பிம்ப மைய வழிபாடும் இஸ்லாமிய புலமைத்துவ எதிர்ப்பும்
ஏ.பி.எம்.இத்ரீஸ்
[ உயிருள்ள மனிதனுக்கு கனவுகள் வரும். கனவு காணாத மனிதன் இல்லை. ஒரு மனிதனின் ஆசைக்கும் முயற்சிக்கும் ஏற்ப அவனது கனவு சிறியதாக, பெரியதாக இருக்கலாம். சுமார் நூறு வருடங்களுக்கு முன்னால் முன்னூறு யூதர்கள் சுவிஸில் கண்ட கனவுதான் இன்று தமக்கென்றொரு நாட்டை மத்திய கிழக்கில் அமைத்துக் கொண்டனர். அவர்களின் நாடு உருவாவதற்கு நிலமே இருக்கவில்லை. அவர்களின் நேற்றைய கனவு இன்றைய உண்மையாக இருக்கிறது.
முஸ்லிம் தேசம் என்பதும் கனவுதான். இன்றையக் கனவு நாளைய நனவாக/நிஜமாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாம் கனவு காண்பதற்கு யோக்கியதை இருக்கிறது. அத்திலாந்திற்கு அப்பாலும் நமக்கு சகோதரர்கள் இருக்கிறார்கள். நம்மை இன்று பீடித்துள்ள வஹ்ன் (பலவீனம்) னை அகற்ற வேண்டும். போராட்டத்தை விரும்ப வேண்டும். அதற்காக எமது சொத்துக்களை, சுகங்களை இழப்பதற்கும் தயாராக வேண்டும்.
“நீங்கள் சஞ்சலப்பட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். நீங்கள் உண்மையான விசுவாசிகளாக இருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள்’’ என்று அல்குர்ஆன் கூறுகின்றது.
“ஹலால் தெளிவானது. ஹராமும் தெளிவானது. அவற்றிற்கிடையே மயக்கமான சிலவிடயங்கள் இருக்கின்றன.” (ஆதாரம்: முஸ்லிம்)
முப்பரிமானப் பன்மைத்துவத்தைத்தான் இஸ்லாம் பேசுகின்றது. இஸ்லாத்தின் இந்த உன்னதமான சிந்தனையை ஏற்பதனூடாகத்தான் இன்றைய மனித சமூகத்திற்கு உண்மையான விடுதலை இருக்கிறது. மனிதன் உருவாக்கிய இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புக்களும் பௌதீக வாழ்வை எளிமைப்படுத்தும் கருவிகளும் அழியாமல் பாதுகாக்கக் கூடிய பண்பு இஸ்லாமிய வாழ்வுமுறைக்கே உண்டு.]
பிம்ப மைய வழிபாடும் இஸ்லாமிய புலமைத்துவ எதிர்ப்பும்
ஏ.பி.எம்.இத்ரீஸ்
பிரான்ஸின் பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர்களில் ஒருவரான Jean Baudrillard – ஜோன் போட்ரில்லார்ட் நிஜத்துக்கும் பிம்பத்துக்கான வேற்றுமைகளைக் காண்பது இந்தத் தகவல் தொழில்நுட்ப பிம்ப யுகத்தில் இனி சாத்தியமில்லை என கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாகக் கூறிவருகிறார்.
ஹென்ரி லெப்வோர், கைடெபோட் போன்றவர்களின் பகுப்பாய்வு முறைகளும் பின்நவீனத்துவ சிந்தனை முறையும் அது வழங்கிய மொழியியல், உளவியல், தொல்லியல் பார்வைகளும் இணைந்ததாக போட்ரில்லாரின் நகல் – போலி குறித்த பிம்ப அரசியல் பரிமாணம் பெற்றிருக்கிறது. இந்தப் பாதிப்புக்களை போட்ரில்லார்ட் என்றுமே வெளிப்படையாக ஒப்புக் கொண்டதில்லை.
ஜோன் போட்ரில்லார்ட் இன் கருத்தாக்கங்களில் மிக முக்கியமானது Simulation – சிமுலேஷன், Simulacra – சிமுலெக்ரா மற்றும் Hyper reality ஹைப்பர் றியலிட்டி போன்றவையாகும். சிமுலேஷன் என்பதனை நிகழ்வு, அசல், ஆதாரம் போன்றவற்றோடு தொடர்பற்ற ‘நகல்’ எனச் சொல்லலாம். அதாவது தொலைக்காட்சியில் பிம்பத் தொகுப்பின் போது தத்தமது நோக்குக்காக சம்பந்தபட்ட பிம்பங்களால் பயன் பெறுபவர்களால் உருவாக்கப்படும் அசலைப் போன்ற போலிப் பிம்பமாகும்.
சிமுலெக்ரா என்பது படத்தொகுப்பின் போது உருவாக்கப்பட்ட நகலின் மீது சார்ந்திருக்கின்ற நகல் போலி என விளக்கலாம். போலி அசலின் தன்மையைக் கொண்டிருப்பதில்லை. நகல்போலி போலியின் தன்மையைக் கூடக் கொண்டிருப்பதில்லை. இவ்வாறாக நகல்போலிகளின் அதீத மயமான நிலையாக, நகல்போலியின் மீதான நகல் போலிகளின் நிலையாக Hper reality உருவாகிறது. ஹைப் அல்லது ஹைப்பர் டென்ஷன் என்பன போன்ற சொற்கள் எழுப்பும் அர்த்தம் அதீதம் என்பதோடு தொடர்பு கொண்டது.
ஹைபர் ரியாலிட்டி என்பது அதீதப் படுத்தப்பட்ட பல்வகை யதார்த்தங்களின் அதீதத் தொகுப்பு நிலையாகும். இதனை ஆழ் யதார்த்தம் என்று சொல்லமுடியாது. இந்த யதார்த்தம் காலம், இடம் போன்றவை வழங்கும் ஆதாரமான யாதார்த்தங்களை முற்றிலும் மறுத்த நிலையாகும். இப்போது இருக்கும் உலகம் மோஸ்தர்கள், பரிவர்த்தணை மதிப்புகள் போன்றவற்றினால் உருவான நகல்போலி உலகாக இருக்கிறது. அசலுடன் சம்பந்தமற்ற போலி என்பதாகவே இன்றைய உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இன்றைய மோஸ்தர்கள், நுகர்வுப் பொருட்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சிப் பிம்பங்கள், மக்களின் நுகர்வுத் தேவைகள் போன்றவற்றுக்கான ஆதாரம் அல்லது இருப்பிலிருந்த நிரந்தர நிஜம் என்று ஏதுமில்லை. அவற்றை இன்றைய பின்நவீனத்துவ யுகத்தில் கண்டுபிடிப்பதும் சாத்தியமில்லை என்கிறார் போட்ரில்லார். இருப்பதெல்லாம் நகல்போலிகளின் பெருக்கம் தான். ஒரு கட்டத்தில் நகல்போலி எனும் கருத்தாக்கம் கூட நகல்போலி சமூகத்தின் உறுப்பாக ஆகிவிடும் என்கிறார். போட்ரில்லார் அவரது பகுப்பாய்விலிருந்து உருவாக்கப்படுகிற முடிவு இரண்டு. ஒன்று, பயன் மதிப்பு மறைந்து தற்போது பரிவர்த்தணை மதிப்பு மட்டுமே இருக்கிறது. இரண்டு, நிஜத்திற்கும் நிழலுக்குமான வித்தியாசம் மறைந்துபோய்விட்டது.
நகல் போலிகள் இன்று நிஜங்களாகி இருக்கின்றன. பல்வேறு நகல்போலிகள் அலைவதால் யதார்த்தம் என்பதும் உண்மை என்பதும் நிஜம் என்பதும் பன்முகப் பட்டதாக ஆழ் யதார்த்தப் பண்பு கொண்டாக ஆகிவிட்டது. ஆகவே, யதார்த்தங்கள் என்பதும் நிகழ்வென்பதும் நிஜமென்பதும் இனியில்லை. இருப்பதெல்லாம் பிம்பங்களும் நகல்களும்தான் என்கிறார் போட்ரில்லார். போட்ரில்லாரைப் பொறுத்தவரை கருத்தியல்கள், இலட்சியங்கள், வர்க்கங்கள், சமூக வேறுபாடுகள் எதுவும் இன்று இல்லை. மாற்றுச் சமூகம் மாற்றுக் கருத்து, போரட்டங்கள், ஜிஹாதுகள், எதிர்ப்பியக்கங்கள் என்பதற்கெல்லாம் போட்ரில்லாரின் உலகத்தில் அர்த்தமில்லை.
போட்ரில்லாரின் உலகத்தில் மனிதப் பரிமாணம் மனிதனது செயலூக்கம் மிக்க பிரதிநிதித்துவம் இமாமத், கிலாபத் என்பதற்கு எதுவும் முக்கியத்துவமில்லை.
‘தொலைக்காட்சிப் பிம்பங்கள், புகைப்படங்கள் குறித்து ஆழமான பகுப்பாய்வில் ஈடுபட்ட பிரஞ் அறிஞர் என்றால் அது போட்ரில்லாட் ஆகத்தான் இருக்க முடியும்’ என்று கூறுகிறார் யமுனா ராஜேந்திரன்.
செப்டம்பர் தாக்குதலுக்குப் பின் கருத்தியலோ எதிர்ப்புணர்வோ எதுவுமில்லை என்கிறார் இவர். செப்டம்பர் தாக்குதல் அமெரிக்கா தனக்குத்தானே தேடிக் கொண்ட எதிர்ப்பின் குறியீடு என்கிறார். தொலைக்காட்சிகளில் நிறைத்துக் கொண்டு நின்ற அதீத பிம்பங்களாகவே வளைகுடா யுத்தம் நடந்துமுடிந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்ப விளையாட்டை திரையில் நிகழ்த்துவதாகவே அந்தப் போர் நடந்து முடிந்திருக்கிறது. நமக்குக் காட்டப்பட்ட போர் அமெரிக்காவினால் முன்பே திட்டமிடப்பட்ட போர். அது நிஜமான போரல்ல எனவும் நிஜமான போரைப்பார்க்கவோ புரிந்து கொள்ளவோ முடியாது எனவும் அவர் தெரிவிக்கிறார்.
போட்ரில்லார் அனைத்தையும் உறைநிலையில் வைத்தே விவரிக்கிறார். போர் என்பது ஒரு தொடர் நடவடிக்கை என்றோ, போரில் மனிதர்கள் மரணமடைவதையோ, தகவல் மேலாதிக்கம் கொண்டவர்களால் மறைக்கப்பட்ட பிம்பங்கள் ஏராளம் இருக்கின்றன என்பதையோ அவர் காண்பதில்லை. போருக்கெதிரான இயக்கங்கள் இருக்கின்றன. அதில் மனிதர்கள் பங்குபெறுகிறார்கள் என்பதை அவர் மறுத்துவிடுகிறார். அவரைப் பொறுத்தவரை சமூகத்தின் மேல் கட்டுமானமே கீழ்க்கட்டுமானத்தை தன் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. கீழ்கட்டுமானத்தின் ஆதாரங்களைக் காண்பது இனி சாத்தியமில்லை. அதனால் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கோ பயங்கரவாதத்திற்கோ ஒரு நோக்கமுமில்லை என்ற நிலைப்பாட்டை இதன் மூலம் வந்தடைகிறார் அவர்.
உலக நிகழ்வுகளின் 1990 இலிருந்து 1992 வரையிலான மூன்றாண்டு காலக் கட்டம் மிக முக்கியமானதாகும். இந்த ஆண்டுகளில்தான் யுத்தம் தெலைக்காட்சிப் பிம்ப யுத்தமாக பரிமாணம் பெற்றது. கதிரியக்கத்தால் உந்தப்பட்ட குண்டுவீச்சுத் தொழில்நுட்பத்துடன் (Leser guided precision bombing technology) நடந்த யுத்தம் இக்காலத்தில்தான் தொலைக்காட்சியில் பல வண்ண வானவேடிக்கையாக பிம்பங்களின் நிகழ்வாக ஆனது. பொஸ்னியா யுத்தமும் முதலாம் ஈராக் யுத்தமும் நடந்துமுடிந்த இந்த ஆண்டுகளில் இரண்டு மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. அவற்றில் முதலாவது உலக விரிவு வலை (World Wide Web) கண்டுபிடிக்கப்பட்டதாகும்.
இங்கிலாந்துக் கார விஞ்ஞானி பெர்னர்ஸ் லீ 1991 ஆம் ஆண்டு இணைய வலைத்தளத்தை உலகப் பொதுமக்களுக்கென அர்ப்பணித்தார். இரண்டாவது மாற்றம் அரசியல் ரிதியிலான ஊடகத்துறைப் புரட்சி. 1992 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு நாடான கட்டாரில் இருந்து அல்ஜஸீரா தெலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. அப்புரட்சியின் வெளிப்பாடுதான் உலகின் மாற்று அரசியலுக்கான தகவல் ஆதாரமாக அமெரிக்கா ஐரோப்பிய ஒற்றைப் பரிமாண ஊடகங்களுக்கு எதிர்த்தகவல் ஆதாரமாக அல்ஜஸீராத் தொலைக்காட்சி தோன்றிது. இத்தகைய சூழலில்தான் பயங்கரவாதம் அடிப்படை வாதம், உலக மயமாதல், பிரபஞ்ச மதிப்பீடுகள், உள்ளுர் மதிப்பீடுகள், சித்திரவதை, கடத்தப்பட்ட பயணக்கைதிகள் போன்ற பிரச்சினைகள் குறித்து போட்ரில்லாரின் கதையாடலும் அமைகிறது.
பொஸ்னியா யுத்தத்தின்போதோ முதல் ஈராக்கிய யுத்தத்தின் போதோ அல்ஜஸீரா இருக்கவில்லை. ஆனால் இன்று உலகில் நடப்பது அல்ஜஸீரா தொலைக்காட்சியின் பிம்பங்களின் மூலமாகவும் கலக அரசியல் இயக்கத்தினரின் வலைத்தளங்கள் மூலமாகவும் உலகில் உள்ள அனைவரையும் எட்டுகிறது. முதலாம் ஈராக் போரை அறிவித்ததற்கும் இரண்டாம் ஈராக் போரை அறிவித்ததற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. முதலாம் ஈராக் போருக்குப் பிறகு அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதால் சத்துக் குறைவினாலும் போதிய மருத்துவ வசதிகள் இன்மையாலும் ஐந்து இலட்சம் ஈராக் குழந்தைகள் மரணமடைந்துள்ளதாக ஜோன் பில்ஜரின் ஆவணப்படம் சொல்கிறது.
இரண்டாம் ஈராக் போர்பற்றி அமெரிக்க ஊடகங்களில் சொல்லப்பட்டவற்றிற்கும் அல்ஜஸீரா தொலைக்காட்சியில் சொல்லப்பட்டவற்றிற்கும் இடையில் வித்தியாசமிருக்கிறது. அமெரிக்காவின் மூர்க்கத்தனத்தால் வெல்லப்பட்ட யுத்தமாகவே ஈராக் யுத்தம் அமெரிக்க ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டது. சதாமின் கைது குறியீட்டளவில் வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. பக்தாதைக் கைப்பற்றிய போது தலைமறைவாகிவிட்ட ஈராக்கியப் படை மறக்கப்பட்டுவிட்டன. ஈராக்கில் இதுவரை எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள் ஈராக்கிய சமூகத்திற்கு அன்னியர்கள், குற்றவாளிகள், அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் எனக் கட்டமைத்துவந்த அமெரிக்க ஊடகங்களின் பொய்கள் பல்லூஜா நகரத்தில் பொய்த்துப் போனது. அந்த நகரத்தை தமது கட்டுக்குக் கொண்டுவர முடியாமல் பின்வாங்கியது அமெரிக்கா. அங்கே அமெரிக்கப்படையை கடைசிவரை எதிர்த்து நின்றவர்கள் சுன்னி முஸ்லிம்கள் என்பது உலகுக்கு வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. முழு ஈராக்கும் இன்று அமெரிக்கப்படைக் கெதிராக கிளர்ந்தெழுந்துள்ளது.
அபு கரிப் சிறைச்சாலையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களையும் சித்திரவதைகளையும் குறித்துப் பேசுகிறபோது நாகரிகம், விடுதலை, ஜனநாயகம் போன்ற சொல்லாடல்கள் இவர்களது அறிக்கைகளில் இடம்பெறுவதில்லை. அபூகரிப் சித்திரவதைகள் 2003 இல் இருந்து நடந்துவருவதாக தற்போது இத்தாலியப் படைத்தலைவர் தெரிவித்துள்ளார்.
சித்திரவதை என்பது அமெரிக்க சிறையின் ஓர் அங்கம். கைதியைப் பட்டினி போட்டு உடலை நலிவடையச் செய்து மரண பயத்தை ஏற்படுத்தி அவர்களை விசாரிப்பது அமெரிக்க உளவுத்துறையின் விசாரணை முறை என்பது இன்று அம்பலமாகிவிட்டது. பயங்கரவாதிகள் என கைதுசெய்யப்பட்டவர்களை எங்கோ ஒழித்துவைத்து அமெரிக்கர்கள் விசாரித்து வந்திருப்பதை உலகத்தினர் அனைவரும் தெரிந்து கொண்டனர். இதுமட்டுமல்லாமல் சித்திரவதைப் புகைப்படங்களும் வெளியாகி நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்கா தனது நலன்களுக்கும் இலட்சியங்களுக்கும் ஏற்ப ஐ.நா வைக்கட்டுப்படுத்தி அதன் கிளை நிறுவனங்களை தனக்கு வசப்படுத்தி யாரும் தமக்கெதிராக கிளர்ந்தெழ முடியாது எனக்கூறி பொருளாதார, அரசியல், தேவைப்படும் போது ராணுவ நடவடிக்கை மூலம் அடிபணியச் செய்து சர்வதேசிய அரசியலை ஒற்றைத் துருவமாக மாற்ற முயல்கின்ற இக்காலத்தில்தான் அந்த மகத்தான செப்டம்பர் தாக்குதல் நிகழ்ந்தது. யாராலும் அடிக்க முடியாத அமெரிக்காவை அடித்தாயிற்று. யாராலும் அடிக்கமுடியாது என்பதில்தான் அமெரிக்காவின் ஒட்டுமொத்தப் பலமும் இருக்கிறது என்றால் அதனையும் அடித்தாயிற்று. இது இறைவனின் நியதி. சுன்னத்துல்லாஹ் சண்டியன் காலம் முழுக்க சண்டியனாக இருக்கமுடியாது. கோழை எப்போதும் கோழையாக இருப்பதில்லை. உலகில் இதற்கு முன்பும் எத்தனையோ பலசாலிகள், பராக்கிரம சாலிகள் ஜாம்பவான்கள் இருந்திருக்கிறார்கள். ஆத், ஸமூத், பிர்அவ்ன் நானே கடவுள் என்று சொன்னவர்களுக்கு இறுதியில் என்ன நடந்தது. சுன்னத்துள் முதாபஆ (மோதுகை) ஊடாக அல்லாஹ் மனித சமூகத்தைக் காக்கின்றான்.
“அல்லாஹ் மனிதர்களில் சிலரைக் கொண்டு சிலரைத் தடுக்காது விட்டால் உலகம் சீர் கெட்டுவிடும்.” (2:251)
இந்த இறை நியதியின் அடிப்படையில் தான் சோவியத் ஒன்றியம் தோற்றம் பெற்றது. அமெரிக்க, ஐரோப்பிய முதலாளிய அடக்குமுறையால் அதன் உடைவைத் தடுக்கமுடியாமல் போனது. பின்னர் சோவியத் யூனியனில் இருந்து ஒடுக்கப்பட்ட நாடுகள் விடுதலை அடைந்தன. கம்யூனிஸமும் முதலாளியமும் தன்னளவில் அநியாயத்தை உட்பொதிந்தவையாக இருந்தாலும் அல்லாஹ் அநியாயக் காரர்களைக் கொண்டே அநியாயக்காரனை தடுக்கின்றான்.
மூடப்பட்ட அனைத்துக் கதவுகளையும் அடித்துத் திறப்பதுதான் இன்றைய அமெரிக்காவின் அரசியல். நாம் எப்படி அல்லாஹ்வையும் ரஸுலையும் நம்புகிறோமோ அதேபோன்று அவர்கள் முதலாளித்துவத்தை விசுவாசிக்கின்றார்கள். முதலாளியம் இன்றி வாழ்க்கை இல்லை என்பது அவர்களின் நம்பிக்கை. கட்டற்ற பொருளாதாரத்தினூடாகத்தான் அவர்களின் வாழ்வு மலரும் என்று நம்புகிறார்கள்.
சோவியத்தின் வீழ்ச்சிக்கு மற்றொரு காரணம் அது அதிகம் வெளிநாடுகளில் தலையிட்டமை. அந்த முறையை சீனா செய்யாததால் தப்பிக் கொண்டது. முதலாளித்துவம் எப்போது விழுகிறதோ அப்போதுதான் கம்யூனிஸம் மேற்கிளம்பும். ஆனால் பின் மார்க்கியத்தின் பலத்தைவிடவும் இன்று இஸ்லாமிய எழுச்சி ஆர்ப்பரிக்கும் பேரலையாக திரண்டுவருவதை யாரும் மறுக்கமாட்டார்கள். இஸ்லாமியவாதிகள் ரொமாண்டிக் தனமாகச் சிந்திப்பதாக சில இடதுசாரிகள் பேசிவருகிறார்கள். வெறும் கற்பனாவாத, Hope உலகில் மிதப்பதாக இஸ்லாமியவாதிகள் பற்றி அவர்கள் கருதுகிறார்கள்.
உயிருள்ள மனிதனுக்கு கனவுகள் வரும். கனவு காணாத மனிதன் இல்லை. ஒரு மனிதனின் ஆசைக்கும் முயற்சிக்கும் ஏற்ப அவனது கனவு சிறியதாக, பெரியதாக இருக்கலாம். சுமார் நூறு வருடங்களுக்கு முன்னால் முன்னூறு யூதர்கள் சுவிஸில் கண்ட கனவுதான் இன்று தமக்கென்றொரு நாட்டை மத்திய கிழக்கில் அமைத்துக் கொண்டனர். அவர்களின் நாடு உருவாவதற்கு நிலமே இருக்கவில்லை. அவர்களின் நேற்றைய கனவு இன்றைய உண்மையாக இருக்கிறது.
முஸ்லிம் தேசம் என்பதும் கனவுதான். இன்றையக் கனவு நாளைய நனவாக/நிஜமாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாம் கனவு காண்பதற்கு யோக்கியதை இருக்கிறது. அத்திலாந்திற்கு அப்பாலும் நமக்கு சகோதரர்கள் இருக்கிறார்கள். நம்மை இன்று பீடித்துள்ள வஹ்ன் (பலவீனம்) னை அகற்ற வேண்டும். போராட்டத்தை விரும்ப வேண்டும். அதற்காக எமது சொத்துக்களை, சுகங்களை இழப்பதற்கும் தயாராக வேண்டும்.
“நீங்கள் சஞ்சலப்பட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். நீங்கள் உண்மையான விசுவாசிகளாக இருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள்” என்று அல்குர்ஆன் கூறுகின்றது.
அமெரிக்காவை இஸ்ரேலை ஏன் நாம் எதிர்க்கின்றோம், அவர்கள் யூதர்கள் என்பதாலா? எல்லோரும் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிள்ளைகள் தானே. முஸ்லிமுக்கு ஓர் உலகப் பார்வை இருக்கிறது. அது இனத்துவ, மொழி, நாடு எல்லைக் கோடுகளைத் தாண்டியது. கிறிஸ்தவர்களை விடவும் யூதர்கள் முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். கிறிஸ்தவர்கள் கடவுள் கொள்கையில் பல திரிபுவாதங்களை உருவாக்கியதைப் போல் யூதர்கள் உருவாக்கவில்லை. பிதா, சுதன், பரிசுத்த ஆவி போன்ற கருத்து அவர்களிடம் இல்லை. யூதர்கள் முஸ்லிம்கள் போல் இப்றாஹீமைப் பின்பற்றி கத்னா செய்கின்றனர். அவர்கள் பன்றி சாப்பிடுவதில்லை. முஸ்லிம்கள் அறுத்ததை உண்பார்கள். யூதர்களிடம் சிலை வழிபாடு கிடையாது.
ஆனால் யூதர்கள் செய்த அநியாயம், தௌராத்திலிருந்து முஹம்மதின் வருகை பற்றிய செய்தியை அழித்தது, இறுதித்தூதரை நிராகரித்ததுதான். மதீனா ஒப்பந்தத்தை மீறியது, யூதர்களுக்கு வரலாற்றில் இஸ்லாம் எத்துனை சலுகைகளை வழங்கியும் முஸ்லிம்களுக்கு அவர்கள் அநியாயம் செய்தே வந்துள்ளனர். யூதர்களுடனான முஸ்லிம்களின் போராட்டத்துக்கான அடிப்படைக் காரணம் அவர்கள் எமது கிப்லாவை ஆக்கிரமித்திருப்பதுதான். இதைத்தவிர இனமோ, மொழியோ, நாடோ அல்ல என்பதை நாம் விளங்கிக் கொள்வது அவசியம். இஸ்லாம் உலகலாவியதாக இருப்பதைப் போல அது பன்மைத்துவக் கருத்து நிலையையும் பன்மைத்துவப் பண்பாட்டையும் வலியுறுத்துகின்ற அதை இறை சுன்னாவாக நியதியாக பார்க்கின்ற மார்க்கம்.
ஹராம் ஹலால், கைர் ஷர் என இருதுருவக் கட்டமைப்பு அதனிடம் இல்லை. பாட்டாளி, முதலாளி என்ற வர்க்க முரணியம் அதனிடம் கிடையாது. அவற்றுக்கப்பால் மூன்றாவதாக ஒரு பகுதியையும் அது வலியுறுத்துகின்றது.
“ஹலால் தெளிவானது. ஹராமும் தெளிவானது. அவற்றிற்கிடையே மயக்கமான சிலவிடயங்கள் இருக்கின்றன.” (ஆதாரம்: முஸ்லிம்)
முப்பரிமானப் பன்மைத்துவத்தைத்தான் இஸ்லாம் பேசுகின்றது. இஸ்லாத்தின் இந்த உன்னதமான சிந்தனையை ஏற்பதனூடாகத்தான் இன்றைய மனித சமூகத்திற்கு உண்மையான விடுதலை இருக்கிறது. மனிதன் உருவாக்கிய இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புக்களும் பௌதீக வாழ்வை எளிமைப்படுத்தும் கருவிகளும் அழியாமல் பாதுகாக்கக் கூடிய பண்பு இஸ்லாமிய வாழ்வுமுறைக்கே உண்டு.
ஆதாரக் குறிப்புகள்:
1. The sprirt of terrorism by Jean baudrillard Verso, Sep 11, 2002, UK
2. உயிர்மையில் யமுனா ராஜேந்திரன் எழுதிய கட்டுரையிலிருந்து இக்கட்டுரையின் முதற்பகுதி எடுத்தாளப்பட்டுள்ளது.
3. க. பூரணச் சந்திரன், அமைப்பு மையவாதமும் பின் அமைப்பு வாதமும், முதற்பதிப்பு: 1991 ஏப்ரல், நிகழ் வெளியீடு – கோவை, பக்: 162 -169
source: http://idrees.lk/?p=548