திருமண ஒப்பந்தத்தை முறிக்கக் கூடியவைகள்!
சரியான காரணங்களின்றி நீங்கள் நினைத்தற்கெல்லாம் விவாகரத்துச் செய்திட முடியாது – டாக்டர். அப்துல்லா அல் முத்லக்.
ஆணும், பெண்ணும் திருமண ஒப்பந்தத்தில் நுழைவதன் மூலம் இருவரும் வாழ்நாள் முழுவதும் இணைந்தே வாழ்வோம் என்றே ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர்.
திருமண ஒப்பந்தத்தில் இணைந்து கொண்ட ஆணோ அல்லது பெண்ணோ திருமண ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்பாக தங்களுக்குள் இருக்கும் உடல்நலம் மற்றுமுள்ள குறைபாடுகள் பற்றி எடுத்துரைக்காது, அதனை வேண்டுமென்றே மறைத்து விட்டு திருமணம் செய்த பின்பு, இருவரில் ஒருவருக்கு அந்தக் குறைபாடானது திருமணத்திற்குப் பின்பு, ஒவ்வாத அல்லது ஏற்றுக் கொள்ள இயலாத அல்லது அந்தக் குறைபாட்டுடன் தன்னுடைய வாழ்க்கையை தொடர்ந்து நடத்த இயலாது என்று நினைத்தால், இத்தகைய நிலைபாட்டையுடைய விவாகத்தைப் பொறுத்தவரை, விவாகரத்தைப் பற்றிச் சிந்திக்கலாம்.
இயலாமையும், உடல்நலக் குறைவும் தம்பதிகளின் மணவாழ்க்கையை அமைதியாக நடத்த இயலாமல், அவை குறுக்கீடு செய்யும் என்று தம்பதிகளில் எவரும் நினைக்கும்பட்சத்தில், விவாகரத்துப் பற்றிச் சிந்திக்க இடமுண்டு, ஆனால் இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும், விவகாரத்து செய்வது பற்றி அவர்களது குடும்பத்தவர்களோ அல்லது தனிப்பட்ட யாரும் அவர்களைத் தூண்ட முடியாது. இன்னும் அந்த தம்பதிகள் இருவரில் எவருக்குக் குறை இருப்பினும், அதனை ஒருவர் மற்றவர் அனுசரித்து நடந்து கொள்வோம் என மனசாட்சியுடன் நடந்து கொள்ள முடியும் என்றாலே தவிர, அவ்வாறு இயலாது எனும் பட்சத்தில் தான் விவாகரத்துப் பற்றி இருவரில் எவர் வேண்டுமானாலும் கோர முடியும்.
இன்னும் ஒன்றைக் கவனிக்க வேண்டும். எல்லாவிதமான குறைபாடுகளையும் அல்லது உடல் ஊனத்தையும் காரணம் காட்டினால், அவ்வாறு கோருவது ஏற்றுக் கொளத்தக்கதல்ல. மணவாழ்வை முறிப்பதற்குண்டான சரியான காரணங்கள் இருக்க வேண்டும்.
உதாரணமாக ஒரு கால் ஊணம் மற்றும் ஒற்றைக் கண் பார்வை இது போன்ற காரணங்களைக் காட்டி மணவிலக்கு கோருவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. உதாரணமாக, இத்தகைய குறைபாடுகளைக் காரணம் காட்டி மணவிலக்குக் கோருவதற்கான காணரமாக அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
அதாவது, விபத்தின் காரணமாக இனவிருத்தி உறுப்புக்கள் பாதிக்கப்பட்டிருப்பது, விறையடித்திருப்பது, மருத்துவம் செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்ட மலட்டுத் தன்மை போன்றவற்றைக் காரணம் காட்டி பெண் மணவிலக்குக் கோரலாம். அதாவது, ஒரு ஆண் தனது மனைவிக்குச் செய்ய வேண்டிய அல்லது அவனது மனைவி எதிர்பார்க்கின்ற அளவுக்கு பூரண உடல் சுகத்தைத் தர அவனால் இயலாத நிலை இருக்குமென்றால், இன்னும் அவனால் இவளைத் தாய்மைப் பேறு அடையச் செய்ய இயலவே இயலாது என்ற நிலை இருக்குமென்று சொன்னால், அந்த மனைவி மணவிலக்குக் கோர முடியும்.
உமர் இப்னுல் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் திருமண ஒப்பந்தம் செய்து கொண்ட ஒரு மனிதரிடம், அவருக்கு விறையடிக்கப்பட்டிருக்கின்றது என்பதை அவனது மனைவிக்கு எடுத்துரைக்குமாறும், அவள் அவளது முடிவைத் தீர்மானித்துக் கொள்ளுமாறும் தெரிவிக்கச் சொன்னார்கள்.
மலட்டுத் தனத்தைப் பொறுத்தவரை தம்பதிகள் ஒருவருட காலம் அதற்கான மருத்துவத்தைச் செய்து கொள்ள முடியும். இந்த அதிகபட்ச ஒருவருட காலத்திற்குப் பின்பும் அவனுக்கு மலட்டுத் தனம் நீங்கவில்லை எனில், அவள் விரும்பினால் மணவிலக்குக் கோரலாம்.
இன்னும் பெண்ணைப் பொறுத்தவரையில், அவளைத் தாய்மைப் பேற்றை அடையச் செய்யக் கூடிய இன விருத்தி உறுப்புக்களில் குறைபாடு இருந்து, அதற்கான முறையான மருத்துவமும் செய்யப்பட்டதன் பின்பும், அவளால் இனிக் கருத்தரிக்க இயலாது என்ற இறுதி முடிவுக்கு மருத்துவ முடிவுகள் வந்துவிடுமானால், அவளது கணவன் விரும்பினால் அவளை மணவிலக்குச் செய்திட முடியும்.
இப்னு தைமிய்யா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தெரிவிக்கின்றார்கள்,
இனவிருத்தி உறுப்புக்களில் கோளாறு இருந்து அதற்கான முறையான மருத்துவமும் செய்யப்பட்டு, இன்னும் குறிப்பிட்ட காலம் வரை சிகிச்சையின் முடிவுக்காகக் காத்திருந்து, இறுதியில் இனி மருத்துவம் செய்தும் எந்தப் பலனுமில்லை என்ற நிலை வந்துவிடுமானால், அந்த காத்திருப்புக் காலம் முடிந்தவுடன் அவளை அவளது கணவன் விரும்பினால் மணவிலக்குச் செய்திட முடியும்.
இன்னும், நாம் வாழுகின்ற இந்த நவீன மருத்துவ உலகில் அநேகமான பெண்களின் இனவிருத்தி உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் முறையான மருத்துவ சிகிச்சையால் தீர்க்கப்பட்டு விடுகின்றன. எல்லாப் புகழும் இறைவனுக்கே..!
இன்னொன்று, அதாவது திருமணத்திற்கு முன்பு போடப்பட்ட விதிமுறைகளில் எதுவொன்றை பூர்த்தி செய்யவில்லை எனினும், அதனைக் காரணம் காட்டி, மணவிலக்குச் செய்திட முடியும். திருமணத்திற்கு முன்பு கணவனானவன் தனது மனைவியிடம், நாம் இருவரும் திருமணம் செய்து கொண்ட பின், நீ இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கூறி, அதற்கு அவளும் சம்மதித்திருந்து விட்டு, திருமணத்திற்குப் பின் அதனை நடைமுறைப்படுத்தவில்லை எனில், இதனைக் காரணம் காட்டி அந்தக் கணவன் மணவிலக்குச் செய்திட முடியும் என்று அநேக மார்க்க அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.
இது தவிர, தனது மனம் விரும்பிய காரணங்களுக்கெல்லாம் விவாகரத்துச் செய்திடவோ அல்லது அவள் நிறம் சரியில்லை அல்லது குட்டையாக இருக்கின்றாள் என்பதற்காகவோ விவாகரத்துக் கோர இயலாது.
திருமண ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாக இவரும் ஒருவரை ஒருவர் நேரடியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். இன்னும் ஒருவரைப் பற்றி மற்றொருவர் விசாரித்து அறிவதற்காக சிறிது காலம் எடுத்துக் கொள்ளவும் வேண்டும்.
இன்னும் சில பொதுவான நோய்கள் பீடித்திருக்கும்பட்சத்தில், அதாவது மனநோய், தொழுநோய் போன்ற நோய் பீடித்திருக்கும்பட்சத்தில், இருவரும் கணவன் மனைவியாகச் சேர்ந்து வாழ்வது என்பது இயலாததொன்றாகி விடும். எனவே, இருவரும் திருமண ஒப்பந்தத்திற்கு முன்பு நேரடியாகப் பார்த்து, ஒருவர் மற்றவரது விருப்பங்கள், குறைகள், விதிமுறைகள் போன்றவற்றைப் பற்றிப் பேசிக் கொள்வது மிகவும் நல்லது. இஸ்லாம் இதனை அனுமதிக்கின்றது.
இமாம் இப்னுல் கைய்யிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுவதாவது, கை அல்லது கால் இழந்தவர்கள், முற்றிலும் குருடாக இருப்பவர்கள், காது கேளாதோர், அல்லது ஊணமுற்றோர் போன்றவவற்றைக் காரணம் காட்டி திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள முடியும், என்கிறார்.
இன்னும், உடல்நலக்குறைபாடுகள் அல்லது நீண்ட காலமாக நீடித்திருக்கும் உடல் நோய்கள் போன்றவைகளால் இருவரில் எவருக்கேனும் உடல்உறவு கொள்வதில் சிக்கல்களைத் தோற்றுவிக்குமெனில், இந்தக் காரணமும் மணவிலக்குக் கோருவதற்கு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கும்.
இப்னு ஸீரீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் உமர் இப்னுல் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை மேற்கோள் காட்டிக் கூறுவதாவது,
ஒரு பெண்ணிடம் உள்ள குறைபாட்டை மறதியாக அல்லது கவனிக்காது, ஒரு ஆணுக்குத் திருமணம் செய்துவிக்கப்பட்டு விட்டதென்றால், அந்தத் திருமணம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல (அவளை மணமுடித்த கணவன் விரும்பும் பட்சத்தில்), அந்தப் பெண்ணுக்கு பொறுப்பாளாராக இருந்தவரே அதற்கான செலவினங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
சுரைஹ், பிரபலமான நீதிபதியான இவர், ஒரு குருட்டுப் பெண்ணுக்கும் இன்னும் அவளது கணவனுக்கும் இடையே நடைபெற்ற வழக்கில், அந்தப் பெண் நல்ல பார்வையுடையவள் என்று எண்ணித் தான் நான் திருமணம் செய்தேன், ஆனால் அவள் பார்வையற்றவள் என்பதை உறுதியப்படுத்தியதன் பின்பு, அவர்களது திருமண பந்தத்தை செல்லாது என்று அறிவித்தார்.
உமர் இப்னுல் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களது முடிவின்படி,
ஒரு மனிதன் தனக்கு ஆண்மைக் குறைபாடு உள்ளது என்பதை தெரிந்திருக்கும் நிலையிலேயே மறைத்து ஒரு பெண்ணைத் திருமணம் முடித்திருப்பானாகில், அவனை விவாகரத்துச் செய்ய அவனது மனைவி கோர முடியும். அவனை விவாகரத்துச் செய்ய அவனது ஆண்மைக் குறைவே போதுமானதாகும்.
இயலாமை வெளிப்பட்ட உடனோ அல்லது மருத்துவ ரீதியான முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்போ, மணவிலக்குக்காக மனுச் செய்ய முடியும்.
ஆனால், இருவரும் மனம் விரும்பி குறைகளுடனேயே வாழ்ந்து கொள்ள முடியும் என்று விரும்பினால், எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாதிருக்குமென்று சொன்னால், இருவரும் தங்களது குறைகளுடனேயே மணவாழ்க்கையைத் தொடர முடியும். மணவிலக்குக் கோர வேண்டிய அவசியமில்லை. மணவிலக்கு என்பது அதில் சம்பந்தப்பட்;டவர்களுக்கு வேறுவழியில்லை என்ற நிலையில் தான் இறுதியான முடிவாக இருக்க வேண்டும்.
– டாக்டர். அப்துல்லா அல் முத்லக், ”அல் ஜும்ஆ” (முஹர்ரம் 1423) இஸ்லாமிய மாத இதழைத் தழுவி எழுதப்பட்டது.
source: http://www.a1realism.com/women/invalidation_marriage_contract.HTM