வெற்றிகரமான குடும்பத்தலைவிக்குரிய அழகு சாதனங்கள் (1)
“மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;;;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.” (அல்குர்ஆன் 04:01)
இறைவன் தன்னுடைய திருமறை நெடுகிலும் இந்த முஸ்லிம் சமுதாயத்தைப் பார்த்து, ஓ! இறைநம்பிக்கை கொண்டவர்களே! என்று விளித்துப் பேசுவதைப் பார்க்கலாம். இறைவன் நிர்ணயித்துள்ள வரம்புகளின் மீது நம்முடைய முழு கவனத்தையும் செலுத்தினோமென்றால், அந்த வரம்புகளின் இறுதி முடிவு வெற்றியை அடித்தளமாகக் கொண்டிருப்பதைக் காணலாம். அவனது அந்த கருணையின் அடிப்படையில் தான் நாம் இன்று ஒரு வெற்றிகரமான சமுதாயத்தின் சொந்தக்காரர்களாக, இறைநம்பிக்கை கொண்டவர்களாக இருந்து கொண்டிருக்கின்றோம்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இறைவன் விதித்திருக்கின்ற அந்த வரம்புகளின் மீது நம்முடைய சொந்த விருப்பு வெறுப்புகளைத் திணித்தோமானால், இறைவனுடைய அந்த வரம்புகள் பாழ்பட்டு விடுவதோடு, நம்முடைய வெற்றியும் அதனுடன் சேர்த்தே பாழ்பட்டு விடும். இறைவன் நம்மைப் பாதுகாப்பானாக!
மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸ_லுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 33:36).
இறைநம்பிக்கை கொண்ட குடும்பத்தலைவிகளுக்கோர் உதாரணங்கள்:
மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் ”இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக”” என்று (பிரார்த்தித்துக்) கூறினார். மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார்; நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் – (ஏற்றுக் கொண்டார்). இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார். (அல்குர்ஆன் 66:12)
உஹதுப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இறைநிராகரிப்பாளர்கள் அண்ணல் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் அவரை நெருங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ, மிகச் சிறிய இறைநம்பிக்கையாளர் குழுவுடன் அந்த இறைநிராகரிப்பாளர்களை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய இறைநம்பிக்கையாளர்களின் குழுவில் இருந்தவர்களில், நஸீபா உம்மு இமாரா அல் அன்ஸாரிய்யா ரளியல்லாஹு அன்ஹா என்ற நபித்தோழியும் ஒருவர்.
அன்றைய போர்களின் பொழுது, காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும், அவர்களுக்கு தண்ணீர் அளிப்பதும் தான் பெண்களின் வேலையாக இருந்தது. நம்முடைய உம்மு இமாரா அவர்களோ, இந்தப் பணியை விட்டு விட்டு, இக்கட்டான அந்தச் சூழ்நிலையில் தன்னுடைய வாளை எடுத்துக் கொண்டு போரிட்டுக் கொண்டும், தன்னுடைய அம்பைக் கொண்டு எதிரிகளை துவம்சம் செய்து கொண்டுமிருந்தார். காரணம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் காப்பதற்கு மிகச் சிலரே அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். எனவே, நம்முடைய உம்மு இமாரா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் காப்பதற்காக போரில் இறங்கி விட்டார்கள்.
இந்தப் போரில் இவரின் கணவரும், மகனும் கூட கலந்து கொண்டு இஸ்லாத்தின் எதிரிகளைத் துவம்சம் செய்து கொண்டிருந்தார்கள். போர்; நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த சமயத்தில், எதிரிகளின் தாக்குதல் காரணமாக, மிகப் பலமான காயமொன்றை உம்மு இமாரா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைத் தாக்கியது, வேதனைப்படுத்தியது. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி, யா ராசூலுல்லாஹ்! நானும் என்னுடைய குடும்பத்தார்களும் மறுமையில் தங்களுடன் சொர்க்கத்தில் இருப்பதற்காக துஆச் செய்யுங்கள் என்று கூறினார்கள்.
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவ்வாறே துஆச் செய்ய, அதைக் கேட்ட உம்மு இமாரா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், இனி இந்த உலகத்தில் எந்த நல்லதும், எந்தக் கெட்டதும் என்னை அணுகினாலும் அதைப் பற்றி நான் இனிக் கவலைப்பட மாட்டேன் என்று கூறி விட்டு, எதிரிகளை எதிர்க்க களம் புகந்து விட்டார்கள். எதுவரைஎனில், எதிரிகளை எதிர்த்து எதிர்த்து, அவர்களது உடலில் 12 இடங்களில் காயம்பட்டது. இதைப் பற்றி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நான் என்னுடைய வலது பக்கமோ, அல்லது இடது பக்கமோ திரும்பும் பொழுதெல்லாம், அங்கு உம்மு இமாரா அவர்கள் இல்லாமல் இருந்ததில்லை, என்னைக் காப்பதற்காக அவ்வளவு வீரத்துடன் சுற்றிச் சுழன்று போரிட்டுக் கொண்டிருந்தார்கள் என்று கூறினார்கள்.
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிவாசலில் நுழைகின்றார்கள். அந்தப் பள்ளியை இரண்டாகப் பிரித்து விடக் கூடிய அளவுக்கு ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்த முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், எந்த காரணத்திற்காக இந்தக் கயிறு கட்டப்பட்டிருக்கின்றது எனக் கேட்டார்கள். உங்களது மனைவி ஜைனப் (ரளியல்லாஹு அன்ஹா) அவர்கள் இரவுத் தொழுகையின் பொழுது, களைப்படைந்து விட்டால் நின்று கொண்டு, இந்தக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு தொழுவதற்காக இதைக் கட்டியிருக்கின்றார்கள் என்று பதில் கூறப்பட்டது. அதைக் அவிழ்த்து விடுங்கள், உங்களில் யாரேனும் தொழ நாடினால், அவரால் இயலும் வரையிலும் அவர் நின்று கொண்டு தொழட்டும், அவருக்கு இயலவில்லை எனில் அவர் ஓய்வெடுத்துக் கொள்ளட்டும் என்று முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்).
ஒரு முறை அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு பரிசுப் பொருளாக ஒரு லட்சம் திர்ஹம் கிடைத்தது. அந்தப் பரிசுப் பொருள் கிடைத்த அன்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். மேலும் அந்த நேரத்தில் அவரது வீட்டில் அடுத்த வேளைக்குச் சமைப்பதற்கு எந்தப் பொருளும் இல்லாத நிலையில், தனக்குக் கிடைத்த அந்தப் பரிசுப் பொருளை அனைத்தையும் அப்படியே தானம் செய்து விட்டார்கள். சிறிது நேரம் கழித்து வந்த அவரது வேலைக்காரப் பெண் கூறினாள் : உங்களது நோன்பை திறப்பதற்கு இறைச்சி வாங்குவதற்காகவாவது ஒரு திர்ஹத்தை நீங்கள் மீதப்படுத்தி வைத்திருக்கலாமே என்று வினவிய பொழுது, எனக்கு வீட்டில் எதுவுமே இல்லை என்பது ஞாபகம் இருந்திருக்கும்பட்சத்தில், அவ்வாறு தான் செய்திருப்பேன் என்று கூறினார்களாம்.
இங்கே நாம் இறைநம்பிக்கையாளர்கள் பின்பற்ற வேண்டிய சில முன்மாதிரிமிக்கவர்களைப் பற்றிக் கூறினோம். என்னருமைச் சகோதரிகளே! நாம் நம்முடைய நடத்தையிலே இறைநம்பிக்கை கொண்டவர்களாக இல்லை எனில், நம்முடைய குடும்பத்திற்கும் நம்முடைய கணவர்களுக்கும் நாம் எவ்வாறு நன்மையான காரியங்களை எடுத்துச் சொல்ல முடியும்? ஒரு பாத்திரத்தில் என்ன இருக்கின்றதோ அதைத் தான் அதிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். அதைத் தவிர்த்து வேறு எதையாவது பெற்றுக் கொள்ள முடியுமா? சட்டியில் உள்ளது தானே அகப்பையில் வரும்!
இறைநம்பிக்கை கொண்டவர்கள் எப்பொழுதுமே தங்களது கணவருக்கும், பிள்ளைகளுக்கும் இறைவனுக்குப் பயந்து வாழக் கூடிய வாழ்க்கையையே தேர்ந்தெடுப்பார்கள். ஏனென்றால், உண்மையாளர்கள் எப்பொழுதுமே தங்களது இறைவனுக்குப் பயந்த வாழ்க்கையையே தேர்ந்தெடுப்பார்கள். அதனால் எவ்வளவு நட்டம் வந்த போதிலும்!
இஸ்லாத்தின் அந்தக் கடினமான தருணங்களில், உம்மு இமாரா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் எவ்வளவு தீரத்துடன் போரிட்டடார்கள் என்பது மட்டுமல்ல, அவருடைய அந்த உண்மையான அர்ப்பணிப்பின் மூலம் தான், அந்த வாசகமும் அவரிடமிருந்து வெளிப்பட்டது, சொர்க்கச் சோலைகளில் என்னுடைய குடும்பத்துடன் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருப்பதற்காக, இந்த உலகத்தில் எந்த விலையையேனும் நான் தரத் தயாராகி விட்டேன் என்று கூறியதை நாம் பார்க்கின்றோம்.
அதே போல, தனக்குக் கிடைத்த அந்தப் பரிசுப் பொருட்களை வைத்து தன்னுடைய வாழ்வை வளமாக்கிக் கொள்ள வழிதேடாமல், தன்னுடைய அடுத்த வேளை உணவுக்கு என்ன இருக்கின்றது என்பதைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல், செல்வம் என்பது இறைவனின் அமானிதம், அதைப் பற்றி நாம் மறுமையில் கணக்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம் என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நினைத்த காரணத்தினால் தான், தனக்குக் கிடைத்த அந்தப் பெருந்தொகையை சற்றும் தாமதிக்காமல் விரைந்து அதைத் தானம் செய்து விட்டதைப் பார்க்கின்றோம்.
அடுத்து, அந்தப் பெண்கள் இறைவனுக்கு செய்யக் கூடிய கடமைகளில் முதன்மையானதாக உள்ள அந்த இறைவணக்கம் – தொழுகையை நிறைவேற்றவும், இன்னும் இரவுத் தொழுகைகள் மூலம் அதிகப்படியான இறைஉவப்பைப் பெற்றுக் கொள்ளவும், தங்களால் இயலாத நிலையிலும் எந்தளவு அர்ப்பணத்துடன் நடந்திருக்கின்றார்கள் என்றும் பார்க்கும் பொழுது நம் மேனி சிலிர்க்கின்றது.
இன்று நாம் விட்டில் பூச்சிகள் போல் மின்னி மறையக் கூடிய நட்சத்திரங்களை, மேக்அப் நாயகிகளை அல்லவா நம்முடைய முன்மாதிரிகளாக எடுத்துக் கொண்டிருக்கின்றோம். சகோதரிகளே இந்தநிலை மாற வேண்டும். நாம் நம்முடைய முன்மாதிரிகளாக அந்த ஸஹாபியப் பெண்மணிகளைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்;. தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (அல்குர்ஆன் 66:6)
கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்