MUST READ
சிம் கார்டு இல்லா செல்போன்கள்!
இஸ்லாம் என்றால் கலிமா. “இல்லை” என்னும் பொருள் கொண்ட சொல்லான ‘லா’ முதல் சொல்லாக கலிமாவில் வருகிறது. இறை சிந்தனை மனிதனை மையப்படுத்தி அமைந்திருக்கும். கிடைக்கும் லாபம் அனைத்தும் மனிதனைச் சுற்றியே இருக்கும். இறைவன் எந்த தேவையும் அற்றவன். இது இஸ்லாத்தின் அஸ்திவாரம்.
கலிமாவை ஏற்றுக் கொண்டு கொள்கை வழி நடப்பவர் உறவுகளை நேசிக்கும் அதே தருணம், கொள்கைக்கு மாறுபடும் தமது தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் எவராகவிருப்பினும் வெறுக்கவும் செய்யணும். நீ என் ஆள் இல்லவே இல்லை எனக் கூறணும். பூரணமாகச் செயல்படாத ஒன்றின் மீது ‘லா’ பிரயோகித்து இது தரமில்லை.
நேர்மையாக நடக்காதவரைப் பார்த்து நீ சரியில்லை என்றால் அங்கே இறைவன் கிடைப்பான். அதுதான் கலிமா கூறும் ‘லா’. கொள்கைவாதியிடமிருந்து நிராகரிப்பு வெளிப்பட்டால் சொர்க்கம். எதிராளி புறத்திலிருந்து நிராகரிப்பு வந்து கொள்கைவாதி ஏற்றால் இருவருக்கும் நரகம்.
நான் கோபப்பட்டால் இறைவன் கோபப்படுகிறான். இறை நேசர் கூறுகின்றனர். நான் சந்தோஷப்பட்டால் இறைவன் சந்தோஷப்படுகிறான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருக்கின்றார்கள்.
நாம் யார்? நம் கொள்கையை முதல் நாளே அறிவிக்கணும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்படி அறிவித்து 23 வருடம் பணி செய்தார்கள். மனிதர்களைப் பிடித்து இவர் இருந்தால், நினைத்தால் எல்லாமும் நடக்கும். இவர் இல்லையெனில் எதுவும் நடக்காது என்று கூறப்படுகிறது. ஈமான் அறவே இல்லாத போக்கு. அல்லாஹ்விடம் கேட்கணும். அவன் மனித ஆன்மாவுக்கு கட்டளையிடுவான். எதிர்பார்ப்பு நிறைவேறும். உலகில் நிரந்தரம் எனக்கருதப்படும் எதுவும் நிரந்தரமில்லை. அல்லாஹ் மட்டுமே நிரந்தரமானவன். சத்தியமானவன். அவன் நினைத்தால் ‘மன்னுசல்வா’ கிடைக்கும்.
மனித உயிர் மரணிக்கும்போது உலக ஆசா பாசங்களைச் சுமந்து மனைவி, குழந்தைகளைப் பிரிய மனமில்லாமல் வேதனையோடு பிரிகிறது ஆன்மா. குர்ஆனில் ‘‘திருப்தி அடைந்த ஆன்மாவே’’ என்ற சொல் வருகிறது. பூரணத்துவம் பெற்ற ஆத்ம திருப்தியுடன் உயிர் பிரிவதற்கு கடுமையான மனப்பயிற்சி தேவை. அந்த பயிற்சியில்லாமையால் பிரியும் உயிர்கள் நப்சாக ஆவிகளாக உலாவுகின்றன.
உயிருக்குயிராய் நேசித்த உறவினர்கள் எங்கே அந்த ஆவிகள் நம்மைப் பிடித்துக் கொள்ளுமோ என அஞ்சுகின்றனர். ஈமானைக் கைவிடுகின்றனர். சிம்கார்டு இல்லாத செல்போன் எவ்வளவு அழகாக இருப்பினும் பகட்டுக்கு உதவுமே தவிர பயன்பாட்டுக்குதவாது. இங்கே சிம்கார்டு என்பது மனித ஈமான். வெற்றுச் செல்போன்களாக மனித உயிர்கள் வாழ்கின்றன.
-ஜெ. ஜஹாங்கீர், (ஆகஸ்ட் 2011 முஸ்லிம் முரசு)
source: http://jahangeer.in/?paged=4