முஸ்லிம் பெண்களின் அரசியல் பங்கேற்பு!
[ ஓர் சிறந்த ஆய்வு ]
ஜிஃப்ரி ஹாஸன்
[ நமது முஸ்லிம் பெண்களைப் பொறுத்தவரை அரசியல் பங்கேற்பு விடயத்தில் ஆண்களை விடவும் மற்றைய சமூகப் பெண்களை விடவும் மிகவும் குறைந்த மட்டத்திலேயே உள்ளனர். இதற்குப் பல காரணங்களுள்ளன. முஸ்லிம் பெண்களின் அரசியல் தலைமைத்துவம் (Political Leadership) மற்றும் அரசியல் பங்கேற்பு குறித்த இஸ்லாமிய நிலைப்பாடு குறித்து சில தவறான புரிதல்கள்/ புனைவுகள் காணப்படுவது.
இதில் மிகப் பிரதான காரணமாகும். உண்மையில், இத் தவறான புரிதல்கள் பெண்களை அரசியலில் மட்டுமல்ல, ஏனைய நிர்வாக ஆட்சி அதிகாரத்துறைகளிலிருந்தும் தூரப்படுத்தக் கூடியவை என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும். எனவே, முதலில் முஸ்லிம் பெண்களது அரசியல் தலைமைத்துவம் மற்றும் அவர்களின் அரசியல் பங்கேற்புக்குச் சவாலாக விளங்கும் பண்பாட்டுக் காரணங்கள் குறித்தும் அவற்றின் உண்மைத் தன்மை குறித்தும் நோக்குவது பொருத்தமானது.
பெண்களின் பங்கேற்பு அரசியல் குறித்துப் பேசுவதை சிலர் மேற்குலக பெண்ணிலை வாதக் கருத்தியலாக (Feminism), அதன் பாதிப்பாக நோக்கத் தலைப்படலாம். ஆனால் அது தவறான புரிதலாகும். நாம் உண்மையில் முஸ்லிம் பெண்களின் அரசியல் பங்கேற்பு குறித்துப் பேசுவதன் நோக்கம் முஸ்லிம் பெண்கள் அரசியல் சமூகமயப்படுவதன் மூலம் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதேயாகும். அதேநேரம், பெண்களுக்கேயுரியதான சில பிரச்சினைகளை நமது சமூகத் தளத்தில் ஆண்களால் அணுகப்படும் விதம் பெண்களுக்கு உவப்பானதாக இல்லை. முஸ்லிம் பெண்களும் இந்த சங்கடங்களுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, இவர்களின் பிச்சினை உரிய முறையில் அணுகப்பட்டு தீர்வு காணப்படவும் முஸ்லிம் பெண்களினதும் தனித்த அரசியல் செயற்பாடு ஏதோ ஒரு விதத்தில் காரணமாக அமையலாம்.
இன்று நமது நாட்டில் முஸ்லிம் பெண்கள் சில கல்வி நிறுவனங்களில் தமது இஸ்லாமிய கலாசார முறையில் ஆடைகளை அணிய முடியாத சூழல் காணப்பட்டது. அதிகரித்த முஸ்லிம் பெண்களின் அரசியல் பலம் சிலவேளை இத்தகைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளியாக அமையலாம்.]
முஸ்லிம் பெண்களின் அரசியல் பங்கேற்பு!
தோமஸ் மன் உடைய “மனிதனின் விதி தற்காலத்தில் அரசியல் வாயிலாகத் தன் அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது” என்ற பிரபலமான வாசகத்தோடு இந்தக் கட்டுரையைத் தொடங்குகிறேன். மனிதனின் பெரும்பாலான நடவடிக்கைகளை தீர்மானிக்கும் சக்தியாக இன்று அரசியல் வளர்ச்சியடைந்துள்ளது. அதேநேரம் வெளிப்படையாக ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அளவிட சமூகவியலாளர்கள் பயன்படுத்தும் அளவுகோளாகவும் அரசியலுள்ளது. எனினும், இன்றைய அரசியல் வெறும் அதிகாரத்துவம் மட்டுமே மலிந்த ஒரு துறையாகவும், இலஞ்சம், ஊழல் மலிந்த சமூக அக்கறையற்றதும், நேர்மையற்றதுமான வன்முறையான ஒரு விடயமாகவுமே நடைமுறையிலுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.
சமகால உலகில் மனிதனின் எல்லா விடயங்களிலும் செல்வாக்குச் செலுத்துகின்ற, மனிதனை விட்டும் பிரிக்க முடியாத முக்கியத்துவமுடையதாக விளங்கும் இவ்வரசியல் இவ்வாறு வன்முறையானதாக அதிகாரத்துவப் போட்டியாளர்களின் இழுப்புக் கயிறாக இருப்பதை உண்மையில் இஸ்லாமோ,நேர்மையாகச் சிந்திக்கின்ற எந்தவொரு தனிமனிதனோ ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எனவே, இத்தகைய அரசிலை மாற்றி ஓரளவுக்கேனும் மக்கள் நல அரசியலை உருவாக்க வேண்டுமானால் நாம் பங்கேற்கும் அரசியல் கலாசாரமொன்றை நம் மத்தியில் வளர்த்தெடுக்க வேண்டும்.
நமது முஸ்லிம் பெண்களைப் பொறுத்தவரை அரசியல் பங்கேற்பு விடயத்தில் ஆண்களை விடவும் மற்றைய சமூகப் பெண்களை விடவும் மிகவும் குறைந்த மட்டத்திலேயே உள்ளனர். இதற்குப் பல காரணங்களுள்ளன. முஸ்லிம் பெண்களின் அரசியல் தலைமைத்துவம் (Political Leadership) மற்றும் அரசியல் பங்கேற்பு குறித்த இஸ்லாமிய நிலைப்பாடு குறித்து சில தவறான புரிதல்கள்/ புனைவுகள் காணப்படுவது இதில் மிகப் பிரதான காரணமாகும். உண்மையில், இத் தவறான புரிதல்கள் பெண்களை அரசியலில் மட்டுமல்ல, ஏனைய நிர்வாக ஆட்சி அதிகாரத்துறைகளிலிருந்தும் தூரப்படுத்தக் கூடியவை என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும். எனவே, முதலில் முஸ்லிம் பெண்களது அரசியல் தலைமைத்துவம் மற்றும் அவர்களின் அரசியல் பங்கேற்புக்குச் சவாலாக விளங்கும் பண்பாட்டுக் காரணங்கள் குறித்தும் அவற்றின் உண்மைத் தன்மை குறித்தும் நோக்குவது பொருத்தமானது.
பெண் தலைமை குறித்த இஸ்லாமிய நிலைப்பாடு
தலைமைத்துவப் பொறுப்புகளுக்கு பெண்கள் தகுதியற்றவர்கள் என இஸ்லாம் கருதுகிறது. எனவே, அரசியல்,நிர்வாகம், கல்வி, மற்றும் இன்னபிற துறைகளிலும் பெண்கள் தலைமைத்துவம் வகிக்க முடியாது என நம்மில் சிலர் எண்ணுகின்றனர். இதற்கு அவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரம் காட்டுகின்றனர் “பெண்களிடம் தங்கள் பொறுப்புக்களை ஒப்படைக்கும் ஒரு சமூகத்தினர் ஒருபோதும் வெற்றி பெற மாட்டார்கள்”. இந்த ஹதீஸிக்கு அப்பால் நடைமுறையில் இன்று பல முஸ்லிம் பெண்கள் அரசியல், நிர்வாகம், கல்வித்துறைகளில் தலைமைத்துவப் பொறுப்புக்களில் அங்கம் வகிக்கின்றனர். ஆனால் இதனை சில முஸ்லிம் பெண்களும், ஆண்களும் ஒரு தவறான நடவடிக்கையாக இன்றும் கருதுகின்றனர். உண்மையில், இந்த நிலைப்பாடு முறையான உரையாடல்கள் மூலம் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
1988 ல் பாகிஸ்தானில் ஒரு ஜனநாயகத் தேர்தல் மூலம் சர்வஜன வாக்குரிமையின் அடிப்படையில் ஒரு பெண்- பெனாசீர்பூட்டோ அந்நாட்டின் பிரதமாராக தெரிவு செய்யப்பட்டதையடுத்தே இஸ்லாமிய உலகில் முஸ்லிம் பெண்களின் அரசியல் தலைமைத்துவம் குறித்த பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இஸ்லாமிய அறிவுஜீவிகள் மத்தியில் இடம்பெற்றன.
உலகின் முன்னணி இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் இந்த விவாதப் போரில் களமிறங்கினர். இது குறித்து Fatima Mernissi தனது “Can We Women Head a Muslim State? ’ என்ற தனது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“தொடரும் இந்த விவாதத்தின் ஒரேயொரு புதுமையான அம்சம் என்னவெனில், “றியஸ்ஸ” அல்லது அரசுத் தலைமை உட்பட பொதுத்துறையின் உயர் பதவிகளை வகிப்பதற்கான பெண்களின் உரிமை 1989 ஜனவரி முதல் ஒரு முக்கியமான மதத் தலைவரால் ஆதரிக்கப்படுவதாகும். அவர் இச்சர்ச்சையில் குதித்துள்ள சாதாரண ஆலிம் அல்ல. கெய்ரோவின் மதிப்புயர்ந்த அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் புலமையாளரான மதிப்புக்குரிய ஷெய்க் கஸ்ஸாலி அவர்களேயாவர். இவருடைய தகைமை இது மட்டுமல்ல் அல்-அஸ்ஹர் பல்லைக் கழகத்தில் 1941 ல் தனது டிப்ளோமா பட்டத்தைப் பெற்ற பின், அவர் கெய்ரோவிலுள்ள அல்-உத்பா அல் கத்றா பள்ளிவாசலின் இமாமாகவும், கதீபாகவும் 1943ல் நியமிக்கப்பட்டார். 1971 ஜூலையில் அல்-ஜியர்ஸிலுள்ள அமீர் அப்துல் காதிர் பல்கலைக்கழகத்தின் சமய ஆட்சிக் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இத்தகைய தகைமையும், அறிவாற்றலும் கொண்டஷெய்க் கஸ்ஸாலி தனது ‘அஸ் சுன்னா அந்நபவிய்யா’ என்ற தனது நூல் மூலம் பெண்களின் அரசியல் தலைமைத்துவத்தை ஆதரிக்கின்றார். மேற்கூறிய ஹதீஸின் உண்மைத்தன்மை குறித்தும் அவர் சந்தேகங்களை இந்நூலில் எழுப்பியுள்ளார்.” என பாத்திமா மெர்னிஸ்ஸி குறிப்பிடுகிறார்.
அல்-கஸ்ஸாலி தனது வாதத்திற்கு குர்ஆனை ஆதாரமாக கொள்கிறார். திருக்குர்ஆனின் எறும்பு என்னும் 27ம் அத்தியாயத்தின் 23 வது வசனத்தையே கஸ்ஸாலி ஆதாரமாகக் காட்டுகிறார். இவ்வசனம் ஸபா நாட்டு அரசியைப் பற்றி பின்வருமாறு விபரிக்கின்றது.
“அங்கு அவர்களை ஆட்சிசெய்கிற ஒரு பெண்ணை நிச்சயமாக நான் கண்டேன். அவள் (அரசுக்குத் தேவையான) எல்லாப் பொருட்களும் கொடுக்கப்பட்டிருக்கிறாள். ஒரு மகத்தான சிம்மாசனமும் அவளுக்கு இருக்கிறது” (அத்-27 வ:23) குர்ஆன் அல்லாஹ்வால் அருளப்பட்ட நூல் என்றும், அதனால் ஹதீதை விட உயர் தகைமை உடையது என்றும் ஹதீஸ் மனிதர்களின் கூற்றுக்களை, அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொற்களையும், செயல்களையும் பற்றி அறிவித்த அவர்களின் தோழர்களின் கூற்றுக்களை கொண்டது என்றும் அல்-கஸ்ஸாலி கூறுகிறார். மேலும், குர்ஆன் ஸபா நாட்டு அரசியை தனது அதிகாரத்தை சிறப்பான முறையில் பயன்படுத்தி தனது மக்களை சுலைமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பணிந்து நடக்க வழிப்படுத்தியவளாக காட்டுகிறது என்றும் அவ்வகையில் ஒரு அரச தலைவியின் சாதாகமான ஒரு முன்மாதிரியாக அவள் விபரிக்கப்படுகிறாள் என்றும் கூறுகிறார்.
குர்ஆன் தெய்வீக வார்த்தை என்ற வகையில் எந்த ஹதீதையும் விட உயர் தகைமையுடையது என்று அல் கஸ்ஸாலி தன் வாதத்தை முன்னெடுத்துச் செல்கிறார். ஆகவே, இரண்டுக்குமிடையில் ஏதாவது முரண்பாடு தோன்றும் பட்சத்தில் தெய்வீக வார்த்தைகளுக்கு முதன்மை கொடுத்து அது தீர்க்கப்படவேண்டும் என்பது அவரது வாதம். மேலும் அவர் கூறுகிறார் “நான் மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புவது என்னவென்றால், நான் பெண்களுக்கு அதி உயர் பதவிகளை வழங்க வேண்டும் என்ற ஆர்வமுடையவன் அல்ல, நான் அக்கறை கொண்டிருப்பதெல்லாம் ஹதீதுக் கிரந்தத்திலுள்ள குர்ஆனுடன் முற்றிலும் முரண்படுகிற ஒரு ஹதீஸின் விளக்கம் தொடர்பாகத்தான். இந்த முரண்பாடு கருத்திற்கொள்ளப்பட்டு தீர்க்கப்பட வேண்டும்”
ஷெய்க் கஸ்ஸாலியின் இந்த ஆய்வுக் கருத்து முஸ்லிம் பெண்களின் அரசியல் தலைமை குறித்து நமது பாரம்பரிய புரிதலில் உடைப்புகளை ஏற்படுத்துகிறது. “பெண்களிடம் தங்கள் பொறுப்புக்களை ஒப்படைக்கும் ஒரு சமூகத்தினர் ஒருபோதும் வெற்றி பெற மாட்டார்கள்” என அபூபக்றா அறிவித்த இந்த ஹதீஸின் போதாமைகளையும்ஷெய்க் கஸ்ஸாலி இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இந்த ஹதீஸ் வலுவற்றதாகி விடுகிறது. அதே நேரம் அல் குர்ஆன் பெண் தலைமையை ஆதரிக்கும் ஒரு வசனத்தைக் கொண்டுள்ளது எனின், இஸ்லாம் ஒருபோதும் பெண்களின் தலைமையை மறுக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
முஸ்லிம் பெண்களது சமூக உளவியல்
நமது பெண்களின் சமூக உளவியலும் அவர்களை அரசியலிலிருந்து அந்நியப்படுத்தும் ஒரு முக்கிய பண்பாட்டுக் காரணியாக உள்ளது. அரசியல் நீக்கம் செய்யப்பட்ட இத்தகைய மனப்பாங்கு அவர்களை ஒரு குறுகிய அரசியற் கலாசாரத்துக்குள் அல்லது அகவய அரசியற் கலாசாரத்துக்குள் கொண்டு போய் நிறுத்துகிறது. அதே நேரம் பெண்களை சுயமான அரசியல் முடிவுகளை எடுப்பதிலிருந்தும் இந்த அரசியல் நீக்க மனப்பாங்கு தடுக்கிறது. பொதுவாக நமது பெண்கள் நமது பெற்றோர், கணவன் அல்லது பிள்ளைகள் ஏனைய உறவினர்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சியை அல்லது அரசியல்வாதியை அப்பாவித்தனமாக சார்ந்திருக்கின்றனர். உண்மையில் பெண்களாகிய நாம் இத்தகைய இரவல் சிந்தனைகளினடிப்படையிலும் பிறரது அபிலாஷைகளுக்கும் ஏற்ப தமது அரசியல் தெரிவுகளை மேற்கொள்வது பெண்களாகிய நமது சமூக முன்னேற்றத்திற்கு உதவப் போவதில்லை. எனவே, பெண்களின் தனித்த நேரடியான அரசியல் செயற்பாடுகளே அவர்களது தலைமை தாங்கும் ஆற்றல், சமூக உறவுகள், சுயமுன்னேற்றம் போன்றவற்றை மேம்படுத்த வழி வகுக்கும்.
இங்கு நாம் முக்கியமாக ஒன்றைக் கவனத்திற் கொள்ள வேண்டும். நாம் இப்படி பெண்களின் பங்கேற்பு அரசியல் குறித்துப் பேசுவதை சிலர் மேற்குலக பெண்ணிலை வாதக் கருத்தியலாக (Feminism), அதன் பாதிப்பாக நோக்கத் தலைப்படலாம். ஆனால் அது தவறான புரிதலாகும். நாம் உண்மையில் முஸ்லிம் பெண்களின் அரசியல் பங்கேற்பு குறித்துப் பேசுவதன் நோக்கம் முஸ்லிம் பெண்கள் அரசியல் சமூகமயப்படுவதன் மூலம் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதேயாகும். அதேநேரம், பெண்களுக்கேயுரியதான சில பிரச்சினைகளை நமது சமூகத் தளத்தில் ஆண்களால் அணுகப்படும் விதம் பெண்களுக்கு உவப்பானதாக இல்லை. முஸ்லிம் பெண்களும் இந்த சங்கடங்களுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, இவர்களின் பிச்சினை உரிய முறையில் அணுகப்பட்டு தீர்வு காணப்படவும் முஸ்லிம் பெண்களினதும் தனித்த அரசியல் செயற்பாடு ஏதோ ஒரு விதத்தில் காரணமாக அமையலாம்.
இன்று நமது நாட்டில் 50மூ க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெண்களே, முஸ்லிம் பெண்களும் இதற்குள் கணிசமாக அடங்குகின்றனர். எனினும் முஸ்லிம் பெண்களைப் பொறுத்தவரை இரண்டு பெண்களே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர். இக்கருத்து பெண்களை பாராளுமன்ற அரசியலை நோக்கித் தள்ளுவதாக சிலர் நினைக்கலாம். உண்மையில் பாராளுமன்ற மைய அரசியலில் நமக்கும் விமர்சனங்களுள்ளன. ஆனால் நமது நாட்டு அரசியல் சூழலைப் பொறுத்தவரை பாராளுமன்ற அரசியல் தவிர்க்க முடியாததாகியுள்ளது.
இன்று நமது நாட்டில் முஸ்லிம் பெண்கள் சில கல்வி நிறுவனங்களில் தமது இஸ்லாமிய கலாசார முறையில் ஆடைகளை அணிய முடியாத சூழல் காணப்பட்டது. இதையொத்த பிரச்சனைகளை சுகாதாரத் துறையிலும் நமது முஸ்லிம் பெண்கள் எதிர்நோக்குகின்றனர். இவை இன்னும் சரியான முறையில் அணுகப்பட்டு தீர்க்கப்படவில்லை. அதிகரித்த முஸ்லிம் பெண்களின் அரசியல் பலம் சிலவேளை இத்தகைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளியாக அமையலாம்.
முஸ்லிம் பெண்கள் பாராளுமன்ற அங்கத்தவர்களாவதன் மூலம் மட்டுமே இப்பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரலாம் என்றும் நாம் கருதவில்லை. உண்மையில், அரசியல் ரீதியான கூட்டு முயற்சிகள், செயற்பாடுகள் மூலமும் இதைச் சாதிக்கலாம். அதாவது பெண்கள் தங்களுக்கு மத்தியில் பங்கேற்கும் ஒரு அரசியல் கலாசாரத்தை வளர்த்தெடுப்பதன் மூலமும் தேசிய அரசியலில் அல்லது தான் சார்ந்து நிற்கும் சமூக அரசியலில் பலமான அழுத்தங்களை பிரயோகிப்பதன் மூலமும் தங்களது சமூகப் பண்பாட்டு, அரசியல், பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
ஆனால் முஸ்லிம் பெண்களின் பாராளுமன்ற அங்கத்துவம் குறித்து சில தவறான புரிதல்கள் நம் மத்தியில் காணப்படுகின்றன. இது குறித்து யூசுஃப் அல் கர்ளாவியின் ‘நாளைய முஸ்லிம் பெண்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு சில விடயங்களை முன் வைக்கின்றேன்.
பெண்கள் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்தல் விலக்கப்பட்டது அல்லது பெரும் பாவம் என்பது சிலரின் கருத்தாகும். ஆனால் விலக்கப்பட்டது (ஹறாம்) என்ற சட்டம் ஒரு தெளிவான உறுதியான ஆதாரத்தின் மூலமே பெறப்பட வேண்டும். ஏனெனில், பொருட்கள் மனிதனின் உலக நடவடிக்கைகள் அடிப்படையில் ஆகுமானவை என்பது இஸ்லாமிய சட்ட விதிகளில் ஒன்று. எனவே விலக்கப்பட்டது (ஹறாம்) என்பதற்கு உறுதியான ஆதாரம் காட்டப்பட வேண்டும்.
இந்த வகையில் பெண் பாரளுமன்றத்தில் நுழைதல் விலக்கப்படது என்று கூறுவோர் காட்டும் ஆதாரங்களையும் அவற்றின் உண்மை நிலைகளையும் ஆராய்வதினுடாக பெண்களின் பாராளுமன்றப் பிரNவுசத்துக்கான ஆதாரங்களை நோக்குவோம்.
“உங்கள் வீடுகளில் தங்கி இருங்கள்” என்ற இறை வசனம் அத்தியாயம் அஹ்ஸாபில் வரும் இவ்வசனத்தை ஆதாரமாகக் கொள்ளும் சிலர் அத்தியவசியமான தேவைகளுக்காகவன்றி ஒரு பெண் வீட்டைவிட்டுச் செல்லக் கூடாது என்ற கருத்தை தெரிவித்தனர். ஆனால் இந்த ஆதாரம் பின்வரும் சில காரணங்களால் பொருத்தமற்றதாக ஆகிவிடுகிறது.
• இந்த இறை வசனம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவியர்களை விளித்துப் பேசும் வசனத் தொடரில் வருவதாகும். நபியவர்களின் மனைவியர் மிக அதிக புனிதத்துவத்தோடு வாழ வேண்டும். அவர்களுக்கான சட்டங்கள் ஏனைய பெண்களுக்கான சட்டங்களை விட கடினமாக இருக்கும். எனவேதான் அவர்களது ஒரு நற்செயலுக்கான கூலி பன்மடங்கு என அல்-குர்ஆன் கூறுகிறது.
• இந்த இறைவசனம் இருந்தும் கூட ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒட்டகையில் போருக்காக வெளியேறிச் சென்றமை.
• நடைமுறையில் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி பாடசாலை, பல்கலைக்கழகங்கள், மதராசாக்களுக்கும் செல்கின்றனர். ஆசிரியைகளாகவும், மருத்துவர்களாகவும், நிர்வாகிகளாகவும் இன்னும் பல்வேறுபட்ட துறைகளிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர். இதனைத் தகுதி வாய்ந்த அறிஞர்கள் யாரும் மறுக்கவில்லை.
• பெண்களுக்குத் தலைமை வகிப்பதற்கும், பெண்கள் விவகாரங்களை பொறுப்பேற்று நடத்துவதற்கும் மதச்சார்பற்ற, ஒழுக்கக் கட்டுப்பாடுகளைப் பற்றி அக்கறையற்ற பெண்களே அரசியலில் நுழைந்து கொண்டிருக்கின்றனர். இவர்களை எதிர்த்துப் போட்டியிடவும், பெண்களுக்கு ஓர் இஸ்லாமியத் தலைமைத்துவத்தை ஏற்படுத்தவும் முஸ்லிம் பெண்கள் அரசியலில் இறங்குவது சமூகத் தேவையாகவுள்ளது எனலாம். தனிப்பட்ட தேவைகளுக்காக பெண் வீட்டை விட்டு வெளியேறுவதை விட சமூகத் தேவைகளுக்காக வெளியேறுவது அவசியத்திலும் அவசியமாகும்.
• பெண்களை வீட்டிலே அடைத்து வைத்;தல் குறிப்பிட்ட ஒரு காலப்பிரிவில் சட்டங்கள் முழுமையாக இறங்கி முடியுமுன்னர் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களுக்கான தண்டனையாக இருந்தது.
தீமைக்கு இட்டுச்செல்லும் அனுமதிக்கப்பட்ட செயல்கள் !!!
தீமைக்கு இட்டுச் செல்லும் அனுமதிக்கப்பட்ட செயல்களும் தடை செய்யப்பட்டவையே என்பது இஸ்லாமிய சட்டவிதிகளுள் ஒன்றாகும். இந்த விதியைக் கையாண்டு சிலர், பெண்கள் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் பெறுவதை அனுமதிக்க முடியாது என்று கூறுகின்றனர். அதாவது, தேர்தல் பிரச்சாரங்களின் போது பெண்கள் ஆண்களோடு நடமாடவும், அவர்களோடு தனித்து இருக்கவும் வேண்டி ஏற்படலாம். அந்நிய ஆணோடு ஒரு பெண் தனித்திருப்பது விலக்கப்பட்ட செயல். விலக்கப்பட்ட இந்த செயலுக்கு இட்டுச் செல்லும் தேர்தல் அங்கத்துவம் பெறலும் அதனால் விலக்கப்பட்டதாகிறது என்பது அவர்களின் வாதம்.
இஸ்லாமிய சட்ட வழக்கில் “ஸத்து தராகிஃ” என அழைக்கப்படும். இவ்விதி அளவு மீறி பிரயோகிக்கப்படும் போது எதிர்பார்க்கப்படும் தீமைகள் தடுக்கப்படுவதை விட அதிகமான நலன்கள் இழக்கப்படும என்பது கவனத்திற்கொள்ளப்பட வேண்டும்.
“ஸத்து தராகிஃ” என்ற விதியை அளவு மீறி பிரயோகித்த இஸ்லாமிய அறிஞர்கள் ஒரு காலப்பிரிவில் பெண்கள் கல்வி கற்க பாடசாலை பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவதற்கு எதிராக நின்றனர். சிலர் வாசிக்கக் கற்றுக் கொள்ளட்டும், எழுதக் கற்றுக் கொள்ளக் கூடாது. எழுதக் கற்றால் காதல் கடிதங்கள் எழுதுவது போன்ற தீமைக்கு இட்டுச் செல்லும். ஆனால் அதற்கெதிரான சக்தி வென்றது. கல்வி கற்பது ஒரு தீமையல்ல, அது நிறைய நன்மைகளுக்கு வழிவகுக்கலாம் என்பதை எல்லோரும் உணர்ந்தார்கள். எனவே இந்த சட்டவிதி அடிப்படையிலும் பெண்களின் பாராளுமன்ற அங்கத்துவம் தடை செய்யப்பட முடியாத ஒரு விடயமாகிறது.
சட்டமாக்கல்
பெண்களின் பாராளுமன்ற அங்கத்துவத்தை விமர்சிப்பவர்கள் முன் வைக்கும் மற்றுமொரு கருத்தே சட்டமாக்கலாகும். சட்டமாக்கல் சட்டமன்றத்தின் மிகமுக்கிய பணிகளுள் ஒன்றாகும். எனவே பொறுப்பு வாய்ந்த இப்பணியில் பெண்கள் ஈடுபடக்கூடாது என்கின்றனர். நமது நாட்டைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்றனர். எனவே பாராளுமன்றத்தில் இஸ்லாமிய சட்டம் உருவாக்கப்படமாட்டாது. சில வேளை இஸ்லாத்திற்கெதிரான சட்டங்கள் உருவாக்கப்படலாம். இஸ்லாம் ஆண்-பெண் இருபாலாருக்கும் உரியது. எனவே இங்கு சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களைப் பாதிக்கக்கூடிய சட்டங்கள் இயற்றப்பட்டால் அதாவது, முஸ்லிம்களின் கலாசார அரசியல் பொருளாதார உரிமைகள் மறுக்கப்படும் பட்சத்தில் அதனை எதிர்க்கும் வகையிலேயே பாராளுமன்றத்தில் அங்கம் பெறும் நமது அரசியல் வாதிகள் செயற்பட வேண்டும். இவ்வாறு கொண்டு வரப்படும் சட்டங்களில் முஸ்லிம் பெண்களைப் பாதிக்கும் சட்டங்களை இலகுவில் புரிந்து கொள்ளக் கூடிய ஆற்றல் பெண்களுக்கே உண்டு என்ற வகையிலும் பாராளுமன்ற அங்கத்துவத்தை பெண்கள் பெற்றுக்கொள்வது அங்கீகரிக்கத்தக்க விடயமாகிறது.
எனவே, இது போன்ற பல நன்மைகள் பெண்களின் பாராளுமன்ற அங்கத்துவத்தின் மூலம் கிடைக்க முடியும். ஆனால், நமது முஸ்லிம் பெண்கள் மத்தியில் இன்னும் அரசியலில் பங்கேற்கும் கலாசாரம் வளர்ந்திருக்காத இந்நிலையில் அவர்கள் தேர்தல் களத்தில் குதிப்பதோ உடனடியாக பாராளுமன்ற அங்கத்துவம் பெறுவதோ சாத்தயமில்லை.
எனவே, பெண்கள் இஸ்லாத்தின் பெயரால் போலிக் காரணங்களை முன்வைத்து தங்களின் அரசியல் பங்கேற்பை தடுக்கும் நடவடிக்கையினை நுணுக்கமாகப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம் வழங்கியுள்ள பெண் உரிமைகள் குறித்தும் குறிப்பாக அரசியல் ரீதியான பெண்களது உரிமைகள் குறித்தும் அதிகம் படிக்க வேண்டும். சமூகத் தளத்தில் நமக்கு சொல்லப்பட்டு வந்த எல்லாமே உண்மை என்று ஒத்துக் கொண்டு வாழாவிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. இதை ஒரு போதும் இஸ்லாம் விரும்புவதுமில்லை. எனவே, இது தொடர்பில் பெண்கள் ஒரு தெளிவைப் பெறுவதும், பங்கேற்பு அரசியல் கலாசாரத்தில் இணைந்து கொள்வதும் சமகாலத்தின் தவிர்க்க முடியாத தேவைகளாக மாறியுள்ளன.