இணையில்லா ஈமான்
மவ்லவி, எம்.ஏ.முஹம்மது இப்ராஹீம்
அலிஃப், லாம், மீ;ம். இது (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (பயபக்தியுடைய) அவர்கள் (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (அல்குர்ஆன் 2: 1, 2, 3)
அருள்மறை அல்குர்ஆனின் மிகப்பெரும் அத்தியயமான அல்பகராவின் ஆரம்ப வசனங்களின் பெருள்களே இங்கு இடம்பெற்றுள்ளன.
எல்லோருமே தன்னை பக்தியாளர்கள் (முத்தகீன்) என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால், அல்லாஹ்வோ பயபக்தி கொண்டோருக்கு மூன்று அடையாளங்களை வரிசைப்படுத்தியுள்ளான்.
அவற்றில் முதலாவது மறைவானவற்றை நப்புவார்கள் என்பது. நிதர்சனமாக கண்கூடாகப்பார்த்து நம்புவது என்பது சதாரணமானதுதான்.
அல்லாஹ் எவற்றையெல்லாம் நம்பும்படி சொல்கிறானோ அவைகளும், அவற்றுக்கு கிடைக்கவிருக்கும் நற்கூலிகள் போன்றவையும் நம் கண்களுக்குத் தெரிபவை கிடையாது. ஏன்! இவற்றை அறிவிப்பவனான அல்லாஹ்வும் நமக்குத்தெரியாது. (அதாவது அவனை நாம் கண்களால் பார்த்ததில்லை). அவனது தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் நாம் பார்த்ததில்லை. ஆனால், எல்லாமே உண்மை என்று நாம் நம்பி ஏற்றிருக்கிறோம்.
உலகத்தின் எத்தனையோ மறைவானவற்றை நாம் நம்புகிறோம். காரணம் அவற்றின் விளைவுகளை நாம் கண்டு வருகிறோம். மின்சாரம் செல்கிற மெல்லிய கம்பிகளை நாம் சாதாரணமானதாக நினைப்பதில்லை. அதில் கை வைத்தவர்களின் கதி என்னவாகும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஈமன் உள்ளவர்களும், இல்லாதவர்களும் வெளித்தோற்றத்தில் ஒன்று போலத்தான் தெரியும். இதன் விளைவுகள் இவ்வுலகில் தெரிவதில்லை. மறுமையில் மட்டும் தான் தெரியும்;.
இவ்வுலகில் தெரிந்திருந்தால்; ஒரு காஃபிர்கூட காஃபிராக இருக்க மாட்டார். ஈமான் இருக்கும் இடமும் மறைவானதுதான். அங்கே ஈமான் இருக்கிறதா இல்லையா என்பது அல்லாஹ்வுக்கு மட்டும்தான் தெரியும். அங்குதான் அல்லாஹ்வின் சிம்மாசனம் இருப்பதாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். அதுதான் இதயம். மற்ற அமல்களெல்லாம் எப்போதும் செய்து கொண்டே இருக்க வேண்டும். இதுவோ ஒரேயொரு தடவை செல்லிவிட்டால் போதும். அவன் வாழும் காலமெல்லாம் முஸ்லிம்தான்.
அது வாயால் சொல்லி விட்டால் மட்டும் போதாது. இதயத்தால் நம்பி சொல்ல வேண்டும். ‘தஸ்தீகும் பில் கல்பி’ உள்ளத்தில் உண்மைப்படுத்துதல் இருந்தால் மட்டுமே ஈமானாகும்.
ஒரு காஃபிர் லட்சம் தடவை கலிமாவை சொல்லிவிட்டால் மட்டுமே முஸ்லிமாகிவிட மாட்டார். முஸ்லிம்களிடம் பணிபுரியும் எத்தனையோ மற்ற சமய சகோதர, சகோதரிகளுக்கு கலிமா தெரியத்தான் செய்யும். அவர்களை யாரும் முஸ்லிமாகக் கருதுவதில்லை. உள்ளத்தல் ஏற்றுக்கொண்டபின் சொன்னால்தான் பலன் கிடைக்கும். தொழுகை போன்ற எந்த வணக்கமாக இருந்தாலும் ஈமான் இருந்தால்தன் நன்மையுண்டு.
ஈமான் இருக்குமிடத்தை மனிதர்களின் மனங்களில் அல்லாஹ் மறைத்து வைத்திருப்பதைப் போன்று அதற்குக் கிடைக்கும் பாக்கியங்களையும் மறைத்தே வைத்திருக்கிறான். ஒவ்வொன்றுக்கும் ஒரு சுவை உண்டு என்பது போல ஈமானுக்கும் ஒரு சுவை உண்டு. அது என்ன?
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: ‘எவரிடம் மூன்று (விஷயங்கள்) இருக்கின்றனவோ அவர் அவைகளால் ஈமானின் சுவையைப் பெற்றுவிட்டார்.
1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவ்விருவருமல்லாத (எல்லா)வற்றையும் விட மிக்க நேசத்திற்குரியோராய் இருப்பது.
2. அவர் (மற்றொரு) மனிதரை அல்லாஹ்வுக்காக நேசிப்பது.
3. குஃப்ரிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்றிய பின்னர் மீண்டும் அதற்குத் திரும்புவதை நெறுப்பில் தாம் வீசப்படுவதைப்போன்று அவர் வெறுப்பது.’ (நூல்: புகாரி, முஸ்லிம்)
இவ்வுலகில் பணம், பதவி, பட்டம் போன்றவைகளின் காரணமாக மதிக்கப்பட்டு வெற்றி பெறலாம். ஆனால் அவ்வுலகில் (மறுமையில்) ஈமான் ஒன்றினால் மட்டுமே வெற்றி பெறமுடியும். நிரந்தரமான மறுமை வாழ்க்கைக்கு தேவையான ஈமான் அங்கு கிடைப்பதில்லை. அது கிடைப்பது இங்குதான். எனவே, ஈடு இணையில்லா ஈமானை இதயசுத்தியோடு பாதுகாப்போம். மறுமையின் வெற்றிக்கு வழிவகுப்போம். அல்லாஹ் அருள்புரிவானாக.
– ஜமாஅத்துல் உலமா, ஜூலை – 2009