o விபச்சார வழக்கில் சாட்சியாக ஒருவர் மட்டும் இருந்தால் தீர்ப்பு என்ன?
o மனைவியை எத்தனை நாட்கள் பிரிந்திருக்கலாம்?
o நமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி?
விபச்சார வழக்கில் சாட்சியாக ஒருவர் மட்டும் இருந்தால் தீர்ப்பு என்ன ?
கேள்வி : விபச்சார வழக்கில் சாட்சியாக ஒருவர் இருந்தால் அவருக்கு 80 கசையடிகள் கொடுக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றதே! அவர் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறினாலும் கசையடி உண்டா?
பதில் : சாட்சி கூறுபவருக்கு தண்டனையா? என்ற கோணத்தில் தங்கள் கேள்வி அமைந்துள்ளது. ஆனால் பெண்கள் மீது அவதூறு கூறுவோருக்கு எண்பது கசையடிகள் கொடுக்க வேண்டும் என்பது தான் தாங்கள் குறிப்பிடும் சட்டம்.
ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராத வர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள். (அல்குர்ஆன் 24:4)
ஒரு பெண் விபச்சாரம் செய்து விட்டாள் என்று ஒருவர் கூறுகின்றார் என்றால் அதை நிரூபிக்க நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும்.
நான்கு சாட்சிகள் இல்லாத நிலையில் பெண்களின் கற்புக்கு எதிராகக் குற்றம் சுமத்தினால், அவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால் கூட குற்றம் சுமத்தியவர் களுக்கு எண்பது சவுக்கடிகள் தண்டனையாக வழங்கப்பட வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது.
நான்கு சாட்சிகள் இல்லாமல் குற்றம் சுமத்துபவர் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறினாலும் தண்டனை யிலிருந்து தப்ப முடியாது.
இந்த விஷயத்தில் மார்க்கம் இவ்வளவு கடுமை காட்டுவதற்குக் காரணம், பெண்களின் கற்புக்கும், ஒழுக்கத்துக்கும் எதிரான வதந்திகளை மட்டும் மக்கள் சர்வ சாதாரணமாக நம்பி விடுகின்றனர். பெண்களுடன் ஆண்களைத் தொடர்பு படுத்திக் கூறும் செய்திகளையும் ஆர்வமுடன் செவிமடுத்து அதை நம்பவும் செய்கின்றனர்.
தனக்குப் பிடிக்காத பெண்ணையோ, அல்லது தனது ஆசைக்கு இணங்காத பெண்ணையோ ஒருவர் விபச்சாரி என்ற பட்டம் சுமத்தி விட வாய்ப்புகள் அதிகம். இவ்வாறு அவதூறு கூறுபவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்ற நிலை இருந்தால் அதையும் செய்யத் தயங்க மாட்டார்கள். எனவே தான் இந்த விஷயத்தில் மார்க்கம் கடுமை காட்டுகின்றது. இதில் கணவன் மனைவிக்கு மட்டும் விதிவிலக்கு உள்ளது.
ஒருவர் தன் மனைவி மீது விபச்சாரக் குற்றம் சுமத்தினால் அவரிடம் நான்கு சாட்சிகள் இல்லை என்றால் அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து, ஐந்தாவது முறை, ”தான் கூறுவது பொய் என்றால் அல்லாஹ்வின் சாபம் தன் மீது உண்டாகட்டும்” என்று கூற வேண்டும். இது போன்று அந்தப் பெண்ணும் தன் மீதுள்ள குற்றத்தை மறுத்து சத்தியம் செய்தால் இருவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள். இது கணவன் மனைவிக்கு மட்டும் உள்ள தனிச் சட்டமாகும்.
தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும். தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவதாக (கூற வேண்டும்). ”அவனே பொய்யன்” என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சியமளிப்பது தண்டனை யிலிருந்து அவளைக் காக்கும். ”அவன் உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும்” என்று ஐந்தாவதாக (கூறுவாள்). (அல்குர்ஆன் 24:6லி9)
நபிமொழி :
விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6243)
மனைவியை எத்தனை நாட்கள் பிரிந்திருக்கலாம் ?
கேள்வி :90 நாட்களுக்கு மேல் மனைவியைப் பிரிந்திருக்கக் கூடாது என்று ஹதீஸ் உள்ளதா?
பதில் : நீங்கள் குறிப்பிடுவது போல் எந்த ஹதீஸும் இல்லை. ஆனால் மனைவியின் ஆசையைப் பூர்த்தி செய்யும் கடமை கணவனுக்கு உள்ளது.
அவனும் வழி தவறி விடாமல் அவளும் வழி தவறி விடாமல் காக்கும் கடமையும் அவனுக்கு உண்டு. ஒரு மனைவியால் ஒரு மாதம் கூட கணவனைப் பிரிந்திருக்க முடியாது என்ற நிலை இருந்தால் அப்போது ஒரு மாதம் பிரிந்திருப்பதே குற்றமாகி விடும். – source: ஏகத்துவம் இதழ்
நமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி ?
கேள்வி : வெளிநாடுகளில் நம் சமுதாயத்து ஆண்கள் பலர் பணிபுரிகின்றனர். இதனால் கீழ்க்காணும் தீமைகள் ஏற்படுகின்றனர்.
o பெண்கள் மாத்திரம் வீட்டில் இருப்பதால் தவனை வியாபாரிகள், கேபிள்காரர், எரிவாயு வினியோகிப்பவர், பால்காரர், தள்ளுவண்டி வியாபாரி, ஆட்டோ மற்றும் கார் ஓட்டுனர்கள் எனப் பலரும் பெண்கள் தனியாக இருக்கும் வீட்டுக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் இதனால் விபரீதங்கள் ஏற்படுகின்றன.
o மேலும் தேவையில்லாமல் நம் சமுதாயப் பெண்கள் வெளியூர்களில் சுற்றும் நிலை ஏற்படுகிறது. கணவர் போன் செய்தால் வெளியூரில் இருந்து கொண்டே வீட்டில் இருப்பதாக பெண்கள் சிலர் பொய் சொல்லும் நிலைமையும் உள்ளது.
o வீட்டை விட்டு சில பெண்கள் ஓடிப் போவதையும், தவறான உறவு வைப்பதற்கும் இது காரணமாக அமைந்துள்ளது. இதைத் தடுக்க வழியே இல்லையா?
ஆண்கள் வெளிநாடு செல்ல வேண்டாம் என்ற பதிலைச் சொல்லாமல் இதற்கு உருப்படியான திட்டம் இருந்தால் சொல்லுங்கள்
பதில் : இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வு சமுதாயத்தின் உள்ளூர் தலைவர்களுக்கும் குடிமக்களுக்கும் இருந்தால் மிக எளிதாக இது போன்ற எல்லா தீமைகளையும் 95 சதவிகிதம் தடுத்து நிறுத்தி விடலாம். இப்படி நடக்கும் பெண்களைத் தண்டிப்பதில் மாத்திரம் கவனம் செலுத்துவது மட்டும் இதற்கு பயன்படாது. நடக்காமல் தடுப்பது தான் முக்கியமானதாக இருக்க வேண்டும்.
ஊரின் அளவைப் பொருத்து தேவையைப் பொருத்து சுமார் 20 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் வரை செலவு செய்ய ஒரு ஜமாஅத் தயாராக இருந்தால் இதைச் செய்து நம் சமுதாயப் பெண்களை நாம் காப்பாற்றி விடலாம்.
ஊரின் அனைத்து தெருக்களிலும் தெருவுக்கு ஒரு கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும். ஒரு கேமரா 500 முதல் 2000 வரை தான் ஆகும்.
ஜமாஅத்தின் சார்பில் ஒரு கண்காணிப்பு அறையில் அனைத்தையும் டிஸ்பிளே செய்யும் வகையிலும் பதிவு செய்யும் வகையிலும் ஒரு சிஸ்டம் அமைக்க வேண்டும். இதற்கு 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஆகலாம்.
இதைச் செய்து விட்டால் ஒவ்வொரு தெருவிலும்
மக்களின் நடமாட்டம்,
வீடுகளுக்குள் நுழைபவர்கள்,
எவ்வளவு நேரம் கழித்து வெளியே வருகிறார்கள்,
வீட்டில் இருந்து யார் எப்போது வெளியேறுகிறார்கள்
என்பதை கண்காணீப்பு அறையில் இருந்து பார்க்க முடியும்.
விரும்பும் போது குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வீட்டில் யாராவது நுழைந்தார்களா? அல்லது யாராவது வெளியேறினார்களா என்பதையெல்லாம் ரீபிளே செய்து பார்க்க முடியும்.
வெளி நாட்டில் இருக்கும் ஒரு சகோதரருக்கு சந்தேகம் ஏற்பட்டால் என் வீட்டில் இந்த நாளில் இந்த நேரம் முதல் இந்த நேரம் வரை யாராவது சென்றார்களா? வெளியேறினார்களா? என்று கண்கானிப்பு அலுவலகத்தில் விசாரிக்கலாம். வெளியூரில் இருந்து கொண்டு வீட்டில் இருப்பதாகப் பொய் சொல்லி இருந்தால் தெரிந்து போய் விடும்.
இப்படியெல்லாம் கண்கானிப்பு ஏற்பாடுகள் உள்ளன என்பதை அனைவருக்கும் விளம்பரப்படுத்த வேண்டும். நாம் ஒவ்வொரு நேரமும் கண்காணிக்கப் படுகிறோம் என்ற அச்சம் வந்து விட்டால் அடுத்த விநாடியே இது ஒழிந்து போய் விடும்.
இது தவிர கொஞ்சம் வசதி உள்ளவர்கள் தங்கள் வீட்டில் இணைய தள வசதியுடன் ஒரு கம்ப்யூட்டரை ஏற்பாடு செய்து கொண்டால் வீட்டில் கண்காணிப்பு கேமராவைப் பொருத்தி விட்டு வீட்டில் நடப்பது அனைத்தையும் உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் பார்க்கும் வகையிலான சாஃப்ட்வேரைப் பயன்படுத்தி எநத நேரமும் நமது வீட்டில் என்ன நடக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்காணிக்க முடியும்.
புலம்பிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு இந்த யோசனையை ஜமாஅத்துக்கு தெரிவித்து செயல் படுத்திப் பாருங்கள்.
இது குறித்து ஆர்வமுள்ள ஜமாஅத்தினர் என் பெயருக்கு தபால் எழுதினால் இதற்கான வழிகாட்டுதலைப் பெற்றுக் கொள்ளலாம்.
source: http://aleemqna.blogspot.com/2010/07/blog-post_2094.html