ஊதாரித்தனமான செலவுகளுக்கு கடன்களை வாரிவாரி வழங்கும் வங்கிகள்!
தொழிற்கடன்களை கேட்டால் விரட்டியடிக்கும் வங்கிகள்! ஊதாரித்தனமான செலவுகளுக்கு பல்வேறு பெயர்களில் கடன்களை வாரிவாரி வழங்குகின்றன
நாடுகளை அடிமைப்படுத்த தற்போது அணு ஆயுதங்களோ, ராணுவப்படைகளோ தேவை இல்லை. அடிமைப்படுத்த வேண்டிய நாட்டின் மக்களை உளவியல் ரீதியாக, கலாச்சார பண்பாட்டு ரீதியாக, பொருளாதார ரீதியாக அடிமைப்படுத்தி்னாலே போதுமானது.
உதாரணமாக: இங்கிலாந்திடம் அடிமைகளாக இருந்த சுமார் 16 நாடுகள் மட்டுமே விளையாடும் கிரிக்கெட்டில் “உலகக் கோப்பை” போட்டி நடத்தி அடிமை மனோபாவத்தை வளர்த்தெடுக்கலாம். “அழகிப்போட்டி” என்ற பெயரில் ஆபாச கூத்துகளை நடத்தி பெண்களை பாலியல் சின்னங்களாக வெளிப்படுத்தலாம். அறிவியல் கண்டுபிடிப்புகளான கம்ப்யூட்டர், தொலைக்காட்சி உள்ளிட்ட கருவிகள் மூலம் பகுத்தறிவுக்கு எதிரான அனைத்து அம்சங்களையும் பரப்பலாம். இவற்றின் மூலம் எந்த நாட்டு மக்களையும், அவர்களின் கலாச்சார, பண்பாட்டு அம்சங்களுக்கு எதிராக சிந்திக்க, செயல்பட வைக்க முடியும். இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் பொருளாதாரத்தையும் சுரண்டி அந்நாட்டை சீர்குலைக்க முடியும்.
இந்த செயல்திட்டத்தின் அடிப்படையில்தான் நுகர்வு கலாசாரம் இந்தியா போன்ற நாடுகளின் மீது திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. நமக்கு தேவையோ! இல்லையோ, விளம்பரம் செய்யப்படும் அனைத்து பொருட்களையும் வாங்கி குவிக்க வேண்டும் என்ற கருத்து உளவியல் ரீதியாக நம்மீது திணிக்கப்படுகிறது.
நமது இன்றைய வருமானம், இந்த தேவைகளுக்கு ஈடுகொடுப்பதாக இல்லாவிட்டாலும், கடன் பெற்றாவது அந்த பொருட்களை வாங்கி அனுபவிக்க வேண்டும் என்ற வெறி நம்முள் எழுப்பப்படுகிறது. இதற்கான கடனும் பர்சனல் லோன், கிரெடிட் கார்டு என்பது போன்ற கவர்ச்சியான பெயர்களில் நம்மிடம் திணிக்கப்படுகிறது.
விவசாயிகளோ, சிறு வியாபாரிகளோ தங்கள் வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும் தொழிற்கடன்களை கேட்டால் விரட்டியடிக்கும் வங்கிகள், ஊதாரித்தனமான செலவுகளுக்கு பல்வேறு பெயர்களில் கடன்களை வாரிவாரி வழங்குகின்றன.
எனவே நியாயமான காரணங்களுக்கு பணம் தேவைப்படும் பலரும் நியாயமான வட்டியில் கடன் கிடைக்காத நிலையில், அநியாய வட்டி என்று தெரிந்தும் இத்தகைய பகல் கொள்ளைக்காரர்களின் பிடியில் சிக்க நேரிடுகிறது.
நேர்மையாக வாழ்ந்து வரும்/வாழ விரும்பும் எந்த ஒரு நபரும் இத்தகைய மாய (கடன்) வலையில் சிக்காத வரையில் தங்கள் நேர்மையை காப்பாற்றிக் கொள்ளமுடியும். ஆனால், எந்த காரணத்திற்காகவோ இந்த கடன் பொறியில் சிக்கிவிட்டால் அவர் விரும்பினாலும் நேர்மையுடன் வாழ முடியாது. இதற்கு காரணம், இந்த கடனுக்கு வங்கிகள் விதிக்கும் அநியாய வட்டியே காரணமாகும். வட்டியே அதிகம் என்ற நிலையில், இந்தக் கடன் தவணையை உரிய காலத்தில் கட்டத்தவறும் பொது மக்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களை, பகல் கொள்ளை என்ற வார்த்தையில் கூட அடக்க முடியாது.
இந்த விவகாரத்தில் அரசு என்ன கடமை ஆற்றுகிறது என்று பார்த்தால், வங்கிகள் அடிக்கும் கொள்ளைக்கும் 4 சதவீத சேவை வரி விதித்து, மத்திய அரசு தனது இறையாண்மையை பாதுகாத்துக் கொள்கிறது. இவ்வாறு அரசு அங்கீகாரத்துடன் மக்களை கொள்ளை அடிக்கும் வங்கிகள், மக்களிடம் கடன் வசூல் நடத்தும் விதம், வெள்ளையர் காலத்தில் நடந்த வரி வசூலே மேல் என்று கூறத்தக்க விதத்தில் உள்ளது. வங்கிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட ரிசர்வ் வங்கியோ கிரெடிட் கார்டு வணிகத்தில் வங்கிகள் செய்யும் அனைத்து முறைகேடுகளையும் கண்டறிந்து, அவற்றை தவிர்க்கக் கூடிய விதிமுறைகளையும் வகுத்துவிட்டு, அவற்றை நடைமுறைப் படுத்துவதோ, கண்காணிப்பதோ தனது வேலையில்லை என்று ஒதுங்கி விடுகிறது.
எனவே, இந்த விவகாரங்களை கையாள வேண்டிய பொறுப்பு மக்களிடமே உள்ளது. அதற்கு முன்னதாக அந்த கிரெடிட் கார்டு வணிகத்தின் பின்னுள்ள பொருளாதார அரசியல் விவகாரங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் பல வங்கிகள் கிரெடிட் கார்டு வணிகத்தில் ஈடுபட்டாலும். இந்த வணிகத்திற்கான மூலதன நிதி அமெரிக்கா போன்ற நாடுகளின் முதலீடாகவே உள்ளது. எனவே, இந்த முதலீட்டிற்கான (அநியாய) வட்டியும் அந்த நாடுகளுக்கே செல்கிறது.
மேலும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொதுமக்கள் வாங்கிக் குவிக்கும் பெரும்பாலான பொருட்களும் அந்நிய நாட்டுப் பொருட்களே! உலகமயம்! தனியார் மயம்! தாராள மயம்! என்ற பெயரில் உள்ளூர் கோலி சோடாவிலிருந்து, தொலைக்காட்சி/கம்ப்யூட்டர் வரையிலான அனைத்து உயர்நுட்ப தொழில்களையும் இழுத்து மூடிவிட்டு அந்நிய தயாரிப்புகளே இந்திய சந்தையில் விற்கப்படும் நிலையில், கிரெடிட் கார்டு மூலமாவும் அந்நிய தயாரிப்புகளே நமது தலையில் கட்டப்படுகிறது என்பதை சொல்லத் தேவையில்லை.
இதற்கேற்ற வகையிலேயே, செய்தி மற்றும் பொழுதுபோக்கு ஊடகங்களும் இந்திய மூளைகளை முடமாக்கி, இந்திய மக்களையே நுகர்வுப் பொறிகளாக்கி அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றன. உலக வங்கி என்ற பெயரில் வளரும் நாடுகளின் அரசுகளை கொள்ளையடிக்கும் சக்திகளே, அந்நாட்டு மக்களையும் கொள்ளையடிக்கவே இதுபோன்ற நூதன, மோசடித் திட்டங்களை வகுக்கின்றன.
போலிப்பகட்டற்ற எளிமையான வாழ்க்கை, யதாரத்த நிலையை புரிந்து கொள்ளும் மனப்பக்குவம், எதையும் தெளிந்தறியும் அறிவியல் மனப்பான்மை உள்ளிட்ட மனநிலையை பெறுவதே இத்தகைய சமூக, பண்பாட்டு, கலாசார, பொருளியல் தாக்குதல்களிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள உதவும் அம்சங்களாகும். அதன் மூலமே சுயசிந்தனை, உண்மையான பகுத்தறிவு, சமூக நோக்கு உள்ளிட்ட குணாதிசயங்களை நாம் பெற முடியும்.
நம்மை அடிமைப் படுத்தும் சமூக, பண்பாட்டு, கலாசார, பொருளியல் சீரழிவுகளுக்கான நுழைவுச் சீட்டே இந்த “கிரெடிட் கார்டு” என்பதை புரிந்து கொள்வதே இத்தகைய பிரசினைகளை தவிர்க்கும் வழியாகும். இந்த புரிதல் மூலமாகத்தான் கிரெடிட் கார்டை நமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதா? அல்லது கிரெடிட் கார்டின் கட்டுப்பாட்டில் நாம் வாழ்வதா? என்ற கேள்விக்கு விடை காண முடியும். இது தனிநபர் பிரசினை அல்ல என்பதையும், இந்த விவகாரம் இந்திய இறையாண்மைக்கே சவால் விடுவதையும் புரிந்து கொண்டால்தான் இந்த மாயவலையை அறுத்தெரியும் பாதை அமைக்க முடியும்.
– உண்மை