தொழுகையில் ஸஃப்புகளின் ஒழுங்கு முறைகள்
ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுபவர்கள் தங்களின் வரிசைகளில் எப்படி நிற்க வேண்டும்?
ஒவ்வொரு ஸஃப்பிற்கும் இடையிலுள்ள இடைவெளி எவ்வளவு இருக்க வேண்டும்?
அதற்கு மாறுபாடாக இருக்கும்பொழுது அந்த தொழுகை நிறைவேறுமா?
ஜமாஅத்தின் நன்மை கிடைக்குமா? அல்லது திருப்பித் தொழ வேண்டுமா?
ஓர் இமாமைப் பின்பற்றி அந்த இமாமுடைய அங்க அசைவுகளை விளங்கிக் கொள்ளுமளவுக்கு அந்த பள்ளிக்குள் எந்த மூலை முடுக்கில் நின்று தொழுதாலும் நிச்சயம் தொழுகை கூடிவிடும். ஜமாஅத்தின் நன்மையும் கிடைத்துவிடும். இருப்பினும் ஸஃப்புகளில் நிற்பதில் சில ஒழுங்கு முறைகள் உண்டு.
அவை:
o ஸஃப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக அமைய வேண்டும்.
o ஒவ்வொரு ஸஃப்பிற்கும் இடையில் ஒரு மனிதர் சிரமமில்லாமல் ஸஜ்தா செய்யுமளவுக்கு இடைவெளி இருக்க வேண்டும்.
o ஒரு ஸஃப்பு பூர்தியான பின்புதான் அடுத்த ஸஃப்பை துவங்க வேண்டும்.
முடிந்தவரை முதல் ஸஃப்பில் நிற்பவர்கள் தொழுகையின் விபரங்களை நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும். வயதுக்கு வராத சிறுபிள்ளைகளை முன் வரிசைகளிலுள்ள பெரியவர்களோடு கலந்து விடாமல் பெரியவர்களின் வரிசை முடிந்ததற்குப் பின்புள்ள வரிசைகளில் அவர்களை நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தும்பொழுது அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து தொழுகைக்கு இடையூராக சேட்டை செய்யாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். (சில வசதிபடைத்த பணக்காரர்கள் தனது வீட்டு சிறுவர்களை தன்னோடு முதல் ஸஃப்பில் நிற்க வைக்கும் பழக்கம் சில கிராமங்களில் உள்ளது. இது தவறான செயலாகும்.
சிறுவர்கள் வசதியான வீட்டுப்பிள்ளையாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் முதல் ஸஃப்பில் நிற்பதை அனுமதிப்பது தொழுகைக்கு இடையூராகவே அமையும். அவர்களின் சில அசைவுகள் தொழ வைக்கும் இமாமைக்கூட தடுமாறச் செய்துவிடலாம். ஆகவே சிறுவர்களை முதல் ஸஃப்புகளில் நிற்பதை அனுமதிக்கலாகாது.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘வயதுக்கு வந்தவர்களும், அறிவுடையோர்களும் எனக்குப்பின் நிற்கட்டும்.’ எனக் கூறியுள்ளார்கள்.
ஸஃப்பில் நிற்பவர்கள் நெருக்கமாக நிற்க வேண்டும. அதற்காக ஒருவரையொருவர் இடித்துக்கொண்டோ அருகிலுள்ளவர்களை சிரமப்படுத்திக் கொண்டோ நிற்பது கூடாது. எனவேதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ஸஃப்புகளை நேராக்கிக் கொள்ளுங்கள், தோள் புஜங்களையும் நேர்படுத்திக் கொள்ளுங்கள், இடைவெளிகளை அடைத்துக் கொள்ளுங்கள், உங்களுடைய சகோதரர்களுக்கு உங்களின் கைகளை மிருதுவாக்கிக் கொடுங்கள். (அதாவது கைகளை விறைப்பாக வைத்துக்கொண்டு அருகிலுள்ளளவர் முகம் சுளிக்குமளவு நடந்து கொள்ளக் கூடாது.) ஷைத்தானுக்காக இடைவெளிகளை விட்டுவிடாதீர்கள். யார் ஸஃப்பை சேர்ந்து நிற்பாரோ அல்லாஹ் அவரை சேர்த்துக் கொள்வான், யார் ஸஃபபை துண்டித்துவிடுவாரோ அல்லாஹ் அவரை துண்டித்து விடுவான்’ என்று அருளியுள்ளார்கள்.
o அடுத்து தோள் புஜங்களும் குதிகால்களும் சமமாக இருக்க வேண்டும்.
கால்களில் முற்பகுதியிலுள்ள விரல்களைப் பார்த்து ஸஃப்புகள் அமைக்கக்கூடாது. மாறாக பின்னங்காலை மட:டுமேi பார்க்க வேண்டும்.
அதற்குத் தகுந்தவாறு பள்ளிகளில் பாய்களை சரியான முறையில் விரிக்கப்பட்டிருக்க வேண்டும். பாய் அல்லது வேறு விரிப்புகள் விரிக்கப்படாத பள்ளிகளில் தரையில் நின்று தொழுகுமட்போது அந்த தரையில் சரியான அடையாளங்கள் இடப்பட்டிருக்க வேண்டும்.
o கிப்லா க்ராஸாக உள்ள பள்ளிகளில் ஸஃப்புகளை அமைக்கும் விஷயத்தில் மிகுந்த கவனத்தைக் கையாள வேண்டும்.
o ஸஃப்பின் ஓரத்தில் நிற்பவர்களன் அவருக்கு முன்னால் சிரமமில்லாமல் ஸஜ்தா செய்வதற்கு இடம் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், சில சமயங்களில் ஓரஞ்சாரங்களில் சுவர்கள் அல்லது திட்டுகள் அல்லது தூண்கள் ஸஜ்தா செய்வதற்கு இடையூறாக இருக்கும்.
o அதைப்போன்று தூண்களுக்கு நடுவில் நிற்பவர்களும் ஸஜ்தா செய்யுமிடத்தைப் பார்pத்து நிற்க வேண்டும். எனவே, அந்த இடத்திற்கு தகுந்தவாறு குள்ளமாக இருப்பவர்கள் நின்று கொண்டால் நலமாகும்.
o நிற்பவர்களில் கொஞ்சம் கொஞ்சமாக இருக்கும் இடைவெளிகளையும் சரியாக பார்த்து சரிசெய்ய வேண்டும். குறிப்பாக, ஜும.ஆ, பெருநாள் போன்ற தொழுகைகளில் இந்த நிலைகளை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்.
o மக்கா ஹரமில் இருப்பதைப் போன்று ஸஜ்தா செய்யமுடியாதவாறு இரண்டு ஸ்ஃப்புகளுக்கு இடையில் மூன்றாவது ஒரு ஸஃப்பை அமைத்துக் கொள்ளனக்கூடாது. ஏனெனில் நமது ஊர்களில் அது போன்று இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடக்கூடிய ஒரு கூட்டம் தொழுகைக்காக ஒன்று சேர்வது மிக மித அரிதாகும். அப்படி எங்காவது அதுபோன்ற ஓர் இக்கட்டான நிலை ஏற்பட்டால் ஒருவருடைய முதுகின்மீது இன்னொருவர் ஸஜ்தா செ;துகொள்ள வேண்டியதுதான்.
அமர்ந்து தொழுபவர்கள், வயது முதிர்ந்தவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், உடல் பலகீனமானவர்கள் முடிந்தவரை ஸஃப்பின் ஓரங்களை தேர்ந்தெடுத்துக்கொள்வது நலம்.
– எம். முஹம்மது இஸ்மாயீல் காஷ்ஃபீ..
– குர்ஆனின் குரல் – அக்டொபர் 2011