M U S T R E A D
பெண்களின் வெற்றிக்கான அடிப்படைகள்:
அறிவுள்ளவளாக இருக்க வேண்டும்:
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
”முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது தூதுத்துவப் பணிக் காலத்தில், எப்பொழுதெல்லாம் இறைவசனங்கள் இறங்குகின்றனவோ, அந்த வசனத்தில் அடங்கியிருக்கும் ஹலால் மற்றும் ஹராம் போன்றவற்றையும், மற்றும் அந்த வசனங்களில் அடங்கியுள்ள ஏவல்கள் மற்றும் விலக்கல்களையும், அதன் வார்த்தைக்கு வார்த்தை சரியான அளவில் நாங்கள் மனனமிடாமல் நாங்கள் இருக்க மாட்டோம்.”
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தங்களது வார்த்தைகளால், அந்த அன்ஸாரிப் பெண்களைப் பற்றி இவ்வாறு புகழாரம்சூட்டுகின்றார்கள் : இந்த அன்ஸாரிப் பெண்கள் எவ்வளவு நல்ல பெண்கள்! அவர்களது அந்த வெட்கம் அவர்களது மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்வதில் எந்தவிதத்திலும் தடையாக இருந்ததில்லை.
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்ததன் பின்பு, உம்மு ஐமன் ரளியல்லாஹு அன்ஹா அவர்களது கண்களில் துக்கத்தால் அடிக்கடி கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருக்கும். அவரிடம் நீங்கள் ஏன் இவ்வாறு அடிக்கடி அழுகின்றீர்கள் என்று வினவிய பொழுது, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்துவிடக் கூடியவர்கள் தான் என்பது எனக்கு நன்றாகத் தெரியும், ஆனால் நான் இப்பொழுது அழுது கொண்டிருப்பது எதற்காகவெனில், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்ததன் பின்பு அவர்கள் மூலமாக ”வானிலிருந்து நமக்காக வந்து கொண்டிருந்த இறைவசனங்களும்” நின்று விட்டதே என்று தான் அழுகின்றேன் என்று கூறினார்கள்.
அபூ செய்யிதல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : சில பெண்கள் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ஆண்கள் மட்டும் அதிகமான நேரத்தை தங்களிடம் எடுத்துக் கொண்டு மார்க்கக் கல்வியைப் பெற்றுக் கொள்கின்றார்கள், எனவே பெண்களாகிய எங்களுக்கென தனியாக ஒரு நாளை ஒதுக்கி மார்க்க விளக்கம் அளித்தலைப் போதிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். எனவே, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களுக்கென ஒரு நாளை ஒதுக்கி அன்றைய தினம் பெண்களுக்கு மார்க்கக் கல்வியைப் போதித்து, இஸ்லாமிய மார்க்க சட்டம் மற்றும் கட்டளைகளைப் பற்றியும் விளக்கி வந்தார்கள். (நூல்: புகாரி).
நாம் நம்முடைய இஸ்லாமிய மார்க்கக் கல்வியை அதிகம் கற்றுக் கொள்வதற்கு அன்றாடம் நம்முடைய முயற்சிகளை அதிகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். மேலே பாருங்கள்! அந்தப் பெண்கள் இஸ்லாமிய மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்வதில் எவ்வளவு அக்கறை காட்டியவர்களாகவும், அந்த ஏகனான அல்லாஹ்வின் மார்க்கத்தைக் கற்று அவனது நற்பொருத்தத்தைப் பெற்றுக் கொள்வதற்கு எந்தளவு ஆவலாக இருந்துள்ளார்கள். அவர்கள் கல்வியைக் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டிய மாணவர்கள், மேதைகள் மற்றும் அதில் ஏற்படும் சங்கடங்களைத் தாங்கி அமைதியாக இருந்து, தங்களது மார்க்கக் கல்வியைக் கற்று அதன்படி நடப்பதில் இன்பங்கண்டவர்கள்.
அதன் மூலம் அவர்கள் அல்லாஹ்வையும், அவனது கட்டளைகளையும் அறிந்து கொண்டார்கள். அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் கீழ்ப்படிவதைத்தவிர வேறொரு இன்பம் என்பது கிடையாது என்பதையும், அவனது கட்டளைகளையும், அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது கட்டளைகளை மறுப்பது போல முடிவில்லாத துன்பத்தைப் பெற்றுத் தரக் கூடியது வேறொன்றும் இல்லை என்பதையும் அவர்கள் முழுமையாக உணர்ந்திருந்தார்கள், கீழ்ப்படிவதில் இன்பத்தைக் கண்டார்கள்.
இன்று நம்முடைய வாழ்விலே பல்வேறு அலுவல்களுக்கும் நாம் நேரம் ஒதுக்குகின்றோம். பல்வேறு அலுவல்களும் அந்தளவு நம்மைச் சூழ இருக்க அனுமதிக்கின்றோம். ஆனால் நம்முடைய மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்கு நாம் நேரம் ஒதுக்குவதில்லை. மற்ற அலுவல்களில் இதுவும் ஒரு அலுவலாக நாம் ஏற்றுக் கொண்டு, மற்ற அலுவல்களுக்கு நேரத்தைச் செலவிடுவது போன்று இதற்கும் நேரத்தைச் செலவிடுவதில்லை. இதன் காரணமாக, இறைவன் நம்மைப் படைத்ததன் காரணத்தை, அவன் நம்மைப் படைத்ததன் பின்னணியில் உள்ள அர்த்தங்களை நாம் மறந்து, நாம் படைக்கப்பட்டதன் நோக்கத்தையே நாம் மறந்து விடுகின்றோம். நமக்கும் நம் குடும்பத்தவர்களுக்கும் நம்முடைய கணவர்மார்களுக்கும் இடைப்பட்ட உரிமைகளையும், அவற்றிற்கிடையே இருக்கின்ற வேறுபாடுகளையும் மறந்தவர்களாக இல்லாமல், அதில் இருக்கின்ற தனக்குக் கிடைக்கக் கூடிய சாதகங்களை உணர்ந்து வாழ்வது ஒன்றே, இறைவனின் பிரியத்தை நமக்குப் பெற்றுக் கொடுக்கக் கூடிய வாழ்க்கையாகும்.
அவள் நேர்மையானவளாக இருக்க வேண்டும் :
“வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அவன் அறிகிறான, நீங்கள் இரகசியமாக்கி வைப்பதையும்; பகிரங்கமாக்கி வைப்பதையும் அவன் அறிகிறான், மேலும், இருதயங்களிலுள்ளவற்றை யெல்லாம் அல்லாஹ் அறிகிறான்.” (அல்குர்ஆன் 64:04)
நாம் நம்முடைய வாழ்க்கையை நேர்மையானதாக அமைத்துக் கொள்ள வேண்டியது என்பது மிகவும் அவசியமானதொன்றாகும், நாம் பொய்யானவற்றிலிருந்தும், ஏமாற்றுதல், தவறான தகவல்களைப் பெற்றுக் கொள்ளுதல் போன்றவற்றிலிருந்து விலகியே இருக்க வேண்டும். மேலே நாம் பார்த்த இத்தகைய தவறான நடத்தைகள் சில நேரம் சாதகமானவைகளை நமக்கு ஏற்படுத்தித் தரலாம், ஆனால், அதன் பக்கவிளைவுகள் நீங்கள் வாழ்நாள் முழவதும் உங்களையும், உங்களது உறவுகளையும் துண்டித்து விடக் கூடிய அபாயத்தைத் தோற்றுவித்து விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.
”ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். (அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கி வைப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார்.” (அல்குர்ஆன் 33:70-71)
பணிவுள்ளவளாக இருக்க வேண்டும் :
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”தர்மம் என்பது உங்களது சொத்தின் அளவைக் குறைத்து விடாது. அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்திற்காக யாரொருவர் மன்னிப்பைக் கைக்கொள்கின்றவராகவும் இருக்கின்றாரோ மற்றும் யாரரொருவர் பணிவையும் கைக்கொள்கின்றாரோ, அல்லாஹ் அவருடைய மதிப்பை உயர்வடையச் செய்கின்றான், அவனது தகுதியையும் உயர்த்தி விடுகின்றான்.” (நூல்: முஸ்லிம்).
தன்னடைய சொந்த திறமைகள் மற்றும் சாதனைகள் குறித்து மிகவும் பெருமைப்படக் கூடியவனாக இருக்கின்றான் என்பது, மனிதனிடம் அமைந்திருக்கக் கூடிய ஒரு இயற்கையானதொரு செயலாகும். இந்த உலகத்தில் அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கின்ற அருட்கொடைகள் குறித்த அகப் பார்வையை நாம் இழந்தவர்களாக ஆகி விடுகின்றோம். இந்த நமக்கு வாய்க்கப்பெற்ற திறமைகள் மற்றும் சாதனைகள் யாவும் இறைவன் நமக்கு வழங்கியிருக்கின்ற அருட்கொடைகள் என நினைத்து, அவை குறித்துப் பெருமை பாராட்டாமல் நாம் மிகவும் அடக்கத்துடன் பிறருடன் நடந்து கொள்ள வேண்டும்.
நம்மில் யாரும் முழுமையடைந்தவர்கள் கிடையாது. முற்றும் அனைத்துத் திறமையையும், வாய்ப்புகளையும் பெற்றவர்கள் கிடையாது. எல்லாத் திறமைகளும் நம்மிடம் கிடையாது, நாம் பெற்றிருப்பது மிகச் சிலவே என்பது பற்றி பல்வேறு சூழ்நிலைகளில் அவற்றை நாம் ஒத்துக்கொள்ள மறுத்து வருகின்றோம். யாரொருவர் அல்லாஹ்வுக்கு மிகவும் பணிந்த நிலையில் நடக்கின்றோரோ அத்தகையவர்களுக்கு இறைவன் மிகச் சிறந்த அங்கீகாரத்தை வழங்கி விடுகின்றான் மற்றும் இறைவனைத் திருப்தி கொண்டு, அவனது திருப்பொருத்தத்திற்காகவே வாழும் வாழ்க்கையை விடவும் மிகச் சிறந்த பரிசு இந்த உலகில் வேறு என்னவாக இருக்க முடியும்.
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் :
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
கண்ணியத்திற்கெல்லாம் தலைவனான அல்லாஹ் கூறுகின்றான்: ”எவர்கள் தன்னுடைய மேன்மையையும் உயர்வையும் பயந்தவர்களாக, ஒருவர் மற்றவரை விரும்பியவர்களாக நடக்கின்றார்களோ, அத்தகையவர்களுக்கு ஒளி மிகுந்த இடங்களில் ஆசனங்கள் அமைக்கப்படும், நபிமார்களும், முஜாஹிதுகளும் பொறாமை கொள்ளும் அவர்கள் (உயர்ந்த தகுதிகளில்) இருப்பார்கள்.” (நூல்: திர்மிதி).
இந்த உலகமானது ஒரு சோதனைக்களமாகும், எப்பொழுதும் நம்மை அது எந்த வழியினைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது என்பது பற்றிய தொடர் போராட்டத்திலும், எதனை நாம் நல்லதென்று தேர்ந்தெடுத்துக் கொள்வது மற்றும் நாம் அறிந்து கொண்டது சரியா என்பது பற்றிய மன ஊசலாட்டங்களிலும் இருந்து கொண்டே இருக்க வேண்டியிருக்கின்றது. சுpல சமயங்களில் நாம் அல்லாஹ் வழக்கியிருக்கின்ற அருட்கொடைகளை வழிகாட்டுதல்களைப் புறக்கணித்து விடுவதன் காரணம், அதனைப் பின்பற்றுவது என்பது மிகவும் கடினமானதொரு செயலாக நாம் எண்ணிக் கொள்வது தான் காரணமாகும். நாம் (இறைவனுக்கு மாறு செய்யக் கூடியதொரு செயலை முதன் முதலில் இப்பொழுது செய்யும் பொழுது, அது நமக்கு பாரமானதொரு செயலாக இல்லாமல், இப்பொழுது மட்டும் தானே பின் எப்பொழுதும் நாம் அவற்றை செய்து கொண்டிருக்கப் போவதில்லையே என்று தோன்றும். ஆனால், இறைவனுக்கு எந்தநிலையிலும் கட்டுப்படாத இந்தத் தன்மை காலப் போக்கில் நம்மிடையே மாற்ற முடியாததொரு, நிலையானதொரு பழக்கமாக மாறி விடும் என்பதிலும், அது நம்மை நரக நெருப்பிற்கு இட்டுச் சென்று விடும் என்றும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
மேலும், நாம் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் உற்று நோக்கியவனாக இருக்கின்றான், அவனது பார்வையில் இருந்து எதுவும் மறைந்து விடாது என்ற எண்ணம் எல்லா நேரங்களிலும் நம் இதயங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க வேண்டும். இறைவனுடைய தண்டனையில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள விரும்புகின்ற ஒரு நபர் வழிகேடுகளிலிருந்து முற்றிலுமாக எந்த நிலையிலும் தவிர்ந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அத்தகைய தண்டனைகளிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கு குர்ஆன் நெடுகிலும் மனிதனை ஊக்கப்படுத்தக் கூடிய வசனங்கள் நிறைந்து காணப்படுவதைக் காணலாம்.
தான் மேற்கொண்டிருக்கும் நேர்வழியின் காரணமாக எத்தனை துன்பங்கள் தன்னை வந்து தாக்கினாலும், அதனைப் பொருட்படுத்தாது வாழ்ந்த எத்தனையோ சத்திய சீலர்களை திருமறை நெடுகிலும் உதாரணங்களாக நமக்கு இறைவன் காட்டிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கின்றோம். அவர்களின் அத்தகைய அந்த நேர்மையான போக்கு இறைவனது திருப்பொருத்தத்தின் காரமாகவே அவ்வாறு அமைந்திருந்தது என்பதையும் நாம் காண முடிகின்றது. அவர்கள் தங்களது ஈமானைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே அத்தகைய சத்திய வழியைப் பின்பற்றி சோதனைகளைத் தாங்கினார்கள் என்பதையும் காண முடிகின்றது.
அல்லாஹ்வினுடைய கட்டளைகளை அனுதினமும் நாம் பின்பற்றி நடப்போமானால், அதற்காக இஸ்லாத்தினுடைய ஆழ்ந்த ஞானத்தைக் கற்று அவற்றை அதிகப்படுத்திக் கொள்வதற்கு இடைவிடாது உழைப்போமென்றால், நாம் எதனை விரும்புகின்றோம் அல்லது எதனை வெறுக்கின்றோம் என்ற சுயஆதிக்கத்திற்கு நம்மை இட்டுச்சென்று விடாமல், எதுவொன்றையும் இறைவனது திருப்பொருத்தத்தை மட்டும் பெற்றுக் கொள்வதற்காக நம் வாழ்வின் அனைத்து அலுவல்களையும் அமைத்துக் கொள்வதானது, இறைவனது அருட்கொடைகளை இம்மையிலும், மறுமையிலும் பெற்றுக் கொடுத்து விடுவதாக அமைந்து விடும். இதை விட சிறந்த பாக்கியம் நமக்கு வேறென்ன வேண்டும்.
அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் :
இறைவன் திருமணம் செய்து கொள்வதைக் கண்டிப்பானதொரு கடமையாக ஆக்கி இருக்கின்றான். இத்தகைய திருமண பந்தங்கள் வலுவுள்ளதாக அமைந்து விடுவதற்கு, ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தங்களுக்குத் தகுந்த துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருத்தல் வேண்டும். துரதிருஷ்டவசமாக நம்மில் பலர் திருமணத்தைப் பொருளாதார காரணங்களுக்காகவும், குடும்ப அந்தஸ்துக்காகவும், கல்வி மற்றும் அழகுக்காக ஆகிய காரணங்களை முன்னிறுத்தியே மணமகள் அல்லது மணமகனைத் தேர்வு செய்வதைப் பார்க்கின்றோம். ஆனால் நாம் முக்கியமாக கணவர்களின் தேர்வை ஒரு சந்தர்ப்ப வசமாக வாய்த்தாகக் கருதுகின்றோமே ஒழிய, நமது வருங்காலம் மிகவும் பிரகாசமாக அமைவதற்குத் தகுதியானவர் தானா, மற்றும் நம்முடைய ஈமானைத் தக்கவைத்துக் கொள்வதற்கு ஒத்துழைக்கக் கூடியவர் தானா என்பதைக் கணிக்க மறந்து விடுகின்றோம். பெண்களாகிய நாம் நமக்குரிய துணையை மணமகனைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, அவர் இறையச்சமுடையவர் தானா என்பதையும், அவருடைய ஒவ்வொரு நாளும் இறையச்சத்துடனேயே கழியக் கூடியது தானா என்பதையும் கவனத்தில் கொண்டு, மணமகனைத் தேர்வு செய்ய வேண்டும்.
மேலும் அவர் ஒரு இஸ்லாமியனாக வாழ்வதற்கு, அல்லாஹ் விதித்திருக்கும் அத்தனை வரம்புகளையும் பேணி வாழக் கூடியவர் தானா, அதற்கான தகுதிகளைப் பெற்றவர் தானா என்பதையும், தன்னுடைய இஸ்லாமிய பழக்கவழக்கங்களையும் அதற்கான முயற்சிகளையும் அதிகமதிகம் செய்யக் கூடியவர் தானா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலே கூறிய அத்தனை அடிப்படைகளையும் ஆராயும் நாம், அதுவல்லாத வேறு எதனையும் அவரைத் தேர்ந்தெடுப்பதற்குரிய தகுதிகளாகக் கொள்ளக் கூடாது.
இத்தகைய கணவன் தான் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு ஏற்புடையவனும் மற்றும் அவன் தான் உங்களுக்கு இறுதி வரை உங்கள் மனங்கவரக் கூடியவனாகவும் உங்களை சந்தோசப்படுத்தக் கூடியவனாகவும் இருப்பான். இத்தகையவன் தான் குடும்பப் பிணைப்பில் கணவன் மனைவி ஆகிய உறவுகளுக்கு இடையே உள்ள நெருக்கத்தைப் பேணி, அதன் அங்கமாகவும், ஒருவருக்கொருவர் உதவி, விட்டுக் கொடுத்து வாழக் கூடியவனாகவும், குடும்பம் எப்பொழுதும் சமநிலையுடன், ஒருவர் மற்றவரிடத்தில் சமமான அன்புடன் வாழும் பாக்கியத்தை; தரக் கூடியவானகவும் அவன் எப்பொழுதும் திகழ்வான்.
கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் :
“(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்”. (அல்குர்ஆன் 4 : 34)
அல்லாஹ் தன்னுடைய திருமறைக் குர்ஆனில் குறிப்பிட்டுக் கூறுவதைப் போல, பெண்கள் தங்கள் கணவர்களுக்கு கீழ்படிதல் உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும். மேலும், இத்தகைய அறிவுரைகள் கொண்ட வசனங்கள் மற்றும் நபிமொழிகள் ஏராளமாக இருக்கக் காண்கின்றோம். ஆனால், துரதிருஷ்டவசமாக, இந்தக் கீழ்படிதல் என்ற அறிவுரை மக்களிடம் ஒரு எதிர்மறையான உணர்வையே ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்த அறிவுரையை சில ஆண்கள் மிகத் தவறாகப் பயன்படுத்துவதையும், ஆண்கள் பெண்களை சுதந்திரமாக எல்லா வகையிலும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என்றும், பெண்களை அடிமைகள் போன்றும், பெண்களின் உணர்ச்சிகளை அவர்களது உணர்வுகளை மதிக்காத முறையிலும் நடந்து வருவதைக் காண்கின்றோம். மேலும், இறைமறையின் இந்தக் கட்டளையானது, ஒவ்வொரு சமுதாயத்திலும் உள்ள பழக்கவழக்கத்தைப் போல நம் இஸ்லாமிய சமுதாயத்திலும் உள்ளதொரு சமுதாயப் பழக்கம் என்று எண்ணி விடுகின்றனர். மேலும், இத்தகைய கட்டுப்பெட்டித் தனமான வாழ்க்கை ஒரு பிற்போக்குத் தனமானது, இது இந்தக் காலத்திற்கு உதவாது என்றும் எண்ணி விடுகின்றனர். எனவே, மிகவும் கவனமாகத் துணையைத் தேட வேண்டும்
மனைவிமார்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களது கணவன்மார்களது தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும், அதில் தமது முழு முயற்சியையும் வழங்குவதோடு, இறைவன் தடுக்கப்பட்ட வழிகளில் கணவன்மார்கள் செல்ல விடாமலும் தடுக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும், நம்முடைய எண்ணத்தில் முதலில் அல்லாஹ்வையும், அவனது மார்க்கத்தையும் மேலாகக் கருதி, நம்முடைய மணவாழ்வை ஒருவருக்கொருவர் சந்தோசத்தைப் பகிர்ந்து கொண்டு வாழக் கூடியதான அனுபவத்தைப் பெற்றுக் கொண்டு விட்டால், மணவாழ்வில் கடினமான தருணங்கள் என்பது ஏன் எழப் போகின்றது?
இறைவன் நாடினால்.. மேலும், நம்முடைய கணவன்மார்களின் குணங்கள் மற்றும் புரிந்துணர்வின்மை என்பது திடீரென மாற்றத்தை நோக்கிச் செல்லுமானால், அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்திற்காக வேண்டி, அதனைச் சகித்து வாழ்வதன் காரணமாக இறைவனுடைய திருப்பொருத்தம் மட்டுமல்ல, நம்முடைய கணவருக்கு நம்மைப் புரிந்து கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தையும் நாம் வழங்குகின்றோம். அந்தப் புரிந்துணர்வு ஒரு முறை ஏற்பட்டு விட்டதென்றால், பின்பு எந்நாளும் உங்கள் வாழ்வில் சந்தோசமே!! ஊடலில்லாமல் வாழ்வு ஏது, ஊடலுக்குப் பின் தானே உறவுகள் இறுக்கம் பெறுகின்றன என்பது நடைமுறை உண்மை தானே.
அவள் மன்னிப்பை கைக் கொள்கின்றவளாக இருக்க வேண்டும் :
நம்மில் யாரும் தூய்மையானவர்கள் இல்லையே, எனவே, நாம் ஒவ்வொருவரும் தவறு செய்யக் கூடியவர்களே என எண்ணி, நாம் தவறு செய்யும் பொழுது எப்படி மன்னிக்கப்படுகின்றோமோ அது போல பிறர் தவறு செய்யும் பொழுதும், நாம் மன்னிப்பை வழங்க வேண்டும். கணவன் மனைவி ஆகியோருக்கிடையே கருத்து வேறுபாடுகள் எழும் பொழுது, ஒருவர் மற்றவர் கருத்தைக் கூறுவதற்கு உரிமை படைத்தவர், சுதந்திரம் பெற்றவர் என்ற கருத்து இருவரிடமும் மேலோங்க வேண்டும்.
நாம் வாழக் கூடிய இந்த வாழ்க்கையின் பரந்த தருணங்களில், நம்முடைய வாழ்வில் ஏற்படுகின்ற பல்வேறு முரண்பாடுகளை நாம் மீண்டும் சில ஆண்டுகள் கழித்து அவற்றை நினைவுபடுத்திக் கூடப் பார்க்க மாட்டோம். ஓரு குடும்பத்தின் மழலைகளை வளர்த்தெடுப்பதற்காக வேண்டியும், வாழ்வில் ஏற்படும் பல்வேறு சிக்கல்களை எதிர்;த்துப் போராடி அவற்றைத் தீர்ப்பதற்கும் தம்பதிகள் தங்களுக்கிடையே பந்தத்தையும், உறவையும் பிரிக்க முடியாத அளவில் இறுக்கமானதாக ஆக்கிக் கொள்வது அவசியமாகும்.
ஓரு உன்னதமான உறவின் அடையாளம் எதுவென்றால், தவறு செய்தது நானா அல்லது நீயா என்ற போட்டிகள் இல்லாமல், நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழக் கூடியவர்கள், நம்முடைய எஞ்சிய வாழ்நாட்களை ஒருவர் மற்றவருடன் தான் கழிக்கப் போகின்றோம் என்ற நினைப்பு மேலோங்கி, தவறு செய்தவர் யார் என்ற ஆராய்ச்சியை நடத்தாமல், தாமே வலிய வந்து ஒருவர் செய்த தவறை மற்றவர் மன்னிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
அல்லாஹ் இத்தகைய வாழ்வியல் உதாரணங்கள் பலவற்றை நமக்கு உதாரணங்களாகக் காட்டியே வந்திருக்கின்றான், மன்னிப்பு வழங்கும் தன்மை என்பது அவனது அருட்கொடையில் ஒன்றாகவும் இருக்கின்றது. நீங்கள் விரும்புகின்றவர்களின் மீது மன்னிப்பைக் கைக்கொள்வதற்கு, உங்களது இதயத்தை எப்பொழுதுமே மிருதுவாகவே வைத்திருங்கள், அதுவே சந்தோசமான வாழ்க்கைக்கு அடித்தளமுமாகும்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்