இப்படியும் வரும், கவனம் தேவை!
“மனிதனின் கைகள் தேடிக் கொண்டதன் விளைவாக கடலிலும் தரையிலும் அழிவுகள் தோன்றி விட்டன” (அல்குர்ஆன்: ரூம் – 41) என்பது அல்குர்ஆனின் கூற்றாகும். சோதனைகளும் அழிவுகளும் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றைத்தான் மேற்குறிப்பிட்ட அல்குர்ஆன் வசனம் குறிப்பிடுகின்றது.
எனவே சோதனைகளுக்கான காரணம் மனிதனுடைய தீய சேயற்பாடுகளாகும். மறுபுறமாக இந்த சோதனை மனிதனுடைய நாசகார வேலைகளுக்கான கூலியாகும். இது குறிப்பாக அநியாயக் காரர்களுக்கு மாத்திரமன்றி, பாகுபாடின்றி எல்லோரையும் சூழ்ந்து கொள்ளக்கூடியது.
“அநியாயக் காரர்களுக்கு மட்டுமன்றி உங்களையும் சூழ்ந்து கொள்ளும் சோதனையைப் பயந்து கொள்ளுங்கள்” (அல்குர்ஆன்: அன்ஃபால் – 25) என்று இது தொடர்பாக அல்குர்ஆன் எச்சரிக்கின்றது.
பொறுமையாளர்களையும், உண்மையாளர்களையும் பிரித்தறிவதற்காக அல்லாஹ் சோதனைகளை தருகின்றான்.
“பயம், பசி மற்றும் பொருள்களிலும் உயிர்களிலும் விளைச்சல்களிலும் சேதத்தை ஏற்படுத்தல் போன்றவற்றால் நாம் உங்களை சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு நபியே நற்சேதி கூறுவீராக” (அல்குர்ஆன்: அல் பகரா – 155) என்ற வசனம் பொறுமையாளர்களை இனம்காண்பதற்கு இறைவன் சோதனையை வழங்குகின்றான் என விளக்குகின்றது.
”இத்தகைய கஷ்டகாலத்தை நாம் மனிதர்களுக்கு மத்தியில் மாறி மாறி வரச் சேகின்றோம். உங்களை உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள் எவர் என்று அறிவதற்காகவும் உண்மையான உயிர்த் தியாகிகள் எவர் என்று எடுத்துக் காட்டுவதற்காகவுமே இவ்வாறு கஷ்டகாலத்தை மாறி மாறி வரச்செய்கின்றான்.” என்ற வசனமும் உண்மையாளர்களை இறைவன் பிரித்தறிவதற்கு இறைவன் வழங்குகின்ற சோதனை என குறிப்பிடுகின்றது.
இவ்வாறாக அல்லாஹ் முஃமீன்களை புடன்போடுவதற்காகவும் பொறுமையாளர்களை இனங் காண்பதற்காகவும் பல்வேறுபட்ட துன்பங்களைக் கொடுத்து இறைவன் சோதிக்கின்றான். எனினும் இந்த சோதனைகளில் மனிதன் விழித்துக் கொண்டு இறைவனின் உதவியை எதிர் பார்க்கின்றான். இவ்வாறான சோதனைகளின் மூலமே இறைவனை நெருங்கிக் கொள்ளலாம். உதாரணமாக புயலில் மாட்டிக் கொண்டவன் கலப்பற்ற மனதுடன் இறைவனை அழைத்துப் பிரார்த்திக்கின்றான் என்ற ஸூறா லுக்மானின் 32 வது வசனம் இதனைத் தெளிவுபடுத்துகின்றது.
ஆனால் இதற்கெல்லாம் மாற்றமாக கஷ்டங்களைக் கொண்டு சோதிக்காமல் நலவுகளைக் கொண்டு அல்லாஹ் மனிதனை சோதனைக்குட்படுத்துகின்றான். “நன்மையையும் தீமையையும் கொண்டு நாம் உங்களை சோதிப் போம்” (அல்குர்ஆன்: அன்பியா – 35) என்று எவ்வாறு அல்லாஹ் கஷ்டங்களைக் கொடுத்து சோதிப்பானே அதேபோன்றுதான் நலவுகளையும் கொடுத்து மனிதர்களைச் சோதிப்பான்.
“உங்களுடைய பொருள்களும் உங்களுடைய பிள்ளைகளும் சோதனையாகவே உள்ளன” (அல்குர்ஆன்: தகாபுன்-15) என்ற அல்குர்ஆன் வசனம் மனிதனுக்குக்கிடைக்கின்ற நலவுகளான செல்வங்களும் பிள்ளைகளும் சோதனையென்று குறிப்பிடுகின்றது. இதேபோன்று மனிதனுக்குக் கிடைக்கின்ற பட்டங்கள், பதவிகள், ஏனைய எல்லா நலவுகளும் அவனுக்கு மிகப் பெரிய சோதனையே. இதுதான் நாங்கள் மிகவுமே அவதானம் சேலுத்த வேண்டிய சோதனையாகும்.
அபூ உபைதா ரளியல்லாஹு அன்ஹு பஹ்ரைனியிலிருந்து ஜிஸ்யா வருமான வரியை சேகரித்துக் கொண்டு வந்தவுடன் ஸஹாபாக்களில் சிலர் அதில் பங்கொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.
இதனைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “உங்களுக்கு வறுமை ஏற்படும் என்று நான் பயப்படவில்லை, மாறாக அல்லாஹ் உங்களுக்கு முன்பிருந்தோருக்கு உலக ஆடம்பரங்களைக் கொடுத்தான் அதற்காக அவர்கள் நீங்கள் தற்போது போட்டி போடுவது போன்று போட்டியிட்டுக் கொண்டனர் இதுவே அவர்களை அழித்துவிட்டது. அதேபோன்றே இது உங்களையும் அழித்துவிடும் என்று பயப்படுகின்றேன்” என்று கூறினார்கள். (புகாரி 3158, முஸ்லிம் 2961) எனவே உலக ஆடம்பரங்கள் கிடைக்கப் பெறுவது மனிதனை மறைமுகமாக அழித்துவிடக் கூடிய மிகப் பெரிய சோதனையாகும்.
இதனால்தான் “ஈமான் கொண்டவர்களே உங்களது சேல்வங்களும் பிள்ளைகளும் இறை ஞாபகத்தைவிட்டும் உங்களை பரா முகமாக ஆக்கிவிடவேண்டான்” (அல்குர்ஆன்: முனாஃபிகூன் 7), அதிகமாக சேகரிக்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களை பராமுகமாக ஆக்கி விட்டது. (அல்குர்ஆன்: தகாதுர் – 1) என்ற வசனங்கள் இவ்வாறான சோதனையையிட்டு எச்சரிக்கை செய்கின்றன.
இதன் பாதிப்பைத் தெளிவு படுத்துமுகமாக அல்லாஹ் அல்குர்ஆனில் காரூனுடைய சம்பவத்தையும் (ஸூறதுல் கஸஸ்) இரு தோட்டங்களுக்கு சோந்தக் காரணாக இருந்த ஒரு மனிதனுடை சம்பவத்தையும் (ஸூறதுல் கஃப்) படிப்பினைகளாக குறிப்பிடுகின்றான்.
காரூன் அவனது செல்வத்தின் காரணமாக கர்வம் கொண்டான். எனவே அல்லாஹ் அவனையும் அவனது செல்வங்களையும் சேர்த்து பூமியில் உள்வாங்கித் தண்டித்தான். இரு தோட்டங்களுக்குச் சோந்தக்காரன் அவனுக்கு வழங்கப்பட்ட செல்வத்தினால் பெருமை கொண்டு படைத்த இறைவனையே நிராகரித்தான். இதன் காரணமாக அவனுடைய செல்வங்கள் அழிக்கப்பட்டன. பனு இஸ்ரவேலர்களில் குஷ்ரரோகி, வழுக்கைத் தலையுடைவன், குருடன் ஆகி யோரிடைய நோகளைக் குணப்படுத்தி அவர்களுக்கு செல்வங்களை வழங்கி சோதனைக்குட்படுத்தினான். இந்த சோதனையில் குஷ்டரோகியும், வழுக்கைத் தலையுடையவனும் தோற்றுப் போய் அவர்களுடைய பழைய நிலைமையை அடைந்து கொண்டனர். குருடன் மாத்திரம் சோதனையில் வெற்றி பெற்றான். அல்லாஹ் மேலும் அவனுக்கு செல்வங்களை வழங்கினான். இந்த சம்பவமும் அல்லாஹ் நலவைக் கொண்டு சோதித்ததற்கான ஓர் உதாரணமாகும்.
உங்களுக்கு முன்பிருந்தோர் உங்களைவிட சக்தி படைத்தவர்களாகவும், அதிக செல்வங்களைக் கொண்டவர்களாகவும் இருந்து உலகை அனுபவித்தனர். அவர்களைப் போன்று நீங்களும் ஆடம்பரங்களில் மூழ்கிக் கொள்ளுங்கள் இவ்வாறனவர்களின் செயல்கள் உலகிலும் மறுமையிலும் வீனாகிவிட்டன. இவர்களே நஷ்டவாளிகள் என்ற ஸூறதுல் தௌபாவின் 69 வது வசனம் இவ்வாறான சோதனைகள் மிகவும் அபாயகரமானவை என்பதை தெளிவுபடுத்துகின்றது. “நாங்கள் கஷ்டங்களின் மூலம் சோதிக்கப்பட்டபோது பொறுமையைக் கைக்கொண்டோம். ஆனால், நலவுகளைக் கொண்டு சோதிக்கப்பட்டபோது எங்களால் பொறுமையாக இருக்க முடியவில்லை” என்ற ஸலபுகளின் கூற்றும் இதனையே உண்மைப் படுத்துகின்றது.
எனவே, சோதனை நலவுகளின் வடிவிலும் வரும் ஆகவே அவதானமாக இருந்து கொள்ள வேண்டும்.
சோர்வு நிலையில் சமநிலை
ரமழான் நம்மை வந்தடைந்து மிக விரைவாகவே சேன்றுவிட்டது. நற்சேயல்களைச் செய்வதில் மக்கள் போட்டி போட்டுக் கொண்டனர். இறை இல்லங்கள் மக்களால் நிரம்பி வழிந்தன. சற்று நேரம் தாமதமானாலும் பள்ளிவாயல்களில் தொழுவதற்கு இடம் கிடைப்பதில்லை. ஜமாஅத் தொழுகையை கடைப்பிடிப்பதற்கு மக்கள் முன்டியடித்துக் கொண்டனர்.
தற்போது பள்ளிவாயல்கள் காலியாகிவிட்டன. அல்குர்ஆன் மூடப்பட்டு உரிய இடத்தில் வைக்கப்பட்டு விட்டது. அதனைத் திறப்பதற்கு அடுத்த ரமழான் வரவேண்டிய நிலை. மக்கள் தமது இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டனர். இபாதத்களில் வெறுமை நிலை தோன்றிவிட்டது.
சிலர் பருவ காலங்களில் வியாபாரம் செய்து மூட்டை கட்டுவது போன்று ரமழானிலும் இபாதத்கள் செய்து ஓய்ந்து விட்டனர். மற்றும் சிலர் முற்றாகவே இபாதத்களிலிருந்து தூரமாகிவிட்டனர். ஆனால் ரமழான் இறையச்சத்தை ஏற்படுத்துவதற்கும், தொடர்ந்தேர்சையாக ஆன்மீகச் செயற்பாடுகளில் கவனம் செலுத்துவதற்குமான பயிற்சிக்களமாகும். உண்மையில் எமது அமல்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டமைக்கான அடையாளம் நாங்கள் நற்சேயல்களில் தொடர்ந்தேர்ச்சையாக ஈடுபாடு காட்டுவதாகும்.
ஒவ்வொன்றுக்கும் ஒரு தீவிர நிலை காணப்படும். ஒவ்வொரு தீவிர நிலைக்கும் ஒரு சோர்வு நிலை காணப்படும். எவருடைய சோர்வு நிலை எனது வழிமுறைக்கு உடன்பட்டதாக இருக்கின்றதோ அவரே வெற்றியடைந்தவர்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அஹமத் இப்னு ஹிப்பான்) குறைவாக இருந்தாலும் தொடர்ந்தேர்ச்சையாக செய்யப்படுகின்ற செயற்பாடே அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்துக்குரியதாகும்” (புகாரி 3-31)
எனவே நாம் ரமழானில் நற்சேயல்களில் தீவிர ஈடுபாடு காட்டினோம். தற்போது சோர்வடைந்து விட்டோம். எம்முடைய சோர்வு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைக்கு மாறுபட்டதாக அமைந்துவிடக் கூடாது.
எனவே, குறைவாக இருந்தாலும் தொடர்ந்தேர்ச்சையாக நற்சேயல்களில் ஈடுபாடு காட்டுவோம். சோர்வு நிலையிலும் சமநிலை பேணுவோம். நாம் மேற்கொண்ட நற்சேயல்களை அல்லாஹ் அங்கீகரிப்பானாக!
source: http://www.meelparvai.net