உரைத்தான் சிறுவன், உரைத்தது எனக்கு!
காலை ஆறு மணி மொபைலில் அலார ஓசை ஒலித்தது. போர்வைக்குள் முடங்கிக் கிடந்த மொத்த உடலில் கை மட்டும் வெளியே நீண்டு, தலையணை அருகில் இருந்த மொபைலில் பட்டனை அழுத்தி அலார ஓசையை அடங்கச் செய்தது. மொபைலில் ஸ்நூஸ் ( snooze ) வசதி மூலமாகப் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை அலறிக் கொண்டே இருந்தது.
பத்து நிமிடத்திற்கு ஒரு முறை அலாரம் ஒலிப்பது, ஒலிக்கும்போது மட்டும் கை, போர்வையை விட்டு வெளியே நீண்டு பட்டனை அழுத்தி நிறுத்துவதும் 7.30 மணி வரை தொடர்ந்தது. நித்திரையிலிருந்து படிப்படியாக மீள ஒன்றரை மணி நேரம் தேவைப்பட்டது. நித்திரியைலிருந்து மீண்டாலும் எழும்ப மனமில்லாமல் படுக்கையிலேயே சுருண்டு கிடந்தது உடல். கை விரல்கள் மொபைலில் முந்தைய இரவு வந்திருந்த எஸ்.எம்.எஸ்.களைப் பார்த்து, படித்து அழித்துக் கொண்டிருந்தது.
காலையில் தூக்கம் கலைந்தவுடன் வழக்கமாக வரும் எண்ணமான, ‘இன்று கல்லூரிக்குப் போகலாமா அல்லது இன்றும் கட்டையைப் போட்டுவிடலாமா…? என்ற எண்ணம் அன்றும் மனதில் நிழலாடியது.
குளித்து முடித்து கண்ணாடியின் முன் நின்று தலை வாரிக் கொண்டிருந்த நண்பனின், இன்னும் இரண்டு நாள் லீவு போட்டால் நீ காண்டோநேஷன் (condonation ) கட்ட வேண்டியதிருக்கும் என்ற அக்கறை கலந்த எச்சரிக்கையால் உடல், படுக்கையை விட்டு வெடுக்கென எழுந்தது. (அட்டன்டன்ஸ் (Attendance) கம்மியாகி விட்டால் சில நூறுகள் அபராதமாக கட்ட வேண்டுமே என்ற கவலையை விட, அபராதத் தொகையைக் கட்ட வரிசையில் நிற்க வேண்டுமே, ஹால் டிக்கட் (Hall Ticket) கொடுக்க அலைகழிப்பார்களே என்ற கவலைதான் அதிகமாக இருந்தது.)
கல்லூரியை நோக்கி மெதுவாக நடந்த பாதங்கள் வகுப்பறையை அடைய சில அடி தூரங்களே இருக்கும் போது வேகமாக நடந்து. தான் லேட்டாக வந்ததை ஏற்றுக் கொள்ளாத மனம், அய்யோ.. சார் சீக்கிரம் வந்துவிட்டாரே…? என்ற எண்ணத்தை உள்ளத்தில் சுமந்து கொண்டு வாசலருகே அப்பாவியாய் நின்றது. தினசரி வாடிக்கையான லேட்டாக வரும் செயலால் ஏற்பட்ட கோபம் ஆசிரியரின் முகத்தில் தெரிந்தாலும் ஆசிரியர்களுக்கே உரித்தான மாணவர்கள் மீதான அக்கறை, நலன் போன்ற குணத்தால் வகுப்பறைக்கு உள்ளே வந்தமர்ந்து பாடத்தை கவனிக்குமாறு தலையசைத்து அனுமதியளித்தார். வருகை பதிவேட்டிலும் ப்ரசண்ட் ( present ) விழுந்தது. அன்று கல்லூரி வந்ததன் நோக்கம் நிறைவேறியதன் மகிழ்ச்சி மனதில் நிரம்பியது. இருக்கையில் அமர்ந்து உடல் அங்கே ஆஜராகியிருந்தாலும் மனம் எங்கெங்கோ சுற்றித் திரிந்தது.
பல கனவுகளையும், லட்சியங்களையும் மனதில் சுமந்துகொண்டு படிப்பில் அதிகக் கவனம் செலுத்தி வந்த வகுப்பு நண்பர்களைக் கண்டபோதெல்லாம் படிப்பின் மீது அக்கறை வந்த பாடில்லை. மனதில் எந்த உறுத்தலும் இல்லை. மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி மாணவர்களுக்கு இருக்கும் கவலையை விட ஆசிரியர்களுக்கு அதிகமாக இருப்பதால் அவர்கள் அடிக்கடி கொடுக்கும் அக்கறை கலந்த பேச்சில் இருந்த கருத்துக்கள் ஒருநாளும் செவியை அடைந்ததாக ஞாபகமில்லை.
ஆங்கில மொழியின் மொத்த எழுத்துக்களின் எண்ணிகையை விடவும் அதிகமான எண்ணிக்கையில் எழுத்துக்களை வாங்கி பட்டங்களாக தனது பெயரிற்கு பின்னால் போட்டிருக்கும் கல்லூரி முதல்வரை காணும்போதெல்லாம் வியப்பாக இருக்குமே தவிர, நாமும் எதாவது சாதிக்க வேண்டும் என்ற உணர்வு உள்ளுக்குள் ஊறியதில்லை. இந்த செமஸ்டர் (semester) ஃபீஸ் (fees) க்காக தங்கையின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலி அடகுக் கடைக்கு இடம் மாறியதை நண்பனிடம் சொன்ன பொது, நண்பனின் ஃபீஸ்க்காக நண்பன் அக்காவின் காதில் இருந்த கம்மலும் அடகுக் கடைக்கு இடம் மாறியதாக சொன்ன பதிலில் இருந்து, வீட்டுக்கு வீடு வாசற்படி என்று தோன்றியதே தவிர, அப்படி இடம் மாறுவதன் உள் அர்த்தம் சிந்தையை எட்டவில்லை.
விடுமுறைக்காக ஊருக்குச் சென்று விடுமுறை முடிந்தும் வழக்கம்போல் கல்லூரிக்கு லீவு போட்டுவிட்டு மேலும் ஒருநாள் ஊரில் இருக்க நினைத்தபோது பெற்றோரிடமிருந்து வந்த ஒரு நாள் கல்லூரிக்கு லீவு போட்டால் அன்றையப் பாடம் போய்விடுமே…? என்ற ஏதும் அறியா அப்பாவித்தனமான பேச்சினால் கோபத்தில் ஊரில் இருந்து கிளம்பி, பேருந்தில் ஏரி ஜன்னலோர இருக்கையைப் பிடித்து வாடைக்காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த சிறுவன் ஒருவனின் குழந்தைத்தனமான முகத்தைப் பார்த்தபோது ஏதோ ஓர் உணர்வு. பேச்சுக் கொடுக்கத் தோன்றியது.
பட்டணம் போவதன் நோக்கமென்ன என்று வினவியபோது, குடும்ப வறுமைச்சூழல் காரணமாக படிக்க வசதியின்றி, பட்டணத்திற்கு வேலைக்குச் செல்வதாகக் கூறியதைக் கேட்டபோது மனதில் என்றும் இல்லாத ஒரு குற்ற உணர்வு, பாரம், தலைகுனிவு…..
நன்றி: புதிய தலைமுறை