அறிவைக் கொல்லும் அரசு
”வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்தபடியாக புத்தகங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்” -அண்ணா.
பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது அவர் பெயர் தாங்கிய நூலகம். உள்ளே நுழைய வாயிலில் வைக்கப்பட்டிருக்கும் பதிவேட்டில் தங்கள் வருகையைப் பதிவு செய்ய வரிசையாக நிற்கின்றனர் புத்தக ஆர்வலர்கள்.
கையெழுத்துப் போட்டுவிட்டு நுழைகையில் வரவேற்பறை. முதலில் பார்வையற்றோருக்கான பிரெய்லி நூல்கள் பிரிவு. அங்கு விழியிழந்தோருக்குப் படித்துக் காட்டும் பயிற்றுநர்கள் அமர்ந்திருக்கிறார்கள். பிரெய்லி நூல்கள் அடுக்கப்பட்டிருக்கின்றன.
அடுத்து சொந்த நூல்களைக் கொண்டு சென்று படிக்கும் பிரிவு. அப்பிரிவு முழுதும் எல்லா இருக்கைகளிலும் மாணவர்கள், ஆர்வலர்கள் அமைதியாகப் படித்துக் கொண்டிருக்கின்றனர். எதிரில் போட்டித் தேர்வுகளுக்குப் படிப்போருக்கென தனிப்பிரிவு. அதிலும் ஆயிரக்கணக்கில் நூல்கள். அவற்றைப் படிக்கும் மாணவர்கள்.
முதல்தளம் சென்றால் குழந்தைகள் பிரிவு. ஏராளமான பிஞ்சுகள் தம் பெற்றோரின் துணையுடன் அழகழகான நூல்களைப் பார்த்து, படித்து, கற்கத் தொடங்குகின்றனர். அருகிலேயே விளையாட சிறுசிறு விளையாட்டுப் பொருள்கள். அதனையடுத்து நாளிதழ் மற்றும் பருவ இதழ்கள் பகுதி. அடுக்குகள் காலியாக இருக்கின்றன. அதில் இருந்த நாளிதழ்களையும் பருவ இதழ்களையும் கைகளில் தாங்கி ஏராளமானோர் படித்துக் கொண்டிருக் கின்றனர்.
இரண்டாவது தளம் முழுமையும் தமிழ் நூல்களின் சங்கமம். எல்லாப் பொருள் குறித்தும் நூல்கள் உள்ளன. கதை, கவிதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு என்று நூல்கள் வரிசையாகப் பிரிக்கப்பட்டு அடுக்குகளில் அணிவகுக்கின்றன. இந்தத் தளத்திலும் இருக்கைகள் நிறைந்து வழிகின்றன.
மூன்றாம் தளம் தொடங்கி ஏழாம் தளம் வரை உலக வரலாற்றிலிருந்து நவீனத் தொழில்நுட்பம் வரை அனைத்துத் துறைகளை யும் விவரிக்கும் பல்லாயிரம் நூல்கள்; அத்தனையும் ஆங்கிலத்தில். ஒவ்வொரு நூலின் விலையும் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு வாங்கி வைக்கப்பட்டுள்ளன.
நூலக வளாகம் முழுதும் அமைதி தவழுகிறது. நாம் இதுவரை பார்த்த நூலகங் களைப் போல் இல்லாமல் அய்ந்து நட்சத்திர உணவகத்திற்கு இணையாகக் கட்டப்பட்டுள் ளது. சலவைக்கல் தரைகள், கண்ணாடிச் சுவர்கள், முற்றிலும் குளுமை, நவீன விளக்குகள் என தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா என்ற அய்யத்தை ஏற்படுத்துகிறது.
இவ்வளவு சிறப்புகளையும் ஒருங்கே அமையப்பெற்ற அறிவுக் கருவூலமாம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத்தான் அம்மையார் ஜெயலலிதா இழுத்து மூட முடிவு செய்துள்ளார்.
ஒரு இனத்தை அழிக்க முதலில் அதன் மொழியை அழி என்ற யுக்தியைத்தான் ஆதிக்கவாதிகள் காலம் காலமாகச் செய்து வந்துள்ளார்கள். மொழி தனியே வாழ்ந்துவிட வில்லை. அது இலக்கிய நூல்களின் மூலம் மூச்சு வாங்கிக் கொண்டுள்ளது.
தெற்காசியாவிலேயே பெரிய நூலகம்
சென்னை கோட்டூர்புரத்தில் 8 ஏக்கர் நிலப்பரப்பில் 3 லட்சத்து 33 ஆயிரத்து 140 சதுர அடிக் கட்டடமாக 8 தளங்களுடன் கண்ணைக் கவரும் பிரமாண்டமான வெளிப்புற உட்புறத் தோற்றங்களுடன் திகழ்வதே அண்ணா நூற்றாண்டு நூலகம்.
5 லட்சத்து 25 ஆயிரம் புத்தகங்களைத் தன்னகத்தே கொண்டது. தினமும் 1,000க்கும் மேற்பட்டோருக்கும், விடுமுறை நாள்களில் 3,000க்கும் மேற்பட்ட மக்களின் அறிவுப் பசிக்கு விருந்தளித்து மேலும் அறிவு தாகத்தை வளர்த்து வருகிறது.
குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை அனைவருக்கும் தனித்தனித் தளங்களில் படிப்பதற்கு வசதி செய்து கொடுத்திருப்பது இதன் தனிச்சிறப்பு எனலாம். கூட்ட அரங்கு, திரையரங்கு, கருத்தரங்கு அறைகள், கண்காட்சி அரங்குகளுடன் 417 கார்கள், 1026 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகக் கருதப்பட்டு நம் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துத் தருகிறது.
ஈழத்தில் தமிழினத்தை அழிக்க முடிவு செய்த சிங்களப் பேரினவாதம் முதலில் யாழ்ப்பாணம் நூலகத்தை எரித்தது. தமிழர்களின் தொன்மையையும் உலக அறிவையும் ஏந்தி நின்ற நூல்கள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன.
இப்போது இரண்டாவது தாக்குதல். அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் பெயர்த்திடும் முடிவாக வந்துள்ளது.
ஆட்சிக்கு வந்தவுடனேயே ஜெயலலிதா செய்த முதல் முடிவு சமச்சீர் கல்வியைச் சமாதிக்கு அனுப்புவதாக இருந்தது. அதுவும் அறிவைத் தடுக்கும் முடிவுதான்.
தமிழில் எஞ்சியுள்ள இலக்கியங்கள் குறைவே. ஆடிப்பெருக்கில் ஆற்றில் விடப்பட்ட ஏடுகளில் இருந்தவை ஏராளம். படிக்கக்கூடாத சமூகமாக மாற்றப்பட்டு ஓர் நூற்றாண்டுக்கு முன்புதான் படிக்கத் தூண்டப்பட்டவன் தமிழன்.
எதற்கெடுத்தாலும் கருத்துச் சொல்லும் ஆரிய நச்சு சோ நான் இன்னும் அந்த நூலகத்தைப் பார்க்கவில்லை. எனவே கருத்துச் சொல்ல முடியாது என்கிறார். இதுவரை எல்லாக் கருத்துகளையும் இப்படித்தான் சொன்னாரோ? ஏன் கருத்துச் சொல்ல மறுக்கிறார் தெரியுமா? தமிழனின் அறிவை வளர்க்கும் நூலகம் ஒழிவதில் அவருக்கு மனம் குளிரத்தானே செய்யும் அதுதான்.
ஜெ-வுக்கு ஜால்ராபோடும் இனமலர் இந்த விசயத்தில் அடக்கி வாசிக்கிறது. மருத்துவமனை வந்தால் நல்லதுதானே என்று சப்பை கட்டுகிறது. இதை ஒரு பிரச்சினையாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இனமணியோ பூசி மெழுகி தலையங்கம் தீட்டுகிறது. ஜெ அரசு சொல்வதுபோல டி.பி.அய். வளாகத்தில் நூலகம் கட்ட போதுமான இடவசதி இல்லவே இல்லை. அங்கிருக்கும் எல்லாக் கட்டடங்களையும் இடித்தாலும் இந்த அளவுக்கு நிச்சயம் கட்ட முடியாது. நூலகத்திற்கு என்றே வடிவமைக்கப்பட்ட கட்டடத்தை விட்டுவிட்டு ஏன் மீண்டும் வேறு ஒரு கட்டடம் கட்ட வேண்டும்?
அந்தப் புதிய இடத்தில் மருத்துவமனைக்கென்றே சிறப்பு வடிவமைப்பில் கட்டடம் கட்டிவிடலாமே! இதெல்லாம் தெரியாதா ஜெயலலிதாவுக்கு? தெரியும். இவர் நூலகத்தை மாற்றுவேன் என்பது இன்னொரு நூலகம் கட்ட அல்ல. இந்த நூல்களை மூட்டையாகக் கட்டி மூலையில் போட. ஏற்கெனவே பாவேந்தர் செம்மொழி நூலகத்தை மூடி அதில் உள்ள நூல்களை மூட்டை கட்டிப் போட்டுவிட்டார். இப்போது அண்ணா நூலகத்திற்கு வந்துள்ளார் அவ்வளவுதான்.
– மணிமகன்
source: from unmaionline.com