நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் தியானமும்
ஏ.பி.எம்.இத்ரீஸ்
ரிஷிகள், ஞானிகள், தீர்க்கதரிசிகளின் சமூகமாற்றத்திற்கான தொடக்க வரலாறுகள் மலை, குகை, மரத்தடிகளில் தொடங்குவதாகவே வரலாற்று நூல்கள், சுயசரிதை நூல்கள் குறிப்பிடுகின்றன. ஒரு வீட்டிலிருந்து சிந்திப்பதைவிட மரத்தடியின் ஏகாந்தம், இயற்கைச் சூழல், மரம், மனிதன் சுவாசிக்கும் அதே வாயுக்களை எதிர்நிலையில் வெளிப்படுத்துவதால் ஏற்படும் ஆசுவாசம் போன்ற சாதகமான நிலைமைகள் காணப்படுகின்றன.
அவ்வாறே மலையடிவாரம், அல்லது மலையிலுள்ள குகை என்பதுவும் உயரமான இடங்கள். ஏறிச் செல்லக்கூடியவை. புவியீர்ப்பு விசை குறைந்து காணப்படும். மூளை சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கும். மற்றப்படி மலையினால் ஞானம் பெறுவதென்பதோ அல்லது மரத்தடியினால் ஞானம் தீர்க்கதரிசனம் கிடைக்கிறது என்பதோ அல்ல. இவ்விடங்களுக்கும் சிந்தனைக்கும் நேரடியான எந்தத் தொடர்பும் இல்லை என்றே நான் கருதுகின்றேன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தன் ஆரம்ப நாட்களில் இத்தகைய ஒரு மலைக்குகையை நாடிச் சென்றதாகத்தான் அவரது வாழ்க்கைச் சரிதையை விளக்கும் சீறா நூல்கள் குறிப்பிடுகின்றன. நறுமனப்பொருட்களின் வணிகரான கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மணமுடித்ததிலிருந்து பதினைந்து ஆண்டுகள் மக்காவிலுள்ள ஹிரா என்ற மிக உயரமான மலையிலுள்ள குகையை நாடிச் சென்றார்.
தன் காலத்தில் அறேபிய யுகத்தில் நிலவிய வறுமை, சுரண்டல், நாடோடியாக அலைதல், அயல் தேசங்களின் ஆதிக்கம் போன்றவற்றுக்கு மத்தியில் அரபிகளின் கோத்திரச் சண்டைகளும் குலப்பிரச்சினைகளால் ஏற்பட்ட நெருக்கடிகளிலிருந்து மீழ்வதற்கான ஒரு தேடலையே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் வாழ்நாளில் நிகழ்த்திக் கொண்டிருந்தார்.
சுமார் 600 அடி உயரமான இந்த மலையில் ஏறி அமர்வதற்கான தேவை என்ன என்று நாம் பார்க்கின்ற போது இந்த சிந்தனையின் தேடலின் பேரவா அல்லது ஞானப்பித்துதான் காரணம் எனக் கூறலாம். சாதாரண புழக்கத்திலுள்ள இடமொன்றைத் தெரிவு செய்யாமல் இத்தகைய இடத்தை நோக்கி சென்றமை உள்நோக்கிய அகமனத்தின் உந்து சக்தியே காரணமாகும்.
அந்த இடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன செய்தார் என்பதை குறிப்பிட ‘தஹன்னத்’ என்ற சொல் பாவிக்கப்படுகின்றது. இதனைத் தமிழில் தியானம் என்று பெயர்க்கலாம். தியானம் என்பது எதுவெல்லாம் அடங்காது என்பதையும் இங்கு நாம் தெளிவு படுத்திக் கொள்வது அவசியமாகும். அதாவது துஆ (பிரார்த்தனை) இபாதா (வழிபாடு) என்பவை தியானத்தை குறிக்கமாட்டாது. உலகிலோ மறுமையிலோ அல்லது வேறு வகையிலோ நமக்குத் தேவையானவற்றை இறைவனிடம் அல்லது ஒரு சக்தியிடம் மன்றாடிக் கேட்பதற்குத்தான் பிரார்த்தனை அல்லது வேண்டுதல் என்று சொல்லப்படுகிறது. இது ஒரு போதும் தியானம் அல்ல.
தியானத்திற்கு ஒரு. முன்னிலைச் சக்தியொன்றும் அவசியமில்லை. எந்தவொரு கட்டத்திலும் உலக லாபங்களுக்காக அல்லது சுவனத்திற்குப் போவதற்கான ஒரு கதவு அல்ல. மாறாக தியானம் என்பது ஆழமான சிந்திப்பு முயற்சியாகும். ஆழமான அறிதல் நிலையாகும். முழுமையான இருத்தல் நிலையில் ஒன்றை அடைவதற்கான எத்தனமே தியானமாகும். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதற்கு முன் வேதத்தைப் பற்றியோ, விசுவாசத்தைப் பற்றியோ எதுவும் அறிந்தவர் அல்ல என்றுதான் அல்குர்ஆன் குறிப்பிட்டுள்ளது.
தொழுகை, கூட்டுப் பிரார்த்தனை போன்ற வழிபாடுகளுக்கும் தியானத்திற்கும் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவை இரண்டும் செயற்படும் தளங்கள் வெவ்வேறானவை. சமூக மாற்ற சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள் எல்லோரும் ஏதோவொரு தனிமைக்குள் அல்லது ஏகாந்தமான இடத்தில் தம்மை ஆட்படுத்திக் கொண்டு தியானித்திருக்கிறார்கள். தியானத்தை யாரும் யாருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமும் கிடையாது.
ஒருவர் தனது மனதைக் கவனித்து அதன் இயல்புகளை உணர்ந்து மெல்ல மெல்ல ஒருங்குபடுத்துவதற்கு புற உதவி தேவையில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவிலிருந்த ஹனீப்களின் (ஏகத்துவவாதிகள்) வகுப்புக்களுக்கு சென்று வந்துள்ளார். ஆனால் அவற்றில் பெரியதொரு வழிகாட்டல் கிடைத்ததற்கான சான்றுகளை அறிய முடியவில்லை.
தஹன்னத் – தியானத்தின் வழிமுறைகளை – மனதைக் குவியச் செய்தல், மனதை அவதானித்தல், மனதை பனாவுடைய நிலையில் கரையவைத்தல் என்ற மூன்று படித்தரங்களை குறிப்பிடலாம்.
முதலாவது படித்தரம் மனதை குவியச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவதாகும். அறபு மொழியில் மனதை குறிப்பிட பல்வேறு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் ஒன்று கல்பு ஆகும். புரளுதல், அலைதல், சுற்றிவருதல் போன்ற பொருள்களிலேயே இது பயன்படுத்தப்படுகிறது. எனவே அலைபாயும் மனதில் இயல்புக்கு நேர் எதிரான செயல்பாடுதான் மனதை குவியச் செய்வதாகும். இதன் மூலம் மனதில் கட்டற்ற இயக்கத்தை மெல்ல மெல்ல கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதாகும். இது மிகமிக கஷ்டமான பணியாகும். எதை நினைக்க்க்கூடாது என்று நினைக்கிறோமோ அத்தகைய எண்ணங்கள்தான் மனதில் அதிகமாகத் தோன்றும். அதேநேரம் அவ்வெண்ணங்களை அவதானிக்கின்ற, அவற்றை அடக்குகின்ற எண்ணங்களும் எழ ஆரம்பிக்கும்.
இவ்வாறு மனதைக் குவியப்படுத்த முயற்சிக்கும் போது தவிர்க்க முடியாமல் மனதை அவதானிக்கவும் ஆரம்பிக்கின்றோம். இதனால் மனம் எப்படி இயங்குகிறது என்பதை மெல்ல மெல்ல புரிந்து கொள்கிறோம். தியானத்தில் இருக்கும் போது ஒருவர் எப்படிப் பட்டவர் என்பது தெரியவரும். அல்குர்ஆன் மனதைக் குறிப்பதற்கு நப்ஸ் என்ற சொல்லையும் கையாள்கிறது. தீமையைத் தூண்டும் மனம், மனிதன் அவ்வப்போது புரியும் தவறுகளை தட்டிக்கேட்கும் மனச்சாட்சி என்ற மனம், அமைதியடைந்த மனம் என்று மூன்று நிலைகளில் பிரித்து விளக்குவதைக் காணலாம். எனவே தியானத்தின் போது ஒரு அற்ப ஆசைகள், சிறுமை பெறுமைகள் எல்லாமே புரியவரும்.
அந்த அறிதல் மூலம் ஞானிகள், சிந்தனையாளர்கள் அவற்றை எல்லாம் தாண்டுகிறார்கள். தியானம் பல காலகட்டங்களில் படிப்படியாக நிகழ்ந்து ஒரு கட்டத்தில் சில கணங்கள் மனமிலா நிலையை அடைகிறார்கள். அதுதான் நுபுவத் (தரிசனம்) என்று சொல்லப்படுகிறது. அந்த ஒரு கணத்தில் அறிவதை எத்தனை நூல்கள் படித்தாலும் எத்தனை ஊடாட்டங்களை நிகழ்த்தினாலும் அறியமுடியா பேருண்மைகளை சொல்வார்கள். அதுவே தியானமாகும். இதை நோக்கி அமைக்கப்பட்ட பாதைகள்தான் ஏனைய வழிபாடுகளாகும்.
வழிபாடுகள் வழிகாட்டும் பாதைகளே. அவை போய்ச்சேரும் இடமல்ல. அவை கண்ட்டையும் தரிசனமுமல்ல. ஆனால் இன்று வழிபாடுகள் எந்த ஒரு சமூக மாற்றத்தையும் நிகழ்த்த முடியாத வங்குரோட்டுத்தனத்தை அடைந்துவிட்டன. வெற்றுச் சடங்குகளாக மாறிவிட்டன. அல்லது வழிபாட்டிடங்கள், ஆன்மீகத் தளங்கள் வணிக மையங்களாக ஆகிவிட்டன. வழிபாடுகளில் உட்புகுந்துவிட்ட நூதனமான அம்சங்களை வைத்துக் கொண்டு மேலோட்டமான சர்ச்சைகளில் ஈடுபட்டதால் வழிபாடுகளின் உயிர்நாடி மரித்துவிட்டது.
ஒவ்வொரு வழிபாடும் முன்னைய சமூகங்களுக்கு தீர்க்கதரிசிகள் காட்டிக் கொடுத்த வழிமுறைகள்தான். அவற்றை மிகச்சரியாக பின்பற்றாமைதான் பிரச்சினைக்கான காரணமாகும். எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிபாடுகளில் எத்தகைய மனநிலையை கொண்டிருந்தார்கள் என்று ஆராய்வதும் விவாதிப்பதும்தான் இன்றைய தேவையாகும்.
ஆசியப் பண்பாட்டில் தொன்மைக்காலமாக இருந்துவரும் யோக முறைகளைப் பயில்வதற்காக தற்காலத்தில் பல்வேறு அமைப்புக்கள் செயற்பட்டு வருகின்றன. உலக அளவில் அவ்வழிமுறைகளைப் பரிந்துரை செய்வதற்கான முறையில் அவர்கள் யோகத்தின் படித்தரங்களை ஒரு பயில்வு முறையாக வளர்த்துச் சென்றுள்ளனர். இன்றைய மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கு உளவளத்துறை நிபுனர்கள் அவற்றைப் பரிந்துரைக்கின்றனர். ஆனால் நாம் வழிபாடுகளிலுள்ள அற்பவிசயங்களுக்காக நேரத்தையும் பணத்தையும் விரையமாக்குகின்றோம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கால் வலிக்குமளவுக்கு தொழுதார்கள் என்பதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் கண்குளிர்ச்சியைக் கண்டார்கள் என்பதும் இந்த தரிசனத்தை அடைந்ததையே காட்டுகின்றது. சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஏதோவொரு தரிசனத்தை அவர்கள் அதனூடாகக் கண்டுள்ளார்கள். அந்த சிந்திப்பு முயற்சியின் பெறுபேறாக கண்டடைந்த பேருவகைதான் அது.
ஒவ்வொரு மனிதனும் கொஞ்சநேரமேனும் எதையாவது தியானித்துக் கொண்டே இருக்கிறான். நாம் பஸ்ஸில் பயணம் செய்யும் போது ஜன்னலோரத்தில் வசதியாக அமர்ந்து கொண்டால் கடந்தகால நினைவுகள் ஒரு மெகா தொடர்போல ஓடிக்கொண்டே இருக்கிறது. எனவே ஒருவர் மௌனமாக இருக்கிறார் என்பது சும்மா இருப்பது அல்ல. அவர் சிந்தித்துக் கொண்டு தியானித்துக் கொண்டே இருக்கிறார். அது மனதின் இயல்பான செயற்பாடாகும். இதைத்தான் முஸ்லிம் உளப்பண்பாட்டு அறிஞர்கள் அஃமாலுல் குலூப் என்று அழைக்கின்றனர். இதைத் தமிழில் மனச்செயல் என்று பெயர்க்கலாம். அதுவொரு செயல்பாடு ஆகும்.
ஒவ்வொரு கணமும் மனம் நமக்கு தன்னைக் காட்டியபடியே இருக்கின்றது. நாம் நம்மனதை உணர்ந்த மறுகணமே மனம் இரண்டாகப் பிரிந்து ஒரு பகுதி நாம் ஆகமாறி மறுபகுதி நம் மனமாக ஆகி நாம் மனதைப் பார்க்க ஆரம்பிக்கின்றோம். இது மிகவும் அற்புதமான ஒரு செயல்பாடாகும். ஏனெனில் நாம் பார்க்கிறோம் என உணர்ந்ததுமே நாம் பார்ப்பதை நாம் பார்க்க ஆரம்பிக்கின்றோம். இந்த மனச்செயல் நின்று அது இல்லாமலாகிவிடுவதைப் போன்ற ஒரு தருணமும் நமக்கெல்லாம் ஏற்படுவதுமுண்டு. ஒரு புத்தம் புதிய அணுபவத்தை நாம் அறியும் போது சில கணம் நாம் மணமில்லாதவர்களாக மாறிவிடுகிறோம். உடனே நாம் அப்படி இருந்த்தை உணரும் போது அந்த நிலை கலைந்து மனம் செயல்பட ஆரம்பித்தும் விடுகின்றது.
திடீரென ஒரு பயணத்தில் இயற்கைக் காட்சியை காணும் போது சில கணங்கள் நாம் அப்படியாகிவிடுகிறோம். இக்கணங்களையே மெய்மறத்தல் என்று சொல்லப்படுகின்றது. அந்த மெய்மறுக்கும் தருணத்தில் ஓயாது ஓடிக் கொண்டிருக்கும் நம் மணம் இல்லாமலாகிவிடுகிறது. ஒரு திரைபோல அது விலகிவிடுகிறது. அதற்கப்பால் உள்ள இன்னொரு ஆழம் நமக்காக திறக்கப்படுகிறது. நபிகளுக்கு நாற்பதாவது வயதில் கிடைத்த பேரனுபவம்தான் அதுவாகும். அவர் பதினைந்தாண்டுகள் செய்த முயற்சியின் பேராகக் கிடைத்த ஒன்றுதான்.
ஒருவர் சிந்தனையாளராக இருப்பதற்கும் எழுத்தறிவில்லாதவராக இருப்பதற்கும் இடையில் எவ்வித தொடர்புமில்லை. எழுத்தறிவுள்ளவரால் மட்டுமே சிந்திக்க முடியும் என்று கூறுவது அபத்தமாகும். நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் பாடசாலைப் பக்கமே தலைகாட்டியதில்லை. எனவே தியானம், சிந்திப்பு, தீர்க்கதரிசனம் என்பதற்கும் எழுத்தறிவுக்கும் எந்தத்தொடர்பும் கிடையாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மி (எழுதப்படிக்கத் தெரியாதவர்) என்பதற்காக அவர் சிந்திக்க முடியாதவர் என்பதாகிவிடாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நுபுவத் தரிசனம் கிடைக்காவிட்டாலும் ஒரு நல்ல சீர்திருத்த வாதியாக இருந்திருப்பார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுயசரிதையை முதன்முதலாக எழுதிய இப்னு இஸ்ஹாக் கூறுகின்றார். உம்மி என்பதற்கு விளக்கம் கொடுத்த எந்தவொரு பழைய இஸ்லாமிய அறிஞரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இஜ்திஹாத் செய்யும் ஆளுமையை மறுத்துரைக்கவில்லை.
source: http://idrees.lk/?p=1824