நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காமமும் (1)
ஏ.பி.எம். இத்ரீஸ்
[ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கொள்கைப்படி காமம் என்பது ஓர் அழுக்கல்ல. அதைக் களைவதே சுயத்தூய்மை. அதற்குரிய சிறந்த வழி வெளிப்படையாக இருப்பதுதான். ஆனால், இன்றைய முஸ்லிம் மனநிலை காமத்தை வெளிப்படையாக கதையாடுவதற்கு தயங்குவது ஏன்?
இந்த மனநிலையை உருவாக்கியளிப்பதற்கு இரண்டு பின்புலங்கள் இருப்பதாகக் கருதலாம். ஒன்று இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய சூஃபித்துவமாகும். மற்றது. கடந்த சில நூற்றாண்டுகளாக நம்மீது தனது அரசியலையும் கல்வி மற்றும் ஊடங்களையும் நிறுவிய கிறிஸ்தவமாகும்.
துறவை ஓர் அதிகாரமாக நிலைநிறுத்திய கிறிஸ்தவம் தான் ஆசிய நாடுகளில் தனது செல்வாக்கைப் பதித்தது. திருச்சபை கல்விக்கூடங்களில் கற்றவர்களும் சூஃபித்துவ தரீக்காக்களும் அவை செல்வாக்குச் செலுத்திய அறபு மத்ரஸாக்களில் கற்றவர்களும் இந்த மனநிலைக்கு ஆளானார்கள்.
காமத்துக்கும் காதலுக்கும் மனிதனைப் போல தொன்மையான வரலாறும் உண்டு. இன்றைய மனிதனுக்கு காமம் பசியைப் போன்று பசியாறிவிட்டால் அடங்கிவிடுவதல்ல. பல நூற்றாண்டுகளாக மனிதனின் காமம் உடலிலிருந்து உள்ளத்துக்கு மாற்றப்பட்டுவிட்டதென உளவியலாளர்கள் கூறுகின்றனர். மனிதனைப் போல காமத்தையே எண்ணிக் கொண்டிருக்கும் இன்னொரு உயிரினம் உலகில் இருக்க முடியாது. உள்ளத்துக்கு எல்லை இல்லை. ஆகவே மானுடக் காமத்துக்கும் எல்லையே கிடையாது. காமம் மனத்துக்குள் பெருக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அடக்க, அடக்க அது பெருகிக் கொண்டே இருக்கும்.
இரண்டு உயிர்கள் சேர்ந்து நடத்தும் இன்ப துய்ப்பாகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதைக் கருதினார்கள். சமகாலத்தில் ஒன்பது மனைவியருடன் வாழ்ந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு மனைவிக்கும் தனித் தனியான நேரத்தை ஒதுக்கியிருந்தார்கள்.]
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காமமும் (1)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலகியல் வாழ்வையும் ஆன்மீக வாழ்வையும் சமன் செய்பவராகவே இருந்தார்கள். காமத்தையும் காதலையும் ஒடுக்குபவராக அவர்கள் இருக்கவில்லை. காமத்தை அவர்கள் ஆளுமைக்கு எதிரான நிலையில் வைத்து பார்க்கவுமில்லை. ஆன்மீக உய்வுக்காக காதலையும் காமத்தையும் ஒழிப்பதுதான் சிறந்த வழி என்று அவர்கள் கருதவுமில்லை. கீழைத்தேயவாதிகளும் அவர்களது சிந்தனைப் பாதிப்பால் உருவாகிய இலக்கியக்காரர்களும் தமது ஆய்வுகளிலும் படைப்புக்களிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கடுமையாகச் சாடுவது இந்த பாலியல் சமாச்சாரம் குறித்ததே என்றால் மிகையல்ல.
அதிலும் குறிப்பாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பலதார மணத்திலேயே அவர்கள் எல்லோரும் கைவைக்கின்றனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது வளர்ப்பு மகனால் தலாக் சொல்லப்பட்ட ஸைனப் (Zainab)ரளியல்லாஹு அன்ஹா அவர்களை விரும்பியதும் சமூக விமர்சனத்திற்குப் பயந்து மறைத்ததும் அல்குர்ஆன் அதனை வெளிப்படுத்தியதும் கூட இவர்களின் கவனத்திலிருந்து தப்பவில்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காமத்தையும் காதலையும் தனக்குத்தானே ஒடுக்கிக் கொள்ளவுமில்லை. பிரய்டிஸம் சொல்கின்ற குற்ற உணர்ச்சியும் நபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இருக்கவில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காமத்தை வெளிப்படைத் தன்மையுடன் கதையாடுவதற்குரிய நிலையிலேயே வைத்திருந்தார்கள் அல்லது வாழ்ந்தார்கள் என்று சொல்லலாம். அவர்களின் தோழர்களும் தோழியரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காமத்தை வெளிப்படையாகவே அறிவித்துமுள்ளனர்.
குற்ற உணர்ச்சியால் பீடிக்கப்பட்டு தன் நுன்னுணர்வுகளை தனக்குள்ளாகவே ஒடுக்கிக் கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் அவரது தோழியர்களில் ஒருவர் தான் விபச்சாரக் குற்றம் புரிந்துள்ளேன் என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்ட போதுகூட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்பெண்ணுக்குள் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தவில்லை. குழந்தையைப் பெற்றெடுத்துக் கொண்டுவா என்றுதான் கூறினார்கள். குழந்தையைப் பெற்றெடுத்துக் கொண்டு வந்தபோது இரண்டு வருடம் பால் கொடுத்துவிட்டுவா என்று பலமுறை திருப்பித்திருப்பி அனுப்பினார்கள். ஏசு பெருமான் கூட தனக்கு முன்னால் நிறுத்தப்பட்ட பாலியல் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை யூதர்கள் தண்டிக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றபோது தனது தலையைத் தாழ்த்தி பாவமே செய்யாத யாரும் அப்பெண்ணைத் தண்டிக்கலாம் என்றுதான் கூறினார்கள். பின்னர் அவர்கள் தலையை உயர்த்திப்பார்த்த போது அப்பெண்ணைத் தவிர அங்கு யாரும் நிற்கவில்லை.
அவ்வாறே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காமத்தை கடும் போக்குடன் அதிகளவுக்கு அவமானத்தையும் துன்பத்தையும் கொடுக்கும்படியாக அந்தச் சமாச்சாரத்தையே ஒறுப்பதற்காக நடந்து கொள்ளவில்லை. இரண்டு உயிர்கள் சேர்ந்து நடத்தும் இன்ப துய்ப்பாகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதைக் கருதினார்கள். சமகாலத்தில் ஒன்பது மனைவியருடன் வாழ்ந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு மனைவிக்கும் தனித் தனியான நேரத்தை ஒதுக்கியிருந்தார்கள்.
அன்று ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் நாள், அவர்களது வீட்டுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செல்கிறார்கள். ஆனால் ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களோ மக்காவிலிருந்து வந்திருக்கும் தனது உறவினரைச் சந்திப்பதற்காகச் சென்றுவிடுகிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஏமாற்றம்தான். ஆனால் சற்று நேரத்தில் எகிப்திய மன்னன் அளித்த மாரியா அங்கே வருகிறார். அவருடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உறவு கொள்கிறார்கள். இப்போது கதவு தட்டப்படுகிறது. நபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரைந்து எழுந்து சென்று கதவைத் திறக்கிறார்கள். ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா கதவடியில் நிற்கிறார்கள். மாரியா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் தயங்கியபடி எழுந்து நிற்கிறார்.
ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு கோபம் வருகிறது. வார்த்தைகள் வெடித்துச் சிதறுகின்றன. ‘இது எனக்குரிய தினம். எனது வீடு. எனது கட்டில்’ என்றவாறு ஹப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வாதம் செல்கிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடனே இதற்குப் பின் நான் மாரியாவுடன் உறவுவைத்துக் கொள்ளமாட்டேன் என்று சபதம் எடுத்துக் கொள்கிறார். உடனே அல்குர்ஆனின் அத்தஹ்ரீம் அத்தியாயம் அருளப்படுகின்றது. “நபியே அல்லாஹ் ஆகுமாக்கியதை மனைவியரின் திருப்திக்காக எப்படி ஹராமாக்குவாய்?” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹராம் X ஹலால் என்ற கட்டமைவு தகர்க்கப்பட்டுவிடுகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் தவறு செய்துவிட்டதாக உணர்ந்ததும் வெளிப்படையாக அதை முன்வைத்து தன்னையே குற்றவிசாரனை செய்து கொள்ள முற்பட்ட போது மாரியாவுக்கு எத்தகைய மனச்சிக்கல் உருவாகுமென அக்கனத்தில் யோசிக்கவில்லை. இறைவசனம் அறம், அறமின்மையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை விமர்சிக்கின்றது. அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கொள்கைப்படி காமம் என்பது ஓர் அழுக்கல்ல. அதைக் களைவதே சுயத்தூய்மை. அதற்குரிய சிறந்த வழி வெளிப்படையாக இருப்பதுதான் என்றும் நினைக்கவில்லை. ஆனால், இன்றைய முஸ்லிம் மனநிலை காமத்தை வெளிப்படையாக கதையாடுவதற்கு தயங்குவது ஏன்? இந்த மனநிலையை உருவாக்கியளிப்பதற்கு இரண்டு பின்புலங்கள் இருப்பதாகக் கருதலாம். ஒன்று இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய சூஃபித்துவமாகும். மற்றது. கடந்த சில நூற்றாண்டுகளாக நம்மீது தனது அரசியலையும் கல்வி மற்றும் ஊடங்களையும் நிறுவிய கிறிஸ்தவமாகும்.
மொத்த சூஃபித்துவமும் காமத்துக்கு எதிரானது அல்ல. ஆனால் இஸ்லாம் வளைகுடாவுக்கு வெளியே மேற்கே ரோமாபுரியுடனும் கிழக்கே சமணத்துடனும் ஊடாடியே அம்மனநிலையைப் பெற்றிருக்க வேண்டும். காமம், குரோதம், மோகம் ஆகிய மூன்று மன அழுக்குகளில் சமணம் காமத்தை முதன்மையாகக் கருதுகின்றது. காம மீட்டுபுத்தான் சமணத்தின் ஏக இலட்சியமாக இருந்தது. காம ஒறுப்பு என்பது கிரேக்க ஒறுப்புவாத மரபுக்கு இந்தியாவிலிருந்தே சென்றிருக்க வேண்டுமென சில ஆய்வாளர்கள் அபிப்பிராயப்படுகின்றனர். வணிக மதமான சமணத்தின் செல்வாக்கு பட்டுப்பாதை வழியாக மைய ஆசியாவிலும் கிரேக்கத்திலும் ரோமாபுரியிலும் அதன் கருத்துக்கள் சென்று சேர்ந்திருக்கலாம். சமணர்களுக்கும் அறபு முஸ்லிம்களுக்குமிடையே உரையாடல் நடைபெற்றுள்ளதாக இஸ்லாமிய வரலாற்று நூல்களில் காணக்கூடியதாகவுள்ளது. உலகியல் இன்பங்களை ஒறுப்பதே ஆன்மீக நிறைவின் வழி என்று ஒறுத்தல்வாதிகள் நம்பினார்கள். உமையா, அப்பாஸியர்கள் உலகியலில் மூழ்கிக் கிடந்தபோது அதற்கு எதிர்த்திசையில் இயங்கிய சூஃபித்துவம் இத்தத்துவங்களை வரித்துக் கொண்டிருக்க வேண்டும்.
அவ்வாறே ரோமாபுரி கொன்ஸ்டைன் காலப்பிரிவில் கிறிஸ்தவத்தை உள்வாங்கியதால் கிறிஸ்தவ மரபுக்குள் ஒறுத்தல்வாதம் ஆழமாக ஊடுருவியது. அல் குர்ஆன் குகை அத்தியாயத்தில் குறிப்பிடுவது போல ஏற்கனவே கிறிஸ்தவக் குழுக்களில் சுய ஒறுத்தல் ஓர் ஆன்மீக வழியாக இருந்தது. எனவே துறவை ஓர் அதிகாரமாக நிலைநிறுத்திய கிறிஸ்தவம் தான் ஆசிய நாடுகளில் தனது செல்வாக்கைப் பதித்தது. திருச்சபை கல்விக்கூடங்களில் கற்றவர்களும் சூஃபித்துவ தரீக்காக்களும் அவை செல்வாக்குச் செலுத்திய அறபு மத்ரஸாக்களில் கற்றவர்களும் இந்த மனநிலைக்கு ஆளானார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர்களில் சிலர் புலனடக்கத்தை மேற்கொள்வதற்காக தியானங்களிலும் வழிபாடுகளிலும் மூழ்குவதற்கு முயற்சித்தபோது உடனடியாகத் தடுத்துள்ளார்கள். அதை முழுமையான வாழ்க்கையாக தனது தோழர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பரிந்துரைக்கவில்லை. காமத்தை அனுபவிப்பதை, கொண்டாடுவதை அவர்கள் தர்மமாகக் கண்டார்கள். மனைவியின் வாயில் சோற்றுக் கவளத்தை வைப்பது ஸதக்கா (தர்மம்) என்றார்கள். நோன்புகூட இல்லறவாழ்விலேயே அறிமுகப்படுத்தியுள்ளார். வசதியில்லாத பிரமச்சாரிகளுக்கு பல்வேறு தீர்வுகளில் ஒன்றாகவே நோன்பை அறிமுகப்படுத்தினார்கள்.
நமது பிராந்தியத்தில் தோன்றிய விடுதலை அமைப்புக்களும் சமய சீர்திருத்த அமைப்புகளும் பிரமச்சாரியத்தை ஒரு முக்கிய ஒழுக்கக் கோர்வையாக, தியாகத்தின் அடையாளச் சின்னமாக முன்னிறுத்தியதுமுண்டு. எனவே இஸ்லாமிய புத்துயிர்ப்புவாத அணிகள் சூஃபித்துவத்திலிருந்து அல்லது விக்டோரியா கல்வி முறையிலிருந்து இம்மனநிலையை பெற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் காமத்தையும் காதலையும் தியாகத்திற்கும் அர்ப்பணிப்புக்கும் எதிராகக் கருதும் போக்கு அல்லது தஃவாவுக்கு இடையூராகக் கருதும் போக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்றில் எங்கும் காணக்கிடைக்கவில்லை.
காமத்தைக் கையாள்வது சிக்கலான விடயம்தான். ஏனென்றால் அதனுடன் நுட்பமான உணர்ச்சிகள் ஏராளமாகக் கலந்துள்ளன. அவற்றுக்கு மிக ஆழமான பண்பாட்டுப் பின்புலம் உள்ளது. அதைக்கறாராக அணுகுவது வன்முறையில்தான் வந்துமுடியும். காமத்துக்கும் காதலுக்கும் மனிதனைப் போல தொன்மையான வரலாறும் உண்டு. இன்றைய மனிதனுக்கு காமம் பசியைப் போன்று பசியாறிவிட்டால் அடங்கிவிடுவதல்ல. பல நூற்றாண்டுகளாக மனிதனின் காமம் உடலிலிருந்து உள்ளத்துக்கு மாற்றப்பட்டுவிட்டதென உளவியலாளர்கள் கூறுகின்றனர். மனிதனைப் போல காமத்தையே எண்ணிக் கொண்டிருக்கும் இன்னொரு உயிரினம் உலகில் இருக்க முடியாது. உள்ளத்துக்கு எல்லை இல்லை. ஆகவே மானுடக் காமத்துக்கும் எல்லையே கிடையாது. காமம் மனத்துக்குள் பெருக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அடக்க, அடக்க அது பெருகிக் கொண்டே இருக்கும். பிம்பமைய ஆதிக்கம் நிலவும் நமது யுகத்திலும் இது இன்னும் சிக்கலாக மாறிவிட்டது.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.