Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இதற்குத் தீர்வு என்ன? சொல்லுங்கள்…!

Posted on September 23, 2011 by admin

இதற்குத் தீர்வு என்ன? சொல்லுங்கள்…!

மௌலவி, அ. முஹம்மது கான் பாகவி .

தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 300 ஆலிம்கள் (மௌலவிகள்) பட்டம் பெற்று வெளிவருகின்றனர். தமிழ்நாட்டில் சிறியதும் பெரியதுமாக ஏறத்தாழ 125 அரபி மதரசாக்கள் (அரபிக் கல்லூரிகள்) இருக்கலாம். அவற்றில் ‘மௌலவி’ பட்டம் வழங்கும் ‘தஹ்ஸீல்’ மதரசாக்கள் சுமார் 30 இருக்கக்கூடும்!

இதுவெல்லாம் பத்தாண்டுகளுக்கு முந்தைய நிலை. இன்று சில மதரசாக்கள் ஓசையின்றி மூடப்பட்டுவிட்டன. பல மதரசாக்கள் இரு கலை (உலகக் கல்வி, மார்க்கக் கல்வி) கல்லூரிகளாக மாறிவிட்டன. எல்லா மதரசாக்களிலும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துபோய்விட்டது.

மாணவர்கள் எண்ணிக்கை – 15; ஆசிரியர் எண்ணிக்கை – 7; பட்டம் வழங்கப்படுகிறது -இந்நிலையில் உள்ள மதரசாக்களே அதிகம். 400க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்றுவந்த ஒரு பெரிய மதரசாவில் இன்று 200 மாணவர்களே உள்ளனர். அவர்களிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் 40 பேர். முன்பெல்லாம் அங்கு சுமார் 150 தமிழ் மாணவர்கள் இருப்பார்கள்.

முன்பைவிட வசதியான மாணவர் விடுதி; வகுப்பறைகள்; சமையற்கூடம்; இலவச உணவு; சில இடங்களில் இலவச உடை; நிதி உதவி… இப்படி எல்லா வசதிகளும் உண்டு. ஆனால், மாணவர்கள்தான் தேவையான அளவுக்கு இல்லை.

இத்தனைக்கும், தேர்வுக்காகப் படிக்க வேண்டிய சிரமமோ தேர்வு எழுத வேண்டிய சுமையோகூட மாணவர்களுக்குக் கிடையாது. ஏனெனில், பல மதரசாக்களில் முறையான தேர்வுமுறையே இல்லை. அவ்வாறே, ஆண்டின் மத்தியில் வந்தால்கூடப் புதிய மாணவர் சேர்த்துக்கொள்ளப்படுவார். முன்பு அவர் படித்த மதரசாவின் தடையில்லா சான்றிதழோ (NOC) மாற்றுச் சான்றிதழோ (TC) எதுவும் தேவையில்லை.

இதனால், முந்தைய மதரசாவில் நான்காம் ஆண்டில் கற்ற மாணவர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டால், உடனே வேறொரு மதரசாவில் ஏழாம் ஆண்டில் சேர்ந்து பட்டம் பெற்றுவிடுவார். நான்காம் வகுப்பிலிருந்து ஒரு மாணவனை வெளியேற்றிய கல்லூரியின் முதல்வர் அதே ஆண்டு வேறொரு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவுக்குச் செல்கிறார். அங்கு தம்மால் நீக்கப்பட்ட அதே நான்காமாண்டு மாணவனுக்குத் தம் கரத்தாலேயே பட்டம் வழங்கிவிட்டு வருகிறார். இடையிலுள்ள மூன்றாண்டு பாடங்களைக் கற்காமலேயே ‘மௌலவி’ பட்டம் பெறுகின்ற அவலம் இங்கே அரங்கேறுகிறது.

அவ்வாறே, மாணவர்கள் சரியாக வகுப்புகளுக்குச் செல்வது, வருகைப் பதிவேட்டைக் கையாள்வது, ஒவ்வோர் ஆண்டிலும் முடிக்க வேண்டிய பாடங்களைச் சரியாக முடிப்பது, பகலில் படிக்கும் பாடத்தை இரவில் திரும்பப் பார்ப்பது, மாதாந்திரத் தேர்வுமுறை, தேர்வு நடத்தி வெற்றி – தோல்வியை நிர்ணயிப்பது, தொழுகை போன்ற வழிபாடு மற்றும் நபிவழி ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதற்கான பயிற்சி, இஸ்லாமியப் பரப்புரைக்கான பேச்சு மற்றும் எழுத்துப் பயிற்சி… போன்ற நடைமுறைகள் எல்லாம் விரல்விட்டு எண்ணும் சில மதரசாக்களில் மட்டுமே உள்ளன. பெரும்பாலான மதரசாக்கள் இவற்றில் கவனம் செலுத்துவதில்லை.

அதாவது அதிகமான மதரசாக்களில் கட்டுப்பாடுகளோ விதிமுறைகளோ இல்லாமல் மாணவர்கள் சுதந்திரமாகச் சுற்ற முடிகிறது; விருப்பப்படி நாட்களைக் கழிக்க முடிகிறது; இம்மையும் கிடைக்காமல் மறுமை கிடைக்க வழியும் காணாமல் மனம்போன போக்கில் மாணவர்கள் வாழமுடிகிறது.

காரணம் என்ன…?

இத்தனை சலுகைகளும் சுதந்திரங்களும் இருந்தும்கூட மாணவர்களின் வருகை பாதியாக, சில இடங்களில் கால்வாசியாகக் குறையக் காரணம் என்ன? சில மதரசாக்களை மூட வேண்டிய அளவுக்கு மாணவர்களின் வருகை அடியோடு நின்றுபோகக் காரணம் என்ன?

சலுகைகளை வாரி இறைத்து, பாரம்பரியப் புகழை எடுத்துரைத்து ரமளான் மாத்தில் இஸ்லாமிய பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தும் மதரசாக்களால் மாணவர்களை ஈர்க்க முடியவில்லையே! காரணம் என்ன? ஒருவரை ஆசிரியராகவோ முதல்வராகவோ சில மதரசாக்களில் சேர்க்கும்போது, இத்தனை மாணவர்களை எங்கிருந்தாவது, எப்படியாவது அழைத்துக்கொண்டுவர வேண்டும் என மதரசா நிர்வாகம் நிபந்தனை விதிக்கும் அளவுக்கு மாணவர்கள் பற்றாக்குறை ஏற்படக் காரணம் என்ன?

காரணங்கள் :

ஆலிம்களை உருவாக்கும் அரபி மதரசாக்களில் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துபோனதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

அவற்றில் பிரதானமாகக் கூறப்படும் காரணம், ஆலிம்களின் பொருளாதார நிலைதான். ‘மௌலவி ஆலிம்’ பட்டதாரிகளில் பெரும்பாலோர் பள்ளிவாசல்களில் இமாம்களாகப் பணியாற்றுபவர்களே. மற்றவர்கள் அரபிக் கல்லூரி பேராசிரியர்களாகவோ குர்ஆன் பாடசாலை ஆசிரியர்களாகவோ பணியாற்றுகிறார்கள்.

இமாம்கள் நிலை :

சென்னை போன்ற பெருநகரங்களில் பணியாற்றும் இமாம்களின் பொருளாதார நிலை சற்று மேம்பட்டுள்ளது. இங்கு இமாம்களுக்கு வழங்கப்படும் ஊதியம் சராசரியாக ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரமாக உள்ளது. பத்தாயிரத்திற்குமேல் ஊதியம் பெறும் இமாம்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

பெரும்பாலும், பள்ளிவாசல் நிர்வாகம் சார்பாக வீடு அல்லது தங்கும் அறை இமாம்களுக்கு வழங்கப்படுகிறது. பிள்ளைகளின் படிப்புச் செலவு, மருத்துவச் செலவு போன்ற கூடுதல் உதவிகளும் சில இடங்களில் வழங்கப்படுகின்றன. இரு சக்கர வாகனங்கள் இல்லாத இமாம்களை மாநகரங்களில் காண்பது அரிது. ஆனால், புறநகர்ப் பகுதிகளில் இமாம்களின் நிலை ஊக்கமளிப்பதாக இல்லை.

மற்ற நகரங்களில் இமாம்களின் சராசரி ஊதியம் ரூ. 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம்வரை இருக்கலாம். கிராமங்களிலோ ரூ. 1500 முதல் ரூ. 4 ஆயிரம்வரை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சாதாரணமாக ஒரு கடைநிலை ஊழியனுக்கு வழங்கப்படும் ஊதியம்கூட ஏழாண்டு காலம், அல்லது ஒன்பதாண்டு காலம் கல்வி கற்ற ஓர் ஆலிமுக்கு வழங்கப்படுவதில்லை.

இந்நிலையைக் கண்கூடாகக் கண்டுவரும் முஸ்லிம் பெற்றோர்களில் யார்தான் தம் பிள்ளைகளை ஆலிம்களாக்க முன்வருவார்கள் என்று பொதுமக்கள் கேட்கிறார்கள். அன்றாடக் குடும்பச் செலவுகளுக்கே மூச்சுத் திணறும்போது, மருத்துவச் செலவு, மகப்பேறு, பிள்ளைகளின் படிப்பு, திருமணம் போன்ற பெரிய செலவுகளுக்கு அவர் என்ன செய்வார் என்றும் வினவுகிறார்கள்.

பள்ளிவாசல் நிர்வாகம்தான் இமாமின் வாழ்க்கையோடு விளையாடுகிறது என்றால், அரசாங்கத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்! கடும் போராட்டத்திற்குப் பிறகு தமிழக அரசு உலமா நல வாரியம் உருவாக்கியது. இந்த வாரியத்தில் முறைப்படி பதிவு செய்து உறுப்பினராகும் ஆலிம்களுக்கு அரசு வழங்கும் நிதி உதவியைப் பாருங்கள்!

உறுப்பினராகச் சேர்ந்து அடையாள அட்டை பெற்ற தேதியில் இருந்து விபத்து காப்பீட்டு உதவியாக ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம்வரை அரசு வழங்கும். இயற்கை மரணம் அடைந்தால் ரூ. 15 ஆயிரம், ‘ஈமச்சடங்கு உதவி’ என்ற பெயரில் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். கல்வி உதவித் தொகை ரூ. 1000 முதல் ரூ. 6 ஆயிரம்வரை, திருமண உதவித் தொகை ரூ. 2000 அளிக்கப்படும்.

உறுப்பினர் மூக்குக் கண்ணாடி வாங்க ரூ. 500, முதியோர் ஓய்வூதியம் மாதம் ரூ. 500 வழங்கப்படும். இத்தொகை இப்போது ரூ. 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அநேகமாக எல்லா நிர்வாகிகளும் சொல்கின்ற சமாதானம் ஒன்று உண்டு. இமாம்களுக்குப் பள்ளிவாசல் நிர்வாகம் தருகின்ற சம்பளம் குறைவுதான்; மேல் வருமானம் (?) சம்பளத்தைவிட இரு மடங்கு இருக்கும். அது என்ன மேல் வருமானம்? மஹல்லாவில் நடக்கும் திருமணம், மய்யித், குழந்தைக்குப் பெயர்சூட்டல், வருட ஃபாத்திஹா போன்ற சடங்குகளின்போது ஜமாஅத்தார்கள் இமாமுக்குத் தரும் தட்சணையைத்தான் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.

இதுதான் இமாம்களின் பணியா? இதற்காகத்தான் ஏழெட்டு ஆண்டுகள் மதரசாக்களில் அவர்கள் கல்வி கற்று வந்தார்களா? அப்படியே ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும், சுமாரான ஓர் ஊரில் ஒரு மாதத்திற்கு எத்தனை கல்யாணம் நடக்கும்? அதைவிட, மஹல்லாவில் யாரும் இறந்துபோகமாட்டார்களா என்று இமாம் எதிர்பார்த்திருக்க வேண்டுமா? அது மஹல்லா மக்களுக்குத்தான் நல்லதா? சமுதாயம் எப்போதுதான் சிந்திக்கப்போகிறது? இந்நிலை மாறாத வரை ஆலிம்களின் உருவாக்கத்தில் ஏற்படும் தேக்கநிலை மாறுவது எளிதன்று.

இமாம்கள், தங்களின் ஊதிய உயர்வுக்காகப் போராட்டம் நடத்த முடியுமா? வேலை நிறுத்தம்தான் செய்ய முடியுமா? ‘இமாமத்’ பணியை விட்டுவிட்டுத் தொழில் துறையில்தான் ஈடுபடலாமா? அப்படி எல்லாரும் தொழிலில் ஈடுபட்டுவிட்டால், சரியான நேரத்திற்கு வந்து முறையாக தொழவைப்பதும் சிறுவர்களுக்கு குர்ஆன் ஓதக் கற்றுக்கொடுப்பதும் மக்களுக்கு மார்க்கத்தை எடுத்துச்சொல்வதும் மஹல்லாவில் நடக்கும் பிரச்சினைகளுக்கு மார்க்க அடிப்படையில் தீர்வு சொல்வதும் இதையெல்லாம் முறையான கல்வித் தகுதியோடு மேற்கொள்வதும் யார்?

தொழுகை நேரத்திற்குப் பள்ளிவாசல் வருபவர்களில் ஒருவர் தொழவைக்க வேண்டியதுதானே என்று எதிர்வாதம் பேசியவர்கள்கூட, தாங்கள் புதிது புதிதாகக் கட்டும் பள்ளிவாசல்களுக்குச் சம்பளம் கொடுத்துத்தானே இமாம்களை நியமிக்கிறார்கள்? தொழுகைக்கு வருவோரில் தொழவைப்பதற்கான தகுதி உடையோர் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் இருப்பார்கள் என்று சொல்ல முடியுமா? அதற்காகவென ஒருவர் தமது இதர வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு பொறுப்போடு பணியாற்றினால்தானே குறித்த நேரத்தில் தொழுகை முறையாக நடக்கும்!

மக்தப் மதரசாக்களின் நசிவு :

பொருளாதாரம் முதலாவது பிரதான காரணம் என்றால், ‘மக்தப்’ மதரசாக்களின் நசிவும் சீரழிவும் அடுத்த காரணம் எனலாம். அரபி மதரசாக்களுக்கு மாணவர்களை உருவாக்கும் இடமே மக்தப் மதரசாதான். அது செயலிழந்துபோனது ஆலிம்கள் உருவாக்கத்தில் தேக்க நிலையை உண்டாக்கிவிட்டது.

குர்ஆன் மதரசாக்கள் எனப்படும் மக்தப்கள், குர்ஆனைப் பார்த்து ஓதவும் மார்க்கத்தின் அடிப்படைச் சட்டங்களையும் கொள்கைகளையும் கற்றுக்கொள்ளவும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் ஆரம்பப் பாடசாலைகளாகும். முன்பெல்லாம், ஒவ்வொரு மஹல்லாவிலும் இப்பாடசாலைகள் பள்ளிவாசல் வளாகத்தில், அல்லது அருகில் மிக விமர்சையாக நடத்தப்பட்டுவந்தன.

மக்தப் ஆசிரியர்கள் (உலமாக்கள்), அங்கு வரும் மாணவர்களில் ஆர்வமுள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டு, பெற்றோரிடம் கலந்துபேசி, பட்டப் படிப்பு படிப்பதற்காக தயார் செய்து அனுப்பிவைப்பார்கள்.

இப்போது பல ஊர்களில் மக்தப்களே நடப்பதில்லை; நடந்தாலும் உயிரோட்டமில்லை. பிள்ளைகளின் பள்ளிப் படிப்புக்கே நேரம் ஒதுக்க முடியாமல் சிரமப்படுகிறோம் என்பது பெற்றோர்களின் புலம்பல். இதில் குர்ஆனைக் கற்கப் பிள்ளைகளை எப்படி அனுப்ப முடியும் என்று அவர்கள் கேட்கிறார்கள்.

இதனால், மார்க்கப் பற்றுமிக்க பெற்றோர்கள்கூட, வீட்டில் ஆசிரியரை வரவழைத்து பிள்ளைகளுக்கு குர்ஆனைக் கற்பிக்கும் நிலையில் உள்ளனர். இந்த நெருக்கடியில், அரபி மதரசாக்களுக்கான மாணவர்களைத் தயார் செய்வது எங்கனம்?

பாடத்திட்டமும் கட்டுப்பாடுகளும் :

அரபிக் கல்லூரிகளில் இன்று நடைமுறையில் இருந்துவரும் பாடத்திட்டமும் கற்பிக்கும் முறையும் புதிய தலைமுறை மாணவர்களை வெறுப்படையச் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை மறுக்க முடியாது. அந்த அளவுக்குப் பழங்காலத்து நடைமுறையே பின்பற்றப்படுகிறது. அதைப் பற்றி எவ்வளவோ பேசியும் எழுதியும் மாற்றத்திற்கான அறிகுறி துளிகூடத் தென்படவில்லை.

அரபி மொழி, அரபி இலக்கணம், அரபி இலக்கியம், அரபி அகராதி முதலிய மொழிப் பாடங்கள் நடத்தியாக வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. அரபிமொழி தெரிந்தால்தான் இஸ்லாத்தின் மூலாதாரங்களான குர்ஆனையும் ஹதீஸையும் நேரடியாக அறிந்துகொள்ள முடியும். மொழிபெயர்ப்புகளை மட்டும் வைத்து மூலாதாரங்களின் உள்ளார்ந்த பொருளை அதன் ஆழம்வரை சென்று அறிதல் இயலாது.

அதே நேரத்தில், மொழிப் பாடங்களைப் போதிக்கும் முறை சிக்கல் நிறைந்தது; இன்றைய மாணவர்களுக்கு முற்றிலும் அந்நியமானது. எனவே, இலக்கண இலக்கியத்தைக் கற்பிக்கும் முறையை எளிமைப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். அரபி இலக்கணத்தில் இன்ன கூற்றைத்தான் இந்த இடத்தில் நாம் படிக்கிறோம் என்பதைப் புரிவதற்கே மாணவனுக்கு இரண்டு ஆண்டுகள் பிடிக்கும் என்றால், எரிச்சல் வராமல் என்ன செய்யும்?

பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், ஆண்பால், பெண்பால், உயர்தினை, அஃறினை, ஒருமை, (அரபியில்) இருமை, பன்மை, படர்க்கை, முன்னிலை, தன்னிலை, எழுவாய், பயனிலை, வேற்றுமைகள்… போன்ற இலக்கணக் கூறுகளைத் தாய்மொழியில் தெளிவாகச் சொல்லிக் கொடுத்துவிட்டு, அரபிமொழி வழக்கையும் கற்பித்தால் மாணவனுக்குப் புரியும்.

அதை விட்டுவிட்டு, இஸ்மு, ஃபிஅல், ஹர்ஃப், முதக்கர், முஅன்னஸ்… என்று அரபிப் பெயர்களுக்கு அரபிச் சொற்களையே பொருளாகச் சொல்லிக்கொண்டிருந்தால் மாணவன் எப்படி புரிவான். கிளிப்பிள்ளை பாடமாக இருக்குமே தவிர, புரிதல் என்பது இராது. பிற்காலத்தில், இதைத்தான் இப்படிச் சொன்னார்களோ என்று மாணவனாக அறிவதற்குள் காலம் ஓடிவிடும்.

இறைவேதமாம் குர்ஆனை விளக்கத்தோடு முழுமையாகக் கற்பிக்க வேண்டும். நபிமொழி தொகுப்புகளை -எல்லாவற்றையும் இல்லாவிட்டாலும்- ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம், ஜாமிஉத் திர்மிதீ ஆகிய நூல்களையாவது முழுமையாகக் கற்பிக்க வேண்டும். குர்ஆனிலும் ஹதீஸிலும் புதைந்துள்ள அறிவியல், அரசியல், பொருளியல், சமூகவியல், உயிரியல், இயற்பியல், மருத்துவம், வானவியல் போன்ற கருத்துகளை ஆசிரியர் ஆங்காங்கே கோடிட்டுக் காட்ட வேண்டும். அப்போதுதான், மாணவன் மேற்கொண்டு ஆராய்ச்சி செய்யவும் தேடவும் வழி பிறக்கும்.

வெறுமனே, குர்ஆன் வசனங்களிலுள்ள இலக்கணக் கூறுகளையும், நபிமொழிகளிலுள்ள சட்டப் பிரச்சினைகளில் அறிஞர்களின் கருத்து வேறுபாடுகளையும் மட்டும் விலாவாரியாக விவாதிப்பதில் முழு நேரத்தையும் செலவிடுவதுதான் திறமையா? அல்லது அதுதான் நாம் வாழும் காலத்திற்குப் பிரதான தேவையா?

கொள்கை விளக்கப் பாடத்தில், மறைந்துவிட்ட முஅதஸிலாக்கள் பற்றி விவாதித்து, அவர்களுக்கப் பதிலடி கொடுத்துக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள், இன்று நம்முடன் வாழும் ஷியா, போரா, அஹ்மதிய்யா, பாத்தினிய்யா, ஹதீஸ் மறுப்பாளர்கள் போன்ற வேறுபட்ட கூட்டத்தார் பற்றி வாய் திறப்பதில்லையே! பயன் என்ன?

இதற்கெல்லாம் மேலாக, வழக்கொழிந்துபோன கிரேக்கத் தத்துவத்தை இன்னும் கட்டி அழுவதால் யாருக்கு என்ன இலாபம்? அணுவைப் பிளக்க முடியுமா என்று வெறும் வாதப் பிரதிவாதம் செய்யும் கிரேக்கத் தத்துவத்திற்கு, அணுவை மனிதன் பிளந்துவிட்டான் என்ற செயல்பூர்வமான உண்மை எங்கே உறைக்கப்போகிறது? அடுத்து தர்க்கவியல் (லாஜிக்) பாடத்திற்கு இவ்வளவு ஆண்டுகள் ஒதுக்க வேண்டுமா?

இப்படி எழுதிக்கொண்டே போகலாம். ‘கட்டுப்பாடுகள்’ என்ற பெயரில், மாணவர்கள் மாதம் ஒருமுறை மொட்டை போட வேண்டும்; தினசரி பத்திரிகைகள் படிக்கக் கூடாது; மாத, வார இதழ்கள் (இஸ்லாமிய இதழ்கள் உள்பட) வாசிக்கக் கூடாது என்பன போன்ற விதிமுறைகள் சில மதரசாக்களில் இன்னமும் நடைமுறையில் உள்ளன.

இதையெல்லாம்விடப் பெரிய கொடுமை ஒன்று உண்டு. அரபி மதரசா மாணவர்களை ஊரில் நடக்கும் மவ்லிது, ஃபாத்திஹா, ஸலாத்துந் நாரியா, (மிகக் குறைவாக) திருமணம் போன்ற சடங்குகளுக்கு அனுப்பிவைப்பதும், அங்கு பரிமாறப்படும் உணவு, தரப்படும் தட்சணை ஆகியவற்றைப் பெறுகின்ற பழக்கத்தை ஊட்டி வளர்ப்பதும் இருக்கிறதே, இது சீரணிக்க முடியாத அவமானமாகும்.

தன்மானத்தோடு வளர வேண்டிய இளங்குருத்தை முளையிலேயே ஒடித்துப்போடும் மட்டமான செயலல்லவா இது? இதைக் காணும் மானமுள்ள பெற்றோர் எவரும் தம் பிள்ளைகளை மதரசாவுக்கு அனுப்ப யோசிப்பார்களா? இல்லையா?

இதனால்தான், தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் வாழ்கின்ற ஆலிம்களைக்கூட காலுக்கும் அரைக்கும் அலைகின்ற அற்பர்கள் என்று சாமானியர்கூட எண்ணுகின்ற நிலை காணப்படுகிறது. இது தரமான ஆலிம்களை வெகுவாகப் புண்படுத்துகிறது.

தீர்வு என்ன ?

காரணம் என்னவாக இருந்தாலும், அரபி மதரசாக்களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவருவதும் ஆலிம்கள் உருவாக்கத்தில் தேக்கம் ஏற்பட்டிருப்பதும் சமுதாயத்திற்கு ஆரோக்கியமான ஒன்றல்ல. இந்தச் சரிவைத் தூக்கி நிறுத்தி, மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் தரமான ஆலிம்களை உருவாக்க முயல்வதும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் பொறுப்பாகும்.

இந்தச் சிக்கலுக்குத் தீர்வு என்ன என்று யோசித்து யோசித்து உறக்கம் கெட்டதே ஒழிய, விளக்கம் கிடைக்கவில்லை.

இமாம்களின் ஊதியத்தைக் காலத்திற்கேற்ப உயர்த்துங்கள்! நீங்கள் ஒன்றும் உங்களது சொந்த பணத்தைத் தாரை வார்க்கவில்லை! வக்ஃப் சொத்திலிருந்தே சம்பளம் அளிக்கிறீர்கள்! அல்லது பொதுமக்கள் வழங்கும் நன்கொடையைத்தான் ஊதியமாக வழங்குகிறீர்கள் என்றெல்லாம் ஒன்றுக்குப் பலமுறை சொல்லியாகிவிட்டது. நிர்வாகிகள் காதில் விழுந்தபாடில்லை. அவர்கள் நிலையில் சிறு மாற்றம்கூட ஏற்படவில்லை.

பாரம்பரிய மதரசாக்களும் தங்கள் வழிமுறையை மாற்றிக்கொள்ளத் தயாராயில்லை. இதையடுத்து மார்க்கக் கல்வியும் உலகக் கல்வியும் சேர்த்து வழங்கும் ஐந்தாண்டு பாடத்திட்ட கல்லூரிகள் சில தோன்றியுள்ளன. அங்கெல்லாம் மாணவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகின்றது. பெற்றோரிடம் இத்தகைய கல்லூரிகளுக்கு நல்ல வரவேற்பும் உண்டு.

ஆனால், இக்கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களில் பெரும்பாலோர் வேறு வேலைகளில் அமர்கின்றார்களே தவிர, மார்க்க சேவைக்கு வருவதில்லை. பி.பி.ஏ. பட்டமும் ஆலிம் பட்டமும் பெற்று வெளிவரும் ஒருவர், மேற்கொண்டு எம்.பி.ஏ. தேர்வு எழுதிவிட்டு ஏதேனும் நிறுவனத்தில் பணியில் சேர்கிறார்; இமாமத் பணிக்கோ மதரசா பணிக்கோ வருவதில்லை. இவர்களால் எதிர்பார்த்த பலன் தீனுக்குக் கிடைக்கவில்லை என்பதே அனுபவம் கூறும் பாடமாகும்.

இப்போது சொல்லுங்கள்! இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? நீங்களும் சமுதாயத்தின் ஓர் உறுப்பு. உங்களுக்கும் இதில் உண்டு பொறுப்பு.

source: http://khanbaqavi.blogspot.com/2011/09/blog-post.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 5

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb