இனி மார்க்க அறிஞர்களுல் சிலர் மார்க்கத்தின் மூலாதாரங்கள் எவை எவை என்பதிலேயே கருத்து வேறுபாடு கொண்டுள்ளதால் மார்க்கத்தை எந்த அடிப்படையில் பிரச்சாரம் செய்வதென்றே முடிவெடுக்க முடியாமல், எவ்விதமான பிரச்சாரப் பணிகளிலும் ஈடுபடாமல், தன்னிடம் மார்க்கச் சட்டதிட்டங்கள் மற்றும் வணக்க வழிபாடுகள் சம்பந்தமாக விளக்கம் கேட்பவர்கள் குறிப்பிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லி இது சம்பந்தமாக அந்த அறிஞர் அப்படிச் சொல்கிறார் இந்த அறிஞர் இப்படிச் சொல்கிறார் இதில் எது சரியானது என்று கேட்டால் மார்க்க அடிப்படையில் இது சரி இது தவறு என்று உறுதியாகக் கூறமுடியாமல், பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் பதில் சொல்லிவிட்டு நழுவி விடுபவர்களும் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிப் பார்ப்போம்.
நாம் குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் எதிர்க்கக் கூடிய தர்கா வழிபாடு, மவ்லித் பாடல்கள், மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்ட்ட (பித்அத்) அனாச்சாரங்கள், இன்னும் நம் சமுதாய மக்களிடம் காணப்படும் மார்க்கத்திற்கு எதிரான எல்லா வித தீமைகளையும் எடுத்துச் சொல்லி அவைகளைக் கண்டிக்கும் போது மக்களை எப்படியாவது வழிகெடுத்து விடவேண்டும், அவர்களை நேர் வழியில் செல்ல விடாமல் தடுக்க வேண்டும் என்று சபதம் எடுத்தவர்கள் போல் செயல்படும் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் மார்க்கத்தை கெடுத்து கொண்டிருக்கும் சிலர் தாங்கள் செய்து கொண்டிருக்கக் கூடிய ‘ஷிர்க், பித்அத்’ போன்ற மார்க்த்திற்கு முரனான அனைத்துக் காரியங்களையும் நியாயப் படுத்த அந்தச் செயல்களுக்கு அறவே சம்பந்தம் இல்லாத குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் ஆதாரமாக எடுத்துக் காட்டும்போது இதுவும் சரியாகத் தானே தோன்றுகிறது என்று இருதரப்பு வாதங்களையும் ஆழமாகச் சிந்தித்து அறியாமல் அல்லது அறிய முற்படாமல் இதுவும் சரிதான் என்று வழக்கமாக தாங்கள் செய்து கொண்டிருக்கும் மார்க்கத்திற்கெதிரான காரியங்களை தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள்.
உண்மையில் அல்லாஹ்வினதும் அவனுடைய தூதரினதும் வார்த்தைகளுக்கு எவ்வித மதிப்பும் கொடுக்காதவர்கள் என்றால் இவர்களைத் தான் சொல்லவேண்டும். ஏனென்றால் ஒரு காரியம் மார்க்க அடிப்படையில் தவறு என்று குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களோடு சமர்ப்பிக்கப்படும் பொழுது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரியும். இந்த ஆதாரங்களை விட்டு விட்டு சுற்றி வளைத்துக் கொண்டு சொல்லப்படும் (அதுவும் சில விஷயங்களுக்கு மட்டும்) ஆதாரங்களைத் தாங்கள் செய்யும் செயலை நியாயப்படுத்துவதாக இருப்பதால் சரிகாண்கிறார்கள்.
உன்மையில் இவர்களின் குழப்பத்திற்கு அல்லது இந்த முடிவிற்க்கு இவர்கள் மார்க்த்தின் அடிப்படையை சரியான முறையில் விளங்காததே காரணம். ஏனென்றால் மார்க்த்தின் பெயரால் ஏற்படும் பெரும்பாலான குழப்பங்களுக்கு மார்க்த்தின் மூலாதரங்களான குர்ஆன் ஹதீஸைத் தவிர்த்து இஜ்மா கியாஸ் என்பதனையும் அதிலிருந்து உண்டான மத்ஹபுகளையும் இவர்கள் பின்பற்றுவதினாலேயே தான் ஏற்படுகிறது. உன்மையில் இவையும் மார்க்க ஆதாரங்கள்தானா? அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு இவ்வாறு தான் கட்டளையிட்டுள்ளார்களா? என்றால் கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால் அல்லாஹ் தன் திருமறையில் கூறுவதைப் பாருங்கள்;
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.” (அல்குர்ஆன் 4 : 59)
இந்த வசனத்தில் இறைநம்பிக்கை கொண்டுள்ள மூமின்களிடத்தில் கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டால் அதை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் கொண்டு செல்லவேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான் அப்படி என்றால் மார்க்க அடிப்படையில் எழும் எந்தக் கருத்து வேறுபாடானாலும் அது குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சரியா தவறா என்று பார்க் வேண்டுமே தவிர இந்த இரண்டைத் தவிர வேறு எதுவும் மார்க்கமாகாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் இதைத் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கூறியிருக்கின்றார்கள்
‘மக்களே! நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கின்றேன். அதைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம் 2. அவனது தூதரின் வழிமுறை’ என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதி ஹஜ்ஜில் ஆற்றிய பேருரையில் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஹாகிம் 318)
மேலே நாம் சுட்டிக் காட்டிய குர்ஆன் வசனமும் ஹதீஸின் கருத்தும் மார்க்த்தின் ஆதாரங்கள் குர்ஆனும் ஹதீஸும் தான் என்பதை தெளிவுபடுத்துகின்றன எனவே மார்க்கம் தொடர்பான எந்த விஷயமானலும் அதைப் பற்றி குர்ஆனில் என்ன உள்ளது ஹதீஸில் என்ன உள்ளது என்று தேடிப் பார்த்து அதில் உள்ளதை விறுப்பு வெறுப்பின்றி ஏற்றுச் செயல்பட்டால் மார்க்கம் தொடர்பான எந்தக் குழப்பமும் நமக்கு வராது ஏனென்றால் மார்க்கம் அவ்வளவு தெளிவாக உள்ளது இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
‘நிச்சயமாக நான் உங்களை வெள்ளை வெளேர் என்ற வழியில் விட்டுச் செல்கிறேன். அதில் இரவும் பகலைப் போன்றது. நாசமாகி விடுபவனைத் தவிர வேறு எவரும் அந்தப் பாதையிலிருந்து சருக மாட்டான். (நூல் : இப்னுமாஜா 43 ஹதீஸின் சுருக்கம்.)
இந்த ஹதீஸில் தான் மார்க்த்தை எந்த அளவிற்கு தெளிவாக உங்களிடம் விட்டுச் செல்கிறேன் என்றால் அதன் இரவும் பகலைப் போன்றது அழிந்து நாசமாகுபவனைத் தவிர வேறு யாரும் வழிகெடமாட்டார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள் என்றால் மார்க்கம் எவ்வளவு தெளிவானது என்பதை சத்தேகமற அறியலாம். அப்படி இருந்தும் மார்க்க காரியங்கள் பலவற்றுள் கருத்து வேறபாடு ஏற்படக் காரணம் மார்க்கத்தின் மூலாதரங்களான குர்ஆன் ஹதீஸைத் தவிர்த்து வேறு சிலவற்றையும் ஆதாரங்களாகக் கருதி அதிலிருந்தும் ஆதாரங்களை எடுப்பதுதான். இல்லையென்றால் குர்ஆன் ஹதீஸை அவர்கள் அணுகும் விதம் தவறாக இருக்கவேண்டும்.
இந்த இருகாரணங்களைத் தவிர வேறு எக்காரணம் கொண்டும் மார்க்கக் காரியங்களில் ஒரு குழப்பமும் வராது வரவும் முடியாது. ஆகவே மார்க்கம் சம்பந்தமான எந்தெந்தக் காரியங்களில் இருவேறு அல்லது பல கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றனவோ அங்கெல்லாம் தங்கள் தங்கள் கருத்துக்களை நிறுவவதற்க்கு அவரவர் என்னென்ன ஆதாரங்களை சமர்பிக்கின்றனர் என்று பார்த்து அதில் எவர் எடுத்துவைக்கும் ஆதாரங்கள் குர்ஆன் ஹதீஸில் உள்ளது அல்லது அவ்விரண்டுக்கும் நெருக்கமாக உள்ளது என்று மனோ இச்சையை மாற்றி நிறுத்திவைத்து விட்டு உண்மையான இறையச்சத்துடன் ஆராய்ந்தால் கண்டிப்பாக மேலே நாம் சுட்டிக்காட்டிய நபிமொழியில் உள்ளது போல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம்மிடம் விட்டுச் சென்ற “பளீரென்ற மார்க்கத்தில் பளிச்சென்ற பகலைப்போல தெளிவைப் பெறலாம்” இன்ஷா அல்லாஹ்.
எனவே இனிமேலாவது மார்க்கக் காரியங்களில் யார் யார் எந்தெந்தக் கருத்தைச் சொன்னாலும் அவர்கள் சொல்லும் ஆதாரம் குர்ஆன் ஹதீஸில் உள்ளதா? அவர்கள் சொல்லும் ஆதாரத்திற்கும் அந்த விஷயத்திற்கும் சம்பந்தம் உள்ளதா? என்று தேடிப் பார்த்து பின்பற்றத் தொடங்கினால் விரல் விட்டு என்னக்கூடிய சில விஷயங்களைத் தவிர (அதுவும் சரியான முறையில் அணுகி அல்லாஹ்வும் நேர்வழிகாட்டினால்) மார்க்கத்தின் மிகப் பெரும்பான்மையான காரியங்களில் இரண்டாவது கருத்துக்கே இடமில்லாமல் உன்மையை விளங்களாம் அல்லாஹ் நம்மனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக
அல்லாஹ் மிக அறிந்தவன்