மனிதர்களளில் மூன்றுவகையினர் உண்டு.
நேற்றைய மனிதர்கள்.
நாளைய மனிதர்கள்.
இன்றைய மனிதர்கள்.
நேற்றைய மனிதர்கள்
இவர்கள் நிகழ்காலத்தை நிராகரித்துவிட்டு கடந்த காலத்திலேயே நின்று விடுபவர்கள். கடந்த காலத்து கசந்த அனுபவங்களின் பிடியிலிருந்து விடுபட்டு நிகழ்காலத்துக்கு வந்து சேரமுடியாத இவர்கள் நம் எல்லோரது அனுதாபத்துக்கு உரியவர்கள். சுமையை இறக்கி வைக்கவும், சோகங்களிலிருந்து விலகி நிற்கவும் தெரியாத ஒருவகை மனநோயாளிகள் என்றே இவர்களைக் குறிப்பிடலாம்.
நாளைய மனிதர்கள்:
எதிர்காலக் கனவுகளில் நிகழ்கால நிஜங்களை பறிகொடுத்தவர்கள் இவர்கள். நாளையபொழுதை எப்படித் திட்டமிடுவது என்பதை எண்ணி எண்ணியே இன்றைய பொழுதை கோட்டை விடுபவர்கள். ஒருவகையில் பார்த்தால் இவர்கள் வயோதிகத்தில் வளமாக வாழ்வதற்குக் கணக்குப்போட்டபடியே வாலிபத்தின் வசந்தத்தை தொலைத்து விட்டவர்கள். இவர்களுக்கு கண்முன்னே வாசலில் வந்து நிற்கும் ‘இன்று’ முக்கியமல்ல! வரவிருக்கும் ‘நாளை’யே முக்கியம்.
இன்றைய மனிதர்கள்:
தனது இறைவன் தந்த வாழ்க்கையை அனுபவித்து வாழும் ரகசியத்தைப் புரிந்து கொண்டவர்கள் இவர்கள். ‘நேற்று’ அது கடந்துவிட்டது. எனவே, மறந்துவிடுவோம் அதை! நாளை என்பது நம் கையில் இல்லை. அதைப் படைத்த இறைவனிடம் விட்டுவிடுவோம். இதோ இறைவன் வழங்கிய ‘இன்று’ நம் முன் நிற்கிறது. எனவே, அவன் தந்த ‘வாழ்கை வாழ்வதற்கே!’ என்றுணர்ந்து அதில் வாழ்வோம். அதைச் சரியான முறையில் பயன்படுத்துவோம்.
அதோடு இறைவனும்,
இறைவேதமாம் திருக்குர்ஆனும் நமக்கு ஒரு பிரார்த்தனையை கற்றுக்கொடுக்கிறது. பிராரத்தனையின் மணிமகுடம் என்றுகூட அதை குறிப்பிடலாம். அது
( رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ )
”எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” (அல்குர்ஆன் 2: 201)