Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்

Posted on September 24, 2011 by admin

குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கு மக்கள் மிகப் பெரும் சிரத்தையை எடுத்துக் கொள்கின்றனர். என்ன பெயர் வைக்கலாம்? புதுப் பெயராகச் சொல்லுங்கள் என்றெல்லாம் கேட்டு அரபு மொழி தெரிந்தவர்களை நாடிச் செல்வதைப் பார்க்கிறோம்.

இன்னும் சிலர் கிரிக்கெட், சினிமா போன்றவற்றில் பிரபலமாக உள்ளவர்களின் பெயரைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுவதில் பெருமையடைகின்றார்கள். சிலர் தவறான பொருள் கொண்ட பெயர்களைச் சூட்டிக் கொள்கிறார்கள்.

எனவே பெயர் சூட்டுவதற்குரிய சில அடிப்படையான மார்க்கச் சட்டங்களைத் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விற்கு விருப்பமான பெயர்கள் என்று சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4320)

இறைவனுக்கு இணையானவராகக் காட்டும் வகையில் பெயர் சூட்டுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளார்கள். மேலும் இவ்வாறு பெயர் வைத்துக் கொண்டவர்களுக்கு மறுமையில் மிகப் பெரும் இழிவு ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய, அவனிடம் மிகவும் கேவலமான மனிதர் யாரெனில், (உலகில்) “மன்னாதி மன்னன்’ எனப் பெயரிடப்பட்ட மனிதர் தாம். அல்லாஹ்வைத் தவிர (சர்வ வல்லமை படைத்த) மன்னன் வேறு யாருமில்லை. (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4339, புகாரி 6205)

என்னுடைய தந்தையின் பெயர் அறியாமைக் காலத்தில் “அஸீஸ்” (யாவற்றையும் மிகைப்பவன்) என்று இருந்தது. அவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அப்துர் ரஹ்மான்” (அளவற்ற அருளாளனின் அடிமை) என்று பெயர் சூட்டினார்கள். (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அபீ சப்ரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத் 16944)

ஷுரைஹ் என்பாரின் தந்தை ஹானீ அவர்கள் தன்னுடைய கூட்டத்தாருடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார். (ஹானீ) அவர்களை அவருடைய கூட்டத்தினர் “அபுல் ஹகம்” (நீதிபதியின் தந்தை) என்று புனைப் பெயர் சூட்டி அழைப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செவியேற்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை அழைத்து அல்லாஹ் தான் “ஹகம்” (நீதிபதி) ஆவான். அவனிடம் தான் “தீர்ப்பு” உள்ளது. நீர் ஏன் “அபுல் ஹகம்” (நீதிபதியின் தந்தை) என்று புனைப் பெயர் சூட்டிக் கொண்டீர்?” என்று கேட்டார்கள்.

அதற்கவர், “என்னுடைய சமுதாயம் ஏதாவது ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்கள் என்றால் என்னிடத்தில் வருவார்கள். நான் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பேன். இரு பிரிவினரும் அதைப் பொருந்திக் கொள்வார்கள்” என்று கூறினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “இது அழகானதல்ல” எனக் கூறிவிட்டு உனக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? என்று கேட்டார்கள். அதற்கவர் எனக்கு சுரைஹ், முஸ்லிம் , அப்துல்லாஹ் ஆகியோர் உள்ளனர் எனக் கூறினார். அவர்களில் மூத்தவர் யார்? என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கவர் ஷுரைஹ் என்று பதிலளித்தார். அதற்கு நபியவர்கள் நீ இனி “அபு ஷுரைஹ்” (ஷுரைஹின் தந்தை) என்று அவருக்கு பெயர் சூட்டினார்கள். (நூல்: அபூதாவூத் 4304)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனைப் பெயர்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனைப் பெயரை மற்றவர்கள் வைப்பதைத் தடை செய்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: என் பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள். (அபுல்காசிம் எனும்) என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள். ஏனெனில், நானே உங்களிடையே பங்கீடு செய்கின்ற “அபுல் காசிம்’ ஆவேன். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4323)

ஒருவர் அபுல் காசிம் என்ற பெயரை மட்டும் வைத்துக் கொண்டால் அது குற்றம் கிடையாது. ஏனெனில் நபியவர்கள் தன்னுடைய பெயரான முஹம்மத் என்ற பெயருடன் சேர்த்து அபுல் காசிம் என்ற புனைப் பெயரை வைப்பது கூடாது என்று தான் தடுத்துள்ளார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: என்னுடைய பெயரையும் என்னுடைய குறிப்புப் பெயரையும் இணைத்து விடாதீர்கள். நிச்சயமாக நானே “அபுல் காசிம்’ ஆவேன். நான் பங்கீடு செய்பவனாக இருப்பதினால் அல்லாஹ் (அதனை) எனக்கு கொடுத்தான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத் 9226)

மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் அபுல் காசிம் என்ற பெயரை மற்றவர்களும் வைத்திருந்தார்கள். அப்போது சிலர் நபியவர்களின் அருகில் நின்று கொண்டு நபியவர்களை அழைப்பது போன்று மற்றவர்களை அழைத்தார்கள். இதன் காரணமாகவும் நபியவர்கள் அபுல் காசிம் என்ற தன்னுடைய குறிப்புப் பெயரை வைப்பதற்குத் தடை விதிக்கிறார்கள்.

அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: (ஒரு முறை) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடைவீதியில் இருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் “அபுல் காசிமே! (காஸிமின் தந்தையே!)’ என்று கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை நோக்கித் திரும்பினார்கள். அவர் (வேறொருவரைச் சுட்டிக் காட்டி) “நான் இவரைத் தான் அழைத்தேன்! (தங்களை அழைக்கவில்லை!)’ என்றார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “எனது பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள்! எனது (அபுல்காசிம் எனும்) குறிப்புப் பெயரை சூட்டிக் கொள்ளாதீர்கள்” என்றார்கள். (நூல்: புகாரி 2120)

இன்று நபியவர்கள் நமக்கு மத்தியில் இல்லாத காரணத்தினால் இந்தத் தடை இன்றைய காலத்திற்குப் பொருந்தாது.

எனவே தற்காலத்தில் ஒருவர் அபுல் காசிம் என்ற பெயரை வைத்துக் கொள்வதினால் குற்றமாகாது.

ஒருவரை தீயவராகக் காட்டும் வகையில் அமைந்த பெயர்களை வைப்பதை வெறுத்துள்ளார்கள்.

என் தந்தை (ஹஸன் பின் அபீவஹ்ப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கற்டம் வந்தார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “உங்கள் பெயரென்ன?” என்று கேட்டார்கள். அவர்கள், “ஹஸ்ன்” (முரடு) என்று கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “(இல்லை) நீங்கள் (இனிமேல்) “சஹ்ல்’ (மென்மை)” என்று சொன்னார்கள். அவர், “என் தந்தை சூட்டிய பெயரை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன்” என்றார். அதற்குப் பின்னர் எங்கள் குடும்பத்தாரிடையே (அவர்களுடைய குண நலன்கற்ல்) முரட்டுத்தனம் நீடித்தது. (அறிவிப்பவர்: முஸய்யப் பின் ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6190)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஆஸியா’ (பாவி) எனும் பெயரை மாற்றி விட்டு, “நீ (பாவியல்ல), ஜமீலா (அழகி)” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4332)

இங்கு பாவி என்ற பொருளுக்குரிய அரபி வார்தை ஆஸியா என்பது அய்ன், ஸாத், யா, தா ஆகிய எழுத்துகளை உள்ளடக்கியதாகும்.

அலிஃப், சீன், யா, தா ஆகிய எழுத்துக்களை உள்ளடக்கிய ஆசியா என்ற பெயரை வைத்துக் கொள்ளலாம். இது பிர்அவ்னுடைய மனைவி அன்னை ஆசியா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயராகும்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வந்த நபர்களில் “அஸ்ரம்’ (நன்மைகளை முறிப்பவர்) என்று கூறப்படும் ஒரு மனிதர் இருந்தார். அவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன் பெயர் என்ன என்று கேட்டார்கள். அதற்கவர் “அஸ்ரம்’ (நன்மைகளை முறிப்பவர்) என்று கூறினார். அதற்கு நபியவர்கள், இல்லை. நீ “சுர்ஆ” (விளைவிக்கும் பூமி) என்று கூறி (அவருக்கு பெயர் சூட்டி)னார்கள்) (அறிவிப்பவர்: உஸாமா பின் உஹ்தர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத் 4303)

மக்கா வெற்றியின் போது ஆஸி (இறைவனுக்கு மாறு செய்பவர்) என்ற பெயர் கொண்ட ஒருவர் இஸ்லாத்தைத் தழுவினார். நபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரின் பெயரை முதீவு (இறைவனுக்கு கட்டுப்படக்கூடியவர்) என்று மாற்றினார்கள். அவருக்கு பெயர் மாற்றம் செய்ததையும், இறைவனுக்கு மாறுசெய்பவர் இஸ்லாத்தை தழுவ மாட்டார்; கட்டுப்படுபவர் தான் இஸ்லாத்தை தழுவுவார் என்பதையும் குறிக்கும் வகையில் நபியவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

மக்கா வெற்றி நாளின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற முதீவு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் செவியேற்றார்கள்: (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்) இந்த நாளுக்குப் பிறகு குரைஷிகள் சித்ரவதையினால் கொல்லப்படமாட்டார்கள். (இறைவனுக்கு) மாறு செய்பவர்களான குறைஷிகளில் இறைவனுக்கு வழிபடக்கூடியவரை “(முதீவு)” தவிர வேறு யாருக்கும் இஸ்லாம் சென்றடையவில்லை.

அவரின் பெயர் “ஆஸி” (இறைவனுக்கு மாறு செய்பவர்) என்று இருந்தது. அவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “முதீவு” (கட்டுப்படக்கூடியவர்) என்று பெயர் சூட்டினார்கள். (நூல்: அஹ்மத் 15446)

பஷீர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து தன்னுடைய பெயர் ஸஹ்ம் (நெருக்கடி) என்று கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்கு பஷீர் (நற்செய்தி) என்று பெயர் சூட்டினார்கள். (அறிவிப்பவர்: பஷீர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத் 20950)

தன்னைத் தானே பரிசுத்தப்படுத்தும் வகையில் பெயர் சூட்டுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்திருக்கிறார்கள்.

ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு (முதலில்) “பர்ரா’ (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது “அவர் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார்” என்று (மக்களால்) சொல்லப்பட்டது. ஆகவே, அவருக்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஸைனப் (அழகிய தோற்றமுடைய நறுமணச் செடி) என்று பெயர் சூட்டினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4335)

நான் என் புதல்விக்கு “பர்ரா’ (நல்லவள்) எனப் பெயர் சூட்டினேன். அப்போது ஸைனப் பின்த் அபீசலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்தப் பெயரைச் சூட்ட வேண்டாமெனத் தடை செய்தார்கள். (முதலில்) எனக்கு “பர்ரா’ என்ற பெயரே சூட்டப் பெற்றது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “உங்களை நீங்களே பரிசுத்தப்படுத்திக் கொள்ளாதீர்கள். உங்களில் நல்லவர் யார் என அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று சொன்னார்கள். மக்கள், “அவருக்கு நாங்கள் என்ன பெயர் சூட்ட வேண்டும்?” என்று கேட்டார்கள். அல்லாஹ் வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அவருக்கு “ஸைனப்’ எனப் பெயர் சூட்டுங்கள்” என்றார்கள். (நூல்: முஸ்லிம் 4337)

சில பெயர்கள் அழகிய பொருளுடையதாக இருந்தாலும் அந்தப் பெயரைக் கூறி அழைக்கும் போது, அவர் இல்லை என்று பதில் வந்தால் அந்த அழகிய தன்மையே இல்லாமல் போய்விட்டதோ என்று எண்ண வேண்டிய நிலை ஏற்படும். இதன் காரணமாக இது போன்ற சில பெயர்களை வைப்பதைத் தடை செய்தார்கள். ஆனால் இதை நபியவர்கள் வாழும் போதே கண்டு கொள்ளாமலும் விட்டிருக்கின்றார்கள்.

(நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியாரான) ஜுவைரியா (ரளி) அவர்களுக்கு (முதலில்) “பர்ரா’ என்ற பெயர் இருந்தது. அவருக்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஜுவைரியா’ (இளையவள்) எனப் பெயர் மாற்றினார்கள். “அல்லாஹ்வின் தூதர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “பர்ரா’விடமிருந்து (நல்லவளிடமிருந்து) புறப்பட்டு விட்டார்கள்’ என்று சொல்லப்படுவதை அவர்கள் வெறுத்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4334)

சமுரா பின் ஜுன்தப் ரளியல்லாஹு அன்ஹு, அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கள் அடிமைகளுக்கு அஃப்லஹ் (வெற்றியாளன்), ரபாஹ் (இலாபம்), யசார் (சுலபம்), மற்றும் நாஃபிஉ (பயனளிப்பவன்) ஆகிய நான்கு பெயர்களைச் சூட்ட வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள் (நூல்: முஸ்லிம் 4328)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (துதிச்) சொற்கள் நான்கு ஆகும். 1. சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) 2. அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) 3. லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) 4. அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகவும் பெரியவன்).

“இவற்றில் எதை நீர் முதலில் கூறினாலும் உம்மீது குற்றமில்லை” என்று கூறிவிட்டு, “உம்முடைய அடிமைக்கு யசார் (சுலபம்) என்றோ, ரபாஹ் (இலாபம்) என்றோ, நஜீஹ் (வெற்றியாளன்) என்றோ, அஃப்லஹ் (வெற்றியாளன்) என்றோ பெயர் சூட்ட வேண்டாம். ஏனெனில், (அந்தப் பெயர் சொல்லி) “அவன் அங்கு இருக்கிறானா’ என்று நீர் கேட்கும்போது, அவன் அங்கு இல்லாவிட்டால் “இல்லை’ என்று பதில் வரும்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் சமுரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: இவை நான்கு பெயர்கள் மட்டுமே ஆகும். இவற்றை விடக் கூடுதலாக வேறெதையும் என்னிடமிருந்து நீங்கள் அறிவிக்க வேண்டாம். (அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்தப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4330)

நபியவர்கள் வாழும் போதே இவ்வாறு பெயர் வைப்பதைக் கண்டு கொள்ளாமலும் விட்டுள்ளார்கள் என்பதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு அடிமை இருந்தார். அவருக்கு ரபாஹ் (இலாபம்) என்று பெயர் சூட்டப்பட்டவராயிருந்தார். (அறிவிப்பவர்: ஸலாமா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத் 16542)

ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யஅலா (உயர்வு), பரக்கத் (வளம்), அஃப்லஹ் (வெற்றி), யசார் (சுலபம்), நாஃபிஉ (பயனளிப்பவன்) போன்ற பெயர்களைச் சூட்ட வேண்டாம் எனத் தடை விதிக்க விரும்பினார்கள். பின்னர் அதைப் பற்றி எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துவிட்டார்கள்; அதைப் பற்றி எதுவும் கூறவில்லை.

பின்னர் அவற்றுக்குத் தடை விதிக்காத நிலையிலேயே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்துவிட்டார்கள். பிறகு (கலீஃபா) உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவற்றுக்குத் தடை விதிக்க விரும்பினார்கள். பின்னர் அவர்களும் (அவற்றுக்குத் தடை விதிக்காமல்) விட்டுவிட்டார்கள். (நூல்: முஸ்லிம் 4331)

நம்முடைய குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் போது மேற்கண்ட அடிப்படைகளை மட்டும் கவனத்தில் கொண்டால் போதுமானதாகும்.

ஒரு பெயர் உங்களுக்குப் பிடித்திருந்து அதற்கு எந்தப் பொருளுமே இல்லாமல் இருந்தாலும் அதனைப் பெயராக வைப்பது மார்க்கத்தில் குற்றம் கிடையாது. ஏனெனில் நபியவர்கள் காலத்திலே வாழ்ந்த எத்தனையோ ஸஹாபாக்கள் மற்றும் ஸஹாபிப் பெண்களின் பெயர்களில் பலவற்றிற்கு எந்தப் பொருளும் கிடையாது. இவற்றை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டித்ததாக எந்த ஹதீசும் கிடையாது.

மேலும் நபியவர்கள் தன்னுடைய பெயர் முஹம்மத் என்பதை பெயராகச் சூட்டுமாறு கூறியுள்ளார்கள். ஆனால் பெண்களுக்குப் பெயர் சூட்டும் போது எந்தப் பெயராக இருந்தாலும் அதில் ஃபாத்திமா என்று பெயரை சேர்த்து தான் வைக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். இது மூட நம்பிக்கையாகும். நபியவர்கள் அப்படி எந்த ஒரு கட்டளையையும் பிறப்பிக்கவில்லை.

ஒருவர் விரும்பினால் தன்னுடைய மகளுக்கு ஃபாத்திமா என்ற பெயரை மட்டும் வைக்கலாம். அதனுடன் இன்னொரு பெயரை சேர்த்தும் வைக்கலாம். ஆனால் இப்படி வைப்பது தான் சிறந்தது என்று எண்ணி வைத்தால் அது தவறாகும்.

கே.எம். அப்துந் நாசிர்

source: http://www.aleemislam.blogspot.com/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 2 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb