Dr. K.V.S. ஹபீப் முஹம்மது
[ மனிதன் யார்? எதற்காகப் படைக்கப்பட்டான்? இந்தக் கேள்விக்கு சரியான பதிலைத் தருவதற்கு தகுதிபடைத்தவன் ஒருவன் இருக்கிறானென்றால், அது அவனைப் படைத்த இறைவன் மட்டுமே! இதற்கான பதிலைத் தரும் ஞானம் படைத்தவனும் அவன் ஒருவனே!
ஒரு பொருளைக் கண்டுபிடித்தவன்தான் அதற்கான காரணத்தையும் அதனைப் பயன்படுத்தும் வகையையும் சொல்ல இயலும். படைத்தவனின் பதிலே சரியான சரியானதாக இருக்க முடியும். சூழ்நிலைகளின் தாக்கத்தாலும், யூகம், கற்பனை ஆகியவற்றின் அடிப்படையிலும் முடிவு எடுக்கின்ற மனிதனால் இக்கேள்விகளுக்கு முறையான பதிலைத் தர இயலாது.]
நான் ஏன் பிறந்தேன்?
நாம் ஏன் பிறந்தோம்? மனிதர்களை நீண்ட காலமாகவே உலுக்கி வருகின்ற கேள்வி இது. இதற்கு விடை காண முயன்றவர் பலர். தவறான விடைகளையே கண்டனர் சிலர்.pலரோ விடைகாணும் முயற்சியில் தம்மையும் குழப்பிக் கொண்டு பிறரையும் குழப்பினர். ஆனால், அந்த வினாக்களுக்கு விடை கண்டே ஆக வேண்டும். இல்லையே வாழ்வே பொருளற்றதாகிவிடும்.
ஒரு இயந்திரத்தை வாங்குவதாக வைத்துக் கொள்வோம். அது என்ன இயந்திரம்? அதன் பயன் என்ன? அதனை எப்படி இயக்க வேண்டும்? அதில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்வது எப்படி? ஆகியவற்றைக் குறித்து அறிந்து கொள்ளாமல் வாங்கினால், அந்த இயந்திரம் பயனுள்ளதாக இருக்குமா என்ன? வீட்டின் ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கும் அல்லது சரியான முறையில் பயன்படுத்தப்படாமல் பழுதாகி பழைய சரக்குக் கடையில் போய்ச் சேரும். அதைப் போலவேதான் மனித வாழ்வும்!
படைப்பின் நோக்கத்தை அறியாத, வாழ்வின் லட்சியத்தை உணராத மனிதனின் வாழ்வும் பழுதுபட்டதாகவே அமைந்திருக்கும்.
மனிதன் யார்? எதற்காகப் படைக்கப்பட்டான்? இந்தக் கேள்விக்கு சரியான பதிலைத் தருவதற்கு தகுதிபடைத்தவன் ஒருவன் இருக்கிறானென்றால், அது அவனைப் படைத்த இறைவன் மட்டுமே! இதற்கான பதிலைத் தரும் ஞானம் படைத்தவனும் அவன் ஒருவனே!
ஒரு பொருளைக் கண்டுபிடித்தவன்தான் அதற்கான காரணத்தையும் அதனைப் பயன்படுத்தும் வகையையும் சொல்ல இயலும். படைத்தவனின் பதிலே சரியான சரியானதாக இருக்க முடியும். சூழ்நிலைகளின் தாக்கத்தாலும், யூகம், கற்பனை ஆகியவற்றின் அடிப்படையிலும் முடிவு எடுக்கின்ற மனிதனால் இக்கேள்விகளுக்கு முறையான பதிலைத் தர இயலாது.
‘உலகம் உனக்காக, நீ எனக்காக!’ என்று கூறுகின்றான் இறைவன். இந்த உலகிலுள்ள பொருள்கள் யாவும் மனிதனின் நன்மைக்காகப் படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மனிதனோ, இறைவனுக்காகப் படைக்கப்பட்டிருக்கிறான். இறைவனை வணங்கி அவனுக்கு அடிபணிந்து வாழ்வதற்காகவே மனிதன் படைக்கப் பட்டிருக்கின்றான். இறைவனுக்கு அடிபணிந்து வாழ்ந்து, நற்செயல்களில் ஈடுபடுகின்றானா என்பதை சோதித்துப் பார்க்கவே மனிதனை இவ்வுலகிற்கு அனுப்பியதாக திருமறை வசனங்கள் கூறுகின்றன.
“அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்…” (அல்குர்ஆன் 2:22)
“இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்க(ள் நலன்க)ளுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்…” (அல்குர்ஆன் 16: 12)
“இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.” (அல்குர்ஆன் 51:56)
“உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்…” (அல்குர்ஆன் 67: 2)
இறைவன் நமக்கு அருளிய அருட்கொடைகளை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு அவனுக்கு அடிபணிவதே – இபாதத் செய்வதே மனிதனின் தலையாய கடமையாகும். மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கமும் இதுவே!
மனிதன் என்பவன் இறைவனின் பிரதிநிதி – கலீஃபா ஆவான். அடிப்படையில் ஒரு பிரதிநிதியின் பணி; தனது எஜமானனின் கட்டளைகளைச் செம்மையாக நிறைவேற்றுவதே! மனித எஜமானனின் உத்தரவுகளை நிறைவேற்றினால் அந்த எஜமானனுக்குத்தான் இலாபம் கிட்டும். ஆனால், இறைவன் எனும் மாபெரும் எஜமானனின் கட்டளைகளை அவனால் படைக்கப்பட்ட – அவனது பிரதிநிதியான மனிதன் நிறைவேற்றும்போது அவனுக்குத்தான் இலாபம் கிட்டும். அந்த ஏக இறைவனுக்கு அடிபணிவதால் இம்மையில் மகிழ்ச்சியும் அமைதியும் கிட்டும். மறுமையில் சுவனம் கிடைக்கும்.
‘இபாதத்’ :
இனி, ‘இபாதத்’ என்றால் என்ன? என்பதை புரிந்து கொள்வது அவசியாகிறது. ‘இபாதத்’ பற்றிய ஒரு தெளிவான கண்ணோட்டம் இல்லையென்றால் மீண்டும் குழப்ப நிலைக்கே செல்ல நேரிடும்.
‘இபாதத்’ எனும் சொல் ‘அப்த்’ எனும் சொல்லிலிருந்து பிறந்தது. ‘அப்த்’ என்றால் அடிமை என்று பொருள். ஓர் அடிமை எஜமானனிடம் எவ்வாறு நடந்து கொள்வானோ, அவ்வாறு நடந்து கொள்வதற்குப் பெயரே ‘இபாதத்’.
‘இபாதத்’ என்பதற்கு ‘வணங்குதல்’ – ‘கீழ்ப்படிதல்’ என்றும் பொருள் கொள்ளலாம்.
வணக்கம்:
படைத்தவனை மட்டுமே வணங்க வேண்டும். படைப்புகளை வணங்குதல் கூடாது. படைத்தவனுக்கு மட்டுமே சிரம் பணிய வேண்டும். அவன் முன்பாக மட்டுமே கரமேந்தி இறைஞ்சுதல் வேண்டும். வணக்கங்களும், வழிபாடுகளும் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே செயல்பட வேண்டும்.
கீழ்ப்படிதல்:
இறைவனை வணங்குவதோடு மட்டுமின்றி, இறைக்கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும். இறைவன் ஏவிய செயல்களைச் செய்வதும், அவனால் விலக்கப்பட்ட செயல்களிலிருந்து விலகியிருப்பதும் இறைக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதாகும். சுருங்கக் கூறினால், இறைவழி காட்டுதலுக்கு ஏற்ப வாழ்வை அமைத்துக் கொள்வதாகும்.
‘இபாதத்’ என்பதை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
1. இறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள்.
2. படைப்புகளுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள்.
தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், துஆ, பாவமன்னிப்பு கோருதல், திக்ர் ஆகியன இறைவனுக்கு மனிதன் ஆற்ற வேண்டிய கடமைகளாகும்.
இவை இபாதத் – அடிபணிதலில் முதலிடத்தை வகிப்பவை.
மனிதர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் இபாதத்தின் இரண்டாவது வகை கடமைகளாகும். பெற்றோர், பிள்ளைகள், உறவினர்கள், அண்டை வீட்டார், நலிவுற்றோர், நோயாளிகள், தொழிலாளிகள் என பல பிரிவினர்க்கும் ஆற்ற வேண்டிய கடமைகள் இவ்வகையைச் சேர்ந்தவையாகும்.
இது தவிர, ஆகுமான வழிகளில் பொருள் ஈட்டுதலும், இல்லற வாழ்வில் ஈடுபடுவதும், ஆட்சி அதிகாரங்களில் பங்கு கொள்வதும் ‘இபாதத்’ ஆகும்.
‘ஒவ்வொரு நற்செயலும் ஓர் அறமே!’ (நூல்: புகாரி, முஸ்லிம்)
ஒருவருக்கு வாகனத்தை கொடுத்து உதவுவதும், வாகனத்தில் ஏற உதவுவதும், சரக்ககளை வாகனத்தில் ஏற்ற உதவுவதும் ஓர் அறமே! ஒரு நற்சொல் மொழிவதும் அறமே! தொழுகையை நோக்கி எடுத்து வைக்கப்படும் ஒவ்வோர் அடியும் அறமே!
‘பாதைகளில் கிடக்கும் தொல்லை தரும் பொருட்களை அப்புறப்படுத்துவதும் அறமே!’ (நூல்: புகாரி, முஸ்லிம்)
‘மிகச்சிறிய நற்செயலையும் அற்பமாகக் கருதாதீர்கள். உங்கள் சகோதரர்களை புன்முறுவலுடன் சந்திப்பதும் ஓர் அறமே!’ (நூல்: முஸ்லிம்)
‘இறைதிருப்தியைப் பெறும் நோக்குடன் மனிதன் தன் குடும்பத்தாருக்கு செலவிடுவதையும் ஓர் அறச்செயலாகவே இறைவன் காண்கின்றான்.’ (நூல்: புகாரி: முஸ்லிம்)
“ற்செயல் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்;. இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்). (அல்குர்ஆன் 2: 177)
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:
திருமணம் எனது சுன்னத் – வழிமுறை. திருமணம் ஈமான் – இறைநம்பிக்கையின் ஒரு பகுதி. மனைவியின் வாயில் ஒரு கவளம் உணவு ஊட்டுவதும் ஓர் அறமே!
தனக்காகவும், தனது குடும்பத்தினருக்காகவும் உழைப்பது, இறை பாதையில் உழைப்பதைப் போன்றது!
மறுமையில் அர்ஷின் நிழல் வழங்கப்படும் எழுவரில் ஒருவர் நீதிமிக்க ஆட்சியாளர்.
எனவே, ஒரு முஸ்லிம் தனது வாழ்வு முழுவதையும் ஒரு வணக்கமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். வழிபாட்டு விஷயங்களில் மட்டும் இறைக்கட்டளைளக்குக் கீழ்ப்படிதல்; சமூக, அரசியல், பொருளாதாரத் துறைகளில் தம் இச்சைப்படி நடந்து கொள்ளுதல் என்பது குறையுடைய ‘இபாதத்’ ஆகும்.
‘இறைவேதத்தின் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்டு இன்னொரு பகுதியை நிராகரிக்கின்றீர்களா?’ என்று தனது திருமறையில் கேட்கின்றான் இறைவன்.
வணக்கங்களில் இறைக்கட்டளைக்குக் கீழ்ப்படிந்து கொண்டு, அதே சமயம் ஒழுக்க மாண்புகளை மீறுதல் என்பது நயவஞ்சகச் செயலாகும்.
‘நயவஞ்சகர்களிடத்தில் மூன்று குணங்கள் உண்டு. அவன் பேசினால் பொய்யே பேசுவான், வாக்குறுதியை மீறுவான். அமானத்தை (அடைக்கலப்பொருட்களை) விழுங்குவான். எனினும் தொழுகின்றான், நோன்பிருக்கின்றான். தன்னை ஒரு முஸ்லிம் என்றும் அழைத்துக் கொண்டிருக்கின்றான்.’ (நூல்: புகாரி)
‘இபாதத்’ பற்றிய இந்த விளக்கத்தின் ஒளியில் இன்றைய முஸ்லிம்களின் நிலையைப் பாருங்கள்:
முஸ்லிம்களில் பலரும் பெயரளவில் முஸ்லிம்களாக உள்ளனர். வெள்ளிக்கிழமைத் தொழுகை, சில சடங்குகள், சம்பிரதாயங்கள் இவற்றோடு இவர்களுடைய இஸ்லாம் முடிந்துவிடுகின்றது.
வணக்கங்களில் முழு ஈடுபாடு உண்டு. ஆனால், ஹலால் – ஆகுமானது, ஹராம் – விலக்கப்பட்டது பற்றி அக்கறையற்றவர்களாக வாழ்கின்றனர் சிலர். ஆனால், ரமளானில் மட்டும் தொழுவார்கள்.
தடைசெய்யப்பட்ட செயல்களை விட்டுவிடுவதிலும் பாரபட்சம் காட்டுவோர் உண்டு! மது அருந்த மாட்டார்கள், பன்றி இறைச்சி உண்ண மாட்டார்கள். ஆனால், வட்டி, வரதட்சணை, இலஞ்சம் ஆகியன இவர்களுக்குத் தவறாகத் தெரிவதில்லை.
இத்தகைய குளறுபடிகள் உருவானதற்குக் காரணம் ‘இபாதத்’ பற்றிய சரியான கண்ணோட்டம் இல்லாமல் போனதே ஆகும். இத்தகையோரை நோக்கி இறைவன் கூறுகின்றான்:
“இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்;. தவிர ஷைத்தானுடைய அடிச்சவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்;. நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்.
தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் சருகிவிடுவீர்களானால்- நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன்;, பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அல்லாஹ்வும், (அவனுடைய) மலக்குகளும் மேக நிழல்களின் வழியாக (தண்டனையை)க் கொண்டு வந்து, (அவர்களுடைய) காரியத்தைத் தீர்த்து வைத்தல் வேண்டும் என்பதைத் தவிர (வேறு எதனையும் ஷைத்தானின் அடிச் சுவட்டைப் பின்பற்றுவோர்) எதிர் பார்க்கிறார்களா? (மறுமையில்) அவர்களுடைய சகல காரியங்களும் அல்லாஹ்விடமே (அவன் தீர்ப்புக்குக்)கொண்டு வரப்படும். (திருக்குர்ஆன் 2: 208 – 210)
– சிந்தனை சரம் மார்ச் 2000