ஃபத்வாவும் தக்வாவும்
பேரறிஞர் அவுரங்கஸேப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் ஒரு பணியாள் இருந்தார். அவருடைய பெயர் முஹம்மது அப்ரார். அவுரங்கஸேப் ரஹ்மதுல்லாஹி அலைஹ எப்போதும் அவரை முஹம்மது என்றே அழைப்பார்கள்;. எப்போதாவது ‘அப்ரார்’ என்றும் அழைப்பதுண்டு.
ஆனால், ‘அப்ரார்’ என்று அவரை அவுரங்கஸேப் அவர்கள் அழைக்கின்றபோதெல்லாம் ஏதோ மகுடிக்கு கட்டுப்பட்ட நாகம்போல் உடனே அந்த பணியாள் செம்பில் தண்ணீர் கொண்டு வந்து வைப்பார். அவுரங்கஸேப் ரஹ்மதுல்லாஹி அவர்களும் ‘உளூ’ செய்து கொள்வார்கள்.
இப்படி நீண்ட நாட்களாக நடந்து வந்தது. இதனை பல நாட்களாக தொடர்ந்து கவனித்து வந்த ஒருவருக்கு விபரம் ஒன்றும் பிடிபடவில்லை. சந்தேகத்தை ஒருநாள் அந்த பணியாளரிடம் கேட்டுவிட்டார். ‘ஆமாம்! உம்மை ‘அப்ரார்’ என்று பாதுஷா அழைத்தவுடன் நீ செம்பில் தண்ணீர் கொண்டு செல்வதன் மர்மம் என்ன?’ என்று கேட்டார்.
அதற்கு அந்த பணியாள், ‘ஆலம்கீர் அவுரங்கஸேப் அவர்கள் எப்போதும் என்னை ‘முஹம்மது’ என்றே அழைப்பார்கள். முஹம்மது என்பது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயர் என்பதால் உளூ இல்லாமல் அப்பெயரை அவர்கள் உச்சரிக்க மாட்டார்கள். ஆலம்கீர் அவர்கள் எப்போதும் உளூவுடனேயே இருப்பார்கள். உளூ முறிந்துவிட்டால் என்னை முஹம்மது என்று அழைக்காமல் ‘அப்ரா’ என்று அழைப்பார்கள். உடனே நான் புரிந்து கொண்டு அவர்கள் உளூச் செய்வதற்காக தண்ணீர் எடுத்துச் செல்வேன்’ என்று விளக்கமளித்தார்.
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரைச் சொல்ல உளூ தேவையா? என்று நம் தூய்மைவாத அறிவு கேள்வி கேட்கும். இல்லை என்றுதான் ஃபத்வாவும் பதில் சொல்லும். ஆனால் தக்வாவின் அடிப்படையில் (அவுரங்கஸேப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களைப்போல) ஒருவர் அவ்வாறு செயல்பட்டால் அதைக் குறை காண்பது அறிவுடமையாகாது.
இன்று எல்லா விஷயங்களும் ஃபத்வா கண்ணோட்டத்தில் தான் பார்க்கப்படுகின்றன. கூடுமா? கூடாதா? என்றே நம்முடைய கேள்வி எல்லாம் முடிவடைகின்றன.
இப்படி ஃபத்வாக்களை மட்டும் பிடித்துக்கொண்டு அலைபவன் ஒருபோதும் உபரி வணக்கங்களில் இனிமை காணமாட்டான் என்பது நிதரிசனமான உண்மை.