கோபக்கார பெற்றோர்களுக்கு…
குழந்தை வளர்ப்பு என்பதை இன்று பலரும் ஒரு முழுநேர ”வேலையாக” நினைக்கிறார்கள். காரணம் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள தாத்தா பாட்டி என்ற கூட்டுக்குடும்பச் சூழல் இல்லை. அதனால்தான் இன்றைக்கு குழந்தைகள் முழுநேரமும் தங்கள் பெற்றோர்களின் பொறுப்பில் மட்டுமே வளர்கிறார்கள்.
ஆபிஸ் வேலை, வீட்டு வேலை என்று இரண்டு பக்கமும் அல்லாடும் பெற்றோர்களால் குழந்தைகளின் சின்னச் சின்ன பிடிவாதங்களைக் கூட தாங்க முடியாமல் கோபம் வந்து விடுகிறது.
தவிர இந்தக்காலப் பெற்றோர்களுக்கு மணல் வீடு கட்டுதல், பொம்மை வைத்து விளையாடுவதெல்லாம் சுத்த வேஸ்ட். கொஞ்ச நேரம் கிடைத்தாலும், அந்த நேரத்தை மிகவும் பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்று குழந்தைகளை கால்பந்து, சங்கீதம், ஜிம்னாஸ்டிக், கம்ப்யூட்டர் என்று ஏதாவதொரு விஷயத்தில் ஏறக்குறையத் தள்ளிவிடுகிறார்கள்.
இது கெட்டதிலும் முடியலாம், நல்லதிலும் முடியலாம், ஆனாலும் பெற்றோர்களின் மனதில் பதிந்த ஆணித்தரமான எண்ணம், ”ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா!” என்கிற அடிப்படை விஷயம்தான்.
சொல்லிச்சொல்லி வலியுறுத்துவதைவிட நேரடியாக களத்தில் இறக்கிவிட்டுவிடலாம் என்ற வகையில் சில பெற்றோர்கள் அந்தந்த துறையின் நிபுணர்களை அணுகி செயலில் இறங்கிவிடுகிறார்கள் இதற்கு இணையதளங்களும் பேருதவியாக இருக்கின்றன.
பெற்றோர்களின் குழந்தைகள் மீதான இந்த எதிர்பார்ப்பு, அதற்காக பெற்றோர்கள் பின்பற்றும் வழிமுறைகள் நல்லதாகவும் முடியலாம், கெட்டதாகவும் முடியலாம் என்கிறது சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்று. மேலும் அந்தக் கருத்துக்கணிப்பில், ”குழந்தை வளர்ப்பு என்பது ஒரு பெரிய விஷயமானதுக்குக் காரணமே இன்றைய தனிக்குடித்தன குடும்ப அமைப்புத்தான்.
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு பெரிய இஷ்யூ ஆனதால்தான் பெரிய பெரிய நகரங்களில் குழந்தை வளர்ப்பைக் கற்றுக் கொடுக்க என நிறைய வொர்க்ஷாப்ஸ் முளைத்துவிட்டிருக்கின்றன. ஒரு மணிநேர கன்சல்டிங் ஃபீஸாக ரூபாய் 500 லிருந்து 2000 வரை டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற நகரங்களிலும் 500லிருந்து 1000 வரை கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை போன்ற நகரங்களிலும், வசூலிக்கப்படுவதாகத் தெரிகிறது.
குழந்தை வளர்ப்பு என்பது இப்போது ஏன் ஸ்ட்ரெஸ் நிறைந்ததாக இருக்கிறது என்று சைக்யாட்ரிஸ்ட் தேன்மொழியிடம் கேட்டபோது, ”இன்றைய நவீன அம்மாக்களுக்கு தங்கள் குழந்தையின் மீதான திருப்தியின்மைதான் குழந்தை வளர்ப்பு என்னும் மென்மையான விஷயத்தையே ஒரு பிரச்சினையாக பேசும் அளவுக்கு கொண்டுபோய் விட்டிருக்கிறது” என்கிறார்.
உதாரணத்துக்கு தன் குழந்தை 98% மார்க் வாங்கியிருப்பான்… ஆனா, அதற்கு பெத்தவங்க சந்தோஷப்பட மாட்டாங்க… ஏன் 100% வாங்கலை; அவனால் முடியும்.. ஏனோ அவன் 100 மார்க் வாங்கலைன்னு என்கிட்டே வருவாங்க… இந்த திருப்தியின்மைதான் அன்பான பெற்றோர்கள் கூட கோபக்கார பெற்றோர்களாக மாறுவதற்கு முதல் காரணம்.
இதனால் கோபம் மட்டுமில்லாமல் மன அழுத்தம், தூக்கமின்மை, எப்பவும் சாப்பிடறதைவிட குறைவாகச் சாப்பிடுவது அல்லது அதிகமாக சாப்பிடுவது என்று ரொட்டேஷன் வேலைகளெல்லாம் பாதிக்கப்படும். இதை ஸ்ட்ரெஸ் டாலரன்ஸ் லெவல் (Stress tolerance level)னு சொல்லுவோம். இந்த நிலையில் பெற்றோர்களுக்கு குழந்தைகள் மீது தொட்டதற்கெல்லாம் கோபம் வரும். தேவையில்லாத எரிச்சல் வரும்.
”குழந்தைகள் எப்போதுமே 100ல் 70 பர்சன்ட் தங்களுடைய பெற்றோரின் பழக்கவழக்கங்களைப் பார்த்துத்தான் விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். ஒரு தாய் ஓவர் ஸ்ட்ரெஸ”டன் குழந்தை வளர்ப்பில் ஈடுபடும் போது, தாயின் ஸ்ட்ரெஸ்தான் குழந்தையின் மனதில் பதியும். இதனால் அந்தக் குழந்தையும் தன் அம்மாவைப் போலவே டென்ஷனாவதற்கும் கோபப்படுவதற்கும் தானாகவே கற்றுக்கொள்கிறது.”
”குழந்தைகளின் மேல் உங்கள் விருப்பங்களை திணிக்காதீர்கள். அப்படித் திணிக்கும் போது அதை உங்கள் பிள்ளைகள் மறுக்கும். அந்த நேரத்தில் தேவையில்லாமல் நீங்கள் கோபப்பட நேரிடும். இதனால் குழந்தைக்கு உங்கள் மீது வெறுப்பு வரலாம். அந்த வெறுப்பு, பார்ப்பவர்கள் மேலெல்லாம் தொடரும்… இதனால் வீட்டிலும், வெளியிலும் உறவுமுறை சுமூகமாக இருக்காது.”
“குழந்தை தவறு செய்தால் பெரும்பாலான பெற்றோர்கள் கோபத்தில் கெட்ட வார்தைகளைச் சொல்லிக் குழந்தைகளைத் திட்டுவார்கள். அந்த வார்த்தைகளை குழந்தைகள் சுலபமாக கற்றுக்கொண்டு, மற்ற குழந்தைகளை அதே கெட்ட வார்த்தைகளைச் சொல்லித் திட்டுவார்கள். இதனால் அந்தக் குழந்தைகள் கெட்ட குழந்தை என்ற பெயருடன் ஸ்கூலில் ஒதுக்கப்படுகிறார்கள். இப்படி ஒதுக்கப்படும் குழந்தைகள் பின்னாளில் பல கெட்ட பழக்கவழக்கங்களில் சிக்கிக் கொள்வதற்கும் நிறைய வாய்ப்பு இருக்கிறது.”
”குழந்தைகளுக்குத் தன்னைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் ஏற்படும்படி பெற்றோர்கள் தங்கள் குழந்தையை வளர்க்க வேண்டும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டும். குழந்தைக்குத் தான் ஒரு நல்ல குழந்தையில்லை என்கிற எண்ணம் வந்துவிட்டாலே, அவர்களுக்கு செல்ஃப் கான்ஃபிடன்ஸ் இல்லாமல் போய்விடும். குழந்தைகளை திட்டிவிட்டு கொஞ்சுவதோ, அடித்துவிட்டு கொஞ்சுவதோ நோ யூஸ்!”
குழந்தைகளின் அறை என்பது…
குழந்தைகளின் அறை என்பது அவர்கள் குதூகலமாக இருக்கும்படி அமைய வேண்டும். சுவரில் கலர் கலரான பெயிண்டிங்… படங்கள்… ஓவியங்கள்… டிசைன்கள் என்றிருந்தால் அவர்கள் உற்சாகமாக இருப்பார்கள்.
குழந்தைகளின் எண்ணங்கள், கற்பனைகள், விருப்பங்கள் ஆகியவற்றை நிறைவேற்றும் வகையில் அறை அமைய வேண்டும். அவர்களுக்கு பிடித்த நிறங்களில் பெயின்டிங், கார்ட்டூன் உருவங்கள் ஆகியவற்றையும் அறையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கான அறையை உருவாக்கும்போது கவனிக்க வேண்டியவை,
o எந்த குழந்தைக்காக அறை உருவாக்கப்படுகிறதோ… அந்தக் குழந்தையுடன், அறையை உருவாக்கும் கட்டிடக் கலை நிபுணரும் கலந்து பேசி அறையை உருவாக்க வேண்டும்.
o குழந்தைக்கு எத்தனை வயதோ… அதுக்கு தக்கபடி அவர்களுடைய விருப்பங்களும், கற்பனைகளும் மாறுபடும். அதற்கு தகுந்தாற்போல் அறையை மாற்றுவதும் நல்லது.
o ஈஸியாக மாற்றி அமைக்குமாறு இணைப்புகளை பொருத்துவது நல்லது.
o குழந்தைகள் படுக்கும் படுக்கைக்கு அடியில் அவர்களுடைய விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் வைக்க வசதி செய்து தரவேண்டும். மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களே பராமரிக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.
o குழந்தைகளுக்கு வயது அதிகமாகும்போது, விளையாட்டுப் பொருட்களை அகற்றிவிட்டு, அவர்கள் படிக்க வேண்டிய பாடப் புத்தகங்கள் மற்றும் படிப்புக்கான கருவிகளை வைத்துக் கொள்வார்கள்.
o குழந்தைகளின் அறைகளில் வைக்கப்படும் பர்னிச்சர் ஐட்டங்களில் முனைகள் கூர்மையாக இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். வளவளப்பாக… பாலீஷ் செய்து விடுவது நல்லது. ஏனென்றால் விளையாட்டு ஆர்வத்தில் இருக்கும்போது கூரான முனைகள் குழந்தைகளை காயப்படுத்திவிடும்.
o குழந்தைகள் வளர்ந்து சிறுவர், சிறுமியாக ஆன பின்னர், அதிகமாக கிறுக்குவதற்கும், வரைவதற்கும் ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு தனியாக போர்டு வைத்துவிட்டால் அவர்கள் இஷ்டத்திற்கு எதையாவது வரைந்து கொண்டிருப்பார்கள். சுவர்களில், கண்டகண்ட இடங்களில் வரைவதை விட்டுவிட்டு போர்டுகளில் வரைவதால் அவர்களின் திறமையும் பளிச்சிடும்.
o வயது அதிகமாகும் போது அவர்களின் ஆசையும் வேறு மாதிரியாக இருக்கும். வயதுக்குத் தக்கபடி வேறு வேறு படங்களை ஒட்டுவார்கள். அதை சுட்டிக் காட்டினால் மகிழ்ச்சி அடைவார்கள்.
o சிறுவர், சிறுமியர் எளிதாக ஏறி பயன்படுத்தும் வகையாக பர்னிச்சர்களின் உயரத்தை குறைத்து சின்னதாக வைப்பது நல்லது. மேலே உயரத்தில் பெட் இருந்தால் பக்கவாட்டில் தடுப்புகளை கண்டிப்பாக வைக்கவும்.
o இவற்றை எல்லாம் பிளைவுட்டில் செய்தால் வளர்ச்சிக்கு தக்கபடி மாற்றுவதற்கு வசதியாக இருக்கும்.
o எப்போதுமே குழந்தைகளின் அறை, பெற்றோரின் அறையை ஒட்டி அமைந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் தூங்கும்போது இரவில் கனவு கண்டு பயந்து அழுதாலோ அல்லது ஏதாவது அவசரத் தேவை என்றாலோ பெற்றோர்கள் உடனே போய் பார்க்குமாறு அருகில் அறை இருப்பது நல்லது. இல்லாவிட்டால் பெற்றோரின் அறையிலிருந்து, பிள்ளைகளின் அறைக்கு செல்வதற்கு வழி இருக்குமாறு வைத்துக் கொள்வது நல்லது.