முஹம்மது சிராஜுத்தீன்
o இறைவன் மனிதனை எதற்காக படைத்தான்?
o இறைவனை எதற்காக வணங்க வேண்டும்?
o இறைவனை வணங்கினால் மட்டும் போதுமா?
இறைவன் மனிதனை எதற்காக படைத்தான்?
எதற்காக மனிதர்களாகிய நாம் இந்த உலகத்தில் படைக்கப்பட்டோம். இந்த கேள்வி அனைத்து மனிதனுக்கும் ஏற்படுகிறது. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் பதிலை நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம். ஆனால் பதில் திருப்திகரமானதா என்றால் பெரும்பாலும் கேள்விக்குறியே.
முஸ்லிமாகிய நாம் அல்லாஹ்வை வணங்குவதற்காக என்று சொல்வோம். ஆனால் எதற்காக அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்று கேட்டால் கேள்வியே பதிலாக வரும்.
இதை ஒரு மேற்கத்திய நபரிடம் கேட்டால் அவர் இவை அனைத்தும் பரிணாம வளர்ச்சியே (Evolution) என்பார்.மாடுகள், நாய்கள் எதற்காக படைக்கப்பட்டன, எந்த ஒரு நோக்கமுமில்லை. அது போலவே மனிதன் படைக்கப்பட்டதும் எந்த ஒரு நோக்கத்திற்காகவுமில்லை என்று சொல்வார்.
இறைவன் ஏன் மனிதனை படைக்க வேண்டும் என்ற கேள்வி வருவதற்கு முன் இறைவன் எத்ற்காக படைக்கிறான்? என்ற கேள்வியும் வரவே செய்கிறது.
لَخَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَكْبَرُ مِنْ خَلْقِ النَّاسِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ
நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைப்பது, மனிதர்களைப் படைப்பதை விட மிகவும் பெரிதாகும் – எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள். (அல் குர்ஆன் 40:57)
இந்த இறைவசனம் மூலம் நமக்கு இறைவன் இந்த வானத்தையும் பூமியையும் படைத்தான், அந்த படைப்பு மனிதர்களைவிட சிறந்ததென்று தெரிய வருகிறது. ஆகவே இறைவன் ஏன் படைக்கிறான் என்ற கேள்வி இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
ஒரு சிற்பி இருக்கிறான் ஆனால் அவன் சிலை எதுவும் செதுக்கவில்லை. நாம் அவனை சிற்பி என்று ஏற்றுக்கொள்வோமா? ஒரு ஓவியன் இருக்கிறான் ஆனால் அவன் எந்த ஓவியமும் வரையவில்லை நாம் அவனை ஓவியன் என்று ஏற்றுக்கொள்வோமா. ஆக ஒரு நல்ல சிற்பியென்றால் அவனது சிலையை பார்த்தே நாம் முடிவுசெய்கிறோம். ஒரு நல்ல ஓவியனென்றால் அவனது ஓவியத்தைப் பார்த்தே முடிவு செய்வோம்.
ذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمْ ۖ لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ ۚ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ وَكِيلٌ .
அவன்தான் அல்லாஹ் – உங்கள் இறைவன்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான்; ஆகவே, அவனையே வழிபடுங்கள் – இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன். (அல் குர்ஆன் 6:102)
அல்லாஹ் மிகத்தெளிவாக இந்த வசனத்திலே அவனே படைப்பாளன் என்று கூறுகிறான்.
அல்லாஹ் தன்னை ஹாலிக் (படைப்பாளன்) என்று கூறிக்கொள்கிறான். அதை மனிதர்களாகிய நாம் உணர்வதற்காக அனைத்தையும் படைக்கிறான், படைத்துக்கொண்டே இருக்கிறான்.
அல்லாஹ் படைக்கிறான் சரி. இதிலென்ன அதிசயம் இருக்கிறது மனிதன் கூடத்தான் படைல்கிறான் என்று பகுத்தறிவுவாதிகள் சொல்லக்கூடும். அல்லாஹ்வின் படைப்பிற்கும் மனிதனுடைய படைப்பிற்கும் உள்ள வித்தியாசத்தயும் நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
மனிதனுடைய படைப்பு என்பது ஏற்கனவே இந்த உலகத்தில் இருக்கக் கூடிய பொருளை வேறு ஒரு பொருளாக படைப்பது. இரும்பைக்கொண்டு
இங்கே மற்றொரு முக்கியமான விஷயத்தை அனைவரும் கவனிக்க வேண்டும். எப்படி ஒரு சிலையை பார்த்து நாம் சிற்பியை தெரிந்து கொள்கிறோமோ, ஒரு ஓவியத்தை பார்த்து ஓவியரை தெரிந்து கொள்கிறோமோஅதுபோல இறைவனின் படைப்புகளை பார்த்து நாம் இறைவனை உணர்ந்து கொள்கிறோம் அவ்வளவே.
சிலையை பார்த்து சிற்பியை தெரிந்து கொள்வதனால் சிலை நிச்சயம் சிற்பியாகிவிட முடியாது. ஓவியத்தை பார்த்து ஓவியரை தெரிந்து கொள்வதனால் ஓவியம் ஓவியராகிவிட முடியாது.சிற்பி சிற்பிதான் சிலை சிலைதான்.ஓவியர் ஓவியர்தான் ஓவியம் ஓவியம்தான். அதுபோல அல்லாஹ்வால் படைக்கப்பட்ட அனைத்து படைப்புகளும் நமக்கு அல்லாஹ்வை அவனின் ஆற்றலை உணர்த்துகின்றன. ஆனால் படைக்கப்பட்ட எந்த பொருளும் அல்லாஹ் ஆக முடியாது.
உங்களில் நீங்கள் அல்லாஹ்வை உணருகிறீர்கள். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் திடமான கை கால்களை கொடுத்திருக்கிறான். நல்ல கண் பார்வையை கொடுத்திருக்கிறான். யாருடைய உதவியுமில்லாமல் உங்களுடைய உடல் இயக்கம் அழகாக இயங்குகிறது. இங்கே உங்களில் நீங்கள் அல்லாஹ்வை உணருகிறீர்கள் அவனது படைப்பின் ஆற்றலை உணருகிறீர்கள். ஆனால் நீங்கள் ஒருகாலும் அல்லாஹ் ஆகிவிட முடியாது.
فَاطِرُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا وَمِنَ الْأَنْعَامِ أَزْوَاجًا ۖ يَذْرَؤُكُمْ فِيهِ ۚ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ ۖ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ
வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (அல் குர்ஆன் 42:11).
இந்த இறைவசனம் அல்லாஹ்வுக்கு நிகராக எந்த பொருளுமில்லை என்பதை நமக்கு விளக்குகிறது. ஆகவே இறைவனால் படைக்கப்பட்ட பொருட்களினால் நாம் அல்லாஹ்வை உணரவேண்டுமே தவிர படைக்கப்பட்ட எந்த பொருளையும் இறைவனாக்கிவிடக்கூடாது.
இறைவன் ஏன் படைக்கிறான் என்பது நமக்கு இப்பொழுது புரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.
இறைவனை எதற்காக வணங்க வேண்டும்?
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல் குர்ஆன் 51:56)
அல்லாஹ் குர்ஆனிலே மிகத் தெளிவாக சொல்கிறான் மனிதர்கள் தன்னை வணங்குவதற்காக மட்டுமே படைத்தேன் என்று.
மனிதன் எதற்காக இறைவனை வணங்க வேண்டும்? – நியாயமான கேள்விதானே.
நான் படித்தேன், நான் வேலை தேடினேன், நான் வேலை பார்த்தேன், நான் என் குடும்பத்தை காப்பாற்றுகிறேன். ஒரு வேலை சாப்பாடு என்றாலும் நான் சம்பாதித்துதான் சாப்பிட்டாக வேண்டும். அப்படியிருக்க நான் ஏன் இறைவனை வணங்க வேண்டும்.நியாயமான கேள்விதானே.
நமது உடலிலே 43 ஜொடி நரம்புகள் நம்மை செயல்பட வைக்கின்றன. நமது உடம்பிலுள்ள நரம்புகள் அத்தனையும் வெளியில் எடுத்து ஒரே நேர் கோட்டிற்கு கொண்டு வருவோமேயானால் அது 1,00,000 மைல்கள் நீண்டு கொண்டேசெல்லும் என்பது அறிவியல் உண்மை.நமது பூமியினுடைய சுற்றளவு வெறும் 25000 மைல்கள் மட்டுமே. நமது நரம்புகளை வைத்து இந்த பூமியை 4 முறை சுற்றி வந்துவிடலாம்.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு 8000 மைல்கள். இந்த பயணத்திற்காக எத்தனை பாதுகாப்புகள், ஏற்பாடுகள் அப்படியிருந்தும் சில நேரங்களில் விமானம் விபத்துக்குள்ளாகி அத்தனைபேரும் உருத்தெரியாமல் போய்விடுவதை நாம் பார்க்கத்தானே செய்கிறோம்.
அப்படியிருக்க நமது அமெரிக்க பயணத்தைவிட பலமடங்கு பெரியதான நமது நரம்புகள் யாருடைய உதவியுமின்றி அழகாக செயல்படுகிறதே. இதற்காக நீங்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டாமா?
ஒருவர் மருத்துவமனையிலே சிறுநீர் வெளியாகவில்லையென அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு சிறுநீர் வெளியாக வேண்டுமென்று இலட்சக்கணக்கில் செலவு செய்து மருத்துவர்கள் அவர் சிறுநீர் வெளியாக உதவி செய்கின்றனர். ஆனால் பாதிக்கப்பட்டவருக்கோ ஒவ்வொறு முறை சிறுநீர் வெளியேற்றப்படும்போதும் உயிர்போகிற வலி. அதற்காக மருத்துவரை திட்டமுடியுமா. திட்டினால் பைத்தியக்காரன் என்றுதானே சொல்லுவோம்.
இலட்சக்கணக்கில் செலவு செய்தும் மருத்துவரால் வலி இல்லாமல் சிறுநீரை வெளியேற்ற முடியவில்லை. ஆனால் ஆயுல் முழுவது, எந்தவித வலியுமின்றி உனக்கு சிறுநீர் வெலியாகின்றதே அதற்காக நீ இறைவனை வணங்க வேண்டாமா?
ஒருவரின் மர்ம உருப்பிலிருந்து இரத்தம் வடிகிறது மிகப்பெரிய துன்பம். ஆனால் அதே மர்ம உருப்பிலிருந்து விந்து வெளியாகும்பொழுது நமக்கு இன்பமாகத்தானே இருக்கிறது. வருகிற இடம் என்னவோ ஒன்றுதான். அது விந்தாக இருந்தால் இன்பம். இரத்தமாகயிருந்தால் துன்பம். நமக்கு இன்பத்தை தருகின்ற அந்த இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாக நாம் அந்த இறைவனை வணங்க வேண்டாமா?
இறைவன் தேவைகளற்றவன் :
அல்ஹம்துலில்லாஹ், நாம் இறைவனை ஏற்றுக்கொண்டோம். அவனை வணங்குகிறோம். இறைவனை நாம் வணங்குவதினால் அவனுக்கு எந்த இலாபமும் வணங்காமல் விட்டுவிட்டால் அவனுக்கு எந்த நஷ்டமுமில்லை என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதை பின்வரும் இறை வசனம் நமக்கு தெளிவாக்குகிறது.
وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ اتَّقُوا اللَّهَ ۚ وَإِن تَكْفُرُوا فَإِنَّ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۚ وَكَانَ اللَّهُ غَنِيًّا حَمِيدًا
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம். உங்களுக்குமுன் வேதம் கொடுக்கப்பட்டவர்களையும், உங்களையும் அல்லாஹ்வுக்கே பயந்து நடக்குமாறு (வஸிய்யத்து) உபதேசம் செய்தோம்; நீங்கள் அவனுக்கு மாறு செய்தால் (அவனுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை) – நிச்சயமாக வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும் அல்லாஹ் எவர் தேவையும் அற்றவனாகவும், புகழுக்கு உரியவனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன் 4:131)
இறைவனுக்கு தன்னை மனிதன் வணங்க வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருந்திருப்பின் அவன் நிச்சயமாக முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மிஹ்ராஜ் பயணத்தில் கொடுக்கப்பட்ட 50 வேலை தொழுகையை 5 வேலையாக குறைத்திருக்க மாட்டான்.
ஒருவன் திருடுவானேயாயின் அவனின் கையை வெட்டச்சொல்கிறான் அல்லாஹ், கை வெட்டப்பட்டால் எந்த ஒரு மனிதனாலும் முழுமையாக ஸஜ்தாவை நிறைவேற்றவே முடியாது. அது போல ஒருவன் கொலையோ விபச்சாரமோ செய்வானாயின் அவனை அல்லாஹ் கொல்லச் சொல்கிறான்.இறைவனுக்கு தன்னை வணங்குவது மட்டுமே முக்கியமென்றால் கொலை செய்ய சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஒருவன் கொல்லப்படுவதின் மூலம் அவனை வணங்குவதிலே ஒரு மனித எண்ணிக்கை குறையவே செய்கிறது.
وَرَبُّكَ الْغَنِيُّ ذُو الرَّحْمَةِ ۚ إِن يَشَأْ يُذْهِبْكُمْ وَيَسْتَخْلِفْ مِن بَعْدِكُم مَّا يَشَاءُ كَمَا أَنشَأَكُم مِّن ذُرِّيَّةِ قَوْمٍ آخَرِينَ
உம் இறைவன் தேவைகளற்றவன்; மிக்க கருணையுடையவன் – அவன் நாடினால் உங்களைபோக்கி உங்களுக்கு பிறகு, உங்களை அவன் இதர மக்களின் சந்ததியிலிருந்து உற்பத்தி செய்தது போன்ற – தான் நாடியவரை உங்களுக்கு பதிலாக ஆக்கி விடுவான். (அல் குர்ஆன் 6:133)
இந்த இறைவசனம் மூலம் அல்லாஹ் அவன் நினைத்தால் நம்மை அழித்துவிட்டு நம்மைவிட மேலான ஒரு சமுதாயத்தை உருவாக்கிட முடியும் என்பதை கூறுகிறான்.இதன் மூலம் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நம்முடைய வணக்கம் தேவையில்லை. அவன் தேவைகளற்றவன். ஆதலால் நாம் அவனை வணங்காமல் விட்டு விடலாமா? நிச்சயமாக இல்லை. அவனுக்கு நமது வணக்கம் தேவையில்லை ஆனாலும் நாம் வணங்கித்தான் ஆகவேண்டும்.
இறைவனை வணங்கினால் மட்டும் போதுமா?
ஷைத்தான் அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தானா? நிச்சயமாக அவன் அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளாமல் இல்லை. அவன் அல்லாஹ்வை வணங்கிய அளவிற்கு நிச்சயம் மனிதர்களாகிய நாம் அல்லாஹ்வை வணங்கியிருக்கவே முடியாது. ஆனாலும் அவன் ஏன் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆலானான்.
குறைஷிகள் கூட முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்பாகவே அல்லாஹ்வை ஏற்கத்தான் செய்தார்கள். அதனால் தான் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தந்தைக்கு அப்துல்லாஹ் (அல்லாஹ்வுடைய அடிமை) என்று பெயர் வைத்தார்கள்.
பகுத்தறிவுவாதிகளைத் தவிர எல்லோரும் ஒருவகையில் அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளவே செய்கிறோம். யூதர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள்
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் தோன்றிய பிர் அவுனும் கூட அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளவே செய்தான். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் இன்று நான் மழை பொழிய வைப்பேன் என்று சவால் விட்டுவிட்டு மறைமுகமாக மூஸாவுடைய இறைவனே இன்று மழை பொழியச் செய்வாயாக என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவே செய்தான். மழையும் பொழியவே செய்தது.ஆக பிர் அவுனும் அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளவே செய்தான் ஆனாலும் அவன் நேர்வழி பெற்றானா நிச்சயமாக இல்லை.
وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ لَمْ يَكُن مِّنَ السَّاجِدِينَ
قَالَ فَاهْبِطْ مِنْهَا فَمَا يَكُونُ لَكَ أَن تَتَكَبَّرَ فِيهَا فَاخْرُجْ إِنَّكَ مِنَ الصَّاغِرِينَ
நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை (அல் குர்ஆன் 7:11).
“இதிலிருந்து நீ இறங்கி விடு; நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை; ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு – நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்” என்று அல்லாஹ் கூறினான். (அல் குர்ஆன் 7:12).
இந்த இரண்டு இறைவசனங்களும் ஷைத்தான் இறைவனை வணங்கினாலும் அல்லாஹ்வின் விருப்பத்தை நிறைவேற்றாத காரணத்தினால் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆலானான் என்பதை காட்டுகின்றன.
فَانقَلَبُوا بِنِعْمَةٍ مِّنَ اللَّهِ وَفَضْلٍ لَّمْ يَمْسَسْهُمْ سُوءٌ وَاتَّبَعُوا رِضْوَانَ اللَّهِ ۗ وَاللَّهُ ذُو فَضْلٍ عَظِيمٍ
இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள்; எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை; (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் – அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான். (அல் குர்ஆன் 3:174).
இந்த இறைவசனம் அல்லாஹ்வின் விருப்பத்தை பின்பற்றியவர்களுக்கு இறைவனின் அருள் உண்டு என்பதை உறுதிபடுத்துகிறது. ஆகவே நீங்கள் அல்லாஹ்வை வணங்கினால் மட்டும் போதாது அல்லாஹ்வின் விருப்பப்படியும் நடக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
அல்லாஹ்வின் விருப்பம் :
அல்லாஹ் மனிதர்கள் எதை பின்பற்ற வேண்டும் என விரும்புகிறான் என்பதை தெரிந்துகொள்வதற்கு முன்னால் அல்லாஹ் எதை விரும்புகிறான் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள் – அல் குர்ஆன் (3:174).
இந்த இறைவசனம் மூலம் அல்லாஹ் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிக்கிறான் நம்மையும் நேசிக்கச் சொல்கிறான் என்பது தெளிவாகிறது.இதற்கு சான்றாக நாம் பல சம்பவங்களையும் பார்க்க முடிகிறது. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் படைக்கப்பட்டவுடன் அல்லாஹ்வின் அர்ஷிலே லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மது ரஸூலுல்லாஹ் என்று இருப்பதை கண்டு இறைவா வணக்கத்திற்குறியவன் நீ, யார் இந்த முஹ்ம்மது என்று கேட்க அல்லாஹ் இந்த முஹ்ம்மதை படைக்கவிலையெனில் இந்த உலகத்தை இந்த அர்ஷை படைத்திருக்க மாட்டேன் எதையுமே படைத்திருக்க மாட்டேன் என்று சொன்னான்.
அல்லாஹ் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றிய பின்னர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 200 வருடமாக பாவமன்னிப்பு கோரியவாரு இருந்தார்கள். இறுதியாக ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவா முஹம்மதின் பொருட்டால் என்னை மன்னிப்பாயாக என்று கேட்க இறைவன் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை மன்னித்தான் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே.
قَدْ نَرَىٰ تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ ۖ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا ۚ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ۚ وَحَيْثُ مَا كُنتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ ۗ وَإِنَّ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِن رَّبِّهِمْ ۗ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ
(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை – அல் குர்ஆன் (2:144).
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விருப்பத்திற்காக அதுவரை கிப்லாவாக இருந்த பைத்துல் முகத்தஸை விட்டு காபாவை நோக்கி அல்லாஹ் தன்னை வணங்கச் சொல்கிறான் என்பதை இந்த இறைவசனம் நமக்கு தெளிவாக்குகிறது.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஹ்ராஜ் சென்று வந்த செய்தி அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஏற்றுக்கொண்டவர்களே சிலர் அதை ஏற்க தயங்கிய பொழுது அபூபக்கர் சித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னால் அது உண்மையாகத்தான் இருக்கும் என்று ஏற்றுக்கொண்டார்கள். தன்னுடைய நபி சொன்னதை உண்மைதான் என்பதை முழு ஈமானுடன் ஏற்றுக்கொண்ட அபூபக்கர் சித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை சித்தீக் என்று அழைக்குமாறு அல்லாஹ்வே கூறினான் என்பது வரலாற்று உண்மை.
இந்த சம்ப்வங்களை வைத்து அல்லாஹ் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எவ்வளவு நேசிக்கிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். ஆகவே நாமும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிக்க வேண்டும் என்பது தெரிகிறது.முஹம்மது நபி (ஸல்) அவர்களை நேசிப்பதென்றால் அவர்களை பின்பற்ற வேண்டும் என்பதே பொருள் அன்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الْأُمِّيَّ الَّذِي يَجِدُونَهُ مَكْتُوبًا عِندَهُمْ فِي التَّوْرَاةِ وَالْإِنجِيلِ يَأْمُرُهُم بِالْمَعْرُوفِ وَيَنْهَاهُمْ عَنِ الْمُنكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَالْأَغْلَالَ الَّتِي كَانَتْ عَلَيْهِمْ ۚ فَالَّذِينَ آمَنُوا بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنزِلَ مَعَهُ ۙ أُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ – அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள. (அல் குர்ஆன் 7:157).
அல்லாஹ் நமது உயிருள்ள வரையில் அல்லாஹ்வை வணங்கி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றி வாழக்கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக. ஆமீன்!
source: http://www.kiliyanur.com/allah/why_god_created_man.html