நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (17)
நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவிலிருந்து ஒரு படையைப் போருக்கு அனுப்பிய சமயம் நிகழ்த்திய சொற்பொழிவு இது. எந்தெந்த சந்தர்ப்பங்களில் எந்த முறையில் யுத்தம் புரிய வேண்டும் என்பதை முந்திய சொற்பொழிவை விடவும் இதில் விரிவாக விளக்கி இருக்கிறார்கள்:
அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி அவன் பாதையில் நின்று புனிதப் போர் புரியுங்கள். ஒப்பந்த துரோகமோ, சதிச் செயலோ செய்யக்கூடாது. மனிதர்களின் மூக்கையும், நாக்கையும் வெட்டக் கூடாது. குழந்தைகளைக் கொல்லக் கூடாது. அல்லாஹ்வை நிராகரிக்கும் எதிரிகள் (போர்க்களத்தில்) உங்கள் முன் எதிர்பட்டால் அவர்களுக்கு ஒன்றுக்குப்பின் ஒன்றாக மூன்று நிபந்தனைகளை விதிக்க வேண்டும். அவைகளில் ஏதாவது ஒன்றை அவர்கள் ஏற்றுக் கொண்டால் அவர்களோடு போரிடாமல் உங்கள் கைகளைத் தடுத்துக் கொள்ள வேண்டும்.
அவர்களை இஸ்லாத்தை ஏற்குமாறு அழைக்க வேண்டும். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டால் அவர்களோடு போரிடக்கூடாது.
இரண்டாவதாக, அவர்களை அவர்கள் வசிக்கும் இடத்தை விட்டு விட்டு முஹாஜிர்களுடன் வந்து வசிக்குமாறு தூண்ட வேண்டும். இதற்கு அவர்கள் சம்மதித்தால் முஹாஜிர்ககளுக்குக் காட்டப்படும் எல்லா சலுகைகளும் அவர்களுக்கு உண்டு என்பதை எடுத்துக் கூற வேண்டும். இதற்கும் அவர்கள் இணங்காவிடில் கிராமிய முஸ்லிம்(அஃராபி)களைப் போன்று அவர்கள் நடத்தப்படுவார்கள் என்று தெரிவிக்க வேண்டும். அதாவது, மற்றேல்லா முஸ்லிம்களைப்போல் அவர்களும் அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களை எடுது நடக்க வேண்டும். ஆனால், போர்க்களப் பொருள்களில் அவர்களுக்குப் பங்கு கிடையாது. எனினும், அவர்கள் மற்ற முஸ்லிம்களோடு சேர்ந்து போரிட்டால் அவர்களுக்கும் போர்க்களப் பொருள்களில் பங்கு பெற உரிமையுண்டு.
மூன்றாவதாக, அவர்கள் இஸ்லாத்தை ஏற்க சம்மதிக்காவிட்டால் ஜிஸ்யா (யுத்த வரி) மட்டும் கொடுக்கும்படி அவர்களிடம் கேளுங்கள். அதற்கு அவர்கள் இணங்கினால் அதை நீங்கள் ஏற்றுக்கொண்டு அவர்களுடன் போரிட வேண்டாம். அதற்கும் இணங்காவிட்டால் அல்லாஹ்வின் நல்லுதவியை நாடி அவர்களோடு போரிட வேண்டும்.
நீங்கள் ஒரு கோட்டையை முற்றுகையிட்டுக் கொண்டிருக்கும்போது அதனுள் இருக்கும் எதிரிகள் அல்லாஹ்வையும், உங்கள் நபியையும் தங்களுக்காகப் பிணை ஏற்றுக்கொண்டு (உங்களிடம்) பாதுகாப்புத் தேடினால் அந்த நிபந்தனையை நீங்கள் ஒப்புக்கொள்ளாமல் அவர்களின் தந்தையையோ, கூட்டாளிகளையோ பிணையாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கும் பாதுகாப்பு அளியுங்கள். ஏனெனில், பிறகு அவர்கள் (ஏதவதொரு சந்தர்ப்பத்தில்) ஒப்பந்த துரோகம் செய்துவிட்டால் தங்கள் சொந்த மனிதர்களைப் பிணை வைத்துச் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறுவது அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பிணை வைத்துச் செய்த ஒப்பந்தத்தை மீறுவதை விட(க் குற்றமென்ற வகையில்) இலேசானதாகும்.
(இம்மாதிரியே) ஒரு கோட்டையில் நீங்கள் முற்றுகையிட்டுக் கொண்டிருக்கும்போது அதிலுள்ளவர்கள், “நாம் அல்லாஹ்வின் தீர்ப்பின் மீது சமாதானமாகலாம்” என்று உங்களிடம் கூறினால், அதையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல், உங்களுக்கிடையில் முடிவாகும் தீர்ப்பின்மீதே சமாதானம் செய்து கொள்ளுங்கள். ஏனெனில், அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் என்ன தீர்ப்புச் செய்திருக்கிறான் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்.அல்லவா? (நூல்: இப்னு மாஜா)
எர்மூக் யுத்த சமயத்தில் போர் வீரர்கள் முன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவு இது:
அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறிப் போரிடுங்கள். ஷாமில் (ஸிரியாவில்) அல்லாஹ்வின் எதிரிகளையும், உங்களின் (முஸ்லிம்களின்) எதிரிகளையும் எதிர்த்துப் போரிடுங்கள்.
அங்கே வணக்கஸ்தலங்களில் உள்ளவர் (பாதிரி)கள் எதிர்பட்டால், எச்சரிக்கை! அவர்களோடு யுத்தம் தொடுக்காதீர்கள். அவர்களைத்தவிர வேறு சிலரையும் நீங்கள் சந்திக்கலாம். அவர்களின் தலையில்தான் ஷைத்தான் கூடமைத்துக் கொண்டிருப்பான். ஆகவே, (அப்படியான) அவர்களைச் சந்தித்தால் உங்கள் வாட்களால் அவர்களின் தலையை அப்புறப்படுத்துங்கள். (இதோ பாருங்கள்) பெண்களையோ, பாலருந்தும் சிசுக்களையோ, வயோதிகர்களையோ நீங்கள் கொல்லக் கூடாது.
மேலும், பேரித்த மரங்களையோ, வேறு மரங்களையோ வெட்டக் கூடாது. கட்டிடங்களை இடிக்கக் கூடாது.
– அறிஞர், ஆர்.பி.எம் கனி ரஹ்மதுல்லாஹி அலைஹி
தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்.