கலிமாவிற்கு வழங்கப்படும் தவறான அர்த்தங்கள் (2)
அவர்களின் வணக்க வழிபாடுகளிலும் ஏதோ ஓரடிப்படையில் அல்லாஹ்வை நம்பியிருந்தார்கள் அதை கீழ்வரும் வசனத்திலிருந்து விளங்கலாம்.
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் ‘அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை’ (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அஸ்ஸுமர் : 03)
ஜாஹிலிய்ய மக்களிடத்தில் அல்லாஹ்வைப் பற்றி நம்பிக்கை காணப்பட்டாலும் அது சரியானதாக இருக்கவில்லை அல்லாஹ்வைப் பற்றிப் பிழையான நம்பிக்கையே அவர்களிடம் காணப்பட்டது அதை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
أَفَأَصْفَاكُمْ رَبُّكُمْ بِالْبَنِينَ وَاتَّخَذَ مِنَ الْمَلَائِكَةِ إِنَاثًا إِنَّكُمْ لَتَقُولُونَ قَوْلًا عَظِيمًا} الإسراء: 40
”உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண் குழந்தைகளை வழங்கி விட்டு தனக்கு வானவர்களைப் புதல்வியராக ஆக்கிக் கொண்டானா? பயங்கரமான கூற்றையே கூறுகிறீர்கள்!” (அல்இஸ்ரா : 40)
எனவே அல்லாஹ்வால்தான் அனைத்தும் இடம்பெறுகின்றது என்று சொல்லிவிட்டால் அது அல்லாஹ்வைப் பற்றிய முழுமையான நம்பிக்கையாகிவிடாது. இந்த நம்பிக்கையை மட்டும் பிரசாரம் செய்ய நபிமார்கள் அனுப்பப்படவில்லை என்பதை மிக ஆழமாக விளங்க வேண்டும்.
காஃபிர்கள் அல்லாஹ்வை எப்படியெல்லாம் தவறாக எண்ணியிருந்தார்கள் என்பது பற்றி அல்லாஹ் மேலும் கூறும் போது
فَاسْتَفْتِهِمْ أَلِرَبِّكَ الْبَنَاتُ وَلَهُمُ الْبَنُونَ (149) أَمْ خَلَقْنَا الْمَلَائِكَةَ إِنَاثًا وَهُمْ شَاهِدُونَ (150) أَلَا إِنَّهُمْ مِنْ إِفْكِهِمْ لَيَقُولُونَ (151) وَلَدَ اللَّهُ وَإِنَّهُمْ لَكَاذِبُونَ (152) أَصْطَفَى الْبَنَاتِ عَلَى الْبَنِينَ } الصافات: 149 – 153
”உமது இறைவனுக்குப் பெண் குழந்தைகள்! இவர்களுக்கு ஆண் குழந்தை களா?’ என்று இவர்களிடம் கேட்பீராக!வானவர்களை நாம் பெண்களாகப் படைக்கும் போது அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா?கவனத்தில் கொள்க! அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றெடுத்தான் என்று அவர்கள் இட்டுக்கட்டியே கூறுகின்றனர். அவர்கள் பொய் கூறுபவர்கள். ஆண் மக்களை விட அவன் பெண் மக்களைத் தேர்வு செய்து விட்டானா?” (அஸ்ஸாப்பாத் : 149- 153)
மற்றோரிடத்தில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்;
وَجَعَلُوا الْمَلَائِكَةَ الَّذِينَ هُمْ عِبَادُ الرَّحْمَنِ إِنَاثًا أَشَهِدُوا خَلْقَهُمْ سَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَيُسْأَلُونَ (19) وَقَالُوا لَوْ شَاءَ الرَّحْمَنُ مَا عَبَدْنَاهُمْ مَا لَهُمْ بِذَلِكَ مِنْ عِلْمٍ إِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ (20) أَمْ آتَيْنَاهُمْ كِتَابًا مِنْ قَبْلِهِ فَهُمْ بِهِ مُسْتَمْسِكُونَ (21) بَلْ قَالُوا إِنَّا وَجَدْنَا آبَاءَنَا عَلَى أُمَّةٍ وَإِنَّا عَلَى آثَارِهِمْ مُهْتَدُونَ} الزخرف: 19 – 22
”அளவற்ற அருளாளனின் அடியார்களான வானவர்களைப் பெண்களாக அவர்கள் கற்பனை செய்து விட்டனர். அவர்கள் படைக்கப்பட்டதை இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? இவர்களது கூற்று பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்படுவார்கள். ‘அளவற்ற அருளாளன் நினைத்திருந்தால் அவர்களை நாங்கள் வணங்கியிருக்க மாட்டோம்’ எனக் கூறுகின்றனர். இது பற்றி அவர்களுக்கு எந்த அறிவும் இல்லை. அவர்கள் கற்பனை செய்வோராகவே தவிர இல்லை.இதற்கு முன் அவர்களுக்கு ஏதேனும் ஒரு வேதத்தை நாம் கொடுத் தோமா? அதை அவர்கள் (இதற்கு ஆதார மாக) பற்றிப் பிடித்துக் கொண்டார்களா? அவ்வாறில்லை! ‘எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளில் நடப்பவர்கள்’ என்றே கூறுகின்றனர். (அஸ்ஸுக்ருப் : 19-22)
மற்றோரிடத்தில் அல்லாஹ் பின்வருமாறு சொல்கின்றான்;
”அல்லாஹ் உற்பத்தி செய்த பயிர்களிலும் கால்நடைகளிலும் அவனுக்கு ஒரு பங்கை ஏற்படுத்துகின்றனர். ‘இது அல்லாஹ்வுக்கு உரியது; இது எங்கள் தெய்வங்களுக்கு உரியது’ என்று அவர்களாகக் கற்பனை செய்து கூறுகின்றனர். அவர்களின் தெய்வங் களுக்கு உரியதுஇ அல்லாஹ்வைச் சேராதாம். அல்லாஹ்வுக்கு உரியதுஇ அவர்களின் தெய்வங்களைச் சேருமாம். அவர்கள் அளிக்கும் தீர்ப்பு மிகவும் கெட்டது.” (அல்அன்ஆம் : 136)
மற்றோரிடத்தில் அல்லாஹ் பின்வருமாறு சொல்கின்றான்;
وَقَالُوا هَذِهِ أَنْعَامٌ وَحَرْثٌ حِجْرٌ لَا يَطْعَمُهَا إِلَّا مَنْ نَشَاءُ بِزَعْمِهِمْ وَأَنْعَامٌ حُرِّمَتْ ظُهُورُهَا وَأَنْعَامٌ لَا يَذْكُرُونَ اسْمَ اللَّهِ عَلَيْهَا افْتِرَاءً عَلَيْهِ سَيَجْزِيهِمْ بِمَا كَانُوا يَفْتَرُونَ (138) وَقَالُوا مَا فِي بُطُونِ هَذِهِ الْأَنْعَامِ خَالِصَةٌ لِذُكُورِنَا وَمُحَرَّمٌ عَلَى أَزْوَاجِنَا وَإِنْ يَكُنْ مَيْتَةً فَهُمْ فِيهِ شُرَكَاءُ سَيَجْزِيهِمْ وَصْفَهُمْ إِنَّهُ حَكِيمٌ عَلِيمٌ } الأنعام: 138، 139
”இவை தடை செய்யப்பட்ட கால்நடைகளும் பயிர்களுமாகும். நாங்கள் நாடியோரைத் தவிர (மற்றவர்கள்) இதை உண்ண முடியாது’ என்று அவர்களாகக் கற்பனை செய்து கூறுகின்றனர். சில கால்நடைகளில் சவாரி செய்வது தடுக்கப் பட்டுள்ளது எனவும்இ சில கால்நடைகள் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டோம் எனவும் அவன் மீது இட்டுக் கட்டிக் கூறுகின்றனர். அவர்கள் இட்டுக் கட்டிக் கொண்டிருந்ததால் அவர்களை அவன் தண்டிப்பான்.’இக்கால்நடைகளின் வயிற்றில் உள்ளவை எங்களில் ஆண்களுக்கு மட்டுமே உரியவை. எங்களில் பெண்களுக்குத் தடுக்கப்பட்டவை. அவை இறந்தே பிறந்தால் அதில் அனைவரும் பங்காளிகள்’ எனவும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களின் இக்கூற்றுக்காக அவர்களை அவன் தண்டிப்பான். அவன் ஞானமிக்கவன்; அறிந்தவன்.” (அல்அன்ஆம் : 138 -139)
மற்றோரிடத்தில் அல்லாஹ் பின்வருமாறு சொல்கின்றான்.
يَا أَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوا لَهُ إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ لَنْ يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنْقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ (73) مَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ} الحج: 73، 74
”மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனை வரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும் தேடப்படு வோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.அவர்கள் அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்த வேண்டிய அளவுக்கு கண்ணியப்படுத்தவில்லை. அல்லாஹ் வலிமை மிக்கவன்; மிகைத்தவன்.” (அல் ஹஜ் : 73-74)
மற்றோரிடத்தில் அல்லாஹ் பின்வருமாறு சொல்கின்றான்;
{أَيُشْرِكُونَ مَا لَا يَخْلُقُ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ (191) وَلَا يَسْتَطِيعُونَ لَهُمْ نَصْرًا وَلَا أَنْفُسَهُمْ يَنْصُرُونَ الأعراف: 191، 192
”எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக் கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள முடியாது.” (அல்அஃராப் : 191-192)
இந்த வசனங்களையெல்லாம் அவதனிக்கும் போது கீழ்வரும் அம்சங்களைக் கண்டு கொள்ளலாம்
1. அல்லாஹ்வால் எல்லாம் நடைபெறுகின்றது என்பதை மக்கத்து காபிர்கள் நம்பியிருந்தார்கள்.
2. அல்லாஹ்வுக்கென்று பிரத்யேகமான வணக்கங்கள் அவர்களிடம் காணப்பட்டன.
3. கடலில் பயணம் செய்யும் போது சில வேளைகளில் அல்லாஹ்விடம் பிராத்திக்கும் வழமை அவர்களிடம் காணப்பட்டது.
மக்கத்துக் காஃபிர்கள் அல்லாஹ்வை இந்த முறையில் ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என அல்லாஹ்வே சான்று சொல்லும் போது இதை அவர்களிடம் பிரசாரம் செய்வதாற்காக வந்திருக்க முடியாது என்பது மென்மேலும் உறுதியாகின்றது.
இன்னும் சொல்வதானால், உலகில் பிறந்த அனைவருமே இவ்வுலகைப் படைத்த ஒருவன் உள்ளான் என்பதை நம்பியிருக்கின்றார்கள். பிர்அவ்னும் இதை நம்பியிருந்தான். அதனால்தான் மூஸா நபியவர்களிடம் ரப்புல் ஆலமீன் என்றால் யார்? என்று அவன் கேட்ட போது ரப்பு என்றால் யார் என்பதை விளங்கப்படுத்தாமல் ‘உன்னையும் என்னையும் படைத்தவன்’ என்று சுருக்கமாக மூஸா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கம் சொன்னார்கள். ஆகவே உலகைப்படைத்தவன் ஒருவன்தான் என்பதை பொதுவாக அனைவரும் நம்புகின்றனர். அந்த ஒருவனை மட்டுமே வணங்கவேண்டும் என்பதில்தான் பலரும் முரண்படுகின்றனர். படைப்புக்களை வணங்கக் கூடாது உலகைப்படைத்த ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்பதைப் பிரசாரம் செய்யவே நபிமார்கள் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டார்கள் என்பதை விளங்கவேண்டும்.
படைத்தல், நிருவகித்தல் ஆகிய இரண்டும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியதாகும் என நம்புவது தவ்ஹீதுல் ருபூபிய்யா எனப்படுகின்றது. இதையே நாம் சற்று முன்னர் விரிவாகப் பார்த்தோம். இது கலிமாவின் ஒரு கிளையாகும். அதன் இன்னொரு கிளை காணப்படுகின்றது. அதுதான் தௌஹீதுல் உலூஹிய்யா எனப்படும் வணக்க, வழிபாடுகள் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே மட்டுமே செய்யப்படவேண்டும் என்ற நம்பிக்கையாகும். பிரபஞ்சத்தையே படைத்துப் பரிபாலிக்கும் ஒருவனான அல்லாஹ்வுக்கே வணக்கம் செலுத்தப்படவேண்டும். அவன் மட்டுமே அதற்குத் தகுதியானவன். என்ற கலிமாவின் இந்தப் பகுதியை பிரசாரம் செய்யவே நபியவர்கள் இவ்வுலகுக்கு வந்தார்கள். இதை நெஞ்சில் ஆழமாய் பதியவைத்த வண்ணம் அடுத்த பகுதிக்குள் நுழைவோம்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.