Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பிரார்த்தனையின் முக்கியத்துவம்

Posted on October 27, 2011 by admin

M U S T    R E A D

“துஆ”வின் முக்கியத்துவம்

”இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?” (அல்குர்ஆன் 3 : 185)

அல்லாஹ் கூறுகிறான்:

“(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக”. (அல்-குர்ஆன் 2:186)

‘என்னிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.’ (அல்குர்ஆன் 40:60)

மேற்கூறிய இந்த வசனங்கள் பிரார்த்தனையின் முக்கியத்துவம் குறித்துக் கூறும் வசனங்களாகும். ஏனெனில் பிரார்த்தனை சிறந்த வணக்கங்களில் ஒன்றாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

பிரார்த்தனை (துஆ) ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்:அபூதாவூத், திர்மிதி)

பிரார்த்தனைகளுக்கு அல்லாஹ் நிச்சயம் பதிலளிக்கிறான்:

அல்லாஹ்வை பேணுதலான முறைப்படி வணங்கும் ஒரு உண்மையான முஃமின் தன்னுடைய இறைவனிடம் கேட்டால் அந்தப் பிரார்த்தனைக்குப் பதிலளிப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

பாவம் சம்பந்தப்படாத இரத்த பந்தத்தை துண்டிக்காத விஷயத்தில் எந்த ஒரு முஸ்லிமாவது பிரார்த்தனை செய்தால் அல்லாஹ் அவனுக்கு மூன்றில் ஒன்றை கொடுக்காமலில்லை. அவனின் பிரார்த்தனையை உடன் ஏற்றுக் கொள்கின்றான். அல்லது அதனுடைய நன்மையை மறுமைக்காக சேகரித்து வைக்கின்றான். அல்லது அப்பிரார்த்தனையைப் போன்று (அவனுக்கு நேரவிருந்த) ஒரு ஆபத்தை தடுத்து விடுகின்றான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அப்படியானால் நாம் அதிகம் பிரார்த்தனை செய்வோமே என்றனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், கேட்பதை விட அல்லாஹ் அதிகமாக பதிலளிக்க தயாராக இருக்கிறான்’ எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ சயீத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: திர்மிதி)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:

துன்பத்திற்குள்ளான நிலையிலும் கவலையிலும் இருக்கும் அல்லாஹ்வின் அடியான் ஒருவன் இந்த துஆவை கேட்டால் அவருடைய துஆ ஏற்றுக் கொள்ளப்படும்.

“யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உனது அடிமை, உனது அடிமையின் மகன், மற்றும் உனது அடிமைப் பெண்ணின் மகன். எனது நெற்றிப்பிடி உன் கையில் உள்ளது. அதனை உனது சட்டத்தின்படி நீ செயல்படுத்துகிறாய். எனக்கு நீதமான தீர்ப்பு வழங்குகிறாய். உனக்கு நீயே சூட்டிக்கொண்ட, உனது வேதத்தில் நீ இறக்கியருளிய, உனது படைப்பினங்களில் ஒருவருக்கு (நபிக்கு) நீ கற்றுக் கொடுத்த, உனது மறைவான ஞானத்தில் நீயே தேர்ந்தெடுத்துக் கொண்ட உன்னுடைய அனைத்துப் பெயர்களின் பொருட்டால் கேட்கிறேன். (இறைவா!) குர்ஆனை என் உள்ளத்தை பொலிவூட்டக் கூடியதாக, நெஞ்சின் ஒளியாக, கவலையை நீக்கக்கூடியதாக,துன்பத்தை போக்கக் கூடியதாக ஆக்குவாயாக!”

இந்த வார்த்தைகளடங்கிய துஆ ஏற்றுக்கொள்ளப்படும். அல்லாஹ் அவருடைய துயரங்களை நீக்கிவிட்டு அதற்குப் பகரமாக இன்பங்களையும் மகிழ்ச்சியையும் அளிப்பான். ஆதாரம்: அஹ்மத்

உயர்ந்தவனாகிய உங்களின் இரட்சகன் வெட்கமுள்ளவன், சங்கையானவன் அவனிடம் இரு கைகளையும் உயர்த்தினால் (பிரார்த்தித்தால்) அவ்விரண்டையும் வெறுமையாக திருப்பி விட அவன் வெட்கப்படுகின்றான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: சல்மான் ரளியல்லாஹு அன்ஹு)

மூவரின் துஆ அல்லாஹ்வினால் நிராகரிக்கப் படாது. பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு செய்யும் துஆ; நோன்பாளியின் துஆ;பிரயாணத்தில் இருக்கும் பயணியின் துஆ.’ ஆதாரம்: திர்மிதி

“மூவரின் துஆக்கள் எப்போதும் (அல்லாஹ்வினால்) நிராகரிக்கப்படுவதில்லை. அவர்கள்: ஒருவர் தமது நோன்பு துறக்கும்போது கேட்கும் துஆ; நீதியான ஆட்சியாளரின் துஆ; அநியாயம் இழைக்கப்பட்டவரின் துஆ” ஆதாரம்: திர்மிதி

     பிரார்த்தனை செய்ய சிறந்த நேரங்கள்:     

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

இரவின் பாதியோ அல்லது மூன்றில் இரண்டு பகுதியோ கடந்து விட்ட பின் அல்லாஹுத்தஆலா பூமியின் வானத்திற்கு இறங்குகிறான். பிறகு, கேட்கக் கூடியவர்களுக்கு கொடுக்கப்படும், பிரார்த்திப்பவர்களுக்கு பதிலளிக்கப்படும். பாவ மன்னிப்புத் தேடுபவர்களுக்கு பாவம் மன்னிக்கப்படும் என்று அதிகாலை உதயமாகும் வரைக்கும் அல்லாஹ் கூறிக்கொண்டிருக்கிறான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: முஸ்லிம்)

 ஒவ்வொரு இரவின் ஒரு பகுதியிலும் கேட்கப்படும் துஆ:

“இரவின் பகுதியில் ஒரு நேரம் இருக்கிறது அந்நேரத்தில் எந்த முஸ்லிமும் இந்த உலகத்தின் விஷயத்தில் அல்லது மறுமையின் விஷயத்தில் கேட்டு அது அளிக்கப்படாமல் இருப்பது இல்லை; இது ஒவ்வொரு இரவிலும் இருக்கிறது.” ஆதாரம்: முஸ்லிம்.

 பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் கேட்கப்படும் துஆ:

‘பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் துஆக்கள் நிராகரிக்கப்படுவது இல்லை.’ (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அஹ்மத், அபுதாவூத்)

 சஜ்தாவின் போது இறைவனிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் நேரமாகும்:

‘ஓர் அடியான் தன்னுடைய இறைவனிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் நிலை ஸஜ்தாவில் இருக்கும் போதே ஆகும். ஆகையால் அந்நிலையில் அல்லாஹ்விடம் அதிகமாக துஆ செய்து தமது தேவைகளை கேளுங்கள். ஆதாரம்: முஸ்லிம், அபூதாவுத்

 (பிரார்த்தனை) துஆ செய்யும் ஒழுங்கு முறைகள்:

‘நீங்கள் யாராயினும் பிரார்த்தனைப் புரிந்தால் அல்லாஹ்வைப் புகழ்ந்து ஆரம்பிக்கட்டும். பின்னர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீது ஸலவாத்துச் சொல்லட்டும். பின்னர் அவர் விரும்பியதைக் கேட்டு பிரார்த்திக்கட்டும்’ என்றார்கள். (அறிவிப்பவர்: பலாலா இப்னு உபைத் ரளியல்லாஹு அன்ஹு, ஆதார நூல்கள்: முஸ்னத் அஹ்மத். ஸுனன் அபூதாவூத். ஸுனன் திர்மிதி)

 அவசரக்கார மனிதன்:

நம்மில் சிலருக்கு, நான் தொடர்ந்து ஐவேளை தொழுது வருகிறேன், நோன்பு வைக்கின்றேன், கடமையான மற்றும் சுன்னத்தான அமல்களையெல்லாம் செய்கின்றேன், ஆனால் என்னுடைய பிரார்த்தனைகளுக்கு பலனில்லையே ஏன என்ற சந்தேகம் எழலாம்.

பொதுவாக மனிதன் அறியாமையின் காரணமாக அவசரக்காரனாக இருக்கிறான். சில நேரங்களில் ஒன்றை அவன் நல்லது எனக் கருதி அது தனக்கு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் என எண்ணுவான். ஆனால் அது அவனுக்குக் கிடைக்கப்பெறுமாயின் அதுவே அவனுடைய இந்த உலக வாழ்வின் மிகப்பெறும் சோதனையாகவும் வேதனையாகவும் மாறிவிடுகிறது. ஏன் மறுமை வாழ்வுக்காக அவனுடைய செயல்பாடுகளையே பாதித்துவிடும் அளவுக்கு அது அமைந்து விடுகிறது.

அனைத்தையும் அறிந்தவனான அல்லாஹ் மட்டுமே அவனுடைய அடிமைகள் ஒவ்வொருடைய தேவையையும் நன்கறிந்தவனாகவும்,அவர்களுக்கு எது தேவை மற்றும் எது தேவையில்லை எனவும் அறிந்தவனாக இருக்கிறான். எனவே நாம் அல்லாஹ்விடம் துஆ செய்யும் போது ‘ நாம் கேட்கும் ஒன்று நமக்கு இம்மைக்கும் மறுமைக்கும் பலனளிக்குமாயின் அதை நல்குமாறும்,அவ்வாறில்லையெனில் அதற்குப் பகரமாக அதைவிடச் சிறந்த ஒன்றை நல்குமாறும் கேட்கவேண்டும். ஏனெனில் எது நல்லது அல்லது எது கெட்டது என்பது நமக்குத் தெரியாது; ஆனால் நம்மைப் படைத்த அல்லாஹ்விற்கே நம்மை விட பரிபூரணமாக தெரியும்.

அல்லாஹ் கூறுகிறான்:

”மனிதன், நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான்.” (அல் குர்ஆன் 17:11)

மேலும் ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தம் என நினைக்கிறேன். அதாவது ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யத் தவறக் கூடாது. மனிதனாகிய அனைவரும் அல்லாஹ்வின் பால் தேவையுள்ளவர்கள். அல்லாஹ்மட்டும் தான் தேவையற்றவன்.

தேவைகளைக் கேட்கும் ஒருவன் கண்டிப்பாக ஒரு விஷயத்தைக் கவணத்தில் கொள்ள வேண்டும். அதாவது நாம் அடிமைகள்,அல்லாஹ் நமது எஜமான். நாம் எஜமானிடத்தில் கேட்கும் போதெல்லாம் எஜமான் உடனேயே நமக்கு தரவேண்டும் என எதிர்பார்ப்பது நம்மிடம் இருக்கும் குறையாகும். அல்லாஹ்வைப் பொருத்தவரை தனது அடியான் விஷயத்தில் அதிக அக்கறையுள்ளவன். அதனால் பிரார்த்தனை செய்யுமாறு கூறிவிட்டு அப்பிரார்த்தனைக்கு பதில் கொடுப்பதில் சில போது தாமதங்களை ஏற்படுத்துகிறான். காரணம், நாம் ஒன்றைக் கேட்போம் அதனை உடனேயே தந்துவிட்டால் சிலபோது அதுவே நம்மை சிரமத்திற்கு உள்ளாக்கி விடலாம். ஏனென்றால் அதனால் ஏற்படும் எதிர்கால விளைவுகள் பற்றி நாம் அறிய மாட்டோம். ஆனால் அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

உதாரணமாக, ஒருவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவர் மீதும் தந்தைக்கு பாசம் இருக்கின்றது. ஏதாவதொரு பொருளை அனைவரும் கேட்கிறார்கள், அப்பொருளை பெற்றுக் கொடுக்கும் சக்தியும் தந்தைக்கு உண்டு. ஆனால் அனைவருக்கும் அதனைப் பெற்றுக் கொடுக்க மாட்டார். காரணம் யாருக்கு கொடுக்க முடியும் யாருக்குக் கொடுக்கக் கூடாது என்பது குழந்தைகளை விட தந்தைக்கு நன்கு தெறியும். இதே போல் தான் அல்லாஹ் நம் விஷயங்களைப் பொறுத்த வரை நம்மை விட நன்கு அறிந்துள்ளான்.

எனவே நமது பிரார்த்தனைகளுக்கான பதிலை உடனேயே காண நினைப்பது நமது பண்பு. அப்பிரார்த்தனைக்கான பதிலை தரவேண்டிய நேரத்தில் தருவது அல்லாஹ்வின் பண்பாகும் என்பதனை உணர்ந்து கொள்ள தவறக் கூடாது.

எனவே நாம் அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையில் நம்பிக்கையிழக்காமலும் நம்முடைய துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லையே என பொறுமையிழக்காமலும் அல்லாஹ்வையே முற்றிலும் ஈமான் கொண்டு அவனையே முற்றிலுமாக சார்ந்து அவனிடமே நம்முடைய பொறுப்புகளை விட்டுவிட வேண்டும்.

மேலும் நாம் அவன் நம்முடைய பிரார்த்தனைகளைக் கேட்டுக் கொண்டான் என்றும் நாம் கேட்ட பிரார்த்தனைகள் நமக்கு இவ்வுலகிலோ அல்லது மறுமையிலோ நமக்குப் பலனளிக்குமாயின் அதை நமக்கு அல்லாஹ் நாடினால் தருவான் என்றும் அல்லது ஈருலகிலும் பலனளிக்கும் அதைவிடச் சிறந்த ஒன்றை நமக்குத் தருவான் என்றும் நாம் உறுதியாக நம்பிக்கைக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:

”மனிதன் (நம்மிடம் பிரார்த்தனை செய்து) நல்லதைக் கேட்பதற்குச் சோர்வடைவதில்லை; ஆனால் அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசையுள்ளவனாகின்றான்.” (அல்-குர்ஆன் 41:49)

”அன்றியும், மனிதனுக்கு நாம் அருள் புரிந்தால் அவன் (நன்றியுணர்வின்றி) நம்மைப் புறக்கணித்து, விலகிச் செல்கிறான் – ஆனால் அவனை ஒரு கெடுதி தீண்டினால் நீண்ட பிரார்த்தனை செய்(பவனா)கின்றான்.” (அல்-குர்ஆன் 41:51)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

பொறுமையை இழக்காமலும், மேலும் ‘நான் பிரார்த்தனை புரிந்தேன் ஆனால் என்னுடைய பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை’என்று கூறாத நிலையிலும் உங்களுடைய துஆ ஏற்றுக்கொள்ளப்படும்’

 அல்லாஹ்வின் வாக்கு என்றுமே உண்மையானது:

அல்லாஹ் கூறுகிறான்:

”பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம்.” (அல்-குர்ஆன் 37:75)

”அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; இன்னும் வார்த்தைப்பாட்டில் அல்லாஹ்வைவிட உண்மையானவர்கள் யார்?” (அல்-குர்ஆன்4:122)

எனவே அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவனது இறுதி வேதத்தையும் நம்பும் ஒருவர் உறுதியான நம்பிக்கையுடன் ஏதாவது ஒரு வகையில் அல்லாஹ் நிச்சயம் நமது பிரார்த்தனைக்கு பதிலளிப்பான் என்ற நம்பிக்கையில் அவனிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

 ஹராமான செயல்களில் மூழ்கியுள்ள ஒருவரின் துஆ:

ஹராமான செயல்களில் மூழ்கியுள்ள ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை பெரும் பாலும் துஆக்கள் அங்கீகரிக்கப்பட வாய்ப்பில்லை என்பதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

”ஒரு நீண்ட பயனத்தில் ஒருவன் இருக்கிறான். அவனுடைய தலை பரட்டையாகவும், அவன் புழுதியினால் அழுக்கடைந்தவனாகவும் இருக்கும் நிலையில் வானத்தை நோக்கி தம் இரு கரங்களையும் உயர்த்தியவனாக, இறைவா! இறைவா! எனப்பிரார்த்திக்கின்றான். (ஆனால்) அவனது உணவும் ஹராமாகும், குடிப்பவையும் ஹராமாகும், அவனது ஆடையும் ஹராமாகும், அவனோ ஹராத்திலேயே தோய்ந்துள்ளான் (இந்நிலையில்) அவனது பிரார்த்தனை எங்ஙணம் ஏற்றுக் கொள்ளப்படும்”. என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். –ஆதாரம்: முஸ்லிம்.

எனவே எமது பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமாயின் இந்நிபந்தனைகளை கட்டாயம் கவணத்திற் கொள்ள வேண்டும். வட்டி, கள்ளக் கடத்தல், திருட்டு, மோசடி, பிறர் சொத்தை அபகரித்தல், ஹராமானவற்றை விற்றல், அதனோடு தொடர்பாயிருத்தல்,ஹராமானவற்றை உண்ணுதல், பருகுதல்… போன்ற அனைத்து வகையான ஹராமான செயல்களில் இருந்தும் விலகியவர்களாக எல்லா நேரத்திலும் அல்லாஹ்வை அஞ்சியவர்களாக வாழ்ந்து அவனிடம் கையேந்தினால் நிச்சயமாக ஒருபோதும் நமது பிரார்த்தனைகளை மறுக்க மாட்டான்.

 அளவுக்கு மீறி பாவம் செய்திருப்பினும் மன்னிக்கக் கூடியவனாக அல்லாஹ் இருக்கிறான்:

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்:

”’என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.” (அத்தியாயம் 39, வசனங்கள் 53-54)

எனவே நான் பாவங்கள் அதிகம் செய்த பாவியாக இருக்கிறேன் என்று பாவத்திலேயே மீண்டும் மூழ்கியிருக்காமல் உடனடியாக இந்த பாவச் செயல்களிலிருந்து மீண்டு, இந்த பாவச் செயல்களை திரும்பவும் செய்ய மாட்டேன் என்ற உறுதியுடன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரிய பிறகு தொடர்ந்து நற்கருமங்களைச் செய்தவர்களாக அல்லாஹ்விடம் தமது தேவைகளைப் பிரார்த்தித்தால் இன்ஷா அல்லாஹ் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவான்.

யா அல்லாஹ்! தூய்மையான இறைவிசுவாசிகளாக எம்மை வாழ வைப்பாயாக.

 அநீதியிழைக்கப்பட்டவனின் துஆ:

ஹராமான செயல்களோடு தொடர்புள்ள ஒருவனாக இருந்தாலும் (நிராகரிப்பாளனாகக் கூட இருக்கலாம்) அப்பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். யாரும் யாருக்கும் எக்காரணம் கொண்டும் அநீதியிழைக்கக் கூடாது. எனவே தான் அநீதியிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை தங்குதடையின்றி அல்லாஹ்வை சென்றடைகின்றன என்பதனை ஒரு சந்தர்ப்பத்தில் பின் வருமாறு கூறினார்கள்.

முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை யமனுக்கு அனுப்பும் போது “அநீதியிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை விஷயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்! எனென்றால் அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் திரை கிடையாது” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

 முடிவுரை:

அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் மற்றும் முஸ்லிமான அனைவருக்கும் உறுதியான ஈமானைத் தந்து, நம்மை ஹராமான செயல்களிலிருந்து விலகியிருப்பவர்களாக ஆக்கி, அனைவருக்கும் நன்மை செய்யக் கூடியவர்களாக ஆக்கியருள்வானாகவும். மேலும் சிறந்த வணக்கங்களில் ஒன்றாகிய பிரார்த்தனையை அல்லாஹ்விடம் மட்டுமே தொடர்ந்து செய்து அவனின் அளப்பற்ற அருளைப் பெறக் கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 3 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb