M U S T R E A D
அவள் ஒரு சிறந்த தாய் :
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒவ்வொருவரும் உங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குப் பாதுகாவலரும், பொறுப்பாளரும் ஆவீர்கள். அவர்கள் செய்கின்ற செயல்களுக்கு, நீங்கள் விசாரணை செய்யப்படுவீர்கள். ஓரு ஆட்சியாளரும் கூட பொறுப்பாளியாவார். அவர் அவருக்குக் கீழ் உள்ளவர்களின் செயல்களுக்காக விசாரிக்கப்படுவார்.”
ஓரு மனிதன் தன் குடும்பத்திற்குப் பொறுப்பாளியாவார், அவர் அவருக்குக் கீழ் உள்ள குடும்பத்தவர்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஓரு மனைவியும் பொறுப்பாளரே! அவளுடைய கணவனின் உடமைகள் பற்றியும், குழந்தைகள் பற்றியும் விசாரிக்கப்படுவாள். சுருக்கமாக, உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே! உங்களின் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவீர்கள் அல்லது கேள்வி கணக்கிற்கு உட்படுத்தப்படுவீர்கள்.
இங்கே மனைவியானவள் தன்னுடைய குடும்பத்தில் கணவனுக்கு அடுத்த நிலையில் பொறுப்புக்களை வகிக்கக் கூடியவளாக இருக்கின்றாள், எனவே அவள் ஏற்றுக் கொண்டிருக்கும் அந்தத் துணைத் தலைமைப் பொறுப்புக்குரிய தகைமையை அவள் பராமரிக்க வேண்டும். அவளது குழந்தைகளின் ஒவ்வொரு செயல்களும் இஸ்லாத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும் அதே சமயத்தில், அவர்கள் இஸ்லாத்தை விரும்பிப் பின்பற்றக் கூடியவர்களாக பரிணமிக்க வேண்டும் என்பது, அவளது ஒவ்வொரு நாள் நடவடிக்கையிலும் மிளிர வேண்டும்,
அதற்கான முன்மாதிரியாக இவள் முதலில் செயல்பட்டு, தன் குழந்தைகளுக்குப் பாடம் புகட்ட வேண்டும். ஓரு தாயின் கடமையை இன்னதென்று ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரையறுத்து விட முடியாது. அவள் தன்னுடைய குழந்தைகளை அனைத்து வகையிலும் பயிற்றுவிக்க வேண்டும்.
தொழுகை, பேச்சு வழக்கு, உணவுப் பழக்கம், சமுதாயத்தில் பழக வேண்டிய பழக்க வழக்க முறைகள் உள்ளிட்ட எண்ணற்ற சமுதாய ஒழுக்கங்;களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இங்கே அத்தகைய ஒழுக்கங்களில் சிலவற்றைத் தான் நாம் குறிப்பிட்டிருக்கின்றோம். தன்னுடைய குடும்பத்தில் உள்ள அங்கத்தினர்களுடன் பூரணமாக ஒத்துழைப்பதோடு, அதில் எப்பொழுது இஸ்லாமும், அதன் அடிப்படைகளும் மிளிரும்படிச் செய்ய வேண்டும்.
உங்களுடைய குழந்தைகள் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும், அதன் முன்மாதிரிகளை தன்னுடைய தாயின் செயல்பாட்டில் அந்தக் குழந்தை காணவில்லை என்றால், அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி என்னென்ன அறிந்து கொண்டார்களோ அதன்படி அவர்களால் செயலாற்ற முடியாது, ஏனென்றால், தன் தாயைப் போலவே அவர்களும் பலவீனத்திற்கு ஆட்பட்டு விடுவார்கள், தன் தாய் எந்தளவு பின்பற்றுகின்றாளோ அந்தளவு பின்பற்றினால் போதும் என்ற மனநிலையையோ அல்லது தன் தாய் பின்பற்றுவது தான் மார்க்கம் என்ற அடிப்படையிலோ குழந்தை வளருவதற்கு வாய்ப்பாக ஆகி விடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
பெண்களை சில வரைமுறைகள், சட்ட திட்டங்களின் அடிப்படையில், வீட்டிற்கு வெளியே வேலை செய்வதை இஸ்லாம் அனுமதிக்கின்றது. இருப்பினும் அவளது முதன்மையான கடமையாகவும், அவள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அம்சமாகவும் இருப்பது மனைவி என்ற அந்தஸ்தேயாகும். அதனை அடுத்த பொறுப்பாக இருப்பது தாய் என்ற அந்தஸ்து, இந்தப் பொறுப்புக்களுக்காகத் தான் ஒரு பெண்ணே படைக்கப்பட்டிருக்கின்றாள் என்பதும், அது தான் அவளுக்கு உகந்ததொரு பொறுப்பாகவும் இருக்கின்றது என்பதும் யாராலும் மறுத்துக் கூற முடியாததொரு கூற்றாக இருக்கின்றது. இந்தப் பொறுப்புகளை அவள் உதாசினம் செய்து விட முடியாது.
ஓரு முஸ்லிம் பெண்ணுடைய தன்மை எவ்வாறு இருக்க வேண்டுமெனில், முதலில் தன்னுடைய கணவன் மற்றும் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நாம் பூரணமாக நிறைவேற்றுகின்றோமா என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே, மற்ற பணிகளில் அவள் கவனம் செலுத்த வேண்டும். தன்னுடைய மனைவி தன்னைச் சரியாகக் கவனித்துக் கொள்கின்றாளா, தன்னுடைய குடும்பப் பணிகளில் தன்னுடன் பூரணமாக ஒத்துழைக்கின்றாளா என்பதைப் பற்றி மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்பது அவனது தார்மீக உரிமையாகும். அதைப் போலவே தன்னுடைய தாய் தனக்குத் தேவையான மார்க்கக் கடமைகளைக் கற்றுத் தருகின்றாளா, அதற்குத் தேவையான அடிப்படைகளை முதலில் தனக்குள் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றாளா என்று எதிர்பார்ப்பதும் ஒரு குழந்தையினுடைய தார்மீக உரிமையாகும். எனவே, இத்தகைய கடமைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை விட்டு விட்டு, இதுவல்லாத ஒன்றுக்கு ஒருமுஸ்லிம் பெண் முன்னுரிமை கொடுக்க முயற்சிக்கக் கூடாது.
நிச்சயமாக இஸ்லாம் பெண் மருத்துவர்களையும், நர்ஸுகளையும், கல்வியாளர்களையும் இன்னும் பல்வேறு துறைசார்ந்த அறிஞர் பெருமக்களினுடைய தேவைகளையும் எதிர்பார்க்கின்ற அதே வேளை, ஒரு இஸ்லாமியப் பெண்ணினுடைய அழகு, அவளது குடும்பத்தை வளர்த்தெடுப்பதிலும், அவளது கணவனுக்கும், குழந்தைகளுக்கும் உள்ள உரிமைகளை நிறைவேற்றுவதிலும், அவர்களை இஸ்லாத்தின் பால் செலுத்துவதிலும் தான் இருக்கின்றது.
ஏனென்றால், இன்று நாம் அநேகமாக முஸ்லிமல்லாதவர்களின் மத்தியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், நம்முடைய வாழ்விடங்கள் முதல் நாம் பணியாற்றக் கூடிய அத்தனை பகுதிகளிலும் இஸ்லாத்திற்கு முரணானவைகள் தான் மலிந்திருக்கின்றன, எனவே திருமணமான ஒரு பெண் வேலைக்குச் செல்வதை இஸ்லாம் உற்சாகப்படுத்துவதில்லை. அதிலும் அவள் குழந்தைகளைப் பெற்று விட்டாள் என்றால், கணவனின் வருவாய்க்குள் தன்னுடைய குடும்பத்தை அமைத்துக் கொண்டு, அதிலிருந்து தன் குடும்பத்தினுடைய தேவையை நிறைவு செய்து கொண்டு வாழ்வது தான், ஒரு மார்க்க சிந்தனையுள்ள ஒரு முஸ்லிம் பெண்ணினுடைய உயர்ந்த குணநலனாக இருக்க முடியும். இன்னும் அவளது குடும்பம் அவள் வேலைக்குச் செல்வதை வற்புறுத்தவில்லை என்றால், வெளியில் வேலைக்குச் செல்வதைத் தவிர்த்து, தன்னுடைய கணவன், குழந்தைகளைப் பராமரிப்பதே அவளுக்கு மிகச் சிறந்ததாகும்.
இன்று வேலைக்குச் செல்லும் பெண்களின் அவல நிலைகளை தினம் தினம் செய்தித் தாள்களின் வழியாக நாம் அறிந்து வருகின்றோம். வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை இவ்வாறு என்றால், தெருவிலே நடமாடும் பெண்களுக்கும் கூட இன்று பாதுகாப்புப் போட வேண்டிய சூழ்நிலைகள் தான் அநேக நாடுகளில் உள்ளன. நம் இந்திய நாட்டில், தமிழகத்தில் பாலியல் வல்லுறவுக்கு சரிகா ஷா என்ற மாணவி பலியானதை நாம் அனைவரும் அறிவோம். வெளிவந்த செய்தி இது என்றால், வெளியே வராத செய்திகள் எத்தனை?
பாமரர்கள் மத்தியில் இவ்வாறு என்றால், படித்தவர்களின் நிலை என்ன? முன்னாள் பஞ்சாப் காவல்துறை தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய கில் என்ற ஐபிஎஸ் அதிகாரி தன்னுடைய சக பெண் அதிகாரியின் பின்புறத்தில் தட்டியதற்காக வழக்கு விசாரணையைக் கூடச் சந்தித்தார் என்பது நாம் அறியாத செய்தி அல்ல. இன்னும்; பாடத்திட்டங்களினால் எத்தனை மாணவிகள் அன்றாடம் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகின்றார்கள் என்பதும், வெளியில் வேலைக்குச் செல்லும் பெண்களின் அவலம் இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளிலும் பெரும் பிரச்னையாக ஆகி வருகின்றது என்பதும் அன்றாடம் செய்தி வாசிக்கும் அனைவரும் அறிந்த உண்மையேயாகும்.
அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :
“(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (முஃமின்களே!) நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ அது போன்ற அளவுக்கே நீங்களும் தண்டியுங்கள், பொறுத்துக் கொண்டால், நிச்சயமாக அதுவே பொறுமையாளருக்கு மிக்க மேன்மையானதாகும். (நபியே!) இன்னும் நீர் பொறுமையுடன் இருப்பீராக! எனினும் அல்லாஹ்வின் உதவியில்லாமல் நீர் பொறுமையுடனே இருக்க முடியாது – அவர்களுக்காக நீர் (எது பற்றியும்) கவலைப்பட வேண்டாம் – அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளைப் பற்றி நீர் (மன) நெருக்கடியில் ஆக்கிவிட வேண்டாம். நிச்சயமாக எவர் பயபக்தியுடையவராக இருக்கிறார்களோ அவர்களுடனும், எவர் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கிறான்.” (அல்குர்ஆன் 16:125-128)
அல்லாஹ் நமக்கு ஏவியுள்ளவற்றை நாம் முழுமையான அளவில் நிறைவேற்றிட முடியாது. இந்த உலக வாழ்க்கையானது பல்வேறு நெருக்கடிகளையும், தடைகளையும், அநீதிகளையும் மற்றும் மனதை அலைக்கழிக்கக் கூடியதாகவும், தீமைகளை நோக்கிச் செலுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது. ஆனால், முஸ்லிமாக இருக்கின்ற ஆணோ அல்லது பெண்ணோ, இத்தகையவற்றிற்கு தன்னுடைய மனதிற்கு இடம் கொடாமல், அல்லாஹ்வினுடைய பயத்தை, அவனது தண்டனையைப் பற்றிய அச்சத்தை மனதிலே இருத்திக் கொண்டு, அவற்றைத் தான் எதிர்நோக்கக் கூடிய பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான கருவியாகப் பயன்படுத்திக் கொண்டு, இறைப் பொருத்தத்திற்காக அன்றி வேறெதற்காகவும் எதனையும் விட்டுக் கொடுக்காத வாழ்க்கையை வாழப் பழக வேண்டும். அறிந்து கொள்ளுங்கள்! நாம் சந்திக்கின்ற அத்தனை அனுபவங்களும் நமக்கு அல்லாஹ் விதித்த சோதனைகள் என்பதை மறந்து விடாதீர்கள்.
“உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான்;. ஆனால் அல்லாஹ் – அவனிடம் தான் மகத்தான (நற்)கூலியிருக்கிறது.” (அல்குர்ஆன் 64:15)
உங்களது சக்திக்கு மீறிய எதனையும், உங்கள் மீது சுமையாக நாம் சுமத்துவதில்லை என்று இறைவன் நமக்கு இவ்வாறு வாக்களித்திருக்கின்றான்.
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்;
“மறுமைநாளிலே உயர்ந்தோனாகிய அல்லாஹ், இவ்வாறு கூறுவான்: என்னுடைய திருப்பொருத்தத்திற்காகவே ஒருவரை ஒருவர் நேசித்தவர்கள் எங்கே? இன்றைய தினம் என்னுடைய நிழலில் அவர்களுக்கு நான் புகலிடம் அளிக்கப் போகின்றேன். இன்றைய தினம் என்னுடைய நிழலை அன்றி வேறு நிழல் கிடையாது.” (நூல்: முஸ்லிம்).
பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய வழிமுறைகள் :
உதவியாளர்களின் குழுவை வைத்திருங்கள் :
நாம் ஒன்றைச் செய்து முடித்திருக்கின்றோம் என்று சொன்னால், இப்பொழுது நமக்கு அதைப் பற்றி என்ன அறிந்து வைத்திருக்கின்றோமோ அதை விட மாற்றமான ஒன்றைத் தான் நாம் முன்பு செய்திருக்கக் கூடும். எனவே கடந்த காலத்தில் நாம் செய்து விட்ட அந்தத் தவறுகளைப் பற்றி இப்பொழுது கவலைப்பட்டு என்ன பலன்? ஏனவே எதைப் பற்றி நாம் அறியவில்லையோ அதைப் பற்றிய அறிவு ஞானம் உள்ளவர்களிடம் அது பற்றிக் கருத்துக் கேட்டுச் செய்திருந்தால் இப்பொழுது கைபிசைந்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லையே!
நாம் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற, வெற்றிகரமான மணவாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றவர்களின் பட்டியலை வைத்துக் கொண்டு, நமக்கேற்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளின் போது, அவர்கள் அவற்றை எவ்வாறு சமாளித்திருப்பார்கள் என்பது பற்றி அவர்களுடன் கலந்தாலோசனை செய்தால், அவர்கள் தங்களது அனுபவங்கள் வாயிலாக உங்களுக்குச் சிறந்த அறிவுரைகளை வழங்குவார்கள். அந்தத் தருணங்களில் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய ஆலோசனைகளை வழங்குவார்கள். இப்படிப்பட்டதொரு குழவை நீங்கள் வைத்திருந்தீர்கள் என்றால், நட்பு ரீதியாக அவர்கள் உங்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்களது மேலான ஆலோசனைகளை உங்களுக்கு வழங்கி, உங்களது பிரச்சினைகளுக்கு அவர்கள் வடிகால் தேடிக் கொடுப்பார்கள். உங்கள் மனச்சுமையையும், பின்னால் வருந்தக் கூடிய நிலையையும் அவர்கள் திவிர்த்து விடுவார்கள்.
மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள் :
“இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்;. அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது. அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்;. (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.” (அல்குர்ஆன் 3: 133-134)
சற்று நினைத்துப் பாருங்கள்! யாருடைய மனதையும் புண்படுத்தி விட முடியாத, மக்கள் அவரவர் எல்லைகளில் வாழக் கூடிய, எந்தவித இடையூறுகளுமற்றதொரு வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்! அப்படிப்பட்டதொரு வாழ்க்கை இங்கே இருக்கின்றதா என்பதைப் பற்றியும் சற்று எண்ணிப்பாருங்கள்! இல்லை! அப்படிப்பட்டதொரு வாழ்க்கை இந்த உலகில் இல்லை! இந்த உலக வாழ்க்கையில் ஒரு முக்கிய அம்சமாக இருப்பது என்னவென்றால், பிறருடைய குறைகளையே தோண்டித் துருவி ஆராய்ந்து கொண்டிருப்பது, எந்தளவு நாம் பிறருடைய குறைகளைத் தோண்டித் துருவி ஆராய்ந்து கொண்டிருக்கின்றோமோ அந்தளவு பிறர் நம்முடைய குறைகளை ஆராய்ந்து கொண்டிருப்பார்கள் என்பதைப் பற்றி நாம் எண்ண மறந்து விடுகின்றோம். தான் சரியாக நடந்திருக்கின்ற பொழுது, தன்னை வலிந்து வந்து துன்புறுத்தியவர்களை மனிதர்கள் என்று மறக்காமல் நினைவிலேயே வைத்திருப்பார்கள்.
நாம் ஒவ்வொருவரும் பிறரது தவறுகளை வலிந்து சென்று, தாங்களாகவே முன்வந்து பிறரது தவறுகளை மன்னிக்கக் கூடியவர்களாகவும், நமக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளின் பொழுது விட்டுக் கொடுத்து வாழவும் பழகிக் கொள்ள வேண்டும். மேலும் நம் அனைவரிடமும் ஆற்றல் இருக்கின்றது, அதைப் போலவே பலவீனங்களும் இருக்கின்றன மற்றும் அதன் காரணமாக நம் அனைவரிடமும் தவறுகளும் ஏற்படுகின்றன. எனவே நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் தவறு செய்யக் கூடியவர்களாகத் தான் இருக்கின்றோம். எனவே, நாம் அனைவரும் பிறரை மன்னித்து வாழக் கூடிய வாழ்க்கையைக் கைக்கொள்வதன் மூலம், சமுதாய ஒற்றுமையைக் காண முடியும். குறிப்பாக குடும்பத்தில் இதைக் கடைபிடிப்பதன் மூலம் அமைதியான குடும்ப வாழ்வைக் காண முடியும்.
அமைதி அல்லது பொறுமை :
“இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் – நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்,; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் – நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.” (அல்குர்ஆன் 8:46)
குடும்ப வாழ்க்கையில் நடந்து வருகின்ற ஒரு நிலை என்னவென்றால், குழந்தைகள் செய்கின்ற தவறுகள் மற்றும் அவர்கள் தங்களிடம் ஏற்படுத்திக் கொள்கின்ற பழக்கவழக்கங்களைப் பார்த்து விடுகின்ற பெற்றோர்கள், இப்படிப்பட்டதொரு குடும்பத்தில் வாழ்வதை விட சாவதே மேல் என்ற எண்ணம் வளர்வதைக் காணலாம், ஆனால் அந்த எண்ணம் அடுத்த நாளே காணமால் போய் விடுவதையும் நாம் காணலாம். மேலும், நம்மிடைய காணப்படுகின்ற மிக நீண்ட நாள் பழக்க வழக்கங்களை மாற்ற முயற்சிக்கின்ற பொழுது, அதில் நாம் பொறுமையையும் கடைப்பிடிக்க வேண்டும். இதனால் ஏற்படுகின்ற பிரச்னைகள் நாம் பொறுமையைக் கடைப்பிடிக்கின்ற பொழுது, மிக விரைவிலேயே வந்த வழியே அது போய் விடும்.
பல சந்தர்ப்பங்களில் நாம் தவறு செய்து வருகின்றோம் என்பதைப் பற்றியதொரு விழிப்புணர்வை தாமாகவே ஏற்படுத்திக் கொள்ளும் அளவுக்கு, அந்தத் தவறை உணர்ந்து கொள்ளும் அளவுக்கு நம்மை நாமே பக்குவப்டுத்திக் கொள்ள வேண்டும். மேலும், பிறர் நமக்கு துன்பம் விளைவிக்கின்ற பொழுது நாம் பொறுமையைக் கைக்கொள்வதன் மூலம், அவருக்கு அவருடைய செயலின் பாரதூரங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி, வருங்காலத்தில் அதைப் பற்றி அவர் நினைத்து வருந்தக் கூடியதொரு சந்தர்ப்பத்தையும் அவருக்கு நம்முடைய பொறுமையின் மூலம் வழங்க வேண்டும். மேலும், சூழ்நிலைகள் கடினமாகும் நிலையை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் தான் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டு, தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றான். எனினும் நாம் பாரதூரமான அந்த சந்தர்ப்பங்களில் ஒருவருக்கொருவர் அறிவுரைகளை வழங்கிக் கொண்டு, அந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு முயற்சிப்பதோடு, அதில் பொறுமையையும் கடைப்பிடிப்பது மிகவும் சிறந்ததாகும்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்