நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் விளிம்பு நிலை மக்க(அரவாணி)ளும் (1)
ஏ.பி.எம்.இத்ரீஸ்
[ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரவாணிகளையும் ஒரு மனிதச் சமூகமாக அவர்களின் இருப்பை அங்கீகரித்துள்ளார்கள். அவர்களை வெறுக்கவோ விளிம்பு நிலைக்கு தள்ளவோ கூடாது என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். அரவாணிகளை கேலி கிண்டல் செய்பவர்களுக்கு இருபது கசையடிகளை வழங்கும்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவிட்ட ஹதீஸை இமாம் திர்மிதி அவர்கள் பதிவுசெய்துள்ளார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் அரவாணிகள் பள்ளிவாசலுக்கு வந்து நபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இணைந்து தொழுகை நடாத்தியுள்ளார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் வரிசைகளை அமைக்கும் போது முதலில் ஆண்கள், பிறகு சிறுவர்கள், பின்னர் அரவாணிகள், அதன் பின் பெண்கள் என சிலபோது வரிசைப் படுத்தியுள்ளார்கள்.
இதை வைத்துப் பார்க்கும் போது அரவாணிகளுக்கும் வழிபாட்டு சமத்துவம், ஆண் பெண் என்ற பால்நிலைக்கு இணையான முறையில் வழங்கப்பட்டுள்ளமை புலப்படுகின்றது. இதை அடிப்படையாக வைத்து பிற்கால சட்ட அறிஞர்கள் வழிபாட்டில் அரவாணிகளின் தலமைத்துவம் பற்றியும் விரிவாக ஆராய்ந்துள்ளனர். அதில் அரவாணிகளின் தலைமைத்துவம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெண்களுக்கு தலைமை தாங்குவதற்கான அங்கீகாரத்தை இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் வழங்கியுள்ளனர். அறேபிய ஆணாதிக்கச் சமூகத்தில் இத்தகைய சமத்துவத்தை அறவாணிகளுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழங்கியமை மிகுந்த சவாலுக்குரிய விடயமாகும்.]
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் விளிம்பு நிலை மக்க(அரவாணி)ளும் (1)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அன்றைய ஜாஹிலிய்ய யுகத்தில் மேட்டிமை குடிகளிலிருந்து மிகச்சிலர்தான் அவரை ஏற்க முன்வந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஏற்று அவருக்குப் பின்னால் சென்ற அனேகர் அன்றைய சமூகத்தில் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட மக்களே என்பது சீறாவை படிக்கின்ற எவரும் எளிதாகப் புரியக்கூடிய விடயமாகும்.
அறேபிய பேரீட்சம் தோட்டங்களுக்காக அபீஸீனியா போன்ற இடங்களிலிருந்து அடிமைச் சேவகங்களுக்காக கொண்டுவரப்பட்ட ஆயிரக்கணக்கான அடிமைகளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்ககளும் அவரது தோழர்களும் விடுதலை செய்துள்ளார்கள். அது மட்டுமல்ல அவர்களுக்கு தமது சபையிலும் தனது சமூகத்திலும் மிக உன்னதமான இடங்களையும் தலைமைத்துவங்களையும் பொறுப்பகளையும் வழங்கியுள்ளார்கள். அவ்வாறே அன்றைய ஆனாதிக்க அரேபிய சமூகத்தில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மற்றொரு பால்நிலையினர்தான் பெண்களாவர்.
கலாநிதி அபூஸிக்கா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கால பெண்விடுதலை பற்றி ஆறு பாகங்கள் கொண்ட மிகப்பெரும் ஆய்வு நூலை எழுதியுள்ளார். இதற்கு அணிந்துரை வழங்கிய ஷேய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் இந்நூல் எழுதப்பட்டிருக்குமானால் இன்று நாம் எதிர்நோக்கும் பெண் விடுதலை பற்றிய அனைத்துப் பிரச்சினைகளிலிருந்தும் தப்பியிருக்கலாம் என அங்கலாய்க்கின்றார்.
உலகில் சிரம்பணிவதற்கு இறைவனைத் தவிர வேறுயாராவது இருக்குமாயின் நான் மனையை அவளது கணவனுக்கு சிரம்பணியுமாறு ஏவியிருப்பேன் எனக்கூறப்படும் நபிமொழி எந்த ஆதாரமுமற்ற இட்டுக்கட்டப்பட்ட கூற்று என்பதை இந்நூலில் மறுத்துரைக்கப்படுகின்றது. மாறாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கால பெண்ணியப் பிரச்சினைகளுக்கு அவர்கள் எவ்வாறு போராடினார்கள் என்பதை தெட்டத்தெளிவாக ஆய்வாளர் விளக்கியுள்ளார். இதன் ஆறாவது பாகத்தில் பெண்களின் பாலியல் சுதந்திரத்திற்காகவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போராடினார்கள் என்பதை தனியாக ஆராயப்பட்டுள்ளது.
இதே போன்று அக்காலத்தில் நாட்டுப்புற அறபிகளுக்கும் நகர்ப்புற அறபிகளுக்கும் இடையே நிலவிய சமூகச் சமவீனங்களுக்கு எதிராகவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போராடியுள்ளார்கள். குழந்தைகளும் பெண்களைப் போல ஓரங்கட்டப்பட்ட வர்க்கமாகவே இருந்தனர். பத்துக் குழந்தைகளைப் பெற்றெடுத்தும் முத்தமிடாத தகப்பன்மார்களும் அக்காலத்தில் வாழ்ந்தார்கள். நபிகள் தனது குழந்தைகளை முத்தமிட்டு நெஞ்சில் சுமந்து, முதுகில் ஏற்றி விளையாடியதைக் கண்டபோது அச்சமூகம் ஆச்சரியப்பட்டு நின்றது. இவை பற்றி குழந்தைகளும் வாழ்வும் என்ற எனது நூலில் விரிவாக விளக்கியுள்ளேன். பெண்ணிய பிரச்சினைகளைப் பற்றி எனது நாடகப் பிரதிகளில் வெளிப்படுத்தியுள்ளேன். இங்கே மூன்றாம் பால்நிலையினரான அரவாணிகளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறு பார்த்தார்கள் என்பதை மட்டும் பதிவு செய்கிறேன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்ககளும் அரவாணிகளும் :
அலிகள் என்றும் அண்ணகர் என்றும் பேடி என்றும் பொம்பளச்சட்டி என்றும் அரவாணிகள் என்றும் திருநங்கை என்றும் பல பெயர்களால் அழைக்கப்படும் மூன்றாம் பால்நிலையினரின் தோற்றம் பற்றி பல கருத்துக்கள் நிலவுகின்றன. தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாக பிறந்தவர்களும் உண்டு. மனுசர்களால் அண்ணகர்கள் ஆக்கப்பட்டவர்களும் உண்டு. பரலோக ராஜ்யத்தின் நிமித்தம் தங்களை அண்ணகர்களாக ஆக்கிக் கொண்டவர்களும் உண்டு என்று வேதாகமம் கூறுகின்றது. கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது என்கிறார் ஔவயார். அர்ச்சுணன் அலியாக இருந்த்தாகவும் சிகண்டி என்கிற அலியைப் பற்றியும் மகாபாரத்த்தில் படிக்க முடிகிறது. அலிகள் என்ற தமிழ்ச் சொல்லுக்கு நேர் ஆங்கிலச் சொல் Eunch யூனக் என்பதாகும். யூனக் என்றால் அந்தப் புறக் காவலன் என்று பொருள். படுக்கைக்கு காவலன் என்ற பொருளுடைய கிரேக்கச் சொல்லிருந்து வந்த சொல் இது. ஆண்கள் பருவமடையும் வயதுக்கு முன்போ, பின்போ விரைதரிப்புச் செய்து அந்தப் புறக்காவலர்களாக நியமிக்கும் பழக்கம் ஆதிகாலத்திலிருந்தே வருகிறது.
விறைத்தறிப்பு ஒரு மதச்சடங்காக தொடங்கியிருக்கக் கூடும் என்றும் சிலர் கூறுகின்றனர். மிகப்பழங்காலத்தில் வசந்த்த்தை வரவேற்றும் மத்திய கிழக்கு சடங்கொன்றில் பங்கு பெறுகிறார்கள். தங்கள் உடல்களை கத்தியால் கிழித்துக் கொண்டும் ஆடுவார்கள். அப்பொழுது சைபிளி என்ற விளைச்சல் தெய்வத்திற்கு உச்சகட்ட காணிக்கையாக இளைஞர்கள் தங்களுடைய விரைகளை அறுத்து அளிப்பதுண்டு. ஆசியாவில் விரைத்தறிப்பு ஒரு தண்டனையாக இருந்திருக்கிறது. அலிகளை அந்தப்புறக் காவலர்களாக நியமிப்பது முதன்முதலில் ஆபிரிக்காவில் பழக்கத்திற்கு வந்த்தாகத் தெரிகிறது. எகிப்தில் எந்த அரசவை சேவகனும் யூனக் என்றே அழைக்கப்பட்டான்.
சீனாவில் அந்தப்புறக் காவலர்களுக்கு பெரும் கிராக்கி இருந்த்து. அங்கு விரைத்தறிப்பு ஒரு வேலைதேடும் உபாயமாகவே பயன்பட்டு வந்த்து. ஏழைப்பெற்றோர்கள். தங்கள் ஆண்குழந்தைகளுக்கு விரைத்தறிப்புச் செய்து அவர்கள் வளர்ந்தவுடன் அவர்களை அரண்மனையில் வேலைக்குச் சேர்த்துவிடுவார்கள். சிலபோது இளைஞர்கள் அரண்மனை வாயிலிலேயே விரைத்தறிப்புச் செய்து கொள்வதுமுண்டு. இத்தகைய அநீதிகள் நிலவிய காலப்பிரிவில்தான் நபிகளின் விளிம்புநிலை மனிதர்கள் மீதான அக்கரையை நாம் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலும் அரவாணிகள் வாழ்ந்துள்ளனர். மற்றவர்களைப் போலவே அவர்களுக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டிருந்தன. நபிகள் அரவாணிகளுக்கு வழங்கிய உரிமைகள், சலுகைகள், பற்றிய ஆதாரங்களை வைத்து பிற்கால இஸ்லாமிய சட்ட நூல்களில் அரவாணிகளுக்கென தனி அத்தியாயங்களே ஒதுக்கப்படும் அளவுக்கு விரிவாக இடம்பெற்றுள்ளன. தற்கால அறபுலக ஆய்வுகளிலும் அரவாணிகள் குறித்த ஆய்வுகளும் இடம்பெற்று வருகின்றன. இஸ்லாமிய வரலாற்றுக் காலத்தில் முஸ்லிம் சட்ட அறிஞர்களின் அரவாணிகள் குறித்த வரைவிலக்கணம், சட்ட முடிவுகள் இன்றைய அரவாணிகளின் பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் இஸ்லாமிய உலகில் எழுப்பப்பட்டு வருகின்றன.
அரவாணிகளின் வாழ்வு முறை, அவர்களுக்கான வாழ்வொழுங்கு, வழிபாட்டில் அவர்களுக்குள்ள இடம், அவர்களின் திருமணம், சொத்துரிமை என்று மரணம், நல்லடக்கம் குறித்தும் நபிகளின் போதனைகளை அடியொட்டி சட்ட மற்றும் சமூகவியல் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரவாணிகளையும் ஒரு மனிதச் சமூகமாக அவர்களின் இருப்பை அங்கீகரித்துள்ளார்கள். அவர்களை வெறுக்கவோ விளிம்பு நிலைக்கு தள்ளவோ கூடாது என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். அரவாணிகளை கேலி கிண்டல் செய்பவர்களுக்கு இருபது கசையடிகளை வழங்கும்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவிட்ட ஹதீஸை இமாம் திர்மிதி அவர்கள் பதிவுசெய்துள்ளார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் அரவாணிகள் பள்ளிவாசலுக்கு வந்து நபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இணைந்து தொழுகை நடாத்தியுள்ளார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் வரிசைகளை அமைக்கும் போது முதலில் ஆண்கள், பிறகு சிறுவர்கள், பின்னர் அரவாணிகள், அதன் பின் பெண்கள் என சிலபோது வரிசைப் படுத்தியுள்ளார்கள்.
இதை வைத்துப் பார்க்கும் போது அரவாணிகளுக்கும் வழிபாட்டு சமத்துவம், ஆண் பெண் என்ற பால்நிலைக்கு இணையான முறையில் வழங்கப்பட்டுள்ளமை புலப்படுகின்றது. இதை அடிப்படையாக வைத்து பிற்கால சட்ட அறிஞர்கள் வழிபாட்டில் அரவாணிகளின் தலமைத்துவம் பற்றியும் விரிவாக ஆராய்ந்துள்ளனர். அதில் அரவாணிகளின் தலைமைத்துவம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெண்களுக்கு தலைமை தாங்குவதற்கான அங்கீகாரத்தை இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் வழங்கியுள்ளனர். அறேபிய ஆணாதிக்கச் சமூகத்தில் இத்தகைய சமத்துவத்தை அறவாணிகளுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழங்கியமை மிகுந்த சவாலுக்குரிய விடயமாகும்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.