நீங்களும் அழகு ராணி போல் ஜொலிக்க….
ஆரோக்கியத்தின் கண்ணாடி – சருமம்!
அழகாய் இருப்பது அத்தனை பெண்களுக்கும் அவசியம். வாழ்க்கையில் வெற்றியை நோக்கிச் செல்லும் பல பிரபலங்களைப் பாருங்கள் நேர்த்தியான அழகும் அவர்களிடம் இருக்கத்தான் செய்யும். அறிவையும்-அழகையும்-தன்னம்பிக்கையையும் ஒன்றாகக் கலந்து காட்டி, செயல்படும் பெண்களே சாதனைக்குரியவர்களாக உருவாகிறார்கள்.
அழகு என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது சருமத்தின் நிறம். சிவப்பு நிறம் எல்லா பெண்களும் விரும்பும் நிறமாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் சருமத்தைப் பற்றி விஞ்ஞானபூர்வமாக எத்தனை சதவீத பெண்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்? மனித உடலில் இருக்கும் பெரிய உறுப்பு எது? சருமம்தான் உடலில் மிகப்பெரிய உறுப்பு. இஷ்டத்திற்கு நெகிழக்கூடியதும் அதுதான்.
ஒருவரது சருமம் 24 சதுர அடி சுற்றளவும், நான்கு கிலோவிற்கும் சற்று அதிகமான எடையையும் கொண்டது. சருமம், உடலை மூடிப் பாதுகாக்கும் போர்வையா? அல்லது ஆபரணமா? இரண்டுமே இல்லை. சருமத்திற்கென்று முக்கியமான வேலைகள் நிறைய இருக்கின்றன. நன்றாக வெயிலடிக்கும் காலத்தில் உடலில் இருக்கும் தண்ணீர்தன்மை வற்றிவிடாமல் பாதுகாக்கும் சருமம், மழைக்காலத்தில் “வாட்டர் புரூப்” போல் செயல்பட்டு உடல் குளிர்ந்து போகாமல் பார்த்துக்கொள்கிறது.
சருமத்தில் இரண்டு முக்கிய பகுதிகள். வெளியே தெரிவது “எபிடெர்மிஸ்”. உள்புறமாய் அமைந்திருப்பது, டெர்மிஸ். எபிடெர்மிசில் பல அடுக்குகள் உள்ளன. அதன் அடி அடுக்கில் இருக்கும் அடிப்படை செல்கள் நிரந்தரமாக உருவாகி பெருகிக்கொண்டே இருக்கும். புதிய செல்கள் பெருகி மேல் நோக்கி வந்துகொண்டிருக்கும்போது மேலே இருப்பவை டெட்செல்களாகி உதிர்ந்து கொண்டிருக்கும். ஒரு செல் புதிதாக புறப்பட்டு வந்து, உதிர்ந்து போக மூன்று முதல் நான்கு வாரங்கள் ஆகும்.
உள்பகுதியில் இருக்கும் டெர்மிசில் பல்வேறு வகையான சுரப்பிகள், ரத்தக்குழாய்கள், மயிர்க்காலின் அடிப்பகுதி போன்றவைகளெல்லாம் இருக்கின்றன. நுண்ணிய சிறு பகுதி சருமத்தில் மட்டும் ஒரு கோடி செல்கள் இருக்கும். ஒரு பெண்ணின் மொத்த உடல் சருமத்தில் 30 பில்லியன் செல்கள் இருக்கும். (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி) சருமத்திலிருந்து ஒவ்வொரு நிமிடமும் 50 ஆயிரம் சரும செல்கள் உதிர்கின்றன. தொடர்ச்சியாக நடக்கும் இந்த பரிணாம மாற்றங்களால் ஒருவர் தன் ஆயுளில் 20 கிலோவரையான சருமத்தை உதிர்க்கிறார்.
சருமத்தில் புதிய செல்கள் உருவாகுவதும், பழையவை உதிர்வதும் எல்லா பருவத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. 18 வயது பெண்ணுக்கு இந்த பரிணாம மாற்றங்கள் நிகழ இரண்டு வாரங்கள் போதும். அவர் ஐம்பது வயது பெண்மணியாகும்போது அந்த மாற்றங்கள் நிகழ ஐந்து வாரங்கள் வரை தேவைப்படும். வயது கூடும்போது சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையிலும் மாற்றங்கள் ஏற்படும்.
சரும செல்கள் ஒருவகை இறப்பு நிலையை அடையும்போது, அதிலிருந்து கெரோட்டின் உருவாகிறது. இந்த கெரோட்டின்தான் நகம் மற்றும் முடியின் அடிப்படை. வயதுக்கு வந்த ஒரு பெண்ணின் தலை முடி கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் இருக்கும். ஒரு மாதம் அது 1.25 செ.மீ. வளரும். தொடர்ந்து இப்படியே வளர்ந்து கொண்டிருக்காது. ஐந்து ஆறு மாதங்கள் கழித்து சிறிது காலம் ஓய்வெடுக்கும். சுழற்சி அடிப்படையில் பத்து சதவீத முடி ஓய்வெடுக்கும்போது 90 சதவீதம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும். ஓய்வெடுக்கும் நிலையில் இருக்கும் முடிகளே குளிக்கும் போது உதிர்கின்றன. (அதனால் முடி உதிர்வதை நினைத்து ரொம்ப கவலைப்படாதீங்க)
முடி, கண்களின் கருவிழி, சருமம் போன்றவைகளுக்கு நிறம் தருவது மெலானின் என்ற ரசாயன பொருள். சூரிய கதிர்கள் சருமத்தை கடுமையாகத் தாக்கும்போது அது சருமத்தை பாதிக்காமலிருக்க மெலானின் உதவுகிறது. தொடர்ச்சியாக சருமத்தின் ஒரு பகுதியின் கடுமையான சூரிய கதிர்கள் பட்டால் அந்த பகுதியில் மெலானின் அதிகமாக உற்பத்தியாகி சருமம் கறுத்துப் போய்விடும்.
சருமத்தின் மென்மையும், நிறமும், சுருக்கமற்ற மினுமினுப்பும் ஆரோக்கியம் மற்றும் அழகின் வெளிப்பாடாக இருக்கிறது. வெளிநாட்டினரைப் போல் வெள்ளை நிறமாக சருமம் இருக்கவேண்டும் என்று அத்தனை பெண்களும் விரும்புகிறார்கள் என்றே சொல்லவேண்டும். அந்த நிறம் பல்வேறு துறைகளில் வெற்றிபெற படிக்கட்டு என்று நினைக்கும் பெண்களும் ஏராளம். ஆனால் வெள்ளை நிற சருமம் ஒரு சில நோய்களை வரவேற்பதாக இருக்கிறது.
சருமம் வெள்ளையாக இருக்கும் வெளிநாட்டினருக்கு நம் நாட்டைவிட சரும புற்று நோய் அதிகம் வருகிறது. இந்த தொந்தரவிலிருந்து விடுபட தங்கள் சருமம் கறுப்பாக இருந்தாலும் பரவாயில்லையே என்று வெளிநாட்டு பெண்கள் ஏங்குகிறார்கள். அதற்காகத்தான் கடற்கரை பகுதியில் படுத்து “சன் பாத்” எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகம் கறுக்காமலும், அதிகம் சிவக்காமலும் இருக்கும் சருமமே ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் ஏற்றதாக இருக்கிறது.
முகத்தை மனதின் கண்ணாடி என்று சொல்வார்கள். அதுபோல் சருமத்தை ஆரோக்கியத்தின் கண்ணாடி என்று சொல்லலாம். உடலில் நோய்கள் இருந்தால் அது சருமத்தில் பிரதிபலிக்கிறது. சருமத்தின் நிறத்தை சிவப்பாக மாற்ற முடியுமா? என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.
மெலானின் மற்றும் சில வர்ண கட்டமைப்புகளும் சேர்ந்து சருமத்திற்கு நிறம் கொடுக்கிறது. வாழ்க்கை சூழலும், சுற்றுச்சூழலும் இதற்கு ஒருவகை காரணம். குளிர்ச்சி அதிகமுள்ள நாடுகளில் நம் நாட்டு பெண்கள் சில வருடங்கள் வசித்தால் அவர்கள் சரும நிறமும் ஓரளவு கலராக மாறும். அதிக வெயிலடிக்கும் கால நிலையிலும், மாசு நிறைந்த சுற்றுப்புறத்திலும் வசித்தால் நிறம் கறுக்கவும் செய்யும்.
சருமத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், தினமும் இருமுறை குளித்தல், உடற்பயிற்சி செய்தல், உணவில் காய்கறி மற்றும் பழங்களை அதிகம் சேர்த்தல், மன அழுத்தம் இல்லாமல் இருந்தால் சருமம் மினுமினுப்பாக இருக்கும். பெண்களின் சரும நிறத்தில் பாரம்பரிய பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. சருமத்தின் நிறத்தில் பெருமளவு மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. என்றாலும் நவீன அழகுக்கலை பராமரிப்பு சிகிச்சைகள் மற்றும் வீட்டிலே செய்யும் குறிப்பிட்ட பராமரிப்பு முறைகள் மூலம் நிறத்தை குறிப்பிட்ட அளவுவரை மேம்படுத்தலாம்.
தங்கபஸ்பம், குங்குமப்பூ போன்றவைகளை உட்கொண்டால் சருமத்தின் நிறம் மாறும் என்பது சரியா?
குறிப்பிட்டுச் சொன்னால் இதனால் பெரிய பலன் எதுவும் கிடைத்துவிடாது. இயற்கையான நிறத்தை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. நன்றாக பராமரித்து, வெயிலில் செல்லாமல் இருந்தாலே சருமத்தின் நிறம் ஓரளவு மேம்படத் தொடங்கிவிடும். தங்கபஸ்பம், குங்குமப்பூ போன்றவை ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்தாக செயல்படுகிறது. ஓரளவு நிறத்தை தரும் சக்தி இதற்கு இருக்கிறது. சிவப்பு நிறமான சருமத்தைக் கொண்டவர்களின் வாழ்க்கைமுறை முரண்பாடாக இருந்தால் அவர்கள் சருமத்தின் நிறமும் மாறிக்கொண்டிருக்கும். மன அழுத்தத்தை கட்டுப்படுத்தாதவரை சரும நெருக்கடிகளை தவிர்க்க முடியாது. அழகான சருமத்தைப் பெற இன்னும் ஆலோசனைகள் உண்டு.
நீங்களும் அழகு ராணி போல் ஜொலிக்க….
1. சரியான உணவு
ஆரோக்கியமான சரிவிகிதச் சத்துணவு உங்கள் மேனியழகில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. எண்ணெய்ப் பதார்த்தங்கள் மலச்சிக்கல் மற்றும் வாயுத் தொந்தரவுகளை உண்டாக்கக்கூடும். அதற்காக நீங்கள் முற்றிலுமாக பக்கோடா, பஜ்ஜி, வடை போன்ற எண்ணெய்ப் பதார்த்தங்களைத் தவிர்க்கவேண்டும் என்கிற அவசியமில்லை. எப்போதாவது குறைந்த அளவில் மட்டும் ருசிக்கலாம். அவற்றை விரும்பி, அதிக அளவில் பசிக்காகச் சாப்பிடுவது நல்லதல்ல!
பசுமையான பச்சைக் காய்கறிகளையும், கீரை வகைகளையும், பழவகைகளையும் உங்கள் அன்றாட உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்! உங்கள் மேனி பளபளக்கும்! கீரை வகைகளில் முருங் கைக்கீரை, அகத்திக்கீரை, அரைக்கீரை போன்றவை யும், பழங் களில் ஸ்ட்ராபெர்ரீஸ், புளுபெர்ரீஸ், கூஸ் பெர்ரீஸ், ரஸ்ப்பெர்ரீஸ் போன்றவையும், சிட்ரஸ் பழங்கள் என்று சொல்லப்படும் ஆரஞ்சு, நெல்லிக்கனி மற்றும் எலுமிச்சைக் கனிகளும், ஆப்பிள், வாழைப்பழம் போன்ற சத்தான பழங்களும் உங்கள் மேனியை வசீகரிக்கும் வனப்புடன் திகழச்செய்யும்!
2. உடற்பயிற்சி
உடற்பயிற்சிக் கூடங்களில் தினமும் அதிகாலையில் நீங்கள் செய்யும் உடற்பயிற்சி உங்கள் உடலின்ரத்த ஓட்டத்தைச் சீராக்கி உங்களை உடல் பாரமின்றி எடை குறைந்து எழில்மிகு மேனியுடன் வலம்வரச் செய்யும்..! உடற்பயிற்சியின்போது வெளிவரும் வியர்வையில் உட லில் உள்ள நச்சுப்பொருட்களும் வெளி வருகின்றன. ஆதலால் உடற்பயிற்சியின் இன்றியமையாமையை எளி தில் புரிந்து கொள்ளலாம்!
3, தளதள உடம்புக்கு தண்ணீர்
நல்ல உடலுக்கு நாள் ஒன்றிற்கு 8 கப் தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த நீராகாரப் பழக்கம் உடலின் ஜீரணப் பாதையைச் சுத்தமாக்கி மலச்சிக்கலைத் தவிர்த்து மேனியையும் சருமத்தையும் சுத்தமாக்கி சுறுசுறுப்படையச் செய்யும்! சருமம் மென்மையாகி ஜொலிக்கவும் செய்யும்.
உங்கள் மேனி உலர்ந்துவிடாமல் இருக்க தினமும் குளிப்பதும், அடிக்கடி முகத்தை நீரால் அலம்புவதும் அவசியம்! சூரியக் குளியல் எனப்படும் காலை மாலை இளவெயில் மேனி யில் படுதலும் அழகிய மேனிக்கு அவசியத் தேவையாகும்.
4, நிறைவான மனம்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே! அதிகப்படியான அழகு சாதனங்களை பயன்படுத்தி உங்கள் மேனியழகைப் பாழாக்குவதும் அதுபோன்றதே. முக அழகு கிரீம் பூசாமல் என் முகத்தை வெளியே காட்டவே முடியாது என்று நினைக்க வேண்டாம். படுக்கைக்குப் போகும்முன்பு நீரால் முகத்தை கழுவி மென்மையாக துடைத்துவிட்டு தூங்கச்செல்லுங்கள்.
5. தூக்கம் சொர்க்கம்
ஆண்களையும், பெண்களையும் என்றென்றும் இளமை அழகுடன் மிளிரச்செய்வது ஆழ்ந்த நிம்மதியான தூக்கம்தான். ஆழ்ந்த தூக்கமானது உங்கள் முகத்தில் தோன்றும் கருவளையங்களை நீக்கிட பேருதவி புரிகின்றது! தினமும் 6 முதல் 8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் சருமத்திற்கு பொலிவைத் தருகிறது. முகத்திற்கு பளபளப்பை தருகிறது. அதனால் தான் அழகு ராணிகள் ஆழ்ந்த தூக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள்.
இவை எல்லவற்ரையும்விட நீங்கள் நல்ல குணவொழுக்கமுள்ள பெண்மணியாக இருந்தால் ராணியல்ல, மகாராணியாக கூடத் திகழலாம்.