கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்?
ஏப்பா தம்பி கல்யாணம் செய்து கொள்கிறாயா என்று ஆண்களிடம் கேட்டால், பெரும்பாலானவர்கள் ஐயோ, ஆளவிடுங்கன்னு ஓடுவது வழக்கமாகி வருகிறது. அப்படி அவங்க தலைதெறிக்க ஓடுற அளவு்ககு கல்யாணத்துல என்ன இருக்கிறது என்று பார்ப்போம்.
கசப்பான அனுபவங்கள்: ஏற்கனவே திருமணம் ஆகி அது பிரிவில் முடிந்திருந்தால் மறுபடியும் திருமணம் செய்துகொள்ள தயங்குவார்கள். காதல் தோல்வி ஏற்பட்டிருந்தால் ஆமா, இனி என்னத்த கல்யாணம் செய்ய என்று ஆண்கள் விரக்தி அடைவார்கள்.
சுதந்திரம்: திருமணம் ஆகாத ஆண்கள் நினைத்தபடி ஜாலியாக இருக்கலாம். நினைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் ஊர் சுற்றலாம். திருமணம் என்றாலே கால் கட்டு என்று நினைக்கிறார்கள். என்ன எப்ப பார்த்தாலும் நண்பர்கள், நண்பர்கள்னு ஓடுறீங்க, உங்களுக்கு நான் முக்கியமா, இல்லை உங்கள் நண்பர்கள் முக்கியமா என்று மனைவி கேட்பாள் அல்லவா. அதுக்கு தான் பயம்.
பொறுப்பு: திருமணம் முடிந்து மனைவி வந்துவிட்டால் கூடவே ஆண்களுக்கு பொறுப்பும் வந்துவிடும். வீடு, மனைவி, பிள்ளைகள் என்று பொறுப்பாக இருக்க வேண்டும். குடும்பச் செலவுகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காகத் தான் ஆண்கள் பயப்படுகிறார்கள்.
திருமணத்திற்கு முன்பு நல்லபடியாக சம்பாதித்து பணம் சேர்த்து வைத்திருந்தால் தான் மனைவி வரும் போது சமாளிக்க முடியும். அதனாலும் ஆண்கள் பயப்படுகிறார்கள்.
திருமணம் செய்துகொள்ள பயப்படாதீர்கள். இவள் எனக்கு ஏற்ற துணை என்று யாரை நினைக்கிறீர்களோ அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள். விட்டுக் கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பாக இருந்தால் இல்லறம் என்றுமே இனிமையாக இருக்கும்.
திருமணம் செய்து கொள்வதை நினைத்து பயப்படாமல் வருகிறவளுடன் வாழ்க்கையை எப்படி இனிமையாக வாழ்வது என்று சிந்தனை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.
இல்லறத்தில் இணைந்தால் இனிமையாக வாழலாம்!
மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று அனைத்து மத சாஸ்திரங்களும் தெரிவிக்கின்றன. திருமணம் என்பது அர்த்தமுள்ள வாழ்க்கையின் ஆரம்பம் எனலாம். திருமணம் என்பது இருவர் மனமொத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியை இன்னும் அதிகரிக்கச் செய்வது. இந்த மகிழ்ச்சி என்பது பணமோ, புகழோ , அழகோ, படிப்போ, நல்ல குணமோ, வீரமோ ,காமமோ ஏதோ ஒன்றை அடிப்படையாக கொண்டிருக்கலாம். ஆனால் திருமணம் என்றாலே இன்றைய இளைஞர்கள் மிகவும் யோசிக்கின்றனர்.
திருமணம் செய்து கொண்டவர்களும், `உனக்கு என்னப்பா நீ சுதந்திரப்பறவை, நான் குடும்பஸ்தன்’ என்று சலிப்பு வசனம் பேசுகிறார்கள். இளம்பருவத்தினர் இருபாலரிடமும் திருமணத்தைப் பற்றி எதிர்மாறான கருத்துக்களே இருக்கிறது. அதாவது திருமணத்தை கூடுதல் சுமையாகவும், கவலையாக கருதும் எண்ணம் அவர்களிடம் உள்ளது.
திருமணம் குறித்த ஆய்வுகள்
அவ்வப்போது நடக்கும் ஆய்வுகளோ ஒவ்வொருவருக்கும் திருமணம் அவசியம். அதனால் உடல் ரீதியாக பல நன்மைகள் கிடைக்கிறது என்கிறது. இதேபோல் மனோரீதியாகவும் பல நன்மைகள் உண்டு என்கிறது சமீபத்திய ஆய்வு.
சர்வதேச நல அமைப்பான ஹூ (WHO) வின் மனநலப் பிரிவு மற்றும் நியூசிலாந்து பல்கலைக்கழகம் இணைந்து இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. 15 நாடுகளைச் சேர்ந்த 34 ஆயிரத்து 500 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் வெளியான சில முக்கிய தகவல்கள்…
மன ரீதியான நன்மைகள்
திருமணம் செய்து கொள்வதால் மனச்சோர்வு, கவலை மற்றும் மனநல பாதிப்புகள் குறைகிறது. பெண்களைவிட ஆண்கள் திருமணம் செய்வதற்கு விருப்பக் குறைவுடன் இருக்கிறார்கள். அதிக மனச்சோர்வு அடைகிறார்கள். அதே நேரத்தில் திருமணம் செய்து கொண்டபிறகு பெண்களைவிட ஆண்கள் அதிகமான மனச்சோர்வு, கவலைகளில் இருந்து விடுபடுகிறார்கள். டிஸ்ஆர்டர் பாதிப்புகளும் குறைவாக இருக்கிறது. பெண்கள் அதிகம் கல்வி அறிவு பெற்றிருப்பதால் சோர்வு நிலை குறைவாக இருக்கிறது. சிலரிடம் மட்டும் அதிகமிருக்கிறது.
தம்பதிகள் பிரிந்து வாழ்வது, யாரேனும் ஒருவர் இறந்துவிடுவது, விவாகரத்து பெற்றுக் கொள்வது போன்ற காரணங்களால் ஏற்படும் மனநல பாதிப்புகள் அதிகரித்து உள்ளன. குழந்தைக்காக சார்ந்து வாழ்வதில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். புயலும் சீற்றமும் இருக்கும் கடலிலே கப்பலோட்டக்கூடிய மாலுமியே சிறந்தவன்.. இன்றைய இளைய தலைமுறையினரும் இதனை உணர்ந்து கொள்ளவேண்டும்.