01. பாங்கு சொல்வதைக் கேட்கும் போதும், பாங்கு துஆக்களை ஓதும் போதும், உளூச் செய்யும் போதும், குர்ஆன் ஓதும் போதும் பெண்கள் தலையில் துணி அணிவது கடமையா?
02. முஸ்லிம் பெண்களில் அதிகமானவர்கள் சேலை அணிகிறார்கள். இவ்வாறு சேலை அணிவதால் தன்னையும் அறியாமல் இடுப்புப் பகுதி வெளியில் தெரிகிறது. இதனால் மறுமையில் தண்டனை உண்டா?
03. நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள் என்ற (64:14) வசனத்தில் மனைவி, மக்கள் கூட நமக்கு எதிரிகளாகக் கூறப்பட்டுள்ளதே! இதன் விளக்கம் என்ன?
04. என் கணவர் திடீரென்று முத்தலாக் கொடுத்துவிட்டதாகச் சொல்லி விட்டார். என் கணவர் தலாக் விட்டு ஏழு மாதங்கள் ஆகின்றது. என் வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். இது சரியா?
05. இணை வைக்கும் பெண்களைத் திருமணம் செய்ய திருக்குர்ஆன் தடை செய்கிறது. தற்போது தர்ஹா வழிபாடுகளில் ஈடுபடும் பெண்களை திருமணம் செய்யக் கூடாதா?
06. மணமக்களை அழைத்து விருந்து கொடுக்கலாமா? அதில் நாம் கலந்து கொள்ளலாமா?
01. பாங்கு சொல்வதைக் கேட்கும் போதும், பாங்கு துஆக்களை ஓதும் போதும், உளூச் செய்யும் போதும், குர்ஆன் ஓதும் போதும் பெண்கள் தலையில் துணி அணிவது கடமையா?
பதில் : அந்நிய ஆண்களுக்கு முன்னால் முகம், முன் கைகள் தவிர மற்ற உறுப்புகளை மறைக்க வேண்டும் என்று மார்க்கம் கூறுகின்றது. பாங்குக்காகவோ அல்லது உளூ, குர்ஆன் ஓதுதல் போன்ற செயல்களுக்காகவோ பெண்கள் தலையை மறைக்க வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தராத நடைமுறைகள், நிபந்தனைகள் நமது சமுதாயத்தில் குறிப்பாக தமிழக முஸ்லிம்களிடம் வேரூன்றிப் போயுள்ளன. அவற்றில் இதுவும் ஒன்று!
எந்த அளவுக்கென்றால் அந்நிய ஆண்களுக்கு முன்னால் மறைக்க வேண்டிய பகுதிகளை மறைக்காமல் சர்வ சாதாரணமாகக் காட்சி தரும் பெண்கள் கூட பாங்கு சொல்லும் போது தலையில் மட்டும் துணியைப் போட்டுக் கொள்கின்றனர்.
சில இடங்களில் பாங்கு சொல்லப்படும் போது பெண்கள் சிறிய துண்டுப் பேப்பர் அல்லது வேறு ஏதேனும் குச்சியை எடுத்துத் தலையில் வைத்துக் கொள்கின்றனர். மார்க்கத்தைப் பற்றிய அறியாமையே இதற்குக் காரணம்.
02. கேள்வி : முஸ்லிம் பெண்களில் அதிகமானவர்கள் சேலை அணிகிறார்கள். இவ்வாறு சேலை அணிவதால் தன்னையும் அறியாமல் இடுப்புப் பகுதி வெளியில் தெரிகிறது. இதனால் மறுமையில் தண்டனை உண்டா?
பதில் : முகம் மற்றும் முன் கைகள் ஆகிய பகுதிகளைத் தவிர பெண்கள் தங்கள் உடல் பகுதி அனைத்னையும் அன்னிய ஆண்கள் முன்னால் கண்டிப்பாக மறைத்தே ஆக வேண்டும். சேலை உள்ளிட்ட எந்த ஆடையாக இருந்தாலும் அதை அணிந்தால் உடல் பகுதிகள் வெளியே தெரியும் என்றால் அந்த ஆடையை அணிந்து அன்னிய ஆண்கள் முன்னால் காட்சி தரக் கூடாது.
தன்னையும் அறியாமல் இடுப்பு வெளியில் தெரிந்தால் தண்டனை உண்டா? என்று கேட்டுள்ளீர்கள். இந்த ஆடை அணிந்தால் அதில் இன்னின்ன பகுதிகள் வெளியில் தெரியும் என்பது அறியாத விஷயமல்ல. எனவே அறியாமல் செய்யும் தவறு என்று இதை எடுத்துக் கொள்ள முடியாது. எனவே உடல் பகுதிகள் வெளியில் தெரியும் வகையில் அமைந்துள்ள சேலையை அணிந்து அன்னிய ஆடவர் முன்னால் வரக் கூடாது.
இது போன்று ஆடை அணிந்தும், அணியாத நிலையைக் கொண்ட பெண்களை நரகவாசிகள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 3971)
03. கேள்வி : நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள் என்ற (64:14) வசனத்தில் மனைவி, மக்கள் கூட நமக்கு எதிரிகளாகக் கூறப்பட்டுள்ளதே! இதன் விளக்கம் என்ன?
பதில் : நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் பொருட்படுத்தாது அலட்சியம் செய்து மன்னித்தால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 64:14)
ஒரு நபித்தோழர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட போது அவரது மனைவி, மக்கள் அவரைத் தடுத்ததாகவும், அதைக் குறிப்பிட்டே இந்த வசனம் அருளப்பட்டதாகவும் திர்மிதி என்ற நூலில் ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. ஆனால் அது பலவீனமான ஹதீஸாகும்.
இறை நினைவில் ஈடுபடுவதை விட்டும் தடுப்பதில் மனைவி, மக்கள், செல்வம் போன்ற அருட்கொடைகள் முன்னிலை வகிக்கின்றன. எனவே தான் இவற்றைச் சோதனை என்று மேற்கண்ட வசனத்திற்கு அடுத்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
உங்கள் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும், சோதனையே. அல்லாஹ்விடமே மகத்தான கூலி இருக்கிறது. (அல்குர்ஆன் 64:15)
உங்களின் மக்கட் செல்வமும், பொருட் செல்வமும் சோதனை என்பதையும், அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 8:28)
நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நஷ்டமடைந்தவர்கள். (அல்குர்ஆன் 63:9)
மனைவி, மக்களில் இறை நினைவை விட்டுத் தடுப்பவர்கள் எதிரிகள் என்பதையே அந்த வசனம் குறிப்பிடுகின்றது என்பதை இங்கு நாம் எடுத்துக் காட்டியிருக்கும் வசனங்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
04. கேள்வி : எனக்குத் திருமணம் ஆகி இரண்டு வருடங்களில் எனக்கும் என் கணவருக்கும் இடையே ஏற்பட்ட சிறு பிரச்சனையில் பிரிந்தோம். பெரியவர்களின் பிரச்சனையால் என் கணவர் திடீரென்று முத்தலாக் கொடுத்துவிட்டதாகச் சொல்லி விட்டார். என் கணவர் தலாக் விட்டு ஏழு மாதங்கள் ஆகின்றது. என் வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். ஆனால் முத்தலாக் விட்டுவிட்டால் ஒரு தலாக்காவே கருதப்படும் என்றும் அவரே உம் கணவர் என்றும் வேறு ஒருவரை திருமணம் செய்ய முடியாது என்று கூறுகின்றனர். இது சரியா?
பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சிக் காலத்திலும், உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களது ஆட்சியின் (முதல்) இரண்டு ஆண்டுகளிலும் முத்தலாக் ஒரு தலாக்காகவே (நடைமுறையில்) இருந்தது. அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் (2932)
அல்லாஹ்வின் தூதர் காலத்தில் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருத்தப்பட்டுள்ளதால். நபிவழியின்படி முத்தலாக் ஒரு தலாக்காவே எடுத்துக் கொள்ளப்படும். என்றாலும் உங்கள் கணவர் தலாக் கூறி ஏழு மாதங்கள் ஆகி விட்டதால் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை நீங்கி விடுகிறது. இதைத் தெரிந்து கொள்ள சுருக்கமாக தலாக்கின் சட்டத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒருவர் தன் மனைவியை தலாக் கூறினால் அவர்களின் திருமண உறவு அடியோடு முறிந்து விடுவதில்லை. மாறாக முதல் தடவை விவாகரத்துச் செய்த பின் மனைவிக்கு மூன்று மாதவிடாய் ஏற்படுவதற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். மனைவி கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிப்பதற்குள் சேர்ந்து கொள்ளலாம்.
இந்தக் காலக் கெடுவுக்குள் மனைவியுடன் கணவன் சேரவில்லையானால் அவர்களுக்கிடையே திருமண உறவு நீங்கி விடும். ஆயினும் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் அவர்கள் புதிதாகத் திருமணம் செய்து கொள்ளலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை.
மூன்று மாதவிடாய் காலத்திற்குள் உங்கள் கணவர் உங்களிடம் சேர்ந்து கொள்ளாததால் அவர் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமையை இழந்து விடுகிறார். நீங்கள் இருவரும் விரும்பினால் புதிதாக அவரையே திருமணம் செய்து கொள்ளலாம். இல்லையெனில் புதிதாக இன்னொருவரைத் திருமணம் செய்து கொள்ளலாம்.
05. கேள்வி : இணை வைக்கும் பெண்களைத் திருமணம் செய்ய திருக்குர்ஆன் தடை செய்கிறது. தற்போது தர்ஹா வழிபாடுகளில் ஈடுபடும் பெண்களை திருமணம் செய்யக் கூடாதா?
பதில் : இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன் தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 2:221)
இணை வைக்கும் பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது என்ற தடை சிலை வணக்க வழிபாடுகளைச் செய்யும் நபர்களை மட்டும் குறிக்காது. முஸ்லிம்கள் என்று பெயரளவில் தங்களைக் கூறிக் கொண்டு அன்றைய காலத்தில் இணை வைப்பாளர்கள் செய்த காரியத்தை அப்படியே செய்யும் இன்றைய கால முஸ்லிம்களையும் குறிக்கவே செய்யும்.
தடை ஆட்களை வைத்து கூறப்பட்டதல்ல! அவர்களின் செயல்களை வைத்துத் தான் சொல்லப்பட்டுள்ளது. எனவே இணை வைக்கும் செயல் யாரிடம் இருந்தாலும் இந்தத் தடை அவர்களுக்கும் பொருந்தவே செய்யும்.
நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்கத்திற்காக. ஆகவே, மார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி (5090)
இந்த நபிமொழியின் அடிப்படையில், திருமணம் செய்பவர்கள் முதன் முதலில் மார்க்கம் உள்ள பெண்ணாகத் தேர்வு செய்யவேண்டும். மார்க்கத்தில் முதலிடம் ஓரிறைக் கொள்கையாகும். அந்த ஓரிறைக் கொள்கைக்கு வேட்டு வைக்கும் இணை வைப்புக் கொள்கையில் ஒரு பெண் இருந்தாலோ அல்லது ஆண் இருந்தாலோ அவர்களை ஒரு போதும் மணமகளாக அல்லது மணமகனாகத் தேர்வு செய்யக் கூடாது என்பதை இந்த நபிமொழியும் விளக்குகிறது.
06. கேள்வி : மணமக்களை அழைத்து விருந்து கொடுக்கலாமா? அதில் நாம் கலந்து கொள்ளலாமா?
பதில் : பொதுவாக மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் யாருக்கும் விருந்தளிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. மார்க்கத்திற்கு முரணில்லாத விருந்துகளில் கலந்து கொள்வதிலும் தவறில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் முடித்த போது உம்மு சுலைம் என்ற பெண்மணி விருந்தளித்ததாகவும் அதில் பல நபித்தோழர்கள் கலந்து கொண்டதாகவும் ஹதீஸ் உள்ளது.
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் முடித்தார்கள். தமது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபட்டார்கள். என்னுடைய தாய் உம்மு சுலைம் அவர்கள் ஹைஸ் எனும் உணவைத் தயாரித்து அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, “எனது தாய் உங்களுக்கு ஸலாம் சொன்னார்கள். “எங்களிடமிருந்து உங்களுக்குரிய சிறிய அன்பளிப்பு’ என்று கூறுமாறு சொன்னாப்ர்கள்” என்று கூறினேன். “அதை அங்கு வை” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி, சில பெயர்களைக் குறிப்பிட்டு, “இன்னின்ன ஆட்களையும் நீ யாரையெல்லாம் அறிந்திருக்கிறாயோ அவர்களையும் அழைத்து வா” என்று கூறினார்கள். நான் சந்தித்த ஆட்களையும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெயர் குறிப்பிட்டுக் கூறிய நபர்களையும் நான் அழைத்தேன்.
(இந்த ஹதீஸை அறிவிக்கும் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம்) “அவர்கள் எத்தனை பேர்?” என்று அபூ உஸ்மான் கேட்டார். “முன்னூறு பேர்” என்று அனஸ் ரளியல்லாஹு அன்ஹு பதிலளித்தார்கள். (நூல்: நஸயீ 3334)
source: http://aleemqna.blogspot.com