நவீன சவால்களுக்கு முகம் கொடுக்கும் முஸ்லிம் பெண்கள்
நவீன காலத்தின் சவால்களுக்கு முகம் கொடுத்து அதனை எதிர்கொள்வதற்கு முஸ்லிம் சகோதரிகள் தயாராகி விட்டார்கள். தங்களது சொந்த காலாச்சார வேர்களில் நின்று கொண்டு, அவர்களது வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதிலும் அவர்கள் முனைப்புக் காட்டி வருவதாக சில காலங்களுக்கு போபால் நகருக்கு வருகை தந்த, அமெரிக்க ஆய்வாளரான டாக்டர்.மார்கோட் பத்ரன் அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் அடக்கி ஒடுக்கப்படும் பிராணிகள் போன்று வலம் வருகின்றார்கள் என்று முஸ்லிம் பெண்களைப் பார்த்து காலம் காலமாகச் சொல்லப்பட்டு வரும் கருத்துகள், உண்மைக்கு வெகுதூரமானவை என்று, முஸ்லிம்-கிறிஸ்தவ புரிந்துணர்வு அமைப்பினைச் சேர்ந்தவரும், வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழக ஆய்வு மாணவியுமான பத்ரன். ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எகிப்து, சிரியா மற்றும் லெபனானில் உள்ள நவீனத்துவ மிக்க இயக்கங்கள் பல முனைப்புடன் செயல்பட்டு, உலகின் மற்ற பாகங்களில் உள்ள பெண்களைப் போல ஆண்களுக்கு நிகராக பெண்களையும் கொண்டு வந்து சேர்த்துள்ளன என்றும் கூறினார்.
மாற்றத்தைக் குறித்துத் தான் நாம் இப்பொழுது கவனம் செலுத்தி வருகின்றோம். அதற்காக சில யுத்திகளையும், அநேகமாக கல்விப் பயிற்சி போன்றவற்றைப் பயன்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்த விழைவதோடு, இஸ்லாத்தைப் பற்றியும் அவர்களுக்குப் போதிக்கின்றோம்.
முஸ்லிம் சமூகமானது ஒரு அடக்குமுறைச் சமூகமாக இருக்குமானால், மேலை நாடுகளில் அதிகமான முறையில் பெண்கள் இஸ்லாத்தை தழுவி வருவது எதனால்? என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். இன்றைக்கு உலகின் பார்வை உள்ளவாறு, இஸ்லாத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே பகைமை என்று எதுவுமில்லை. செப்டம்பர் 11 நிகழ்வுக்குப் பின்பு, இரு சமூகமும் ஒருவர் மற்றவரை சந்திப்பதற்கான முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டன.
துரதிர்ஷ்டவசமாக, மீடியாக்கள் நாணயத்தின் இருபக்கத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதை விட்டு விட்டு, ஒரு பக்கத்தின் மீது தான் அதிகக் கவனம் செலுத்தி வருகின்றன, இதனால் தவறாகப் புரிந்து கொள்ளும் பழக்கம் வெகு வேகமாகக் குறைந்து வருவதோடு, மக்கள் முன்பைக்காட்டிலும் அதிகமாக ஈர்க்கவும்படுகின்றார்கள்,அதன் காரணமாக முஸ்லிம்களைப் பற்றியும், இஸ்லாத்தைப் பற்றியும் அதிகம் கற்றுக் கொள்ள முயற்சிக்கின்றார்கள்.
ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம் பெண்கள் தலைக்கு முக்காடு அணிவதன் மீதான பிரச்னை என்பது, அவர்களாகவே உருவாக்கிக் கொண்ட பிரச்னையாகும். மாதா கோயிலுக்கும், அரசுக்கும் இடையே ஏற்பட்ட பிளவானது, இந்த முக்காடு அணிவதை மத அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்ஸைப் பொறுத்தவரை, சமூகத்திற்குள் நிலவும் பாதுகாப்பின்மை தான் இந்த தடையைப் பிறப்பிப்பதற்குண்டான காரணியாக அமைந்துள்ளது. ஆனால் மக்கள் அதனை கண்டு கொள்ள மாட்டார்கள். செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்பு, முஸ்லிம் பெண்களுக்கு தங்களது அபிமானத்தை வழங்குதவற்காக வேண்டிய பல அமெரிக்க கிறிஸ்தவப் பெண்கள் தலைக்கு முக்காடு அணிந்தனர் என்பதை இங்கு சுட்டிக் காட்டினார், பத்ரன்.
மத்திய கிழக்கைப் பொறுத்தவரை, மத ஆச்சாரங்களைப் பின்பற்றும் அதேவேளையில் ஜனநாயக சமூகத்தில் தாங்களும் ஒரு அங்கத்தவர்கள் என்பதை நவீன உலகோடு இயைந்து செல்லும் போக்கை உடையவர்களாக அவர்கள் மாற்றம் பெற்றிருக்கின்றார்கள். இருப்பினும், அரேபியாவில் உள்ள மன்னராட்சியின் கீழ் வாழும் பெண்ணைக் காட்டிலும், எகிப்துப் பெண்மணிகள் அதிக வாய்ப்புகளைப் பெற்றிருக்கின்றார்கள் என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும் என்றும் அவர் கூறினார்.