சிறுவர்களை சீர்திருத்துவது யார்? .
என்னங்க… நம் ஊர் நன்கு கலகலப்பாக உள்ளதா..!! ஒரு பக்கம் திருமணங்கள்…இன்னும் ஒரு பக்கம் மாணவர்களுக்கு பாராட்டுக்கள், பரிசுகள்.. மற்ற பக்கம் வினாடிவினா போட்டி, உயிர் காக்கும் முதலுதவி பயிற்சி முகாம், மனதோடு போராடு என்று உளத்தூய்மை நிகழ்ச்சி, ஒவ்வொரு பகுதியிலும் மார்க்க சொற்பொழிவுகள் என்று பரபரப்பாகவும், குதூகலமாகவும் ஊர் திகழ்கிறது. இந்த மாதிரி எந்த ஊரிலும் நடப்பதாக தெரியவில்லை..அல்ஹம்துலில்லாஹ்.. அனைத்து நல்உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள்.
(அதே போல குற்றாலத்திலும் வழமை போல நம் மக்களின் கூட்டம் அதிகமாம்..திருந்தும் காலம் என்றோ…)
இந்த நிகழ்வுகள் எல்லாம் வெளிஉலகம் நம் மக்களுக்கு கொடுக்கும் பயிற்சிகளும் ஊக்கங்களும் தான். ஆனால் வீடுகளில் நம் பிள்ளைகளுக்கு கொடுக்கும் பயிற்சி என்ன?
பசங்க என்ன பண்ணுகிறார்கள், எப்போது வீட்டுக்கு வருகிறார்கள், தொழுதார்களா, அவர்களின் நண்பர்கள் யார்?, பள்ளிக்கூடத்தில் அவர்களின் நிலைமை என்ன, குரான் ஓதுகிறார்களா…எதுவும் கண்டுக்கிறது இல்லீங்க..( எல்லோரையும் சொல்லவில்லை…)
ஒருமுறை என் நண்பனின் வீட்டிற்க்கு சென்று பேசிக்கொண்டு இருக்கும் போது. நான் “உங்க மகன் எத்தனாம் வகுப்பு படிக்கின்றான்” என்றதும்..
அந்த அம்மையாருக்கு தன் மகன் படிப்பதை கூட சொல்ல முடியவில்லை. உடனே…மகளை அழைத்து “தாயீ.. தம்பி எத்தனாவது படிக்கின்றாமா..” என்று கேள்வி அங்கு சென்று விட்டது..
என்றாவது நாமாகவே பிள்ளைகளின் பள்ளிக்கூடம் சென்று விசாரித்தது உண்டா.? அவர்கள் அழைக்காதவரை நாம் செல்லுவது இல்லை. கொஞ்சம் அக்கறை எடுங்க.
இன்று இருக்கும் சிறுவர்கள் வீட்டில் இருக்கும்போது அதிகம் இருப்பது டிவிக்கு (TV ) முன்னாடி தான். அதுவும் அவர்கள் பார்ப்பது WWE சேனல்தான்.. அதாங்க ரெஸ்லின் சேனல்.. அதை பார்த்து பார்த்து அதிலே அடிமை ஆகிவிடுகிறார்கள்.வீட்டிலும் சரி வெளியேயும் சரி ஒரே சண்டை, சண்டை, சண்டை தான். ஒருவர் அடுத்தவரை தூக்கிப்போட, அடுத்தவர் இவனின் மூக்கில் குத்த..அப்படியே ரெஸ்லின் சண்டையை பிரதிபலிக்கின்றார்கள்.
இங்கு என் கம்பெனிக்கு அருகில் இருக்கும் ஒரு சகோதரர் ஒரு ஆறு நாட்களுக்கு முன்பு என்னிடம் பரபரப்பாக வந்து “பாய் நான் அவசரமாக ஊருக்கு செல்லனும், கொஞ்சம் பண உதவி பண்ணுங்கோ..நான் வந்து சம்பளம் வாங்கி தருகிறேன்” என்று கண்ணீர் விட்டபடி நின்றார்.
நான் அவரை விசாரித்ததில், அவரின் மகனுக்கு (11 வயது) கழுத்து எழும்பு முறிந்து, நினைவு இல்லாமல் மருத்துவமனையில் இருப்பதாகவும், எதனால் என்று கேட்டதில் அவரின் மகனும், பக்கத்துக்கு வீட்டு பையனும் வீட்டில், WWE (ரெஸ்லின்) விளையாடி, கட்டிலில் இருந்து இருவரும் விழுந்து இந்த விபரீதம் நடந்ததாம்.
இன்னும் ஒரு நிகழ்வு, சகோதரர்கள் இருவரும் வீட்டில் தினமும் ரெஸ்லின் விளையாட்டு… ஒரு முறை தம்பி காதில் பட்ஸ் வைத்து குடைந்து கொண்டு இருக்கும் போது, அண்ணன் அவனின் மேல் விழுந்து, காதில் பட்ஸ் குத்தி, செவிப்பறை கிழிந்து, இரத்தம் நிற்க 20 நாட்கள் ஆகி, தற்போது ஒரு காது கேட்க்கும் சக்தியை இழந்து விட்டது..
இதற்கு எல்லாம் காரணம் அந்த WWE சேனல் தான்.. இந்த முசீபத்தை ஒழிப்பது எப்படி…
இந்த ரெஸ்லின் பார்ப்பதை இஸ்லாம் அனுமதிக்கின்றதா என்றால்.. கண்டிப்பாக இல்லை. ஒருவர் மற்றவரை அடிப்பதையோ, துன்புறுத்துவதையோ, அதை நாம் பார்த்து ரசிப்பதையோ, ஒருவர் தன்னைத் தானே துன்புறுத்துவதையோ நம் மார்க்கம் அனுமதிக்க வில்லை. போரில் மட்டும் தான் ஒருவர் மற்றவரை தாக்க அனுமதி உண்டு..
இந்த ரெஸ்லின் நிகழ்வில் ஒருவர் மற்றவரின் முகத்தில் குத்த, தூக்கிப்போட்டு மிதிக்க, கம்பு, சேரை கொண்டு அடிக்க, அதற்க்கும் மேலாக பெண்களின் ரெஸ்லின்….அவர்கள் அணிந்து இருக்கும் ஆடை… அப்பப்பா…இதை எல்லாம் பார்த்து ரசிக்க இஸ்லாம் அனுமதிக்கின்றதா..சொல்லுங்க…
முதலில் இந்த ரெஸ்லின்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைங்க.. சமூகஆவலர்களே..கேபிள் TV நடத்துபவர்களிடம் சொல்லி இந்த சானலை தடை பண்ணசொல்லுங்க…புண்ணியமாக போகும்..
”இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர்; “அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.” (அல்குர்ஆன் 62 :11 )
காலம் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு சொத்து. அதை எப்படி செலவு செய்தோம் என்று கண்டிப்பாக படைத்தவன் நம்மை கேட்பான்.அதற்கு நம்மிடம் நல்ல பதில் உண்டா..சொல்லுங்க.
”காலத்தின் மீது சத்தியமாக.. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).” (அல்குர்ஆன் 103:1,2,3) .
ஆகவே நம் பிள்ளைகளுக்கு நல்ல கருத்துக்களை சொல்லுங்க, மனம் விட்டு பேசுங்க, நபி மொழிகள், நபி உடைய, சஹாபாக்களுடைய வாழ்க்கை சரித்திரத்தை சொல்லுங்க, கூடுமான வரை வீட்டில் தொழுக வைக்காமல் பள்ளிகளுக்கு சென்று தொழுக சொல்லுங்க (அப்படியே வீட்டில் உள்ள பெரியவர்களையும் சொல்லுங்க..), பெரியவர்கள் ஆக ஆக அவர்களிடம் நெருக்கத்தை அதிகரித்து, நண்பன் மாதிரி பழகுங்க. அடிக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் தயங்காமல் அடித்து திருத்துங்க.
சில சகோதரர்கள் பிள்ளைகளை அடித்து வளர்க்கக் கூடாது என்று சொல்லுபவர்களும், கருத்து தெரிவிப்பவர்களும் உண்டு. அது சரி இல்லைங்க. அடிக்கின்ற நேரத்தில் அடித்து தான் திருத்தனும். கம்மாமார்கள் அடிக்கடி சொல்லுவார்கள், “முருங்கையை (முருங்கை மரம்) முறித்து வளர்க்கனும், பிள்ளைகளை அடித்து வளர்க்கனும்” என்று. முருங்கை மரத்தை முறிக்காமல் வளர்த்தல் அப்படியே மசமச என்று நன்றாக வளரும், ஒரு காற்று சற்று பலமாக அடித்தால் அப்படியே வேரோடு சாய்ந்துவிடும். அது மாதிரி தான் குழந்தைகளும்.
அன்புடன்,
சாளை S.I.ஜியாவுத்தீன்
source: http://www.kayalnews.com