வட்டி வங்கியில் வேலை செய்யும் பெண்ணை திருமணம் முடிக்கலாமா?
ஒரு இளைஞன் வட்டி வங்கியில் வேலை செய்யும் பெண்ணைத் திருமணம் முடிக்க விரும்புகிறான். ஆனால், அவள் தனது வேலையை விடுவதற்கு விரும்பவில்லை. இவ்வேளையில் அவன் அவளை திருமணம் பேச முடியுமா?
வட்டி வங்கியில் வேலை செய்யும் இரண்டு நிலைமைகள் காணப்படுகின்றன.
ஒன்று: அவள் இந்த வேலையைத் தான் செய்ய வேண்டும் என்ற கடுமையான நிர்ப்பந்தம் இல்லாத நிலை. இந்நிலையில் அங்கு வேலை செய்வது ஹராமாகும். ஏனெனில், ஷரீஆ ஹராமாக்கிய வட்டி வேலைக்கு உதவி செய்வதாக அமைந்து விடும். அல்குர்ஆனும் ஸுன்னாவும் இதனை ஹராமாக்கியுள்ளன. அல்லாஹ் பாவத்துக்கும் அத்துமீறலுக்கும் பரஸ்பர உதவி செய்வதை ஹராமாக்கியுள்ளான்.
“நீங்கள் பாவத்துக்கும் அத்துமீறலுக்கும் பரஸ்பரம் ஒத்துழைக்க வேண்டாம்.” (அல்குர்ஆன் 05:02)
அதேபோன்று வட்டியை சாப்பிடுபவனும் அதற்கு உதவி செய்பவனும் பின்வரும் ஹதீஸில் சபிக்கப்பட்டுள்ளனர். “அல்லாஹ் வட்டி சாப்பிடுபவனையும் அதற்கு பொறுப்பாக இருப்பவனையும் அதற்காக எழுத்து வேலை செய்பவனையும் அதற்கு சாட்சியாக இருப்பவனையும் சபித்துள்ளான்.” (ஹதீஸ்)
சகோதரனே! நீங்கள் அந்த யுவதிக்கு வட்டி வங்கிகளில் வேலை செய்வது ஹராமென்றும், அந்த வங்கிகளின் வட்டிச்செயற்பாட்டுக்கு உதவுவதாக அது அமையுமென்றும், அது பாவத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அமையு மென்றும் உபதேசிக்க வேண்டும். அவள் இந்த உபதேசத்தை ஏற்றுக்கொண்டால் அவளை நீ திருமணம் பேசு. அவள் இதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவளோடு திருமணப் பேச்சுவார்த்தையில் ஈடுபடாதே.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறுவது போல ஸாலிஹான ஒரு பெண்ணைத் திருமணம் முடித்துக்கொள். “ஒரு பெண் நான்கு விடயங்களுக்காக திருமணம் முடிக்கப்படுவாள். அவளது செல்வத்திற்காக, அவளது குடும்ப அந்தஸ்திற்காக, அவளது அழகுக்காக, அவளது மார்க்கத்திற்காக. நீ மார்க்கமுள்ள பெண்ணைத் திருமணம் முடித்துக் கொள், இல்லையேல் நீ அழிந்து விடுவாய்.”
இரண்டாவது நிலைமை: அவள் இந்த வேலையைத்தான் செய்ய வேண்டும் என்ற கடுமையான நிர்ப்பந்தம் காணப்படல். உதாரணமாக தனது வயது முதிர்ந்த பெற்றோரை இவள் மட்டுமே கவனிக்க வேண்டும் என்ற நிலை அல்லது விதவையான இவள் தனது பிள்ளைகளுக்காக உழைக்கவேண்டிய நிர்ப்பந்தம். இந்த வேலையை விட்டால் மிகப்பெரும் தீங்கு ஏற்படும் என்ற நிர்ப்பந்த நிலையில் இருத்தல்.
இந்த இரண்டாவது நிலையில் அவளது நிர்ப்பந்த நிலைக்கேற்ப அல்லாஹ்வுக்கு முன்னிலையில் விசாரிக்கப்படுவாள். அவள் இந்த வேலையைச் செய்தாலும் சம்பளம் குறைவாக இருப்பினும் வேறொரு வேலையைத் தேடிக்கொள்ள வேண்டும். அவளுக்கு நிர்ப்பந்த நிலை இல்லையென்றால் வேலையை விட்டுவிட வேண்டும். அதுவே அல்லாஹ்விடம் திருப்பொருத்தத்தை தேடித்தருவதோடு, தனது வாழ்க்கைத் துணைக்கு கட்டுப்படுவதாகவும் அமையும். சந்தோசமும், ஆறுதலும், ஸாலிஹான பிள்ளைகளும் கிடைக்க வேண்டுமென்றும் நாம் அல்லாஹ்விடம் பிராத்திக்கிறோம்.
– கலாநிதி அப்துல் ஹை பர்மாவி
source: http://www.meelparvai.net
[ குறிப்பு: ஒரு ஆண் வட்டி வங்கியில் வேலை செய்தாலும் இதே அளவுகோளே.]