‘படிக்கிற வயசுல எதுக்குடி இதெல்லாம்?’
முஹம்மது ஆஷிக்
அதிராம்பட்டினத்தில் 1வது முதல் 5வது வரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் co-education-இல் படித்திருக்கிறேன். பின்னர்… காதிர் முஹைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்தேன். இது ஆண்கள் பள்ளி என்றாலும்… +1 மற்றும் +2 மட்டும் co-education..! ஆனால் அங்கே 6வது மற்றும் 7வது மட்டும்தான் படித்தேன்.
பிறகு ஆங்கில வழி கல்வி பயில பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 8வது முதல் +2 வரை பயின்றேன். இதுவும் ஆண்கள் பள்ளி என்றாலும்… 6வது முதல் 10வது வரை நான் படித்த English medium மட்டும் co-education..! அப்போது நான்…
+2 படிக்கும்போது… PG Teachers Association சார்பில் சுமார் இரண்டரை மாதம் வேலைநிறுத்தம் நடைபெற்றது. டியுஷன் உட்பட கல்வி கற்பிப்பதையே முழுதும் நிறுத்தி சம்பள உயர்வுக்காக (1992-93 கல்வியாண்டில்) போராடினார்கள். அதில் அவ்வருடம் நாங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டோம். அதன் விளைவு… எங்கள் பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலில் தெரிந்தது.
மற்ற பாடங்கள் ஓரளவு நாங்களே புரிந்து படித்து விட்டாலும் கணக்கு மட்டும் ஆசிரியர் துணை இல்லாமல் சுத்தமாக புரியவே இல்லை. முக்கியமாக அவ்வருடம் மட்டுமே அறிமுகமான differential equations, conics மற்றும் complex numbers. இவற்றை புரியாமல் அப்படியே ஒதுக்கி வைத்து விட்டுத்தான் தேர்வுக்கே சென்றோம். என்னால் 148 தான் எடுக்க முடிந்தது..!
இதனால் அடுத்த வருடம் Improvement எழுதி பொறியியல் கல்லூரியில் புகுந்து விடலாம் என்று (அப்போது… 39 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே தமிழகத்தில் இருந்தன) கணக்கில் centum எடுக்கும் முயற்சியில் தனி டியுஷன் வைத்து படித்து வந்தோம். வருடம் வீணாகாமல்… ‘எதற்கும் இருக்கட்டும்’ என்று அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் கல்லூரியில் இளம் அறிவியல் – வேதியியல் சேர்ந்து கொண்டேன். அன்றொரு நாள் என் நண்பனுடன் அவன் வீட்டில் ‘complex numbers’ problems solve பண்ணிக்கொண்டு அமர்ந்திருந்தோம். Group study..!
அப்போதுதான்….
ஒரு அம்மா குழந்தையுடன் வந்து என் நண்பனின் தாயாருடன் பேசிவிட்டு வெளியே செல்லும்போது… ஹாலில் என்னை பார்த்துவிட்டு…
“ஹே… ஆஷிக்… எப்படிடா இருக்கே..?” …என்றார்கள்.
“நல்லா இருக்கேன் மாமி” என்றேன்.
(பொதுவாக என் நண்பன் அவனுடைய அம்மாவின் தோழிகளை அப்படித்தான் அழைப்பான்).
ஆனால்… மனதுள்… “”இவர் யார்… நம் தாயாரின் தோழியோ..? இதற்குமுன் பார்த்ததோ பேசியதோ இல்லையே… இவருக்கு மட்டும் நம்மை எப்படி தெரிகிறது..?”” என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போதே…
அந்த அதிரை ஸ்டைல் துப்பட்டி போட்டிருந்த குழந்தை வைத்திருந்த மாமி…
“என்னது மாமியா…? என்னை தெரியலையாடா..?”
“ஹி.. ஹி.. எங்கேயோ பார்த்துருக்கேன்… ஆனா எங்கேன்னுதான் தெரியலை மாமி…!”
“என்னடா மறுபடியும் ‘மாமி’ங்கிறே..? அப்போ… நீ என்னை மறந்துட்டே..!”
“சரி… எனக்குத்தெரியலை மா… அக்கா… ராத்தா… நீங்களே சொல்லிருங்க நீங்க…யாருன்னு…”
“அடப்பாவி… இப்படித்தான் கூட படிச்ச புள்ளையை மறப்பியாடா…?”
….என்றதும் எனக்கு செம ஷாக்..!
“நீங்க… நீ… வந்து உங்க… உன் பேரென்ன..?”
“மொகமே நியாபகம் இல்லன்னா பேரு மட்டும் எப்படி நியாபகம் இருக்குமாம்..?
நான் ஜஹபர் நாச்சியா..!”
அமர்ந்திருந்த நான் ‘தடால்’ என்று எழுந்து நின்றேன்..! ஐந்தாம் வகுப்பு வரை என் கூட படிச்ச பொண்ணு..! சராசரியை விட உயரமாகவும் அனைவரையும் மிரட்டி அதட்டும் கணீர் குரலும், அப்போதே தாவணி எல்லாம் போட்டுக்கொண்டு பெரிய மனுஷி மாதிரி இருந்ததால் டீச்சருக்கு மிகவும் பிடிச்சுப்போய் கிளாஸ் லீடர் ஆக்கிட்டாங்க. ஆனால், எங்க படிப்பாளி குருப்புக்கே இவளை பிடிக்காது..! காரணம் நல்லா படிக்கிரவங்கதான் கிளாஸ் லீடரா வரணும்னு நாலாவது வரை இருந்த ரூல்ஸை ஒடச்சி அராஜகமாக லீடர் ஆனவள். டீச்சரின் அடியாள்.
பேசுறவங்க பேரை போர்டில் டீச்சர் எழுதச்சொல்லிட்டு வேற கிளாசுக்கு பாடம் நடத்த சென்றுவிட்டால்… (என்ன செய்ய… துவக்கப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை) இந்த லீடர்… முதல் பெயராக என் பெயரை போர்டில் எழுதி அடி வாங்க வைப்பவள். ‘பேசாமல் இருக்கும் போதே எழுதறாளே’ என்று கடுப்பாகி… ‘நான் எங்கேடி பேசினேன்’ என்றால்… என் பேருக்கு பக்கத்தில் X போட்டு 1 , 2 , 3 … என்று எழுத ஆரம்பித்துவிடுவாள். அத்தினிவாட்டி பேசினேனாம்..!
இந்த நம்பர்களை எல்லாம் போர்டில் கண்டபிறகு காலையிலிருந்து தொடர்ந்து ஓய்வின்றி தொண்டை கிழிய பாடம் நடத்த கத்தும் டீச்சரிடம் இருந்து வரும் முதல் அடி ரொம்ப கோபமாகவும் பலமாகவும் இருக்கும். வலியால் துடிப்பது கண்டு அடுத்தடுத்து வருகிறவர்களுக்கு அடியின் வேகம் குறைந்து விடும். இளகிய மனது அவங்களுக்கு..!
இந்த லீடர் என்னை எத்தனை அடி வாங்க வைத்திருக்கிறாள்.அட… அவளா இவள்..? ச்சே…! இவளைப்போயா இவ்வளவு மரியாதையா வாங்க போங்கன்னு… மாமின்னு… எல்லாம் மரியாதை கொடுத்து… ச்சே…!
“ஓ… ஸாரி… ஜஹபர்நாச்சியா… உன்னை அடையாளம் தெரியலை. இப்போ நியாபகம் வருது. நீ அஞ்சாவதுல கிளாஸ் லீடர். ஆனா… எப்படி… நீ… இப்படி… இந்த குழந்தை… உன்னோடதா… உனக்கு கல்யாணம் ஆகிருச்சா..?”
“ம்ம்ம்… ஆகிருச்சு… எம்மகன்தான் இவன். ஒரு வயசு ஆகுது. அவுகளுக்கு தஞ்சாவூரிலே மெடிக்கல் ஷாப் இருக்கு. சரி.. சரி.. நீங்க படிங்க.. உங்களுக்கு உங்க குடும்பத்தை காப்பாத்தற கடமை இருக்கு. அதுக்கு சம்பாரிக்கணும். அதுக்கு நல்லா படிக்கணும்… அப்புறம்… சரி… டைம் ஆச்சு… நான் வாறன்…” என்று ‘புத்திமதி’ சொல்லிவிட்டு (இன்ன்ன்னும் லீடர்னு நினைப்பு போல…) கிளம்பிச்சென்றதும்…
அப்போதுதான் என் நண்பன் முணுமுணுத்தான்… “அதுக்குள்ளே கல்யாணமாகி அம்மாவும் ஆயிட்டாளா…?” “படிக்கிற வயசுல எதுக்குடி இதெல்லாம்..?” என்று..!
என் காதில் இது விழுந்து விட… “போடா வெண்ணை… நாமதான் கல்யாண வயசுல ‘காம்ப்ளக்ஸ் நம்பர்ஸ்’ படிச்சிக்கிட்டு இருக்கோம்… அதுகளாவது கரெக்டான வயசுலே கல்யாணம் பண்ணி காம்ப்ளக்ஸ் இல்லாம சந்தோஷமா இருந்தா சரிதான்” என்றேன்.
“எது கரெக்டான வயசு..? தப்பில்லையாடா..! அந்த பொண்ணு ஏறிப்போன ஆட்டோவுக்கு பின்னாடி என்னா எழுதி இருந்துச்சு பார்த்தியில்ல… ‘பெண்ணின் திருமண வயது 21’… அரசு ஆணை..! தெர்யும்ல..?”
“அப்படி இருக்காதுடா. ஏன்னா… ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணும் போது 18 வயசு ஆனா மேஜர்னு சொல்லி சட்டப்படி கல்யாணம் பண்ணி வைப்பாங்க..! தெரிஞ்சுக்க..!”
—————————————————————————————————-
சகோ..! உங்கள் வட்டாரத்தில் இதுபோல பல ஜஹபர் நாச்சியாக்களை பார்த்திருப்பீர்கள். பெண்கல்வி என்பது பெண்ணுரிமை. அது அவர்களுக்கு இலகுவாக கிடைக்கும் பொருட்டு நிலைமை இருக்கிறதா..? இப்போது பல விஷயங்களை நாம் தீர அலசி ஆராய வேண்டியுள்ளது.
முதலாவதாக……
60-களில் கல்லூரியில் வந்த சிலபஸ்… 80-களில் உயர் நிலைப்பள்ளியில்..! அப்போது மேல்நிலைப்பள்ளியில் இருந்த சிலபஸ்… இரண்டாயிரத்தில் துவக்கப்பள்ளியில்..! ஆனால், படிக்கும் வருடங்கள் மட்டும் அன்று போலவே என்றும் குன்றா அதே இளைமையுடன் இருப்பது சரியா..?
ஒருசில பாடங்கள் தவிர… பன்னிரண்டு வருடமாக பெரும்பாலும் பள்ளிகளில் கீழ் வகுப்புகளில் அரைத்த மாவையேதானே நாம் மேல் வகுப்புகளில் அறைக்கிறோம்..? பள்ளி சிலபஸ் கல்லூரிகளிலும் தொடர்கிறதா இல்லையா..? “இடுக்கண் வருங்கால் நகுக..” ஐந்தாவதில் படித்த அதே திருக்குறள்… கல்லூரியிலும்..! இதேபோல மற்ற பாடங்களிலும் எத்தனை ரிப்பீட்டுகள்..? ஒருவகுப்பில் படித்தது அடுத்த வகுப்பில்..! பள்ளியில் படித்தவை அப்படியே கல்லூரியில்..!
12 வருடம் படிப்பதை, ரிபீட் இல்லாமல் 9 வருடத்திலேயே பள்ளிகளில் சுருக்கி கற்றுத்தர முடியுமா… முடியாதா..?
அதன்பிறகு, கல்லூரிப்படிப்பு 3 அல்லது 4 வருடம். பிறகு 18 வயதிலேயே சுய சம்பாத்தியம்… வேலை என்று ஒரு சிஸ்டம் நம்மிடம் இருந்திருந்தால்… இந்த ஜஹபர் நாச்சியாக்கள் எல்லாருமே திருமணம் ஆகும் முன்பே பட்டப்படிப்பு முடித்திருப்பார்களே..?
பிசினஸ் அது இதுன்னு பொருளாதார ரீதியிலே செட்டில் ஆகிவிட்டால், பசங்களுக்கே சற்று சீக்கிரமாக கல்யாணம் ஆகிவிடுகிறதே..? இதற்கு பிரபல உதாரணம்: நம்ம சச்சின் டெண்டுல்கர் தன் 17 வயதிலேயே அதாவது 1990-லேர்ந்தே ‘லவ் பண்ணப்பட்டு’ விரைவாக கல்யாணம் ‘செய்து கொள்ளப்பட்டாரே’..?அதுவும் ஒரு டாக்டரால்..? இந்த டெண்டுல்கரும் ஒருவகையில் ‘ஓர் ஆண் நாச்சியா’தானே..?
இதற்கெல்லாம்… தற்போதைய நம் நடப்பு கல்விமுறைதானே காரணம்..?
இந்த புராதன ‘மெக்காலே கல்வி முறையை’ நாம் முழுதாக மாற்றி அமைக்க வேண்டும் அல்லவா..!?
‘பெண்களுக்கு திருமணம்’ என்பது எவ்விதத்திலும் அவர்கள் படிப்பை பாதிக்காமல் இருக்க வேண்டும். அதாவது… மனிதனின் உடல்கூறுக்கு தக்கபடி படிக்கிற காலம் திருத்தப்பட வேண்டும்.
இந்த 10+2+3 சிஸ்டத்தினால், வயசு கூடுதே என்று.. கல்யாணம் முக்கியப்பட்டு, பெண்கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு… பெண்கள் பட்டக்கல்வி கற்பது ரொம்ப குறைவாக போய் விடுகிறது. இதுவே நான் முன்பு சொன்ன 9+3 அல்லது 9+4 சிஸ்டமாக இருந்திருந்தால் 18 வயதுக்குள்ளே நிறைய பெண்கள் ஏதாவது ஒரு வேலைவாய்ப்புக்குறிய பட்டம் பெற்று இருந்திருப்பார்கள். அவர்கள் கல்வியும் திருமண வாழ்வும் ஒன்றுக்காக ஒன்று பாதிக்கப்பட்டு இருந்திருக்காது. பெண்கள் தங்களின் திருமணப்பருவத்தை அடையும் முன்பே… அவர்களின் பட்டக்கல்வி காலங்கள் முடியும் படி நாம் நமது கல்வி கற்பிக்கும் கால அமைப்பை முறைமை படுத்தி இருந்தால்..? பெண்கல்வி குறித்து நாம் சற்று வேறொரு புதிய கோணத்தில் சிந்திக்க வேண்டிய நேரமிது சகோ..!
உடற்கூறு மாறுபாட்டால் மாணவர்கள் வயசுக்கோளாறில் தடம் மாறுவதற்கு முன்பே அவர்கள் கல்வி கற்று பள்ளியை & கல்லூரியை விட்டு வெளியேறிட வேண்டும். பசங்களும் பள்ளி & கல்லூரி நாட்களில் மனம் பிறழ்ந்து வழிகேட்டில் வீழ்ந்திட வாய்ப்பில்லை..!
பெண் தன் கல்வியை திருமணம் முடிந்து வீட்டில் இருந்த படியே அஞ்சல் வழிக்கல்வியில் எல்லா பட்டப்படிப்பையும் அப்படி தொடர வசதியில்லையே..? சிலவற்றை… திருமணம் ஆனபின் ஏகப்பட்ட குடும்ப பொறுப்புச்சுமையுடன் படிக்க ஆரம்பித்தாலும், பள்ளி/ கல்லூரியில் இணைந்து படிக்கும் அதே உத்வேகமோ… சுதந்திர உணர்வோ… படிப்பு வேட்கையோ இப்போது இருக்குமா..?
18 வயதில் நாட்டின் தலைவரை ஒட்டுச்சாவடியிலும், வீட்டின் தலைவரை ரெஜிஸ்டர் ஆபீஸிலும் தேர்ந்தெடுக்க அனுமதியளித்து விட்டு… இனியும், ‘திருமண வயது 21’ என்றுசொல்லிக்கொண்டு இருப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகாதா..?
யோசனை சொல்ல நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், போகிறபோக்கை கண்ணுறும்போது… PreKG, LKG, UKG இதெல்லாம் இனி அரசே கட்டாயமாக்கி காசை கரக்கப்பார்ப்பார்கள்… என்றே தோன்றுகிறது.
முடிந்தால் இன்ஜினியரிங் 5 வருடம், மெடிக்கல் 7 வருடம் என்று ஃபீஸ் புடுங்க கல்வியின் வருடங்கள் நீளுமே ஒழிய குறைய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. மாணவர்களை பற்றி இப்போது யாருக்கு கவலை..?
ஒருவேளை… அப்படி கவலைப்பட்டிருந்தால்… அந்த டீச்சர்ஸ் ஸ்ட்ரைக்கே நடந்திருக்காதே..? அப்புறம் நான் improvement எழுத வேண்டிய அவசியமே வந்திருக்காதே..? நானும் இந்த பதிவையும் எழுதி இருக்க மாட்டேனே..? நீங்களும் இங்கே இதை படித்துக்கொண்டிருக்கவும் மாட்டீர்களே..?
source: http://pinnoottavaathi.blogspot.com/2011/09/blog-post_09.html