அவள் நல்லதொரு புத்திமதிகளை வழங்கக் கூடியவளாக இருக்க வேண்டும்:
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; “இஸ்லாத்தினைப் பின்பற்றக் கூடிய ஒரு மனைவியைப் பெற்றிருக்கின்றவனுடைய மனைவியானவள், தன்னுடைய கணவனுக்கு இந்த உலக வாழ்க்கையைப் பற்றிய விவகாரங்களிலும், மற்றும் அவனுடைய மார்க்கத்தைப் பற்றிய விவகாரங்களிலும் அவள் அவனுக்கு உதவக் கூடியவளாக இருப்பாள், அவன் பெற்றிருக்கின்ற பொருள்களிலேயே மிகச் சிறந்தது, இத்தகைய தன்மையுடைய பெண்ணைப் பெற்றிருப்பதேயாகும்.” (நூல்: பைஹகி).
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனுடைய சிறப்புத் தூதர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை முதன் முதலில் பார்த்த பொழுது, அவர்கள் நிலைகுலைந்தே போனார்கள். பயத்துடனேயே தன்னுடைய வீட்டை நோக்கி விரைந்தார்கள். வீட்டில் நுழைந்தவுடன், அங்கிருந்தவர்களை அழைத்து என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள் என்று கூவி அழைத்தார்கள். அவர், தான் பாதுகாப்பாக இருக்கின்றோம் என்பதை உணரும் வரை அவரருகே இருந்து, அவருக்குப் போர்வையைப் போர்த்தியும் விட்டார்கள்.
தன்னுடைய மனைவியாகிய கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம், தான் எதனால் இந்த நிலைக்கு ஆளானேன் என்பதை விவரித்துக் கூறினார்கள். அப்பொழுது கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இவ்வாறு ஆறுதல் கூறினார்கள்: “இறைவன் எப்பொழுதும் உங்களைக் கைவிட மாட்டான், நீங்கள் பயப்பட வேண்டாம், நீங்கள் உங்கள் தொப்புள் கொடிச் சொந்தங்களை இணைக்கின்றீர்கள், நீங்கள் பலவீனமானவர்களுடைய சுமையைத் தாங்கிக் கொள்கின்றீர்கள், தேவையுடையவர்களுக்கு உதவுகின்றீர்கள், உங்கள் விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள், உண்மையின் வழியில் (அவற்றை நிலைநிறுத்த) நீங்கள் சிரமங்களை மேற்கொள்கின்றீர்கள்.” (நூல்: புகாரி)
மேலும், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகத் தேவையுடையவர்களாக இருந்த பொழுது, யார் அவருக்கு முதன் முதலில் உதவினார்கள்? அதே கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தான். இத்தகைய பண்புகள், அன்புடனும் மற்றும் வாய்மையுடனும், அவர்கள் தன் கணவர் கொண்டு வந்த தூதுத்துவத்தை ஏற்றுக் கொண்டதும் மட்டுமல்லாது, அந்த தூதுத்துவப் பணியில் அவர் அடைந்து கொண்டிருந்த சொல்லொண்ணா துன்பங்களைத் தாங்கக் கூடிய அளவுக்கு உள வலிமையையும், உறுதியையும் தன்னுடைய அன்பான அரவணைப்பால், அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தன்னுடைய கணவருக்கு வழங்கினார்கள்.
அல்லாஹ் தனக்கு அடுத்தபடியாக, அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைத் தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஆறதல் வழங்கக் கூடிய, அமைதி அளிக்கக் கூடியதொரு ஆத்மாக உருவாக்கி, இறைத்தூதுத்துவப் பணியை முன்னெடுத்துச் செல்வதற்கும், அதில் ஏற்பட்டிருக்கும், ஏற்படப் போகும் விளைவுகளைச் சந்திப்பதற்குரிய தேவையைப் பெற்றுக் கொள்வதற்கும், ஒரு ஆத்மார்த்த உதவியாக அன்னையை இறைவன் திகழச் செய்தான்.
இன்றைக்கு நம்முடைய திருமணங்கள் வெற்றிகரமாக அமைந்து விடுவது என்பது, கணவன் மற்றும் மனைவி குடும்பங்கள் இரண்டும் மிகவும் வசதியான குடும்பங்களாக அமைந்து விடுவதில் இருக்கின்றது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் வெற்றிகரமான மணவாழ்க்கை என்பது, ஒரு கணவன் தன்னுடைய பிரச்னைகள், சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு எப்பொழுதும் தன்னுடைய மனைவியின் உதவியை, ஆலோசனையை எதிர்பார்க்கக் கூடியவனாகவும், அவளிடமிருந்து அவற்றைப் பெற்றுக் கொள்ளக் கூடியவனாகவும் இருக்க வேண்டும்.
மனைவியானவள் தான் தன்னுடைய கணவனின் உள்ளத்தையும், அவனது எண்ணத்தையும், சிந்தனை ஓட்டங்களையும் தெளிவாக அறியக் கூடிய மிகச் சிறந்த சந்தர்ப்பத்தைப் பெற்றிருக்கின்றாள், எனவே அவள் தான், தன்னுடைய கணவனுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில், அவனது நோக்கங்களை அடைந்து கொள்வதற்குத் தகுந்த அறிவுரைகள் தேவைப்படும் நேரத்தில், மிகச் சிறந்த ஆலோசனைகளை வழங்கி, அவனது குறிக்கோளை அடைவதற்கு உதவிகரமாக இருத்தல் வேண்டும். முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட கடுமையான தருணங்களின் பொழுது, அவர்களது மனைவிமார்கள் இத்தகைய செயல்பாடுகளின் மூலம் தான், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பக்கபலமாக இருந்தார்கள் எனும் பொழுது, நாமும் ஏன் இத்தகைய வழிமுறைகளைக் கடைபிடிக்கக் கூடாது.
மேலும், தன்னுடைய கணவன் இறைவனுக்கு மாறுசெய்கின்ற வழிகளில் செல்லும் பொழுது, இஸ்லாத்தின் கொள்கைகளை அவனுக்கு மிகச் சரியாக அடையாளம் காட்டி, அவனை இஸ்லாத்தின் வழியில் தடம்பதித்துச் செல்வதற்கு வழித்துணை போன்றவளாக மனைவி செயல்பட வேண்டும். அதன் மூலம் அவனை மிகச் சிறந்த இறையடியானாக உருமாற்ற வேண்டிய அரும்பணி மனைவியைச் சார்ந்ததே. இவள் அவன் நேர்வழியில் நிலைபெறுவதற்கும், வழி தவறாமல் இருப்பதற்கும் அடிக்கடி அவனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை புரிந்த வண்ணமாக இருக்கவும் வேண்டும். அதற்காக இறைவனுடைய உதவியை கேட்ட வண்ணமே இவள் இருக்க வேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் நல்லதொரு வேலையைத் தான் செய்து கொண்டிருக்கின்றோம் என்று கூறவே விரும்புகின்றோம். இதை நம்முடைய திருமணத்திலும் கடைபிடிக்க வேண்டும். நம் கணவன் செய்யக் கூடிய வாழ்வின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை நாம் மிக சிரத்தையோடு கவனித்துக் கொண்டிருக்கின்றோம் – அதைப் பற்றிய அக்கறை உள்ளவர்களாக, அவற்றைப் பாராட்டுகின்றவர்களாக நாம் இருக்கின்றோம் என்பதை, நம் கணவர்களுக்கு நாம் காண்பிக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு உணர்த்த வேண்டும். மனைவி செய்யக் கூடிய இந்தப் பணி மிக இலகுவானதல்ல. நம் கணவன்மார்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுப் புது பிரச்னைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள், அவர்கள் சந்திக்கின்ற ஒவ்வொரு பிரச்னைகளின் போது அவர்கள் எடுக்கக் கூடிய முயற்சிகள், அந்த முயற்சிகள் மூலம் தான் சந்திக்கின்ற சவால்கள் என்பது, நம் குடும்பத்திற்காக அவர் படுகின்ற அர்ப்பணிப்புகள் என்பதை நாம் கவனித்தில் கொண்டு, அவரது முயற்சியை ஊக்கப்படுத்துபவளாக, அவர் மீது அக்கறை கொண்டவளாக தன்னை எப்பொழும் அவனுக்கு அடையாளப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
ஆனால் நம்மில் பலர் அவர்கள் சந்திக்கின்ற பிரச்னைகள் பற்றி பாராமுகமாகவே இருக்கின்றோம். ஓவ்வொரு நாளும் அவர்கள் படுகின்ற அவஸ்தைகள் நம் குடும்ப முன்னேற்றத்திற்கு அவர் அளிக்கின்ற அர்ப்பணிப்புகள் என்பதை நாம் உணர்ந்து, அதற்குத் தகுந்தாற்போல் நம் கணவரை நாம் மதித்து, அவரது முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுப்பவர்களாகத் திகழ வேண்டும். அப்பொழுது தான் அவன் ஒரு மனைவியின் தேவையை உணருவான்.அப்படி உணர்ந்து விட்டால், நீங்கள் கண்ணியமானவளாக அவனது இதயத்தில் குடி கொண்டு விடுவீர்கள் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.
அவள் அழகானவளாக இருக்க வேண்டும்:
நாம் திருமணத்தின் பொழுது, நம்முடைய கணவர்களுக்கு விலை மதிக்க முடியாததொரு அன்பளிப்பாக அவர்களிடம் வந்து சேர்கின்றோம். நம்முடைய அழகு அவர்களை வசீகரப்படுத்துவதாகவும், அவர்களை உற்சாகப்படுத்துவதாகவும் இருக்கும் பொழுது தான், அவர்களது எண்ணங்கள் இன்னொருத்தியைத் தேடிப் போகாது. நம்முடைய உடலழகு தான் அவர்களுக்கும் நமக்கும் இடையே ஹலாலான – இஸ்லாத்தினால் அனுமதிக்கப்பட்ட தொடர்புகளை வலுப்படுத்தக் கூடிய குறிப்பிடத்தக்கதொரு அம்சமாக இருக்கின்றது என்பதை நாம் நம்முடைய அனுபவங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். எனவே, நாம் நம்முடைய அழகை எப்படி திருமணத்தின் பொழுது கொண்டு வந்தோமோ, அதைப் போலவே அதனை ஒரு பரிசுப்பொருளைப் பாதுகாப்பது போல நாம் பாதுகாக்க வேண்டும்.
நம்முடைய கணவன் வேலை விட்டுத் திரும்பி வரும் பொழுது, நம்மைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் கொண்டவனாக நம்மை நோக்கி வர வேண்டும் என்ற உணர்வை அவனுக்குள் நாம் ஏற்படுத்த வேண்டும். நாம் நம்முடைய சிகை அலங்காரம், உடை அலங்காரம் மற்றும் நம்முடைய தோற்றம் ஆகியவற்றை பொடுபோக்குத் தனமாக, அதனைப் பற்றி எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளாமல், நம்முடைய தோற்றம் நம் கணவர்களை திருப்தி இழக்கச் செய்யக் கூடியதாக, நம்மைப் பற்றி எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ள இயலாத நிலைக்கு நாம் தள்ளிவிடக் கூடாது. நம் கணவர்களிடம் நம்மை ஒப்படைப்பதற்கு, நாம் சிரத்தை எடுத்துக் கொள்வதோடு அதற்காக நேரத்தையும் நாம் செலவிட வேண்டும், அதன் மூலம் நம்மை நோக்கி அவர்களைக் கவர்வதற்கு சிறப்பு வழிகளையும் நாம் கடைபிடிக்கும் பொழுது, ஒவ்வொரு தடவையும் அவர்களுக்கும் நமக்கும் இருக்கும் அந்த உறவைப் புதுப்பித்துக் கொள்ளக் கூடிய உறவு மலர்கின்றது.
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“ஒரு சொர்க்கத்துப் பெண்மணியை நான் உங்களுக்குக் காண்பிக்கட்டுமா?
நான் கூறினேன். ஆம்! காட்டுங்கள்.
அவர் கூறினார்: இந்தக் கறுப்பு நிறப் பெண், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, நான் இழுப்பு நோயால் பாதிக்கப்படுகின்றேன், (அப்பொழுது) என்னுடைய உடம்பில் போர்த்தியிருக்கும் உடைகள் விலகி விடுகின்றன. எனவே, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே, தயவுசெய்து எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை புரியுங்கள் என்று கூறினாள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், நீ விரும்பினால் பொறுமையாக இரு, நீ சொர்க்கத்தில் நுழையலாம்: மேலும், நீ விரும்பினால், இறைவனிடம் உனக்காகப் பிரார்த்தனையும் செய்கின்றேன். (இதில் நீ எதை விரும்புகின்றாய்) என்று கூறினார்கள்.
அவள் கூறினாள், நான் பொறுமையாக இருந்து கொள்கின்றேன், ஆனால் உடைகள் விலகுவதனால் என்னுடைய உடம்பு வெளியே தெரிகின்றதே, ஆகையால் அதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் அதன் மூலம் என்னுடைய உடைகள் விலகாமல் இருக்குமே என்று கூறினாள்.
எனவே, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தப் பெண்மணிக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். (நூல்: புகாரி)
மேலும், நமக்கு முன் சென்ற அந்த முன்மாதிரிகள், தன்னடக்கமுள்ளவர்களாகவும், மதிப்பும் மரியாதையும் கண்ணியமிக்கவர்களாகவும், சுயமதிப்பு உடையவர்களாவும் இருந்திருக்கின்றார்கள் என்பதை நாம் கவனித்துப் பார்க்க வேண்டும். மேலும், அவர்கள் தங்களது உடலழகுகள் கணவனல்லாத பிற ஆடவர்களுக்கு வெளிப்பட்டு விடக் கூடாது என்பதில் எந்தளவு கவனமும் சிரத்தையும் எடுத்துக் கொண்டார்கள் என்பதையும், தன்னுடைய உடழகுகளை பிற ஆடவர்கள் ரசிப்பதற்கு ஏதுவாக அமைந்து விடக் கூடாது என்பதிலும் அவர்கள் எந்தளவு கவனம் செலுத்தி உள்ளார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.
என்னருமைச் சகோதரிகளே! ஊண்மையிலேயே நீங்கள் இறையச்சமிக்க பெண்மணிகளாகத் திகழ வேண்டும் என்று விரும்பினால், நமக்கு முன் சென்ற அந்த இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இருந்து நேரடியாகப் பாடம் பயின்ற அந்த நபித்தோழியர்கள் போல நாமும் நம்முடைய உடலழகைப் பேணுவதோடு, அந்த உடலழகு கணவனுக்கு மட்டுமே உரித்தானதாக இருக்க வேண்டுமே ஒழிய, பிற ஆடவர்கள் ரசிக்கத் தக்கதாக இருந்து விடக் கூடாது என்பதில், அவர்கள் செலுத்திய கவனத்தைப் போல நாமும் செலுத்த வேண்டும்.
கண்ணியம் என்பது ஈமானில் ஒரு பகுதி. இந்தக் கண்ணியம் என்பது நாம் அணிந்திருக்கக் கூடிய ஆடைகளில் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை, மாறாக, வெளிச் செல்லும் பொழுது நம்முடைய இயற்கைப் பகுதிகளை வெளிப்படுத்தாததாக நம்முடைய ஆடைகள் அமைந்திருக்க வேண்டும். நாம் உண்மையிலேயே நம்முடைய அழகு நம் கணவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற கொள்கையில் மிகவும் பிடித்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும், நாம் அதிக வெட்கமுள்ளவர்களாக இருப்பதற்கு நமக்கு நாமே பயிற்சியளித்துக் கொள்பவர்களாகவும், கண்ணியம், சுயமரியாதை கொண்டவர்களாகத் திகழ்ந்த நபித்தோழியர்களைப் போல நாமும் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்