Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நபிவழித் திருமணத்தில் சோதனையா?

Posted on September 26, 2011 by admin

நபிவழித் திருமணத்தில் சோதனையா? .

By ஆஷிக் அஹமத் (from ethirkkural)

பலவித தடைகள் ஏற்பட்ட போதும், நபிவழியில் மட்டுமே திருமணம் செய்வோம் என்று இந்த மணமக்கள் எவ்வளவு உறுதிப்பாட்டோடு இருந்திருக்கின்றார்கள்! சுப்ஹானல்லாஹ்.

நபிவழியில் திருமணம் செய்ய உறுதி பூண்டிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு இவர்களின் அனுபவம் பெரும் உற்சாகமாக இருக்குமென்பதால் இங்கே பதிக்கப்படுகின்றது.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.

எனக்கு திருமணப் பேச்சு ஆரம்பித்த அன்றே நான் சொன்னது,

”நபிவழித் திருமணம் மட்டுமே எனக்கு சம்மதம், அதனால் நீங்கள் எந்தநிலையிலும் கொள்கைச் சகோதரர்கள் அன்றி வேறு மாப்பிள்ளையைப் பார்க்கக் கூடாது, எந்த ஒரு துரும்பும் கணவன் வீட்டாருக்கு நீங்கள் கொடுக்கக் கூடாது, எனக்கு தேவையானதை நான் விரும்பி, எனக்காக மட்டும் கேட்பதை நீங்கள் எனக்குத் தந்தால் போதும்”

என் பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் நபிவழிக் கொள்கையுடையவர்களே என்பதால், ‘இதில் என்ன சந்தேகம், இன்ஷா அல்லாஹ் அதுபோலவே முடிப்போம்’ என்றார்கள். பிறகு நான் எதற்கு அதுபோல் சொல்லி வைத்தேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஏதாவது இடையில் வரக்கூடிய சின்ன சின்ன சோதனைக்கூட, மனித மனங்களை மாற்றிவிடும் என்று அஞ்சியிருந்தேன். அதனால் என் திருமணத்தை முடிவு செய்வதில் நான்தான் உறுதியாக இருக்கவேண்டும் என்று உறுதிசெய்து என் விருப்பத்தை முன்கூட்டியே கோரிக்கையாக வைத்துவிட்டேன். நான் அதில் உறுதியாக இருப்பதும் என் வீட்டார்களுக்கு நன்றாகவே தெரியும்.

திருமணப் பேச்சுக்கள் வருவதும், தவ்ஹீத் மாப்பிள்ளை(?)யென வந்தும்கூட (அவர்களின் தாய்மார்களின் பேராசையால்) என்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாத அளவு தடங்கல் ஏற்படுவதும், அந்தப் பேச்சு அப்படியே நின்று கேன்சல் ஆவதுமாக வருடங்கள் ஓடின. ஒன்றிரண்டு வருடங்கள் அல்ல, 6 வருடங்கள்! (அப்போது எங்கள் ஊர் மற்றும் சுற்றுப்புறங்களில் தவ்ஹீத் சிந்தனையுள்ள மாப்பிள்ளை அவ்வளவாக இல்லாததும், நெடுதூர சம்பந்தத்தை நானும், என் பெற்றோரும் விரும்பாததும் இத்தனை வருஷங்கள் ஆனதற்கு மேலும் சில காரணங்கள்).

இதற்கிடையில் மனதைக் கஷ்டப்படுத்தும் (சுற்றத்தாரின்) பேச்சுக்களும், செயல்களும் என் பெற்றோரை கலக்கப்பட வைத்தது. திருமணத்திற்கு காத்திருக்கும் ஒரு பெண் என்ற அடிப்படையில், நானும் மிகுந்த வேதனையடைந்தேன் என்றாலும், என்னுடைய கொள்கையில் சற்றும் மாறாத மன உறுதியை அல்லாஹுதஆலா எனக்குக் கொடுத்திருந்தான், அல்ஹம்துலில்லாஹ்.

ஆனால் என் பெற்றோர்கள் அதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல், பேசிவரும் மாப்பிள்ளை வீட்டாரிடம் எனக்குத் தெரியாமலே கொஞ்சம் வளைந்துக் கொடுக்க முடிவெடுத்தார்கள். மாப்பிள்ளை வீட்டாருக்கு அன்பளிப்பாக(?) சில பொருட்கள் கொடுக்க சம்மதித்ததும், ஒரு இடத்தில் தவ்ஹீத்(?) மாப்பிள்ளை முடிவானது. சில நாட்களிலேயே இந்த விஷயம் எனக்குத் தெரியவரவே ‘நீங்கள் என்ன காரணம் சொல்லி இதைக் கேன்சல் பண்ணுவீர்களோ தெரியாது, தன் திருமண விஷயத்தில் தன் தாயையும், உடன் பிறந்தவர்களையும் கட்டுப்படுத்தத் தெரியாத மாப்பிள்ளை எனக்கு வேண்டவே வேண்டாம்’ என்று அடித்துச் சொல்லிவிட்டேன்.

ஒருவாறாக அதையும் கேன்சல் பண்ணிவிட்டு, என் தாயார் அழுதுக் கொண்டே இருந்தார்கள். ‘ஆண்கள் உறுதியாக இருந்தால் பரவாயில்லமா, பெண் இப்படி பிடிவாதமாக இருந்தால் நான் எப்போதுதான் உனக்கு திருமணம் முடித்து பார்ப்பேனோ, உன்னைவிட சின்ன பிள்ளைகளுக்கெல்லாம் கல்யாணம் ஆகிவிட்டதே’ என்று பலமுறை கண்ணீரோடு மன்றாடினார்கள் என் தாயார். அவர்களின் ஒவ்வொரு கண்ணீர் துளியும் என்னை ரணப்படுத்தியதே தவிர, கொண்ட கொள்கையில் உறுதியோடு இருந்தேன். தந்தையோ மிகவும் பொறுமை! அவர்கள் இருவருக்கும் மன தைரியத்தைக் கொடுக்க அல்லாஹ்விடம் துஆ செய்துவிட்டு,

‘இந்த முறையில் திருமணம் செய்ய இறைவன் எனக்கு நாடியிருந்தால் மட்டுமே என் திருமணம் நடக்கும்; இல்லாவிட்டால் எத்தனை வயதானாலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சொன்னபடி வாழ்க்கை அமையும்வரை இப்படி காத்திருந்தே என் வாழ்க்கையை சந்தோஷமாக ஓட்டுவேன். ஒருவேளை எனக்குத் தெரியாமல் விட்டுக்கொடுத்து இதுபோல் நீங்கள் மீண்டும் மாப்பிள்ளையை முடிவு பண்ணி, அது கடைசி நேரத்தில் எனக்கு தெரிய வந்தாலும், திருமணத்தன்று சம்மதக் கையெழுத்து தரமாட்டேன், கல்யாணத்திற்கு பிறகு தெரிந்தாலும் அதற்காக கணவரிடமோ அவங்க வீட்டாரிடமோ போராடாமல் விடமாட்டேன், வாங்கியதை திருப்பிக் கொடுக்காவிட்டால் அது தலாக் வரை சென்றாலும் எனக்குக் கவலையில்லை, அல்லாஹ் சொன்ன மணவாழ்க்கைதான் எனக்கு முக்கியம்’ என்று சொல்லிவிட்டேன்.

என் கொள்கையை ஒத்த கணவரை அல்லாஹ் அமைக்கும் அந்த நாளும் வந்தது 🙂 இருவீட்டாரும் மாப்பிள்ளை/பெண்ணைப் பார்த்த பிறகு அவரவர் ஊரில் (வெளி மக்களிடம்) மாப்பிள்ளை/பெண் பற்றிய இருதரப்பு விசாரணைகளும் நடந்து முடிந்தது.

பிறகு கல்யாண நாள் மற்றும் (அவர்கள் வெளியூர் என்பதால் அதற்கான) முன்னேற்பாடுகள் போன்றவைக் குறித்தவற்றை பேசி முடிவு பண்ணிக் கொள்வதற்காக இருதரப்பு பெரியவர்கள் கூடியபோதே, எனக்கான மஹர்(4) 10 பவுனுக்குரிய தொகை, எங்க ஊரில் திருமணம் என்பதால் வலிமா விருந்தை ஏற்பாடு செய்து வைப்பதற்காக அதற்குரிய தொகை, கல்யாணப் புடவைகள் வாங்கிக் கொள்வதற்கான தொகை என கைநிறைய பணக்கட்டுகளை என்னவர் அனுப்பி வைத்தார். அதுமட்டுமில்லாமல், ‘அந்த 10 பவுனுக்கும் நகை இருக்கவேண்டும், அதற்கான செய்கூலியைக்கூட அந்த பணத்திலிருந்து எடுக்கக் கூடாது, அதற்கான கூலி எவ்வளவு என்று (நகை வாங்கிய பிறகு) சொன்னால் அந்தப் பணத்தையும் நான்தான் தருவேன்’ என்றும் என்னவர் சொல்லி அனுப்பிவிட்டார் 🙂

அப்போது நான் இருந்த அந்த குதூகல மனநிலை, அதை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கு மட்டுமே புரியும். கொடுக்கும் நிலை இல்லாமல் வாங்கும் நிலையை அல்லாஹ் எனக்கு ஏற்படுத்தினானே என்ற சந்தோஷத்தில் அல்லாஹ்வைப் புகழ்ந்துக் கொண்டே இருந்தேன். புன்னகையைத் தவிர, யாரிடமும் எந்த வார்த்தையும் பேசக்கூட வரவில்லை. இப்படியொரு நிலை எனக்கு என்று மட்டுமில்லை, எத்தனையோ தவ்ஹீத் பெண்களுக்கு வந்திருக்கலாம். ஆனால் நான் சந்தித்த சோதனைகளையும், அதற்கான போராட்டங்களையும் சொன்னால் அதை எழுத பல பக்கங்கள் தேவைப்படும். அவ்வளவு கஷ்டங்களிலும் அல்லாஹ் ஒருவனை மட்டுமே நம்பி, அவனுக்காக உறுதியாக இருந்ததின் பலனை இன்றுவரை சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அல்லாஹ் மிகப் பெரியவன்!

(முன்பு நான் சொல்லியிருந்ததுபோல் பலவிதமாக தூற்றிய) எங்களின் சுற்றத்தார்கள் இந்த திருமண முடிவுகளைப் பார்க்கவேண்டும் என்பதால், (திருமணத்தை முடிவு செய்த அன்று) என் தந்தை அதுபோன்றவர்களை வலுக்கட்டாயமாக அழைத்திருந்தார்கள். அவர்களின் முன்னிலையில் அந்த ரூபாய்க் கட்டுகளை ‘இது பெண்ணுக்காக மாப்பிள்ளை அனுப்பி வைத்துள்ளது’ என்று சொல்லி, என் தந்தை என்னை அழைத்து வரச்செய்து என் கையில் கொடுத்ததும் அப்படியே அவர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனார்கள். அன்றிலிருந்து அவர்களும் தன் பிள்ளைகளுக்கு தவ்ஹீத் மாப்பிள்ளை வேண்டும் என்று தேட ஆரம்பித்தது தனிக் கதை 🙂

அல்ஹம்துலில்லாஹ், திருமணம் நல்லபடி/நினைத்தபடி/நபிவழிப்படி நடந்தேறியது. இவையெல்லாம் மிக குறுகிய காலத்திற்குள் நடந்து முடிந்தன. நினைக்காத புறத்திலிருந்து தன் அடியார்களுக்கு அருள்செய்யும் வல்ல ரஹ்மான், என் எண்ணம்போல் வாழ்வு அமைத்துக் கொடுத்தான். அவனுக்கே புகழனைத்தும்!

என் மாமியாரும், வீட்டார்களும் நபிவழிக் கொள்கைக் கிடையாது என்று திருமணத்திற்கு பிறகுதான் தெரியும்.

‘எனக்கு தவ்ஹீத் கொள்கையில் வாழும் பெண்தான் வேண்டும். சீர், நகையெல்லாம் எனக்குத் தெரியாமல் வாங்க ஆசைப்பட்டு நீங்களாகவே யாரையாவது முடிவு பண்ணி வந்தால் அந்த திருமணம் நடக்காது’ என்று என்னவர் தன் வீட்டாரை ஏற்கனவே மிரட்டி வைத்திருந்ததால் திருமணம் முடியும்வரை எதற்கும் வாய் திறக்காமல் இருந்திருக்கிறார்கள் என் மாமியார் வீட்டார்கள்.

மேலும்,

‘அவர்கள் பெண்ணுக்கு விரும்பிப்போட அவர்களுக்குத் தெரியும். அவர்களால் இயலாவிட்டால் உடுத்திய துணியோடுகூட மகளை அனுப்புவார்கள்தான். அதைக் கேட்க நமக்கு உரிமையில்லை. எனவே உங்கள் பெண்ணுக்கு போடுவதை நீங்கள் போடுங்கள் என்ற வார்த்தைக்கூட வரக்கூடாது’ என்பதும் என்னவர் அவர் வீட்டருக்கு இட்டிருந்த கட்டளை. அதனால் திருமணம் முடியும்வரை மகனுக்கு பயந்து வாய்மூடி இருந்தவர்கள் திருமணத்துக்கு பிறகு சில பெரிய பிரச்சனைகளை எல்லாம் ஆரம்பித்தார்கள்.

ஆரம்பத்தில் என் கணவருக்கும் என் பெற்றோருக்கும் தெரியாமல் நானே சமாளித்தேன். போகப்போக நான் மறைத்து வந்ததையும் மீறி அவர்கள் எனக்குத் தந்த பிரச்சனைகள் (நான் சொல்லாமலே) என் கணவருக்கு தெரிய ஆரம்பித்தன.

சீர் இல்லாமல் வந்ததால் நான் படும் துயரங்களை கண்ட என்னவர், எடுத்த எடுப்பிலேயே கடுமையாக தன் வீட்டாரை எதிர்க்க ஆரம்பித்தார். நடுவில் நானே சமாதானம் பண்ண வேண்டியிருந்தது. ஒருகட்டத்தில் என் பெற்றோருக்கும் இவை தெரிய வந்ததும், அவர்கள் ‘அல்லாஹ் தந்த உன் மாப்பிள்ளைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை, மற்றவர்களின் தொல்லைகளை எவ்வளவு நாட்களுக்குதான் நீ தாங்கமுடியும்?’ என்று சொல்லி, என்னை சும்மா பார்க்க வருவதுபோல் வந்து, சில பொருட்களை கொண்டு வந்தார்கள். வந்த என் பெற்றோர்கள் வீட்டிலிருந்து திரும்ப புறப்படும் முன்பே அதற்கான தொகையைக் கணக்கு பண்ணி (தன் வீட்டாருக்கு தெரியாமல்) வலுக்கட்டாயமாக திணித்து அனுப்பினார் என்னவர். இப்படியே ஓடியது.

என்னவர் பயணம் போய்விட்டு வந்ததும், ‘நாங்க வேண்டாம் என்று சொன்னாலும் அவங்க பிள்ளைக்காக கொடுப்பதற்கு அவங்களுக்கல்லவா அறிவு வேணும்?’ என்று யார் மூலமோ என் மாமியார் வீட்டார் (என்னவருக்கு தெரியாமல்) சொல்லியனுப்ப, ஆஹா.. மீண்டும் ஆரம்பித்துவிட்டார்களா என்று பயந்து, சிலபல பொருட்களுடன் மருமகன் பயணத்தை வரவேற்க வந்திறங்கினார்கள் என் பெற்றோர். அவர்கள் கொண்டு வந்த பொருட்களின் விலை அதிகம். அதற்குரிய தொகையைக் கொடுத்தால் என் பெற்றோர்கள் பிடிவாதமாக மறுக்கிறார்கள். என்னவருக்கோ கோபம்!

‘பிள்ளைக்கு உதவும் என்றுதான் இவற்றை வாங்கி வந்தோம்’ என்று சமாளிக்கிறார்கள். ‘எனக்குத் தேவை என்று நான் கேட்டேனா? இந்த சமாளிப்பெல்லாம் எனக்கு ஆகாது என்று உங்களுக்குத் தெரியும்’ என்று சொல்லி, கொண்டு வந்தவற்றை எடுத்துச் செல்லும்வரை நீங்கள் போகக்கூடாது என்று நான் பிடிவாதம் பிடிக்க, ‘வாங்கி வந்தபிறகு திருப்பிக் கொடுப்பது சரியல்ல, அதற்கான தொகையை நாம் கொடுத்துவிட்டு இந்தப் பொருட்கள் உங்கள் வீட்டிலிருந்து வந்ததாகவே காட்டிக் கொள்வோம், அப்போதாவது கொஞ்சம் இவர்கள் அடங்குவார்கள்’ என்று என்னவர் சமாதான முடிவு சொன்ன பிறகு, மீண்டும் அதற்கான தொகை என் பெற்றோரின் கைக்கு வலுக்கட்டாயமாக மாறுகிறது. மருமகனை மறுத்துப் பேச இயலாமல், வேறு வழியின்றி என் பெற்றோர் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியதாகிப் போனது.

‘அவர்கள் எது சொன்னாலும் நீங்கள் பயப்படத் தேவையில்லை, நாங்கள் சமாளித்துக் கொள்கிறோம்’ என்று சொல்லி என் பெற்றோர்களை அனுப்பி வைத்தோம். இப்படியே என் மாமியார் வீட்டார் எதற்குமே சரிபட்டு வராததால், கடைசியாக என்னைத் தனிக்குடித்தனம் அழைத்துச் சென்றார் என்னவர். அப்போதும் அவர்களின் தாயையும், குடும்பத்தாரையும் கவனிப்பதை சிறிதும் நாங்கள் குறைத்துக் கொள்ளவில்லை.

பிறகுதான் எங்களின் நடவடிக்கையைக் கண்டு அவர்களே மனம் திருந்தி, இப்போது அவர்களும் கொள்கையை ஏற்றுக்கொண்டார்கள். (அல்ஹம்துலில்லாஹ்). பிறகு என் மாமியார் மௌத்தாகிவிட்டார்கள். அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை அல்லாஹ் மன்னித்து, ரஹ்மத் செய்வானாக! இதுதான் என் நபிவழித் திருமணக் கதை

குறிப்பு :

மாப்பிள்ளை வெளியூர் என்பதால், (போக்குவரத்து கஷ்டம் கருதி) கல்யாணத்தன்றுதான் வலிமா விருந்து கொடுத்தார்கள். (அன்றே கொடுப்பதற்கும் நபிவழியில் ஆதாரம் உள்ளது.) எங்கள் குடும்பம் பெரியது என்பதால், கூடுதலாக நாங்களே அழைப்புக் கொடுத்தவர்களுக்கான விருந்து செலவை மட்டும் என் தந்தை செய்தார்கள்.

(திருமணத்திற்கு முன்பே) நானே என் பெற்றோரிடம் விரும்பிக்கேட்ட சில நகைகள், புதிய ஆடைகள், பெண்களுக்கான சில அலங்காரப் பொருட்கள், நான் யூஸ் பண்ணிக் கொண்டிருந்த ஒரு பீரோ இவற்றை நான் என் பெற்றோரிடம் திருப்பிக் கொடுக்கவில்லை. அது ஏற்கனவே என்னுடையதாக இருந்தது. மாமியார் வீட்டிற்கு அந்த பீரோவைக்கூட எடுத்து செல்லக்கூடாது என்று தனிக்குடித்தனம் செல்லும்வரை, எங்க வீட்டிலேயே அதை வைத்துவிட்டேன்.

மற்றபடி என் மாமன்மார்கள், உறவினர்கள், தோழிகள் எனக்கு திருமணத்தில் செய்த அன்பளிப்பு நகைகளும் என்னிடமே. இன்றுவரை என்னிடம் எத்தனை பவுன் நகை உள்ளது என்ற விபரமும் என்னவருக்கு தெரியாது. நான் இஷ்டப்பட்டால் அதை விற்பேன், என் கணவருக்கு தேவைப்பட்டால் அவர் கேட்காமலே கொடுத்து உதவுவேன். அதேபோன்று நான் கேட்காமலே மீண்டும் அதை வாங்கித் தந்துவிடுவார்கள். சில நகைகள் வேண்டாம் என்று என்னவருக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறேன். அப்படி விட்டுக் கொடுத்ததையும்கூட, ‘அல்லாஹ் பரக்கத் கொடுத்தால் அதைவிட அதிகமாகவே உனக்கு வாங்கித் தருவேன், இன்ஷா அல்லாஹ்’ என்று (நான் மறந்ததையும்) அவர் மறக்காமல் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

மேலும் இங்கு நான் குறிப்பிட்டுள்ள எதுவும் தற்பெருமைக்காக சொல்லவில்லை என்பதை அல்லாஹ் பார்க்கிறான். என் வாழ்க்கை சொல்லும் பாடம் மற்ற யாருக்காவது, பயன்படலாமே என்ற நல்ல நோக்கில்தான் கூறியுள்ளேன்.

என் மகனின் திருமணம் சமயம் இன்ஷா அல்லாஹ் நான் உயிரோடு இருந்தால், அன்றைக்கு அல்லாஹ் எங்களுக்கு வைத்திருக்கும் தகுதிக்கு எவ்வளவு அதிகமாக முடியுமோ அந்தளவு மணப்பெண்ணுக்கு செய்து, அவர்களிடமிருந்து எதையும் கேட்காமல்/எதிர்ப்பார்க்காமல் மணமுடித்து வைக்க நிய்யத் உள்ளது. நிறைவேற துஆ செய்யுங்கள்.

மஅஸ்ஸலாமா!

அன்பு சகோதரி.

source: http://saynotodowry.blogspot.com/2011/07/blog-post_13.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 6 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb