நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் விளிம்பு நிலை மக்க(அரவாணி)ளும் (2)
ஏ.பி.எம்.இத்ரீஸ்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அரவாணிகளுக்குச் சொத்துரிமை உண்டா என்று கேட்டபோது ஆம் என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள். அரவாணிகளை ஒதுக்கிவைத்து குடும்பத்தைவிட்டு விரட்டுவதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்ககள் கண்டித்துள்ளார்கள். இறைவன் யாரை எவ்வாறான பால்நிலையில் படைக்க விரும்புகின்றானோ அவரை அவ்வாறே படைக்கின்றான். அது இறைவனின் நாட்டமாகும். அதை பழித்துப் பேசக்கூடாது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.
ஆமீர் பின் அழ்ழர்ப் ஜாஹிலிய்யக் கால சட்டவல்லுனர்களில் ஒருவர். ஒரு முறை அவரிடம் அவரது சமூகத்தைச் சேர்ந்த சிலர் வந்து ஒரு பெண் ஆண் பெண் உறுப்பகளை உடைய ஒரு குழந்தையை பெற்றெடுத்திருப்பதாக கூறினர். அது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் வந்தவர்களை நோக்கி அது ஆணும் பெண்ணும் என்று அழைக்கப்படும் என்று கூறினார். அங்கு வந்த அறபிகள் அவரது தீர்ப்பை ஏற்கவில்லை. அவர் வழக்கம் போல ஓய்வெடுப்பதற்காக வீடு சென்ற போது படுக்கையில் தூக்கமின்றி புரண்டு புரண்டு இருந்தார்.
அவரிடம் புகழ்பெற்ற புத்திசாதுர்யமான ஒரு பணிப் பெண் இருந்தால். அவர் தூக்கமின்றி இருப்பதை விசாரித்தால். அவர் காரணத்தை அவரிடம் கூறினார். அதற்கவள் இப்போதிருக்கும் நிலைப்பாட்டை விட்டுவிட்டு சிறுநீர் கழிக்கும் வழியைப் பார்த்து தீர்ப்பளியுங்கள். அவளது கருத்து அவருக்கும் சரி எனத் தென்பட்டது. உடனே அம்மக்களிடம் சென்று ஆண்குறியால் சிறுநீர் கழித்தால். அது ஆண் என்றும் அது பெண்குறியால் சிறுநீர் கழித்தால் பெண் குழந்தை என்றும் கூறினார். அத்தீர்ப்பை அம்மக்கள் ஏற்றுக் கொண்டனர். இது ஜாஹிலிய்யக்கால சட்டமாக இருந்து வந்தது.
இஸ்லாத்தின் பின்பும் இத்தீர்ப்பு ஏற்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது பற்றி இப்னு அப்பாஸ் அவர்கள் அறிவிப்பதாவது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இப்பண்புள்ள குழந்தை எப்படி வாரிசு சொத்தை பெற்றுக் கொள்ளும் என கேட்கப்பட்டது. அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அது சிறுநீர் கழிக்கும் இடத்தைவைத்து தீர்மானிக்கப்படும் என்று கூறினார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த பால்நிலை அடையாள ஏற்பை அடிப்படையாக்க் கொண்டு அரவாணிகளுக்கான வாரிசுரிமை சட்டத்தில் மூன்று நிலைப்பாடுகளை எடுத்துள்ளனர்.
1. ஹனஃபீக்களின் சட்ட மரபின் படி ஆண், அல்லது பெண் அடிப்படையில் இரு பங்கில் மிக்க்குறைந்த்தே அவர்களுக்கு கிடைக்கும். இவ்வாறு ஷாஃபி சட்ட சிந்தனையிலும் ஒரு கருத்து காணப்படுகின்றது. பெரும்பாலான நபித்தோழர்களும் இக்கருத்தை ஆதரிக்கின்றனர்.
2. ஷாஃபி சட்ட மரபின் படி ஒவ்வொரு வாரிசும் தன் பங்கில் குறைந்த அளவைக் கொடுப்பர். அதாவது அரவாணி அவர்களில் யாருடனும் இணைந்திருக்கலாம் என்பதாலும் நிலமை வெளித்தெரிய வரும் போது எஞ்சியது நிறுத்தப்படும். இதுதான் ஷாஃபி சட்ட பள்ளியினரிடையே ஏற்புடைய கருத்தாகும்.
3. மாலிக் சட்ட மரபினர் அரவாணிக்கு நடுத்தரமான அளவு கொடுக்கப்பட வேண்டும் எனக்கூறுகின்றனர். பிரச்சினை இரண்டு தீர்வாகத் தீர்க்கப்படும். பின் இரு தீர்விலும் கிடைத்த பங்கு ஒன்று சேர்க்கப்படும். பின் இருவருக்கும் பிரிக்கப்படும். அது அரவாணிக்குரிய பங்காக மாறும்.
அரவாணி அணர்த்தத்திற்கு உற்பட்டவர் என்ற அடிப்படையிலே பழைய சட்ட மரபுகள் அணுகுகின்றன. பால்நிலை திரிந்தவர்கள் ஆண் அல்லது பெண் என்ற அனுமானத்தின் படியே வாரிசு சொத்துக்கு உரித்துடையவராகின்றனர். இவர்களைப் பொருத்தவரையில் இரு சட்டங்களும் எடுகோள், அணுமானம் என்ற நிபந்தனை அடிப்படையிலேயே அணுகப்படுகின்றனர். முதலாவது அவர் ஆண் என்ற எடுகோல், இரண்டாவது அவர் பெண் என்ற எடுகோளாகும். இரு பாலினம் பெருகின்ற பங்கில் அரவாணிகளும் தமக்கான பங்கைப் பெருகின்றனர். அரவாணிகளின் பால்நிலையில் மாற்றம் ஏற்படும் போது சொத்தின் அளவுகளிலும் மாற்றம் ஏற்படுகின்றன. ஒரு அரவாணி மரணிக்கும் போது அவரது பங்கு அவரது வாரிக்கு வழங்கவும் படுகின்றது.
எல்லாவற்றையும் இரட்டைமையாகவே கட்டமைத்து பழக்கப்பட்டுப் போன சூழலில் பால்நிலை திரிந்த அரவாணிகளை மனிதர்களாகவே பார்க்க மறுப்பது மனித்த்தின் ஒரு பகுதியை மறுப்பதற்குச் சமனாகும். நபிகள் அவர்களையும் மனிதர்களாகவே பார்க்கின்றார். ஆணைப் பற்றியும் பெண்ணைப் பற்றியும் புரிந்து கொள்வதற்கு பிரயத்தனப்படும் அளவுக்கு தம்மோடு சக மனிதர்களாகப் பிறக்கும் அரவாணிகளைப் புரிந்து கொள்வதற்கு நாம் எந்த முயற்சியும் செய்வதில்லை என்பது எப்படி போனாலும் அவர்களைப் பற்றிய தவறான பார்வைகளையும் தவறான புரிதல்களையுமே கொண்டுள்ளோம். ஆனால் நபிகள் அரவாணிகளை சரியாகப் புரிந்து கொண்டும் அவர்களை மதித்தும் நடந்துள்ளார்கள்.
இன்று அரவாணிகளை பற்றி ஆராய்வதும் அணிதிரட்டுவதும் அவர்களின் குரலை ஒலிகச் செய்வதற்குப் பின்னார் உள்நோக்கம் கொண்ட ஏகாதிபத்திய அரசியல் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தரகுப் போக்குமே பின்புலமாக அமைந்துள்ளது. இப்போராட்டங்களின் மூலம் அரவாணிகள் தமது உண்மையான ஆத்மார்த்த விடுதலையை பெற்றுக் கொள்ள முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விளிம்பு நிலை மக்கள் பற்றிய பார்வை இவற்றிலிருந்து வித்தியாசப் படுகிறது. அதில் இதைய சுத்தியும் மனித நீதியும் இழையோடுகின்றது.
ஆண்களாலும் பெண்களாலும் உற்றார் உறவினர்களாலும் குடும்பத்தாலும் ஒட்டுமொத்தச் சமூகத்தாலும் துரத்தியடிக்கப்பட்டு அகதிகளாக, அணாதைகளாக ஆக்கப்பட்டிருக்கும் நமது இன்றையச் சூழலோடு ஒப்பிடும் போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் உருவாக்கிய சமூக அமைப்பில் அரவாணிகளுக்கு மகத்தானதோர் இடத்தை வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு சொத்துரிமை உத்தரவாத்த்தை வழங்கியுள்ளார்கள். ஒட்டுமொத்த வண்முறைகளாலும் அரவாணிகளின் இருப்பைக் காவல்படுத்தி சிதைத்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இருந்து பார்க்கும் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரவாணிகளை இம்சிப்பவர்களுக்கு தண்டனை வழங்கும்படி கூறி எச்சரித்துள்ளார்கள்.
அன்றைய ஜாஹிலிய்ய மைய அதிகாரத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட அல்லது இலக்காரமாகப் பார்க்கப்பட்ட நிலையிலிருந்து விலகி அரவாணிகளை தான் உருவாக்கிய சமூக அமைப்பில் அவர்களுக்கும் சமாந்தரமான ஓர் இடத்தை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழங்கியுள்ளார். இன்றைய மனிதர்களோடும் இன்றைய சமூகத்தோடும் போராடிக் கொண்டே தாங்களும் மானுடப் பிறவிகளே, இறைவனின் மகத்தான படைப்பே என்பது அடையாளப்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய அரவாணிகளை நோக்கியும் நபிகள் புன்னகைப்பதாகவே எனக்குப் படுகிறது.
source: http://idrees.lk/?p=1824