ஹஜ்ஜு என்னும் அருள்மாதம்
• ஆதி இறைவன் இல்லம் ஒன்றே
• அழகாய் ஹஜ்ஜு செய்திடவே
• வேதம் தன்னில் “கடமை” என்றே
• விளக்கம், சொன்னான் இறையோனே!
• ஓதும் வேதம் வழியில் சென்றால்
• உண்டாம் சொர்க்கப் பதியன்றோ!
• கோது போக்கி ஏதம் நீக்கக்
• குளிர்ந்தெழும் ஹஜ்ஜாம் அருள் மாதம்!
• பாவம் எண்ணி வருந்தி யழவும்
• பாதை காட்டி அறம் செய்தும்
• சாபம் நீங்க உறவைத் திருத்தி
• சார்ந்து வணக்க வழிபாட்டில்
• கோபம் கொன்று குணத்தில் ஒளிரும்
• குன்றாய் நிற்க வழிகாட்டி
• ஏமம் ஆகி இறையை நெருங்க
• இலங்கும் ஹஜ்ஜாம் அருள்மாதம்!
• நகத்தை வெட்டி அகற்றி முடிகள்
• நபிசொல் படியே குளித்திடவும்
• அகத்தில் கறையை அகற்றி மறுமை
• அடையாளத்தைக் காண்பித்தே
• முகத்தில் கண்ணீர் வழிய பக்தி
• முறையாய் “இஹ்ராம்” கட்டிடவும்
• தகைக்கும் வெயிலை குளிராய்க் காட்டி
• தளிர்க்கும் ஹஜ்ஜாம் அருள்மாதம்!
• கருப்பர், சிகப்பர், வெள்ளையர் இன்னும்
• காணும் பற்பல நிறத்தினரும்
• இருப்பார் கஃபா இல்லத் தருகே
• எல்லாம் ஒருதாய் மக்க ளென
• “இறைவா!” உன்முன் வந்தோம் வந்தோம்
• இணையே இல்லை உனக்கென்றே
• நிறைவாய் “தல்பியா”ச் சொல்லிச் சொல்லி
• நிற்கும் ஹஜ்ஜாம் அருள்மாதம்!
• தந்தை ஆதம் கட்டி “தவாபு”
• தகையாய்ச் செய்ய நபிமார்கள்
• சிந்தை மகிழச் சுற்றி சுற்றி
• சிறந்தார்; நபியாம் இபுறாஹீம்
• அந்த பாலகர் இஸ்மா யீலும்
• அழகாய்க்கட்டி முடிக்க அதை
• எந்தை அஹ்மது நபிவழிகாட்டி
• எழுந்தது ஹஜ்ஜாம் அருள்மாதம்!
• நெஞ்சம் உருக, நிலைதடுமாற
• நிறைவாய் ஏழு முறை சுற்றி
• கெஞ்சிக் கெஞ்சி இறையைப் புகழ்ந்து
• கேட்க, நாட்டம் நிறை வேற,
• அஞ்சி அஞ்சி அகத்தை ஒடுக்க
• அழுக்கு நீங்கி அருள் சுரக்க,
• மிஞ்சும் தூய்மை மேலாய் மலர
• மிளிர்ந் தெழும் ஹஜ்ஜாம் அருள்மாதம்!
• சொர்க்கக் கல்லாம் ஹஜருல் அசுவத்தை
• தொட்டு தொட்டு முத்தமிட
• தர்க்கம் இல்லாச் சரித்திரம் – இஸ்மாயீல்
• தங்கப் பாதம் பட்டவுடன்
• பெருக்கெடுத்தோடும் “ஜம் ஜம்” தண்ணீர்
• பெருமை கண்டு குடித்திடவும்!
• உருகிக் கேட்க இறையருள் பெறவும்
• உதிக்கும் ஹஜ்ஜாம் அருள்மாதம்!
• தண்ணீர்க்காக அன்னை ஹாஜிரா
• தாவி ஓடிய செயல் நினைந்தே
• கண்ணீர் விட்டு நாமும் ஓடிக்
• கருத்தைத் துலக்கி சொர்க்கம் பெற
• புண்ணிய சீர்சபா மருவாக் கிடையே
• புகுவார் கூட்டம் காட்டிடவும்
• மண்ணும் விண்ணும் கடலும் புகழ
• மலர்ந்தது ஹஜ்ஜாம் அருள்மாதம்!
• பாவமெல்லாம் விட்டோம் என்று
• படைத்தோன் முன்னால் உறுதி செய
• தோய்ந்தே உள்ளம் தலைமுடி களைந்தே
• துயரம் மாயும் நிலை காட்ட
• மாய்ந்து வஞ்சக நெஞ்ச மெல்லாம்
• மாண்பாம் மலரில் மணம்வீச,
• ஆய்ந்தே உலகம் அதியம் கொள்ள
• அலர்ந்தது ஹஜ்ஜாம் அருள்மாதம்!
• அரிய ஹஜ்ஜு நிறைவு பெறுமாம்
• அரஃபா வந்துத் தங்கிடவும்
• கரிய பாவம் எல்லாம் உலர்ந்து
• கரையைக் கடக்கச் செய்திடவும்!
• உரிய “ஹாஜி” பட்டம் பெறவும்
• உயர்ந்த படித்தரம் பெற்றிடவும்
• தரித்தே இறையின் அருளில் இன்புறத்
• தாங்கும் ஹஜ்ஜாம் அருள்மாதம்!
• அருளின் கடலாம் முஜ்தலிபாவில்
• அழகாய்த் தங்கி அருள்பெறவும்
• குருபா னீ யைக் கொடுத்து மினாவில்
• கோதில் இறைக்கே பணிந்திடவும்
• பெரும்பகையான ஷைத்தான் ஓடப்
• பேணிக் கற்கள் எறிந்திடவும்
• உரிய வழியை முறையாய்க் காட்டி
• உதிக்கும் ஹஜ்ஜாம் அருள்மாதம்!
• மாமணம் கமழும் மதீனா நகரில்
• மாநபி தம்மைத் தரிசிக்கவும்
• தூமனம் கொண்டு ஸலவாத் தோதி
• தூய்கலீஃபாக்களை நினைந்திடவும்
• காமணம் வீசும் கஸ்தூரி வாடை
• கனிந்த நபியைச் சூழ்ந்திடவும்
• தாயாய் வந்துத் தாங்கி நிற்கும்
• தகையாம் ஹஜ்ஜாம் அருள்மாதம்!
– அதிரை, மு. முஹம்மது தாஹா மதனீ எம்.ஏ.பி.எட்.