உங்களிடம் அதாஉ இப்னு அபீரபாஹ் இருக்கும்போது என்னைச் சூழ்ந்துகொண்டு மார்க்கச் சட்டங்களைக் கேட்கிறீர்களே!
[ காலங்களில் சிறந்த பொற்காலம் என் தோழர்களின் காலம் அதற்குப்பின் அவர்களைத் தொடர்பவர்களின் (தாபியீன்களின்) காலம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்படுவார்கிள். அப்படியான காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு நல்லடியாரின் வாழ்வில் நடந்த இனிய நிகழ்வுகள்….
‘மக்காவாசிகளே! உங்களைப்பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். உங்களிடம் அதாஉ இப்னு அபீரபாஹ் இருக்கும்போது என்னைச் சூழ்ந்துகொண்டு மார்க்கச் சட்டங்களைக் கேட்கிறீர்களே!’ – இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு ]
ஹிஜ்ரீ 97 ஆண்டின் இறுதி மாதமான துல்ஹஜ் பிறை ஆரம்பமாகிக் கொண்டிருந்த சமயம்!
நாலா திசைகளிலிருந்தும் அலைகடலென அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றவர்கள் கஃபாவை தரிசிக்க வந்து கொண்டிருந்தனர். வயோதிகர்கள், வாலிபர்கள், ஆண்கள், பெண்கள், அரேபியர்கள், அந்நியர்கள், தலைவர்கள், தொண்டர்கள் என அனைத்துத் தரப்பினரும் அம்மக்கள் வெள்ளத்தில் காணப்பட்டனர்.
அகிலத்தின் அதிபதியான அல்லாஹ்வின் பக்கம் தன் வாகனத்தைத் திருப்பி ‘லப்பைக்….. லப்பைக்…. என கூறிக்கொண்டு அவனது அருளை ஆதரவு வைத்தவர்களாக விரைந்து வந்திருந்தனர்.
அரபுலக மன்னரும், அப்போதைய இஸ்லாமிய ஜனாதிபதியுமான சுலைமான் இப்னு அப்துல் மலிக் என்பவரும் அங்கு காணப்பட்டார்.
தலைதிறந்தவராக, வெறும் கால்களுடனே மெலும், கீழும் ஒரு துண்டை மட்டும் மேனியில் சுற்றியவராக அனைவரையும் போலவே கஃபாவைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார். அரசர் என அறிந்து கொள்ள எவ்வித அடையாளமும் இன்றி மற்ற குடி மக்களைப்போல் அவரும் காணப்பட்டார்.
அவரைப் பின்தொடர்ந்து அவருடைய இரு மகன்களும் வலம் வந்து கொண்டிருந்தனர். வலம் சுற்றி முடிந்தவுடன் மன்னர் தனக்கு நெருக்கமான ஒருவருக்கு அருகில் வந்து கேட்டார்:
‘உங்கள் தோழர் எங்கே?’
‘இதோ அங்கு தொழுது கொண்டிருக்கிறார்!’ என அந்த புனித வளாகத்தின் மேற்கு முனையை நோக்கி கை காட்டினார் அவர். உடனே மன்னர் அவ்விடத்தை நோக்கி விரைந்தார். மன்னருடைய இரு மகன்களும் அவரை பின்தொடர்ந்தனர.
பணியாளர்கள் கூட்டத்தினரை விலக்கி, மன்னர் இலகுவாக நடந்து செல்ல பாதை அமைக்க முயன்றனர். உடனே மன்னர் குறுக்கிட்டு பணியாளர்களை நோக்கி சொன்னார்:
‘இங்கு அரசனையும், ஆண்டியையும் சமமாக நடத்துங்கள். இறையச்சமுள்ளவர்களைத் தவிர மற்ற யாரும் யாரைவிடவும் உயர்வாகிவிட முடியாது. எத்தனையோ அரசர்களை ஏற்றுக்கொள்ளாத ஏக எஇறைவன் தூசு படிந்த அலங்போலமான மனிதர்கள் பலரை பொருந்திக் கொண்டுள்ளான்’.
இவ்வாறு கூறியவாறு அவர் விசாரித்த அம்மனிதர் இருக்கும் திசை நோக்கி வந்தார். அவரோ இன்னும் தொழுது கொண்டிருந்தார். ரகூவில் ஸஜ்தாவில் நீண்ட நேரம் இறைவனைத் தியானித்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பின்னாலும், வலது இடது புறத்திலும் மக்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து அவர் தொழுது முடிப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அக்கூட்டத்தின் கடைசி வரிசையில் தன் இரு புதல்வர்களுடன் மன்னரும் வந்து அமர்ந்து கொண்டார்.
ஜனாதிபதியும் மன்னருமான அமீருல் முஃமினீன் ஏன் இவரை நாடி வரவேண்டும்? இவரோ கருப்பு நிறமுடைய வயோதிகராக, காக்கையைப் போன்ற விகாரமான தோற்றத்தில் தென்படுகிறார். இவருக்கு இத்தனை பேர் காத்திருக்கின்றனரே….?! இது ஜனாதிபதியின் புதல்வர்களின் உள்ளத்தில் எழுந்த கேள்வி!
அவர் தொழுது முடித்தவுடன் அங்கிருந்தவர்களை நோக்கித் திரும்பினார். ஜனாதிபதி இப்னு சுலைமான் பின் அப்துல் மலிக் அவரை நோக்கி ஸலாம் கூற, அவரும் பதில்ஸலாம் கூறினார். அந்நேரத்தில் ஜனாதிபதி அவருக்கருகில் நெருங்கிவந்து, ஹஜ் சம்பந்தப்பட்ட அமல்களைப் பற்றி ஒவ்வொன்றாகக் கேட்டார்.
ஒவ்வொரு மஸ்அலாவிற்கும் தெளிவாக பதில் அளித்தார் அவர். தான் கூறும் ஒவ்வொரு விளக்கத்திற்கும் தவறாமல் நபிமொழியையும் மேற்கோள் காட்டினார். சந்தேகங்களைக் கேட்டு முடித்ததும் அவருக்கு ‘ஜஸாக்கல்லாஹு கைரா’ (அல்லாஹ் உமக்கு நற்கூலி தருவானாக) என்று நன்றி கூறிவிட்டு தன்னுடைய புதல்வர்களிடம் ‘எழுந்து வாருங்கள்’ என்றார். அவ்விருவரும் அவ்விடத்தைவிட்டு எழுந்தனர்.
மூவரும் தொங்கோட்டம் ஓடுமிடத்தை நோக்கிச் சென்றனர். ஸஃபா-மர்வா மலைகளுக்கிடையில் அவர்கள் தொங்கோட்டம் ஓடிக்கொண்டிருந்தபோதே ஓர் அறிவிப்பைக் கேட்டனர்.
அது ஜனாதிபதி அமீருல் முஃமினீனின் கட்டளை:
‘முஸ்லிம்களே! இனி ஹரம் ஷரீஃப் எனும் இப்புனித வளாகத்தில் அதாஉ இப்னு அபீரபாஹ்வைத் தவிர மற்ற எவரும் மக்களுக்கு மார்க்கத் தீர்ப்பு கூறக்கூடாது. அவர் இல்லையெனில் அப்துல்லாஹ் இப்னு நஜீஹ் நடத்துவார்’ என்பதுதான் அது.
ஜனாதிபதியின் இரு புதல்வர்களில் ஒருவர் அவசரப்பட்டு, ‘அமீருல் முஃமினீனின் சேவகர் இவ்விதமாக அறிவிப்பை எப்படிச் செய்யலாம்? நாம் அவரிடம் ஃபத்வா கேட்க வந்தோம். அவர் ஜனாதிபதியான தங்களுக்கு உரிய மரியாதை கொடுக்காமலும் நம்மை கண்டுகொள்ளாமலும் இருந்தாரே! அவருக்குப்போய் இவ்வளவு மரியாதையா?’ என முகஞ்சுளித்தவராக தந்தையை நோக்கிக் கேட்டார்.
மன்னர் சுலைமான் தன் மகனிடம் அந்த அறிவிப்பை வெளியிட்டதற்கான காரணத்தை இவ்வாறு விளக்கினார்.
‘மகனே! நீ பார்த்த அவர் – நமக்கு மரியாதை கொடுக்காமல் நடந்து கொண்ட அவர் – ஹரம் ஷரீஃபில் அமர்ந்து மக்களுக்கு ஃபத்வா கொடுத்துக் கொண்டிருந்த அவர் – அதாஉ இப்னு அபீரபாஹ் ஆவார். இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அடுத்து இப்பதவிக்கு வாரிசாக வந்தவர்.’ என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்தார். ‘மகனே! நீ அவரிடம் அறிவு ஞானத்தை வளர்த்துக்கொள்வதன் மூலமே, தாழ்ந்தவன், உயர்ந்து விடுகிறான். அடிமை அரசனின் அந்தஸ்துக்கு உயர்கிறான்’ என்று கூறினார்.
மகனிடம் மிகைப்படுத்தி எதுவும் அவர் கூறவில்லை. ஏனெனில் அதாஉ இப்னு அபீரபாஹ் சிறு வயதில் மக்காவைச்சேர்ந்த பெண்மணி ஒருவரிடம் அடிமையாக இருந்தார்கள். எனினும் அல்லாஹ் அந்த கருப்பினச் சிறுவனை கண்ணியப்படுத்த நாடிவிட்டான். எனவே வளரும் பருவத்திலேயே கல்வியின் பக்கம் அவருடைய பாதங்களைத் திருப்பினான். அவர் தினந்தோரும் தன் நேரத்தை மூன்று பகுதியாகப் பிரித்துக் கொண்டார். ஒரு பகுதியை தனது எஜமானிக்குச் செய்ய வேண்டிய பணிகளை எவ்விதக் குறைவுமின்றி நிறைவேற்றினார்; மற்றொரு பகுதியை தன் இறைவனுக்காக ஒதுக்கி, அதில் அவனுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை வழமையாகச் செய்து வந்தார். மீதமுள்ள பகுதியை கல்வி கற்பதில் செலவழித்தார்.
அக்காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அபூ ஹுரைரா, இப்னு உமர், இப்னு அப்பாஸ, இப்னு ஜுபைர் (ரளியல்லாஹு அன்ஹும்) ஆகியோரிடமிருந்து நபிமொழகளைக் கற்றார். இந்த அடிமைச்சிறுவர் அல்லாஹ்வை வணங்குவதில் அதிகம் ஈடுபடுகிறார். கல்வி கற்பதில் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார். இனிமேலும் நாம் இவரிடம் வேலை வாங்குவதா? என்று யோசிக்க ஆரம்பித்த அவருடைய எஜமான் அவரை விடுதலை செய்து விட்டார். விடுதலையான அன்று அதாஉ இப்னு அபீரபாஹ் புனித ஹரம் ஷரீஃபுக்கு வந்தார்கள். அன்றுமுதல் அவர்களுக்கு அதுவே தங்குமிடமானது. கல்வி கற்கும் பாடசாலையும் அதுவே! வணக்க வழிபாடுகளை நிறைவேற்றும் இடமும் அதுவே!’ இருபது ஆண்டுகாலமாக அப்புனித வளாகத்தில் அவர்கள் தங்கியதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.
ஒரு சமயம் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உம்ரா செய்ய மக்கா வந்தபோது மக்களுக்குத் தொழுகை நடத்தினார். தொழுகை முடிந்தவுடன் மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு தங்களுடைய சந்தேகங்களைக் கூறி விளக்கத்தைக் கேட்டனர். அப்போது இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்ன பதில் என்னவாக இருந்தது தெரியுமா? இதோ:
‘மக்காவாசிகளே! உங்களைப்பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். உங்களிடம் அதாஉ இப்னு அபீரபாஹ் இருக்கும்போது என்னைச் சூழ்ந்துகொண்டு மார்க்கச் சட்டங்களைக் கேட்கிறீர்களே!’
மார்க்கம் மற்றும் அறிவு ஞானத்தில் அதாஉ இப்னு அபீரபாஹ் இந்த அளவு உயர்வு பெற்றதற்கான காரணங்கள் இரண்டு.
உறுதியான மனக்கட்டுப்பாடு. மன சந்தோஷத்திற்காக பயனற்ற எந்த செயலையும் செய்ய மாட்டார்கள்.
நேரத்தைப் பேணுவது. அவர்கள் வுpண் பேச்சுக்களிலும் செயல்களிலும் நேரத்தை கழிப்பதில்லை.
முஹம்மது இப்னு ஸுபா எனும் மார்க்க மேதை தன்னுடைய மாணவர்களிடம் ஒருமுறை இப்படிக் கேட்டார்:
‘நான் பயன்பெற்றதைப் போன்று நீங்களும் பயன்பெறக்கூடிய செய்தியை உங்களுக்குக் கூறட்டுமா?’
‘கூறுங்கள்!’ என மாணவர்கள் சொல்ல, அவர் கூறினார்: ‘எனக்கு ஒருநாள் அதாஉ இப்னு அபீரபாஹ் உபதேசம் செய்தபோது ‘மகனே! நமக்கு முன் வாழ்ந்த நபித்தோழர்கள், வீண்பேச்சுக்களை வெறுப்பார்கள்’ என்று கூறினார். நான் அவர்களிடதம், ‘அந்த நல்லவர்கள் எதை வீணாகக் கருதினார்கள்?’ என்று கேட்டபோது, அதாஉ இப்னு அபீரபாஹ் அவர்கள் இப்படி விளக்கமளித்தார்கள்;
‘அந்த நபித்தோழர்கள் குர்ஆனை ஓதக் கற்றுக்கொடுப்பது, அதை விளக்கிக் கொடுப்பதைத் தவிர எல்லாவற்றையும் வீணானதாகக் கருதினார்கள். எனவே, அல்லாஹ்வின் அருளை அடைவதற்கு உதவியாக இருக்கும் கல்வியை கற்றுக்கொள்வது, உனக்கு அவசியமான அன்றாட வாழ்க்கைத் தேவைக்காக நீ பேசிக்கொள்வதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் வீணாகக் கருது’ எனக் கூறியபிறகு என்னை நோக்கி இப்படிக் கேட்டார்கள்:
‘(நன்மை தீமைகளை) எழுதக்கூடிய கண்ணியவான்களான பாதுகாவலர்கள் உங்கள் மீது சாட்டப்பட்டுள்ளனர் (அல்குர்ஆன் 82: 10)’ என்ற வசனத்தையும், ‘ஒவ்வொரு மனிதனிடத்திலும் இரு மலக்குகள் இருப்பதாக வரும் (அல்குர்ஆன் 50: 17, 18) வசனத்தையும் அலட்சியப்படுத்துகிறீர்களா?’ என்று எச்சரித்தார்கள்.
நாம் வெட்கித் தலைகுனிய வேண்டாம். ஏனெனில் காலை முதல் இரவு வரை எழுதப்படக்கூடிய பதிவேடு, நம்மில் ஒருவருக்கு முன் விரித்து வைக்கப்படுமானால் அதில் அதிகமானவை தீனுக்கும் துன்யாவுக்கும் பயனளிக்காதவை தான் காணப்படும்.
– “பதிவேடு, நம்மில் ஒருவருக்கு முன் விரித்து வைக்கப்படுமானால்” – சிந்தனை சரம் செப்டம்பர் 2005