உடலின் வாக்குமூலம்!
ஹஜ் நிறைவேற்ற புறப்பட்ட சகோதரர். அல்ஹாஜ் ஆக ஆவலுற்ற நண்பர் கடமையும், ஆசையும் நிறைவேறும் முன்னரே படைத்தவன் அழைக்க மீளாப் பயணம் மேற்கொள்ளும் காட்சிகள்.
வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு வீடு திரும்பிய எம்.பியின் பெயரை கபர்க்குழிப் பதிவேடு பதிவு செய்து கொள்ளும் விதி.
மணவாடை நீங்கும் முன்பாக மணவாளனை மலகல் மவ்த், மார்ச்சுவரி பிணவாடைக்குள் பிரேதமாய்க் கிடத்துகிறார்.
குடும்பத்தை காணும் குதூகலத்துடன¢ வானூர்தி ஏறி புறப்பட்டு வளைகுடாவைத் தாண்டும் நாளிகைக்குள், வஸீய்யத்து செய்ய வியலாமலே வபாத்தான வாப்பாக்கள்.
மீன், எறால், குடல், ஆட்டுத்தலை ஆசையுடன் வாங்கி வந்தோர். சமையலைச் சுவைக்கும் முன்பே சாக்காடு சென்றடைந்த வரலாறு.
என் மகள், என் மகன், கல்வி, பணியின் மீதான பெருமை. அழகின் மீது கர்வம்.
என் மனைவி. என் கணவர். உயிர்பிரிந்தபின் உடலைச் சுற்றி உரத்த ஓலக்குரல்கள். நிர்க்கதியாய் விட்டுப் போனீங்ளோ அத்தா, வாப்பா, அம்மா. மகளின் பாசக் குரல்! தவிக்கவிட்டுப் போயிட்டீங்களே. மனைவியின் விசும்பல்! இனி என்னை யார் கவனிப்பார்கள்? மனைவியை இழந்த கணவனின் ஏக்கம்!
எங்களுக்கு வராத மௌத் உனக்கு வந்துருச்சேடா தாய், தந்தை வேண்டுதல்! இடைக்குரல்களாய் பந்துக்களின் பாஸ்ட்புட் பாசம்! திரும்பவியலா பயணத்துக்கு உடல் தயாராகின்றது!
மழலையில் தாய், தந்தை குளிப்பாட்டிய பிறகு இன்று யாரோ ஒருவர் குளிப்பாட்டுகின்றார். சுத்தம் செய்து கபனிடுகின்றனர். சுற்றியிருந்தோர் நாசியை மூடுகின்றனர்.
மகன், மகள் வருகை தாமதம் நான் நாற்றமடைந்தேன். சந்தூக்கு பெட்டிக்குள் வைத்து மூடப்பட்டேன். உறவினர், அரட்டை நண்பர்கள் சுமந்து சென்றனர். கபர்ஸ்தான் வந்த பிறகும் மௌத் சிந்தனை வராது வியாபாரம் பேசும் உறவுகள். புதைகுழிக்கருகே அலுவலக சக ஊழியர் கதையாடல், புறம்பேசல். இதோ குழிக்குள் என்னை இறக்கப் போகின்றனர்.
குழிக்குள் யாராவது இறங்குங்கள். உடன் வந்து நின்ற கூட்டம் தயங்குகிறது. இருவர் முன்வந்து குழிக்குள் குதிக்கின்றனர். மேற்கு நோக்கி (கிப்லா) முதுகு, தலைக்கு மண் கட்டியை முட்டுக் கொடு. ஒன்றின் மீது ஒன்றாகப் பாயைப்போடு. நெருக்கமாக வைத்து கம்புகளை அழுத்திக் குத்து. இஸ்லாமும், ஈகையும், உதவுதலும் அறியா ரூஹ§கள் கம்பெடுத்துக் குடுப்பதில் போட்டியிடுகின்றன.
ஒரு மணி நேர மன்னர்களின் உத்தரவுக் குரல்கள் ஓய்ந்தன. ஆளுக்கொரு பிடி மண் உடல் மீது போட்டு ஆங்காங்கே ஒதுங்கினர். துஆச் சத்தம் ஓயப்போகிறது. காலடிச் சத்தங்கள் மறைப் போகின்றன. மகன், மருமகன், தந்தை, மைத்துனர், அண்ணன், தம்பி உறவுகள், உயிருக்குயிரானவர்கள் வீடு திரும்பப் போகின்றனர்.
இன்னும் ஓரிரு நாட்கள் மட்டும் அவர்கள் ஞாபகத்தில் நானிருப்பேன். உலக வாழ்க்கை உறவு முடிவுக்கு வந்தது. எனக்கென்று புதிய உறவுகள் குழிக்குள் காத்திருக்கின்றன. கேள்விக் கணக்குக்கு முன்கர் நகீர் வரவிருக்கிறார். வாழ்நாளில் நான் அருவருக்கும் ஆயிரம் கால்களுடைய மரவட்டைப் புளுக்கள் இதோ என்மீது ஊர்கின்றன.
வாழ்ந்த காலத்தில் விரல் நீளப் பூராண் கதவிடுக்கில் நுழைந்து மறைந்ததற்காக மறுநாள் விடியும் வரை உறக்கத்தை தொலைத்திருக்கின்றேன். இதோ முழங்கை வரை நீளமுள்ள விஷச் செய்யான் என் மீது ஏறி அமர்ந்து நோண்டுகிறது. ஆயுதம் தாங்கிய போர் வீரன் போன்று கொடுக்குகளுடன் என் இடுப்பு விலாவிற்குக் கீழே நட்டுவாக்காலிகள் நகர்வது தெரிகிறது.
எனக்கு மேல் அடுக்கப்பட்ட கட்டைகளின் மேலே மண்ணைச் சுரண்டும் கீரிப்பிள்ளை சத்தம் கேட்கிறது. இலகுவாக உள்ளே நுழைந்துவிட்டது. என் தலைப்பகுதி கபன் கட்டைப் பிடித்து இழுக்கிறது. அவிழ்த்துவிட்டது.
இதோ அனுதினம் அழகு பார்த்த என் முகத்தில் ஒரு பகுதியை பற்களால் கடித்து சவைத்து சுவைக்கிறது. வயதை மறைக்க சாயம் தடவிய என் தாடி அதன் பற்களுக்குள். வயிற்றின் மேலிருந்து ஓட்டையிட்டு ஏதோ ஒன்று நுழைகிறது. அசைவத்தால் அழுக்கேறிய என்குடலை கடிக்கின்றது. என் விலாப்பகுதி நட்டுவாக்காலி கொடுக்கால் குடையப்படுகிறது. கரையான் அரித்த மரம் போல் என் உடல் ஆனது.
எனக்கருகே கடப்பாரை குத்தல், மண் வெட்டியின் சத்தம் கேட்கிறது. குழிவெட்டுபவருக்கு அன்றைய ரிஸக்கை அல்லாஹ் தந்துவிட்டான். மலகல் மவ்த்து தனது பணியை செவ்வனே செய்துவிட்டார். என்னுடன் இருப்பவர்கள் புது உணவை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இதோ என்னுடைய குழி வேறு ஒருவருக்கு. ‘‘குல்லு நஃப்ஸின் ஃதாஇகதுல் மவ்த். வ இன்னமா துவப்பவ்ன் உஜூரகும் யவ்மல் கியாமா. பமன்ஸ§ ஹ்ஸிஹ அனின்னாரி வஉத்கிலல் ஜன்னதபகத் பாஸ். வமல் ஹயாதுத்துன்யாஸ இல்லாமதா உல்-ஙூரூர்.’’ (ஒவ்வோர் ஆன்மாவும் மரணத்தை சுவைக்கக் கூடியதே. உங்களுக்கான கூலிகள் முழுமையாக வழங்கப்படுவதெல்லாம் கியாமத் நாளில்தான்.
எவர் நரக நெருப்பை விட்டும் அப்புறப்படுத்தப்பட்டு சுவர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியாளர். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் அற்ப இன்பம் தவிர வேறில்லை!
-ஜெ. ஜஹாங்கீர், (முஸ்லிம் முரசு – அக்டோபர் 2011)