அருமை சகோதரர்களே! ஷிர்க்கான வழிகெட்ட சூபிசக்கொள்கைகளை அவர்களுடைய புத்தகங்களிலேயே அதாவது “இஹ்யா உலூமுத்தீன்” மற்றும் “தபகாத்துஸ் ஷஃரானிய்” போன்ற நூல்களில் எப்படி யெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள் என்பதை கட்டுரையாளர் தெளிவாக சுருக்கமாக விவரித்திருக்கிறார்
பொறுமையாக படித்து பாருங்கள். இவர்கள் முரீது என்ற முறையிலும் தரீக்கா என்ற முறையிலும் எப்படிப்பட்ட கொள்கைகளை இஸ்லாம் என்கிற பெயரில் நுழைத்து மக்களை வழி கெடுத்திருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
இபாதத்களைக் கொச்சைப் படுத்தும் ஸூஃபிகள்
புஸ்தாம் நகரில் மக்கள் மத்தியில் நன் மதிப்புப் பெற்ற ஒரு வணக்கவாளி இருந்தார். இவர் அபூ யஸீத் அல் புஸ்தாமியின் மஜ்லிஸில் தவறாமல் கலந்து கொள்பவராக இருந்தார் . ஒரு நாள் இவர் அபூ யஸீதிடம் ஷேக் அவர்களே! நான் முப்பது வருடங்களாகத் தினமும் விடாமல் நோன்பு நோற்று வருகின்றேன் . இரவு முழுக்க தூங்காமல் நின்று இறை வணக்கம் செய்கின்றேன். அப்படியிருந்தும் உங்களிடமுள்ள மெஞ்ஞான அறிவு எனக்குக் கிடைக்கவில்லையே! என்று ஆதங்கப்பட்டார் அதற்கு அபூ யஸீத் ‘நீ முன்னூறு வருடங்கள் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்கினாலும் இந்த மெஞ்ஞானம் உனக்குக் கிடைக்காது என்று கூற அவர் ஏன்? என வினவினார்.
அதற்கவர் உன்னைச் சுற்றி சுயநலம் எனும் திரை இருக்கின்றது (அதாவது வணக்க வழிபாடுகளை உனக்கு நன்மை கிடைக்க வேண்டுமென்ற தன்னலம் கருதும் எண்ணத்துடன் செய்கின்றாய். நன்மையும் வேண்டாம் சுவனமும் வேண்டாம் இறைக்காதலே வேண்டும் எனும் எண்ணம் உன்னிடமில்லை என்றார் . அதற்கு அவர் அப்படியாயின் அதனை நீக்க ஏதேனும் மருந்துண்டா? என வினவ, உண்டு . ஆனால் நீ அதனை ஏற்றுக் கொள்ளமாட்டாய் என்றார் . இல்லை ஏற்றுக் கொள்வேனென அவர் அடம்பிடிக்க இவர் இவ்வாறு கூறுகின்றார்.
நீ இப்படியே சவரக் கடைக்குச் சென்று உன் தலை முடியையும் தாடியையும் மழித்துக் கொள் . உனது இந்த உடையைக் களைந்து விட்டு ஒரு போர்வையை உடுத்திக் கொள். உன் கழுத்தில் ஒரு தோல்ப் பையைத் தொங்க விட்டு அதனுள் தானியங்களைப் போட்டுக் கொண்டு சந்தைக்குச் சென்று சிறுவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு ‘எனக்கு நீங்கள் ஒரு முறை முகத்தில் அறைந்தால், கல்லால் எறிந்தால் ஒரு பருப்புத் தருவேன் என்று கூறிக் கொண்டு அவர்கள் கற்களினால் எறியும் நிலையிலேயே உனக்குத் தெரிந்தவர்கள் இருக்குமிடமெல்லாம் செல்’ என்றார்.
இதனைக் கேட்ட அவர் ‘ஸுப்ஹானல்லாஹ், இதெப்படி முடியுமென்றார். அதற்கவர். நீ ஸுப்ஹானல்லாஹ் என்று கூறியது ஷிர்க்காகும். ஏனெனில் உன்னையே நீ தூய்மைப்படுத்தினாய் அல்லாஹ்வையல்ல என்றார். இச்சம்பவத்தைத் தனது நூலில் கூறும் கஸ்ஸாலி ‘தான் செய்த அமலினால் தற்பெருமை கொள்வோருக்கு இப்படியான மருந்துகளே பயன் தரும். இந்த மருந்தைப் பாவிக்க முடியாதவன் இது மருந்தல்ல என்று எங்ஙனம் மறுக்க முடியும்? என வினாவெழுப்புகின்றார். (இஹ்யா உலூமுத்தீன் 2-456 )
இச்சம்பவத்திலுள்ள மார்க்க முரண்பாடுகளை வரிவரியாக விளக்க ஆரம்பித்தால் பல பக்கங்கள் வீணாகிவிடும் என்பதால் விமர்சனத்தை வாசகர்களுக்கே விட்டு விடுகின்றேன்.
வழிகெட்ட சூஃபி ஷஃரானி மேலும் கூறுவதாவது; இப்றாஹீம் உஸைபீர் என்பவரும் பிரபல சூஃபி மகானாவார்கள். அன்னாருக்கு கஷ்ஃப் எனும் ஞானம் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் சீறுநீர் கழித்தால் அது பால்ப்போல் வெண்மையாயிருக்கும். அவர்களுக்கு சிலவேளை ஞானம் முற்றி விட்டால் முகத்தில் மொய்த்திருக்கும் கொசுவுடனும் பேச ஆரம்பித்து விடுவார்கள். பள்ளியில் முஅத்தினின் அதானோசையைக் கேட்டால் அவருக்குக் கல்லால் எறிந்து ‘நாயே.. நாங்களென்ன காஃபிர்களா? எங்களுக்கு அதான் சொல்கின்றாயே’ என்பார்கள். என்னைப் பொறுத்த வரைக்கும் கிறிஸ்தவர்களைப் போன்று ஆட்டிறைச்சி வகைகள் உண்ணாமலிருப்பவனே உண்மையில் நோன்பு நோற்றவனாவான். ஆடு,கோழி இறைச்சி வகையறாக்களை உண்பவன் நோக்கும் நோன்பு நோன்பேயில்லை என்று கூறுவார்கள். குதிரையின் சாணத்தைக் குவித்து வைத்து அதன் மீதே தினமும் அவர்கள் உறங்குவார்கள். (தபகாத்துஸ் ஷஃரானிய் 2-140 )
அருமைச்சகோதரர்களே!
தரீக்காவாதிகளை – அவர்கள் வைத்திருக்கும் நீளமான தாடியைப்பார்த்தோ, நீளமான ஜுப்பாவைப்பார்த்தோ ஏமாந்து விடாதீர்கள். தோற்றத்தைப்பார்த்து ஏமாந்துவிடாதீர்கள். அவ்வாறு தோற்றத்தைப்பார்த்து முஸ்லிம்களை எடை போடுவதாக இருந்தால் நீளமான தாடி வைத்த (ஈரானிய) ஷியாக்களின் பெரும் பெரும் ஆலிம்களைப்பார்த்து அவர்களின் தவறான கொள்கைகளை பின்பற்ற நாம் தாயாராவோமா? ”நிச்சயம் இல்லை!” என்றே நம்மிடம் பதில் வரும். அப்படி இருக்கையில் சந்தடி சாக்கில் இன்று உள்ளே நுழைந்துவிட்ட தரீக்காவாதிகளான ஆலிம்களின் தோற்றமும் பேச்சும் நம்மை ஏமாற்றிவிட வேண்டாம். பெரும் பெரும் இமாம்களாக அவர்கள் வலம் வந்தாலும் சரியே!
அல்லாஹ் ஷைத்தானின் அத்தனை சூழ்ச்சிகளில் இருந்தும் நம் ஈமானை பாதுகாப்பானாக. ஆமீன்
வஸ்ஸலாம்.
சிந்திக்க தூண்டும் உங்கள் சகோதரன்,
தக்கலை கவுஸ் முஹம்மது – பஹ்ரைன்