[‘நீங்களும் தான் இருக்கீங்களே, உங்களைக் கலியாணம் கட்டி இத்தனை வருஷத்திலை என்ன பிரயோசனம்?
நம்ம பக்கத்து வீட்டுப் பரிமளத்திற்கு, அவளோடை புருஷன் எப்பூடி அழகான ஹன்சிகா சாரி வாங்கிக் கொடுத்திருக்கான்! நீங்களும் தான் இப்படி இருக்கிறீங்களே? இப்பவே நான் உங்களை விட்டுப் போறேன்’ என்று ஒரு கண்ணீர் விடுவா பாருங்க…..
அதற்கு கணவன் கட்டுப்பட்டு விடுவாராம். (அனுபவப்பட்ட பெரியவங்க சொல்லி வேதனைப்பட்ட விஷயம்.)
இங்கே கணவன் அன்பிற்கு கட்டுப்படுகின்றாரா? அல்லது கண்ணீரை ஆயுதமாக்கிப் பெண் வார்த்தைகளைக் கொட்டுகின்ற போது, கண்ணீருக்குக் கட்டுப்படுகின்றாரா? என்பது புரியாத விஷயமாக இருக்கின்றது.]
பெண்களின் கண்ணீர் வேஷமா இல்லை ஆயுதமா?
கண்ணீர் என்பது ஒரு மனிதன் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படும் போதும், இயலாமை எனும் உணர்வானது ஒருவனிடத்தே வருகின்ற போதும் தான் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது என்று கூறுகிறார்கள். கண்ணீரை ஆயுதமாகப் பயன்படுத்துவதில் பெண்கள் வல்லவர்கள் என்று ஆய்வாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
நாம் சிறு பிள்ளையாக இருக்கும் போது ‘எமக்குப் பிடித்த ஒரு பொருளை வாங்கித் தரவில்லை என்றால்’ கூப்பாடு போட்டு அழுது, தரையில் விழுந்து கத்திக் குழறித் தான் எமக்குப் பிடித்தமான பொருளைக் கேட்டு வாங்குவோம்.
ஆனால் ஒரு சில வீடுகளில் ‘இந்தச் செயலுக்கு இடங் கொடுக்க மாட்டார்கள்.
அழுத பிள்ளை பால் குடிக்காது எனும் சான்றோர் வாக்கினைக் காரணங் காட்டி, ‘இன்னைக்கு ஒருவாட்டி இவன் அழும்போது, அவனது கோரிக்கைக்கு நாம செவி சாய்த்தால், தொடர்ந்தும் அழுதுகிட்டே இருப்பான்’
’அழுது மிரட்டி இடங் கண்டு கொண்டான்’ என்று ஏசி, அழுகின்ற பிள்ளையைக் கவனிக்காது விட்டு விடுவார்கள்.
மேற்படி சம்பவ விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கின்ற போது, நமக்குரிய தேவைகள் நிறைவேற்றப்படாத போது சிறு வயதில் அழுகையினை ஆயுதமாக்கியிருக்கிறோம். ஆனால் பெண்களின் அழுகை கொஞ்சம் வித்தியாசமானது. பாடசாலை படிக்கும் போது, சக நண்பர்களின் கேலி – கிண்டல் பேச்சுக்கள் மூலமாக ஒருவன் அழுகின்ற போது, ‘ஏன் பொட்டைப் புள்ள மாதிரி அழுதுகிட்டிருக்காய்’ என்று கேலி பண்ணிச் சக நண்பர்கள் கிணடல் பண்ணுவார்கள்.
சில பெண்கள் அழுகை மூலம் தமக்குரிய காரியங்களைச் சாதகமாக நிறைவேற்றவும் அழுகையினை ஆயுதமாகப் பிரயோகிக்கிறார்கள். முதலில் கணவனைக் கொஞ்சிக் குலாவி ‘என் அத்தானெல்லே, என் மாமாவெல்லே, பக்கத்து வீட்டுப் பரிமளம் புதுசா வந்த ஹன்சிகா சாரி வாங்கிக் கட்டியிருக்கா’ அதே மாதிரிப் புடவை ஒன்னு எனக்கு வாங்கிக் கொடுக்க முடியுமா’ என்று கேட்டுப் பார்ப்பார்கள். இன்றைய கால கட்டத்தில் பெண்களும் ஆண்களுக்குச் சரி சமனாக வேலை செய்யப் பழகினாலும், கணவனிடம் அடிபட்டு, அழுகை மூலம் சாதித்து வாங்குவதில் ஒரு சுகம் இருக்கிறதோ எனக் கருதுகிறார்களோ தெரியவில்லை.
கணவன் கொஞ்சம் மசிந்து கொடுக்கா விட்டால்…
‘நீங்களும் தான் இருக்கீங்களே, உங்களைக் கலியாணம் கட்டி இத்தனை வருஷத்திலை என்ன பிரயோசனம்?
நம்ம பக்கத்து வீட்டுப் பரிமளத்திற்கு, அவளோடை புருஷன் எப்பூடி அழகான ஹன்சிகா சாரி வாங்கிக் கொடுத்திருக்கான்! நீங்களும் தான் இப்படி இருக்கிறீங்களே? இப்பவே நான் உங்களை விட்டுப் போறேன்’ என்று ஒரு கண்ணீர் விடுவா பாருங்க…..
அதற்கு கணவன் கட்டுப்பட்டு விடுவாராம். (அனுபவப்பட்ட பெரியவங்க சொல்லி வேதனைப்பட்ட விஷயம்.)
இங்கே கணவன் அன்பிற்கு கட்டுப்படுகின்றாரா? அல்லது கண்ணீரை ஆயுதமாக்கிப் பெண் வார்த்தைகளைக் கொட்டுகின்ற போது, கண்ணீருக்குக் கட்டுப்படுகின்றாரா? என்பது புரியாத விஷயமாக இருக்கின்றது.
இத்தகைய கண்ணீரை நீலிக் கண்ணீர் என்றும் கூறுவார்கள். அலுவலகங்களிலும் சரி, பாடசாலைகளிலும் சரி சக நண்பர்கள் யாருடனாவது சண்டை என்றால், தம்மால் முடிந்த வரை வாய் வீரத்தினைப் பெண்கள் நிலை நாட்டப் பார்ப்பார்கள். இல்லையேல் இறுதி அஸ்திரமான கண்ணீரை ஆயுதமாக்கி ஒரு சில வார்த்தைகள் சொன்னாலே போதும். எதிர்த் தரப்பினர் கப் சிப் ஆகிவிடுவார்கள்.
பெண்களின் அழுகையானது ஆண்களை ரசிக்க வைக்கிறது என்று கூறுகிறார்கள். பெண்களின் கண்ணீர் பற்றி இணையத்தில் தேடிய போது,
*பெண்களின் கண்ணீர் மூலம் ஆண்மையினையும் ஆண்களின் பாலியல் உணர்ச்சிகளையும் அடக்கச் செய்யலாமாம்.
*பெண்களின் கண்ணீர் அவர்களைப் பாதுகாக்கிறது.
*பெண்களின் கண்ணீரானது ஆண்களைத் தம் வசப்படுத்தவும் பெண்களுக்கு உதவுகிறது என்று கூறுகிறார்கள்.
இத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, என் தரப்பில் தோன்றும் ஐயங்களை உங்கள் முன் வைக்கின்றேன்.
*தமக்குப் பிடித்தமான ஒரு விஷயத்தினை நிறைவேற்றக் கண்ணீர் அவசியமா?
*அன்பினால் எதனையும் சாதிக்கலாம் எனக் கூறும் உலகில், ஒரு சில விஷயங்களில் தம் தரப்பு நியாயத்தினை வெளிப்படுத்தப் பெண்கள் கண்ணீரை ஏன் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும்?
*கண்ணீரின் மூலம் தம் பக்க கருத்துக்களை நியாயமாக்குவதை விடுத்து, காத்திரமான வழிகளில் தன்னம்பிக்கை நிறைந்த திடமான கருத்துக்கள் மூலம் பெண்கள் தமது பக்கக் கருத்துக்களை நியாயப்படுத்த முடியாதா?