Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சாயம் பூசப்பட்ட குழந்தைகள்!

Posted on November 19, 2011 by admin

[ “நிறையப் பணம் வேணும் “ என்ற வெறிதான் பின்னாளில் கிரிமினல்களை உருவாக்குகின்றது. பணம் குவிக்க எப்படியும் வாழலாம், என்ன வேலையும் செய்யலாம், எதையும் அவிழ்க்கலாம் என்பது அழகுப் போட்டிச் சிறுமிகள் கற்கும் அடிப்படைப் பாடம்.

செலவழிக்கப் பணம் திருடும் மேட்டுக்குடிச் சிறுவர்கள்தான் கொடூரமான கொலைகளைச் செய்கிறார்கள். இலட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும், பரிசுத் தொகை கொண்டிருக்கும் பெரிய – சிறிய அழகுப் போட்டிகளில் வென்றவர் – தோற்றவர் மனநிலையும், குறுக்கு வழியில் முன்னேறத் துடிக்கும் ஒரு கிரிமினலின் மனநிலையும் ஒன்றுதான்.

தெருமுனையில் வித்தை காட்டும் கழைக்கூத்தாடி, தனது மகளுக்குப் பெண்கள் அணிவது போல மார்புக் கச்சையை அணிவித்து வேடிக்கை காட்டுகிறான். எவருக்கும் முதல் பார்வையிலேயே ஏனென்று விளக்காமலேயே இக்காட்சி கொடூரமாக இருக்கும். சிறுமியைக் கவர்ச்சிக் கன்னியாக உருவகப்படுத்தும் கழைக் கூத்தாடி, தனது வயிற்றுப்பாட்டிற்காக அப்படிச் செய்கிறான்; அவளை வைத்துக் கோடம்பாக்கத்தையே ஒரு கலக்குக் கலக்கி கோடீசுவரனாக மாற வேண்டும் என்பதற்காக அல்ல.

அந்தச் சிறுமிக்கும், ஆண்களை வீழ்த்தி, பிரபல நடிகையாக ஒரு சுற்று வரவேண்டும் என்ற கனவெல்லாம் கிடையாது. இரவு ஒருவாய்க் கஞ்சி கிடைத்தால் பெரிய விசயம். ஆனால் தனது குழந்தைகள் மேடையில் ஆடை அவிழ்ப்பதையும், ஆபாசச் சினிமா நடனங்கள் ஆடுவதையும் கண்டு நடுத்தரவர்க்கம் பெருமிதம் கொள்கிறது. காரணம் ஐஸ்வர்யாராய்க் கனவுதான்.

இப்போது மேற்கிலிருந்து வேறு வடிவில் அழகு, கவர்ச்சி, வியாபாரம், ஆதாயம் அனைத்தும் சுதந்திரமாய் வந்திருக்கிறது. தனது குழந்தையை சமூகத்திற்குப் பொறுப்புள்ள குடிமகனாய் வளர்க்க விரும்பும் பெற்றவர்கள் சிந்திக்கட்டும்.]

  சாயம் பூசப்பட்ட குழந்தைகள்!  

அமெரிக்காவின் அட்லாண்டா நகரத்தில் சிறுமிகளுக்காக நடத்தப்படும் அழகிப் போட்டி ஒன்றைப் பற்றி, செய்திப் படமொன்றை பி.பி.சி. ஒளிபரப்பியது. ஜேன் ட்ரேஸ் தாயரித்திருக்கும் இக்குறும் படத்தின் பெயர் ‘பெயின்ட்ட பேபீஸ்’ (Painted Babies: சாயம் பூசப்பட்ட குழந்தைகள்)

பாடிக் கொண்டே, சுறுசுறுப்பாய் மூன்று சக்கர சைக்கிளை ஓட்டும் ஆசியா ஒரு ஐந்து வயதுச் சிறுமி. அட்லாண்டாவில், சதர்ன் சார்ம் நிறுவனம் நடத்தும் அழகிப் போட்டிக்குப் பயிற்சி எடுக்கும் அவளுக்கு இப்படி விளையாடுவதற்கான நேரம் கிடைத்ததே அரிது.

அவள் மட்டுமல்ல மொத்தக் குடும்பமும் போட்டிக்கான ஆயத்தங்களில் மூழ்கியிருக்கிறது. சிறுமியின் பாட்டி மேரி பழைய பத்திரிகைகளில் அழகுக் குறிப்புகளைச் சேகரிக்க, தாய் கிம்மான்சூர் (முன்னாள் விளம்பர நடிகை) ஆடை ஆபரணங்களைச் சரிபார்க்க, இருவருக்கும் தந்தை ஃபூ மான்சூர் உதவி செய்கிறார். தேர்வுக்குக் கண் விழித்துப் படிக்கும் குழந்தைகளுக்கு, கண் விழித்து ஹார்லிக்ஸ் கொடுக்கும் நம்மூர் பெற்றோரை விட இக்குடும்பத்தின் ‘தியாகம்’ அளப்பரியது.

அன்னநடைக்கான பயிற்சி, முகபாவனை, சிரிப்பு, பாட்டு என ஆசியாவின் ஒரு நாள் என்பதே பல பயிற்சிகளின் அட்டவணை! ஊன், உறக்கம் மறந்து மகளுக்காக அம்மா படும் அவஸ்தையை என்னவெனபது? சாப்பாட்டு மேசையிலும் மகளுக்குப் பாட்டுப் பயற்சியை நடத்தும் கிம் மான்சூரின் கண்களில் தெரியும் அந்த லட்சிய வெறி, நமக்குத் திகிலுட்டுகிறது. சிறுமி ஆசியாவிடம் பேட்டியாளர் கேட்கிறார், “நீ எதற்காகப் போட்டியில் கலந்து கொள்கிறாய், எதிர்காலத் திட்டம் என்ன?”. “நிறைய பணம் வேணும், கார் வேணும், பங்களா வேணும், இன்னும் நிறைய நிறைய பணம், அவ்வளவுதான்” ஒரு ஹாலிவுட் நடிகையைப் போல வேகமாகப பேசி முகமசைத்துக் கை விரிக்கிறாள் அந்தச் சிறுமி.

ப்ரூக், ஆசியாவுடன் போட்டி போடும் மற்றொரு சிறுமி, ஏற்கெனவே உள்ளூர்ப் போட்டியில் நான்கு இலட்சம் ரூபாய் வென்றவள், தேசியப் போட்டிக்குத் தயாராகிறாள். பாட்டி பாம் ப்ரட்வெல் நடத்தும் அழகு நிலையத்திலேயே பேத்தியும் அமெரிக்க பார்பி பொம்மையைப் போல மெருகேற்றப்படுகிறாள். மகளுக்குத் தெற்றுப் பல். அதனால் பல்லைக் காட்டாமலேயே இளிப்பதற்கு தாய் பயிற்சி கொடுக்கிறாள். பாடல் பயிற்சிக்காக மட்டும் வாரம் ஒரு முறை 500கி.மீ. தொலைவில் உள்ள பாடல் ஆசிரியையிடம் பயிற்சி எடுக்கிறாள் ப்ரூக்.

போட்டிக்கு இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் தினசரி மூன்று முறை சகல பயிற்சிகளையும் செய்கிறாள். பதிவு செய்த வீடியோ காசட் மூலம் திருத்தங்கள் செய்யப்படுகிறது. வெளியே தோட்டத்தில் நீர் பாய்ச்சும் ப்ரூக்ன் தந்தை, தனது சேமிப்புப் பணத்தை மகளின் கல்விக்காகச் செலவிட விரும்புகிறார். போட்டிக்கான உடையை மட்டும் 40,000 ரூபாயில் தயாரித்திருக்கும் தாய், சேமிப்பை அழகுப் போட்டிகளுக்காகச் செலவிட விரும்புகிறார். பாட்டி, அம்மாவுடன் அட்லாண்டாவை நோக்கி விமானத்தில் பறக்கிறாள் ப்ரூக்.

இப்படிக் கனவுகளோடும், குழந்தைகளோடும் அட்லாண்டாவில் வந்திறங்கும் தாய்மார்கள் பல விடுதிகளில் தங்குகின்றனர். வந்திருக்கும் பல அம்மாக்கள் போட்டி நடக்கும் மூன்று நாட்களிலும் பதட்டத்தோடு இருக்கின்றனர். போட்டி தவிர்த்த நேரங்களில் அழுகை, கோபம், விளையாட்டு, சாக்லேட் என்று குழந்தைகள் குழந்தைகளாக இருக்கின்றனர். ஒரு குழந்தைக்கு 15,000 ரூபாய் வசூலிக்கும் முகப்பூச்சுக் கலைஞர். போட்டிகளுக்கு மதிப்பெண் போடும் அலங்காரக் கிழவிகள், சிறுமிகளை இளம் பெண்களாகவே நடத்தி நிகழ்ச்சிகளைத் தொகுத்துரைக்கும் பாடகர் டிம் வெட்மர், போட்டியை நடத்தும் சதர்ன் சார்ம் நிறுவனத்தின் தலைவி. . . மொத்தத்தில் போட்டி தீவிரமடைகிறது.


ஆடை, அலங்காரத்தோடு, தோற்றத்தை மதிப்பிடும் அழகுப் பிரிவு, ‘ஆண்களின் கனவுக் கன்னி’ எனும் பாடலுக்கேற்ப அபிநயம் பிடிக்கும் ‘கனவுக் கன்னி’ பிரிவு, பாடல் பிரிவு, நீச்சல் உடை –நாகரீக உடை அணிவகுப்பு… அனைத்துப் போட்டிகளிலும் மேடையில் சிறுமிகள் செய்வதை, கீழே உள்ள தாய்மார்கள் கூடவே செய்து காட்டுகிறார்கள். ஆ…ஊ என கத்தி உற்சாகப்படுத்துகிறார்கள். பாடி முடித்து, ‘நன்றி சீமான்களே, சீமாட்டிகளே’ என்று பெரியவர்களின் தோரணையில் பேசி புன்னகைக்கிறாள் ப்ரூக். கௌபாய் உடையில் நடக்கச் சிரமப்படுகிறாள் ஆசியா.

கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தையில் திருத்தமாகப் பதிலளிக்கும் ப்ரூக் போட்டி இடைவெளியில் கோபமாக இருக்கிறாள். சரளமாய்ப் பேசும் ஆசியா, வெறுத்துப்போன அன்றாட அழகுப் பயிற்சி அட்டவணையை மாற்றுமாறு தாயிடம் முனகுகிறாள். ஒரு வழியாய் போட்டி முடிந்து, 95-ம் ஆண்டின் பேரரசி யாரென அறிவிக்கும் தருணமும் வருகிறது.

தாய்மார்கள் பதட்டத்தின் உச்சியில் நகத்தைக் கடித்து, கைளைப் பிசைந்து, கண்களை மூடுகின்றனர். முதல் மூன்று இடங்களுக்கான தகுதியை ஆசியாவும், ப்ரூக்யும் அடைகிறார்கள். முடிவில் ப்ரூக் பேரழகியாக அறிவிக்கப்படுகிறாள். ஆசியாவுக்கு மூன்றாவது இடம் கிடைக்கிறது. பேரழகியின் தாய் ஆனந்தத்தில் கதறுகிறார். ஆசியாவின் தாய் அதிர்ச்சியில் கண்கள் பனிக்கிறார். வென்றவர்களும், தோற்றவர்களும் மீண்டும் அடுத்த ஆண்டு போட்டிக்கு வருவோம் என்கின்றனர். கவர்ச்சியான எதிர்காலக் கனவுகளோடு, அடுத்த ஆண்டு மட்டுமல்ல வாழ்க்கை முழுதும் குழந்தைகளாய், தாய்களாய், பாட்டிகளாய் இறப்புவரை அவர்கள் வருவார்கள், வந்து கொண்டேயிருப்பார்கள்.

‘அமெரிக்கத் தரம்’ இல்லையென்றலும், இந்தியக் கான்வென்டு பள்ளிகளில் மேற்கின் வார்ப்பில் நிறையவே அழகிப் போட்டிகள் நடக்கின்றன. இன்னும் இந்தி,தமிழ்ச் சினிமாக்களின் கொச்சை நடனங்கள் பள்ளி ஆண்டு விழாக்களை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன. ஏறக்குறைய அவிழ்த்துப் போட்டு தொப்புள் டான்ஸ் ஆடும் தமது குழந்தைகளை, அனைத்துப் பெற்றோர்களும் மெச்சிக் கொள்கின்றனர். இவர்களுடைய உலகிலிருந்துதான் குழந்தைகள் பற்றிய கவலையும் விதவிதமாக வெளிப்படுகின்றது.

பாராளுமன்றம், பத்திரிக்கை, தொலைக்காட்சி, திரையுலகம், கல்வி நிறுவனங்கள் கவலைப்படும் இந்தியக் குழந்தைகளின் பிரச்சினைகள் பல. போலியோ சொட்டு மருந்து, சிவகாசி தொழிலாளர்கள், குழந்தை விபச்ச்சாரம்… என்று நீளுகிறது. மேலும் பீகாரின் நக்சல்பாரிக் கட்சி, ஈழத்து விடுதலைப் புலிகள் முதல் உலக நாடுகளின் பல்வேறு போராளிக் குழுக்கள் வரை-சிறுவர்களை போரில் ஈடுபடுத்திக் கொலை வெறியை வளர்க்கின்றனர் என்பதும் ஒரு முக்கியக் கவலை.

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்வோம். தீக்குச்சியை அடுக்கிப் பீடி சுற்றி, துப்பாக்கியை ஏந்துவதற்குக் காரணம், அக்குழந்தைகளின் பெற்றோரோ, குறிப்பிட்ட சமூகமோ அல்ல. பொருளியலிலும், அரசியலிலும் அச்சமூகப் பிரிவினரை ஆதிக்கம் செய்கின்ற சக்திகளே அந்த குழந்தைளின் வாழ்க்கையைப் பறித்தவர்கள். உலகின் பெரும்பான்மை நாடுகளும், மக்களும் ஏழ்மையில் உழன்று கொண்டிருக்கும்போது, அம்மக்களின் குழந்தைகள் மட்டும் வயிறார உண்டு, கல்வி கற்பது எப்படி முடியும்? அடிமைத்தனத்தில் உழலும் ஒரு சமூகத்தின் குழந்தைகள் மட்டும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியுமா? கட்டுண்டு கிடக்கும் மனிதர்களைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், குழந்தைகளுக்காக மட்டும் கண்ணீர் விடுவது அயோக்கியத்தனம்.

சிவகாசிக் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய குறும்படம் ஒன்றில் “பள்ளிக்குச் செல்லும் வயதில், பட்டாசுத் தொழிலுக்குச் செல்வது சரியா?” என்று ஒரு சிறுவனிடம் பேட்டியாளர் கேட்கிறார். “பட்டாசு செய்வதால்தான் ஒரு வேளையாவது பசியாற முடிகிறது” என்று பதிலளிக்கிறான் அச்சிறுவன். ஆசியாவைப் போன்ற சிறுமிகளோ, “நிறையப் பணம் வேணும்” என்பதற்காக அழகுப் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.


மேலும், “நிறையப் பணம் வேணும் ” என்ற வெறிதான் பின்னாளில் கிரிமினல்களை உருவாக்குகின்றது. பணம் குவிக்க எப்படியும் வாழலாம், என்ன வேலையும் செய்யலாம், எதையும் அவிழ்க்கலாம் என்பது அழகுப் போட்டிச் சிறுமிகள் கற்கும் அடிப்படைப் பாடம். ஆனால் துப்பாக்கி ஏந்தும் ஈழத்துச் சிறுவனுக்கு அமைதிப் படையின் ஆறாத வடுக்கள் காரணமாக இருக்கலாம். தன் மக்களைக் கொன்று குவிக்கும் ரன்வீர் சேனாவின் கொடுமை கண்டு ஒரு பீகார் சிறுவன் அரிவாளைத் தூக்கலாம்.

சிறுவயதானாலும், தன் மக்களின் அவலம் கண்டு ஆயுதம் தூக்கும் இவர்களிடம் கொலைவெறி வருவதில்லை; அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடும் விடுதலை உணர்வும் சமூகப் பற்றுமே ததும்பி நிற்கும்.

ஆனால் செலவழிக்கப் பணம் திருடும் மேட்டுக்குடிச் சிறுவர்கள்தான் கொடூரமான கொலைகளைச் செய்கிறார்கள். இலட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும், பரிசுத் தொகை கொண்டிருக்கும் பெரிய – சிறிய அழகுப் போட்டிகளில் வென்றவர் – தோற்றவர் மனநிலையும், குறுக்கு வழியில் முன்னேறத் துடிக்கும் ஒரு கிரிமினலின் மனநிலையும் ஒன்றுதான்.

தெருமுனையில் வித்தை காட்டும் கழைக்கூத்தாடி, தனது மகளுக்குப் பெண்கள் அணிவது போல மார்புக் கச்சையை அணிவித்து வேடிக்கை காட்டுகிறான். எவருக்கும் முதல் பார்வையிலேயே ஏனென்று விளக்காமலேயே இக்காட்சி கொடூரமாக இருக்கும். சிறுமியைக் கவர்ச்சிக் கன்னியாக உருவகப்படுத்தும் கழைக் கூத்தாடி, தனது வயிற்றுப்பாட்டிற்காக அப்படிச் செய்கிறான்; அவளை வைத்துக் கோடம்பாக்கத்தையே ஒரு கலக்குக் கலக்கி கோடீசுவரனாக மாற வேண்டும் என்பதற்காக அல்ல.

அந்தச் சிறுமிக்கும், ஆண்களை வீழ்த்தி, பிரபல நடிகையாக ஒரு சுற்று வரவேண்டும் என்ற கனவெல்லாம் கிடையாது. இரவு ஒருவாய்க் கஞ்சி கிடைத்தால் பெரிய விசயம். ஆனால் தனது குழந்தைகள் மேடையில் ஆடை அவிழ்ப்பதையும், ஆபாசச் சினிமா நடனங்கள் ஆடுவதையும் கண்டு நடுத்தரவர்க்கம் பெருமிதம் கொள்கிறது. காரணம் ஐஸ்வர்யாராய்க் கனவுதான்.

பருவம் அடைந்த பெண்கள் ஒரு ஆணைக் கவருவதற்கான நடை, உடை, முகபாவனை, உடல் அளவு, காதல் குறித்த பொது விதிகள் அழகிப் போட்டிக்கான அடிப்படை விதிகள்; சிறுமிகளுக்கான போட்டியும் இதற்கு விதிவிலக்கல்ல- ‘ஆண்களைக் கவரும் கனவுக் கன்னி’ எற்ற ஒரு பாடலுக்கு ஆசியாவும், ப்ரூக்கும் முகபாவனை செய்கிறார்கள்.

ஏற்கெனவே இந்தியச் சமூகம் பெண் குழந்தைகளுக்கு நாணத்தையும், செப்பு வைத்துச் சமைப்பதையும், சிறுவயதிலேயே சேலை கட்டுவதிலிருந்து சமைப்பது வரை அனைத்து அடிமைத்தனங்களையும் நுணுக்கமாகக் கற்றுக் கொடுத்து வருகிறது. இப்போது மேற்கிலிருந்து வேறு வடிவில் அழகு, கவர்ச்சி, வியாபாரம், ஆதாயம் அனைத்தும் சுதந்திரமாய் வந்திருக்கிறது. தனது குழந்தையை சமூகத்திற்குப் பொறுப்புள்ள குடிமகனாய் வளர்க்க விரும்பும் பெற்றவர்கள் சிந்திக்கட்டும்.

source:  புதிய கலாச்சாரம்

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 2

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb