o நடத்தை சரியில்லாத தாய்க்கு உபகாரம் செய்ய வேண்டுமா?
o வரன் பார்க்கும் போது மணமகளிடம், மணமகனிடம் கேள்விகள் கேட்கலாமா?
o கணவன் சொல்படி தான் நான் நடப்பேன், மாமனார், மாமியார் சொல்படி நடக்க மாட்டேன் என்று மனைவி சொல்லலாமா?
o பெண்கள் தலைக்கு மேல் கூந்தலை உயர்த்திக் கட்டலாமா?
o கேள்வி: கார் போன்ற வாகனங்களை பெண்கள் ஓட்டலாமா?
நடத்தை சரியில்லாத தாய்க்கு உபகாரம் செய்ய வேண்டுமா?
கேள்வி: அஸ்ஸலாமு அலைக்கும், எனது நண்பர் ஒருவர் தனது தாயாருடன் பல வருடங்களாக உறவில்லாமல் இருக்கிறார். அதற்க்கு காரணம் தனது தாயாரின் நடத்தை சரியில்லாததனால். அதாவது கணவர் இருக்கும் பொழுதே வேறொருவருடன் குடும்பம் நடத்தி வந்தார். அவருக்கு பெரிய பிள்ளைகள் எல்லாம் இருக்கிறார்கள். எந்த பிள்ளைகளும் அவரிடம் தொடர்பு கிடையாது. இந்த சூழ்நிலையில் பெற்றோரை கவனிக்காத குற்றம் வருமா? இதற்க்கு மார்க்கத்தில் தீர்வு என்ன?
பதில்: இஸ்லாத்தைப் பொருத்தவரையில் எந்த மார்க்கத்திலும் இல்லாத அளவுக்கு பெற்றோரைப் பற்றிய வலியுறுத்தல்கள் மிகவும் அதிகமாகவே குறிப்பிடப்பட்டுள்ளன.
பெற்றோருக்கு பணிவிடை செய்வதைப் பற்றி இஸ்லாம் அதிகமாக வலியுறுத்துவதற்கான அடிப்படைக் காரணமே அவர்கள் நம்மைப் பெற்றெடுத்ததுதான். இப்போது பிரச்சினைக்கு வருவோம், ஒரு தாய் கெட்ட நடத்தை உடையவளாக, அல்லது விபச்சாரியாக இருக்கிறாள் இப்படிப்பட்ட தாயை பிள்ளைகள் கவணிக்க வேண்டுமா? என்ற பிரச்சினை எழுகிறது.
இஸ்லாத்தைப் பொருத்தவரையில் தாயோ தந்தையோ குற்றம் செய்தவர்கள் என்பதற்காக அவர்களை கவணிக்கக் கூடாது என்று இஸ்லாம் எந்த இடத்திலும் சொல்லவில்லை. மாறாக பெற்றோர் எந்தக் குற்றத்தை செய்தாலும் அவர்களை கவணிப்பதற்கு அவர்களுக்குறிய காரியங்களை செய்வதற்கு அந்தக் குற்றங்கள் தடையாக இருக்காது.
ஏன் என்றால் ஒருவர் விபச்சாரம் செய்வதைவிட பாவமான காரியம் தான் இறைவனுக்கு இணைவைப்பது அப்படிப்பட்ட பாவத்தை செய்த பெற்றோருக்கே உபகாரம் செய்யும்படி இஸ்லாம் வலியுறுத்துகிறது.
என்னுடன் என் தாயார் அல்லாஹ்வின் தூதர் காலத்தில் வந்து இருந்தார்கள்.அப்போது அவர்கள் இணைவைப்பாளர்களாக இருந்தார்கள். நான் நபி (ஸல்)அவர்களிடம் என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரது உறவை பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளட்டுமா? என்று மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். “ஆம் நீ உன்தாயிடம் உறவைப்பேணி நல்ல முறையில் நடந்து கொள்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர்(ரலி), ஆதாரம்: புகாரி 2620)
மேற்கண்ட செய்தியில் இணைவைத்த தாய்க்கு உபகாரம் செய்யும்படி நபியவர்கள் கட்டளையிடுகிறார்கள். இணை வைத்தருக்கே உபகாரம் செய்ய வேண்டும் என்றால் விபச்சாரம் மற்றும் கெட்ட நடத்தையுடைய தாய்க்கு உபகாரம் செய்வதை யாரும் தடுக்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பல வீனத்துக்கு மேல் பல வீனப்பட்டவளாகச் சுமந்தாள்.அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். ஏனக்கும் உனது பெற்றோர்களுக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. (திருக்குர்ஆன் 31:14)
என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோர்க்கு உபகாரம் செய்யுங்கள்! என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான்.(திருக்குர்ஆன் 17:23)
உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ அல்லது இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்தால் அவ்விருவரையும் நோக்கி ‘சீ’ எனக் கூறாதே! அவ்விருவரிடமும் மறியாதையான சொல்லையே கூறுங்கள். (திருக்குர்ஆன் 17:23)
ஆக உங்கள் நண்பர் கண்டிப்பாக அவருடைய தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்துதான் ஆகவேண்டும் என்பதே இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.
அல்லாஹ்வே நன்கறிந்தவன். (source: http://www.frtj.net)
வரன் பார்க்கும் போது மணமகளிடம், மணமகனிடம் கேள்விகள் கேட்கலாமா?
கேள்வி: பெண் பார்க்கும் போது மார்க்கத்தின் அடிப்படையில் குர்ஆன் ஓதத் தெரியுமா? தொழத் தெரியுமா? என்று கேள்விகள் கேட்டு அதன் அடிப்படையில் என்னைத் திருமணம் செய்தார்கள். ஆனால் இது போன்று ஆண்களை, தவ்ஹீத் கொள்கை உள்ளவரா? தொழுகை உள்ளவரா? என்று கேட்டுத் திருமணம் செய்ய முடியுமா?
பதில்: இஸ்லாத்தில் ஆண், பெண் இருவரும் தவ்ஹீத் கொள்கை உள்ளவராக, திருக்குர்ஆன் ஓதத் தெரிந்தவராக, தொழும் பழக்கம் உள்ளவராக இருக்க வேண்டும். பெண்ணிடம் எப்படி இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டதோ அதே அடிப்படையில் பெண் வீட்டு சார்பாக மணமகனையும் விசாரித்தே தேர்வு செய்ய வேண்டும்.
இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 2:221)
இந்த வசனம் தவ்ஹீத் கொள்கை உள்ளவர்களையே தேர்வு செய்ய வேண்டும் என்பதைக் காட்டுகிறது. இதுபோன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கேட்கும் போது, நல்ல மனிதரைத் தேர்வு செய்ய அவர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள்.
”… நான் இத்தாவை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (வந்து), முஆவியா பின் அபீசுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர் என்று சொன்னேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்க மாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்து விடுபவர்). முஆவியோ, அவர் ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உஸாமா பின் ஸைதை மணந்து கொள் என்று கூறினார்கள். நான் உஸாமாவை விரும்பவில்லை.
பிறகு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீ உஸாமாவை மணந்து கொள் என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்து கொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன். (அறிவிப்பவர்: ஃபாத்திமா பின்த் கைஸ் ரளியல்லாஹு அன்ஹா, நூல்: முஸ்லிம் 2953)
கணவன் சொல்படி தான் நான் நடப்பேன், மாமனார், மாமியார்
சொல்படி நடக்க மாட்டேன் என்று மனைவி சொல்லலாமா?
கேள்வி: தன் கணவன் சொல்படி தான் நான் நடப்பேன், மாமனார், மாமியார் சொல்படி நடக்க வேண்டும் என்று குர்ஆன், ஹதீஸில் இல்லை என்று மருமகள் கூறுகிறாள். இதனால் மனைவி பேச்சைக் கேட்டு மகனும் நடக்கின்றான். இவ்வாறு செய்வது கூடுமா? (புகாரியின் 6675, 6920) ஹதீஸின் கருத்துக்கு இது எதிரானது இல்லையா?
பதில்: நல்ல கருத்துக்களை யார் சொன்னாலும் ஏற்று நடக்க வேண்டியது ஒவ்வொரு முஃமினிடமும் இருக்க வேண்டிய நல்ல பண்பாகும்.
யார் தீய சக்திகளை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அல்லாஹ்வை நோக்கித் திரும்புகிறாரோ அவர்களுக்கு நற்செய்தி உள்ளது. எனது அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக! அவர்கள் சொல்லைச் செவிமடுத்து அதில் அழகானதைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நேர் வழி காட்டினான். அவர்களே அறிவுடையவர்கள். (அல்குர்ஆன் 37: 17,18)
மாமியார் ஆகட்டும்; அல்லது மருமகள் ஆகட்டும்; நல்ல கருத்தை யார் சொன்னாலும் ஏற்று நடக்கும் பண்பாடு நம்மிடம் வர வேண்டும். தான் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தாள் பொன் குடம் என்று மாமியார் நடக்கக் கூடாது. இதைப் போன்று வயதில் மூத்த மாமனார், மாமியாரை அவமதிக்கும் விதமாகவும், அவர்களின் நல்ல கருத்துக்களைக் கூட அவமதிக்கும் விதமாகவும் மருமகள் நடக்கக் கூடாது. குறிப்பாக தாய், தந்தையிடமிருந்து மகனைப் பிரிக்கும் மாபாதகமான காரியத்தைச் செய்யக் கூடாது. மேலும் பெற்றோரின் பேச்சைக் கேட்க விடாமல் அவர்களுக்கு எதிராக நடக்கும்படி கணவனை மாற்றக் கூடாது. அவ்வாறு செய்தால் மிகப் பெரிய தீமை செய்யத் தூண்டியவராக கருதப்படுவார்.
இறைவனுக்கு இணை கற்பிப்பது, தாய் தந்தையரைப் புண்படுத்துவது, கொலை செய்வது, பொய்ச் சத்தியம் செய்வது ஆகியன பெரும் பாவங்களாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 6675)
பெற்றோரைப் புண்படுத்தும் காரியத்தைத் தம் கணவர் செய்து பெரும் பாவியாக மாற மனைவியே காரணமாக இருக்கக் கூடாது. கணவனே பெற்றோர்களிடம் கடினமாக நடந்தாலும் நபிமொழியை எடுத்துக் கூறி அவரைத் திருத்த முன்வர வேண்டுமே தவிர எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் வேலையைச் செய்யக் கூடாது.
பெண்கள் தலைக்கு மேல் கூந்தலை உயர்த்திக் கட்டலாமா?
கேள்வி: மறுமை நாள் நெருங்கும் போது பெண்கள் மெல்லிய ஆடையணிவர்; ஒட்டகத் திமில் போல் கூந்தல் போடுவர் என ஹதீஸில் உள்ளது. இதன் அடிப்படையில் தலைக்கு மேல் கூந்தலை உயர்த்திக் கட்டக் கூடாது என்று கூறுகின்றனர். இது சரியா?
பதில்: இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு, மக்களை அடிப்பார்கள்.
(இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை, மற்றும் கழுத்து, நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும்.
அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்; சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் (4316)
இதுதான் நீங்கள் குறிப்பிட்ட நபிமொழி. இதில் இடம் பெற்றிருக்கும் அவர்களது தலை, மற்றும் கழுத்து, நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும் என்ற வாசகத்தை வைத்துத் தான் நீங்கள் கேள்வியை எழுப்பியுள்ளீர்கள்.
ஒட்டகத்தின் முதுகில் முக்கோண வடிவத்தில் உயர்ந்து இருக்கும் பகுதிக்குத் தான் திமில் (அஸ்மினத்) என்று கூறப்படும். தலையில் கூடுதலான பொருட்களை வைத்து ஒட்டகத் திமில்கள் போல் தலையை ஆக்கிக் கொள்பவர்களை இந்தச் செய்தி குறிப்பிடுகிறது என்று நபிமொழி விரிவுரையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஒரு சிலர், தலையில் திமில்களைப் போன்று கொண்டை வைப்பதைக் குறிக்கிறது என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
முடியை வைத்தோ அல்லது வேறு பொருட்களை வைத்தோ ஒட்டகத் திமில்கள் போல் தலையை மாற்றிக் கொள்வதை இந்த நபிமொழி கண்டிக்கிறது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இரண்டு கருத்துக்கும் இடமளிக்கும் வண்ணமே இந்த நபிமொழி இருக்கிறது. எனவே அந்நிய ஆண்களை ஈர்க்கும் வண்ணம் தலையை கூடுதலான பொருட்களை வைத்து உயர்த்தி வலம் வருவது தவறாகும்.
சாதாரணமாக தலையில் இருக்கும் முடியை வைத்துக் கொண்டை கட்டினால் ஒட்டகத் திமில் போல் உயரமாக இருக்காது. எனவே இவற்றைத் தடை செய்ய முடியாது. மேலும் சாதாரணமாக கொண்டை போடுபவர்கள் தலையின் பின்புறமே போடுவார்கள். நபிமொழியில் தடை செய்யப்பட்டது, ஒட்டகத் திமில்கள் போல் உள்ளதைத் தான். ஒட்டகத் திமில்கள் வானத்தை நோக்கி இருக்கும். இவ்வாறு வானத்தை நோக்கி இருக்கும் வண்ணம் ஒரு சிலர் உயரமாகக் கொண்டை போடுவதையே இது குறிக்கும்.
கேள்வி: கார் போன்ற வாகனங்களை பெண்கள் ஓட்டலாமா?
பதில்: பெண்கள் கார் போன்ற வாகனங்கள் ஓட்டுவதை இஸ்லாம் தடை செய்யவில்லை. இஸ்லாம் கூறும் உடை விதிகளைப் பின்பற்றி தாராளமாக வாகனங்களை ஓட்டலாம். நபிகளார் காலத்தில் இருந்த வாகனமான ஒட்டகத்தில் பெண்கள் பயணித்திருக்கிறார்கள். நபிகளார் அதைத் தடை செய்யவில்லை.
ஒட்டகங்கல் பயணம் செய்த (அரபுப்) பெண்கலேயே சிறந்தவர்கள், நல்ல குறைஷிக் குலப் பெண்களாவர். அவர்கள் குழந்தைகள் மீது அதிகப் பாசம் கொண்டவர்கள்; தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக் காப்பவர்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5082, முஸ்லிம் 4946)
source: தீன் குலப் பெண்மணி இதழ்