து நாளு பிள்ளைகள் மதுரஸாவில் சேறும்.
ஏதாவது பெரியவர்கள் புத்திமதி சொல்லும்போது, நாலு ஹதீஸ்களை எடுத்துவிட்டால் – புகாரியில் ஆதாரம் இருக்கிறதா? என்று நம் இளசுகள் கேட்பது ஆரோக்கியம் தான். ஆனால், அது மட்டுமே தீர்வாகாது. ஜமாஅத்தை ஒருங்கிணைக்கும் பணியில், மார்க்கக்கல்வி நலிவடைவதை தடுத்து நிறுத்தும் பணியில், மதரஸா மாணவர்களின் அறிவை கூர்தீட்டும் பணியில் இளைஞகள், முதியவர்களின்-முதிர்ந்தவர்களின் ஆதரவோடு உடனடியாக இறங்கிட வேண்டும்.
இந்த நமது பங்களிப்பால் தான், இறைவனின் ஆசியுடன் மார்ககல்வியை செம்மை படுத்த முடியும்.
-நசுருதீன்.